1-எனக்கு குரு என்று யாரும் கிடையாது! – கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்


ன்றைய இளைய தலைமுறையினர் கூட, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்தைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஏனென்றால், தமிழகத்திலிருந்து அரிதாக உச்சத்துக்குப் போன கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலரில் ஸ்ரீகாந்த் முக்கியமானவர். அவரை அடையாறில் உள்ள அவரது அலுவலகத்தில், ‘துக்ளக்’ வாசகர்கள் சந்தித்து கலந்துரையாடினார்கள். அதன் தொகுப்பு இங்கே :

ஆர்.கற்பகம்: அண்ணா யுனிவர்ஸிட்டியில் நீங்கள் படிக்கும்போதுதான், கிரிக்கெட்டில் நுழைந்தீர்கள் என்பது என் ஞாபகம். எப்படி உங்களால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடிந்தது? சிறுவயது முதலே திட்டமிட்டுச் செயல்பட்டீர்களா?


ஆர்.கற்பகம்
ஸ்ரீகாந்த்: எப்படியாவது கிரிக்கெட் வீரர் ஆகி விட வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் சிறு வயதில் எனக்குக் கொஞ்சமும் கிடையாது. அப்போதெல்லாம் படிப்பு, படிப்பு, படிப்பு மட்டும்தான் இலக்காக இருந்தது. ஒழுங்காகப் படித்ததால்தான் கிண்டி யுனிவர்ஸிட்டியில் ஸீட் கிடைத்தது. கிரிக்கெட் ஆடியது எல்லாம் ஜஸ்ட் ஒரு டைம் பாஸ் மாதிரிதான். ஜாலிக்காகத்தான் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தேன். அப் போதெல்லாம் கிரிக்கெட் கமென்ட்ரியை ட்ரான்ஸிஸ்டரில் கேட்பது, சேப்பாக்கம் மைதானத்தில் போய் கிரிக்கெட் பார்ப்பது, வீரர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது ஆகிய எல்லாமே ஒரு ஜாலிக்காகச் செய்ததுதான். இலக்கு என்றெல்லாம் எதையும் ஃபிக்ஸ் பண்ணிக்கலை. படிப்புதான் முதல் ஃபோகஸ். கிரிக்கெட் அடுத்ததுதான். ஸ்கூல் லெவல், யுனிவர்ஸிட்டி லெவல், ஸ்டேட் ஜூனியர், ஸ்டேட் என்று நான் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தாலும் கூட, எப்படியாவது இந்தியாவுக்கு ஆடிவிட வேண்டுமென்ற வெறி கூட எனக்கு இருக்கவில்லை.


பி.ஈ. நான்காம் வருடம் படித்துக் கொண்டிருந்த போதுதான் சௌத் ஜோன் பாகிஸ்தான் போட்டி ஒன்றில் எனக்கு இடம் கிடைத்தது. இம்ரான்கான் தலைமையில் வந்த பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆடிய அந்த ஆட்டத்தில் ஒரு இன்டலிஜென்ட் 90 அடித்தேன். அப்போதுதான் பலரின் கவனம் என் பக்கம் திரும்பியது. மீடியா என்னைப் பற்றி எழுதியது. அப்போதுதான் ‘ஓஹோ நாமும் இந்திய அணியில் இடம் பெற முடியும் போலிருக்குது’ என்ற எண்ணம் எனக்குள் உதயமானது. அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு, இந்திய அணியில் நான் தேர்வு செய்யப்படலாம் என்று ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால், நல்லவேளையாக நான் தேர்வாகவில்லை. அப்படி நான் தேர்வாகி இருந்தால் இந்நேரம் எஞ்ஜினியரிங் பட்டதாரி ஆகியிருக்க மாட்டேன் (சிரிப்பு). 1981 ஏப்ரலில் டிகிரியை நல்லபடியாக முடித்தேன். சரியாக 1981 நவம்பரில் இந்திய அணிக்குத் தேர்வானேன். பகவான் எல்லாத்தையும் கணக்கு போட்டுத்தான் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார் போலும்.

கற்பகம்: அந்தக் காலத்தில் நீங்கள் ஹெல்மெட் அணியாமல், தொப்பியுடன் மட்டுமே பல மேட்சுகளை ஆடியுள்ளீர்கள். அதற்கு என்ன காரணம்?

ஸ்ரீகாந்த்: எந்த ஒரு காரணமும் இல்லை. ‘அப்படி ஆட வேண்டும், இப்படி ஆட வேண்டும்’ என்றெல்லாம் எதையுமே நான் திட்டமிட்டுக் கொள்ளவில்லை. அப்போது பாதுகாப்புக் கவசங்கள் எல்லாம் பெரியளவில் கிடையாது. நான் மட்டுமல்ல, உலகின் எல்லா வீரர்களுமே பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்தான் விளையாடினார்கள். விஸ்வநாத், கவாஸ்கர் எல்லாம் அப்படித்தான் ஆடினார்கள். பந்து வீச்சின் வேகம், பிட்ச்சின் தரம் எல்லாம் உயர, உயர 1984-க்குப் பிறகுதான் ஹெல்மெட் வர ஆரம்பித்தது. சில நாள் ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஆடுவேன். சில நாள் போடாமல் ஆடுவேன். அப்பொழுதெல்லாம் ஒரு குருட்டு தைரியம், அசட்டு தைரியம் எனக்கு அதிகம் உண்டு.

எஸ்.முரளிதர்: துவக்க ஆட்டத்தில் நீங்கள் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்று சொல்லலாம். கிரிக்கெட்டில் இருந்த விதியை உடைத்து, முதல் பந்திலேயே அடித்து ஆடலாம் என்ற வழக்கத்திற்கு மாறான உத்தியை எப்படி நீங்கள் அறிமுகம் செய்தீர்கள்?


எஸ்.முரளிதர்
ஸ்ரீகாந்த்: நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, நான் எதையும் திட்டமிட்டுக் கொள்ளவில்லை. முழுக்க, முழுக்க ஜாலியாகத்தான் எதையும் நான் எதிர்கொண்டேன். நான் திட்டமிட்டுச் செய்தால் அது எனக்குச் சரியாக வருவதில்லை. வழக்கத்திற்கு மாறாக ஏதாவது ட்ரை பண்ணினால், அது சக்ஸஸ் ஆகிவிடுகிறது. படிப்பு, கிரிக்கெட், பிஸினஸ் எல்லாமே எனக்கு அப்படித்தான் அமைந்தது. இந்தப் பேட்டிக்கு கூட முறையாக ட்ரெஸ் பண்ணிக்கணும்னு ப்ளான் பண்ணலை. இதோ வேஷ்டி ஜிப்பாவோட வந்துட்டேன். நான் மிகுந்த பக்திமான்தான். ஆனால், நாமம் போட்டுக்கிறது, பஞ்சகச்சம் கட்டிக்கிறது, ஸ்வாமியைப் பார்த்ததும் கன்னத்தில் போட்டுக்கிற வழக்கம் எல்லாம் கிடையாது. ஸ்வாமி கிட்ட ஃப்ரெண்ட் மாதிரி பேசிட்டு வந்திடுவேன். மத்தவங்க பண்றதுதான் கரெக்ட்ன்னு எனக்குத் தெரியும். ஆனால், எனக்கு வர மாட்டேங்குது. நான் பண்ற கிரிக்கெட் கமென்ட்ரியைக் கூட முதலில் ஃபார்மலாகத்தான் ட்ரை பண்ணினேன். ஆனால், அது சரியா வரலை. வழக்கம் போல் என் ஸ்டைலிலேயே பேச்சு வழக்கில் கொண்டு வந்து விட்டேன். என் சுபாவமே இப்படித்தான். மாற்ற முடியாது.

பி.கே.ஜீவன்: நீங்கள் இந்திய அணிக்குத் தேர்வாகாமல் போயிருந்தால், இந்நேரம் என்னவாகி இருப்பீர்கள்?

ஸ்ரீகாந்த்: பி.ஈ. எலெக்ட்ரிக்கல் எஞ்ஜினியரிங் முடித்ததும், எல்லோரையும் போல எம்.ஈ. அல்லது எம்.எஸ். படிக்கப் போயிருப்பேன். இந்நேரம் ஏதாவது ஒரு கம்பெனியில் ஒரு எலெக்ட்ரிக்கல் எஞ்ஜினியராகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்திருப்பேன்.

ஆர்.கோகுலகிருஷ்ணன்: இன்றைக்கு உலகின் சிறந்த டீம் என்றால், எந்த நாட்டு டீமைச் சொல்வீர்கள்?


ஆர்.கோகுலகிருஷ்ணன்
கே.ஸ்ரீகாந்த்: ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் டீமைத்தான் டெட்லி டீம் என்று கருதினோம். அப்போது அவர்கள் அவ்வளவு பவர்ஃபுல்லாக இருந்தார்கள். அப்போது உலகில் இருந்ததும் ஐந்தாறு டீம்கள்தான். இன்றைய நிலையில் பவர்ஃபுல் டீம்கள் என்றால் இந்தியா, தென்னாஃபிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளைச் சொல்வேன்.

கற்பகம்: கவாஸ்கர் ஒரு உலகப் புகழ்பெற்ற பேட்ஸ்மேன். அவரோடு ஓப்பனிங் ஆடும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஸ்ரீகாந்த்: அந்த வயதில் கிரிக்கெட் ஆடக் கிளம்பும்போது, குடும்பப் பெரியவர்கள் கிட்டே எல்லாம் ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போறது என் வழக்கம். இன்றைக்கு இளம் தலைமுறையிடம், அந்த குணம் குறைந்து போனதில் எனக்கு ஒரு வருத்தம். அந்த ஆசீர்வாதமே ஒரு பெரிய எனர்ஜி என்பது பலருக்குப் புரியவில்லை. அப்படி நான் ஆசி வாங்கிக் கொள்ளும்போது, பல பாட்டிகளுக்கு கிரிக்கெட் பற்றியே தெரியாது. தாத்தாக்கள், மாமாக்கள், ‘வெங்கட்ராகவன் மாதிரி நீ வரணும்’ என்று ஆசீர்வதிப்பார்கள். ஏனென்றால், அன்றைக்கு சென்னையில் எல்லோருக்கும் தெரிந்த ஒரே தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கட்ராகவன்தான். நான் ஆசையாக ஆட்டோ கிராஃப் வாங்கின கவாஸ்கர் கூட எல்லாம் நான் ஆட முடிந்ததற்குக் காரணம் பெரியவர்கள் எனக்குத் தந்த ஆசீர்வாதம்தான். சரி… உங்கள் கேள்விக்கு வருகிறேன். முதல் நாள் அவருடன் ஆடியபோது, கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில்தான் இருந்தேன். அடுத்தடுத்து அது பழகி விட்டது.

கோகுலகிருஷ்ணன்: இந்தியாவிற்காக நீங்கள் ஆடியதற்குப் பிறகு, பெரிய ஒரு வீரர் தமிழ்நாட்டிலிருந்து வர முடியவில்லையே? என்ன காரணம்?

ஸ்ரீகாந்த்: ஏன் சடகோபன் ரமேஷ் வந்தாரே! இப்போது கூட விஜய் நன்றாகத்தான் ஆடிக் கொண்டிருக்கிறார். நம்ம பசங்க நிறைய பேர் வரணும். நிறைய சாதிக்கணும்னு எனக்கும் ஆசைதான். திறமை, தன்னம்பிக்கை, பாஸிட்டிவ் அப்ரோச் இருந்தால் யாரும் முன்னுக்கு வந்து விடலாம்.

ஆர்.ரவீந்திரன்: அப்படி நல்லா ஆடுற பசங்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் சங்கத்திற்குப் பரிந்துரை செய்து முன்னுக்குக் கொண்டு வர முடியாதா?


ஆர்.ரவீந்திரன்
ஸ்ரீகாந்த்: இங்கு யாரையும், யாரிடமும் சிபாரிசு செய்து இடம் வாங்க முடியாது. ப்ளேயர் சிறப்பாக ஆடணும். அவனுக்குப் பதிலாக நீங்களோ, நானோ போய் ஆட முடியுமா? அவர்கள் ஆடுவதை வைத்துதான் முன்னுக்கு வர முடியும். ஆலோசனைகள் தர லாம். வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கலாம். அதை வைத்து அவன் அவனேதான் தன்னை முன்னுக்குக் கொண்டு போய்க் கொள்ள வேண்டும். இன்றைக்குப் போட்டி அதிகமாகி விட்டது. இந்தியா ஒரு பெரிய நாடு. ஏராளமான மாநிலங்கள் உள்ளன. எல்லா மாநிலத்திலிருந்தும் வீரர்கள் முண்டியடித்துக் கொண்டு வருகிறார்கள். அதில் தேறும் அளவுக்கு நம்ம பசங்க தயாராக வேண்டும். தமிழ்நாடு ஒதுக்கப் படுகிறது என்று நாம் குறை சொல்லிக் கொண்டு இருக்கக்கூடாது. தமிழ்நாடு ஒதுக்கப்படுகிறது என்றால், நான் தேர்வுக்குழு சேர்மனாக வந்திருக்க முடியுமா? இன்று இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி. 120 கோடி பேரில் 11 பேர்தான் ஆட முடியும் என்றால், போட்டி எப்படியிருக்கும்? அதில் வெற்றி பெற்று அணியில் நுழைய சகலவிதத்திலும் நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

(ஒரு வாசகர் ஒரு இந்திய பௌலர் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவருக்கெல்லாம் தேவையில்லாமல் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டது’ என்று குறை கூறினார்.) நீங்கள் சொல்லும் வீரரைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நீங்கள் சொல்கிற மாதிரி சில பேருக்கு அதிர்ஷ்டவசமாகக் கூடுதல் சான்ஸ் கிடைத்திருக்கலாம். சில பேருக்கு துரதிர்ஷ்டவசமாக அதிக வாய்ப்புக் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி, தவிர்க்க முடியாத இடத்தை நாம் பெறுவதில்தான் வெற்றி இருக்கிறது. வெறுமனே மூக்கால் அழுது, பிறரைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. நீங்கள் ஒரு ஜோதிடர்தானே? நீங்கள் யாரையும் தூக்கி நிறுத்தி விட முடியுமா? வழிகாட்டத்தான் முடியும். ‘உன் நேரம் இப்படி இருக்குது. இப்படி நடந்துக்க’ என்று சொல்லத்தான் உங்களால் முடியும். அதன்படி நடப்பது அடுத்தவர் கையில்தானே இருக்கிறது?

முரளிதர்: 20-20 கிரிக்கெட் ஒரு வரமா? சாபமா?

ஸ்ரீகாந்த்: பார்வையாளர்கள்தான் அதை முடிவு செய்ய முடியும். ரசிகர்கள் எதை அதிகம் ரசிக்கிறார்களோ, அதுதான் வரம். கிரிக்கெட் இப்போது மூன்று விதமாக ஆடப்படுகிறது. டெஸ்ட், ஒன் டே, 20-20. இதில் யார் யாருக்கு எது பிடிக்கிறதோ அதை ரசித்து விட்டுப் போக வேண்டியதுதான். ஆனால், ஒன்று சொல்ல விரும்புகிறேன். இன்றைய பெற்றோர்கள் எடுத்தவுடன் தங்கள் குழந்தைகள் ஐ.பி.எல்.லில் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பள்ளியில் ஒரு குழந்தை 10-ஆம் வகுப்பு வரை ஒரே படிப்பு படித்து முடிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் ‘நமக்கு எது சரியாக வரவில்லை; எது நன்றாக வருகிறது’ என்று முடிவு செய்து நமக்கான க்ரூப்பைத் தேர்வு செய்து கொள்ள முடியும். அதேதான் கிரிக்கெட்டிலும் நடக்க வேண்டும். முதலில் கிரிக்கெட்டை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் இவன் டெஸ்ட்டுக்கு செட் ஆவானா, ஒன் டே மேட்ச்சுக்கு செட் ஆவானா, ஐ.பி.எல்.லுக்குச் செட் ஆவானா என்று தரம் பிரிக்க வேண்டும். முதலில் நல்ல கிரிக்கெட்டர் ஆக உருவெடுக்க வேண்டியது முக்கியம். இப்போது துக்ளக்கை எடுத்துக் கொண்டால், சோ அவர்கள் துல்லியமான விமர்சனத்தைத் தருகிறார். மிகத் துணிச்சலான விமர்சனத்தை எழுதுகிறார். ஆனால், அடிப்படையில் அவருக்கு எழுதத் தெரிந்திருக்கிறது. அப்புறம்தான் அவரின் துல்லியம், துணிச்சல் எல்லாம் எழுத்தில் தெளி வாக வரமுடிகிறது. நானும் துணிச்சல்காரன்தான் என்று அவரைப் போல யாரும் எழுதி விட முடியாது. அது போலத்தான் கிரிக்கெட்டும். அடிப்படையில் ஒருவனுக்கு விளையாடத் தெரிய வேண்டும். பிறகு தான் அவன் எதற்குத் தகுதியானவன் என்று முடிவு செய்ய முடியும்.

ஜீவன்: கிரிக்கெட்டில் உங்களின் குரு யார்?

ஸ்ரீகாந்த்: குரு என்றெல்லாம் யாரும் எனக்குக் கிடையாது. ஆனால், எனக்கு மூன்று ஹீரோக்களைப் பிடிக்கும். அவர்களையே என் மானசீக குருக்கள் என்று எடுத்துக் கொண்டால், எனக்கு ஆட்சேபனை இல்லை. குண்டப்பா விஸ்வநாத், டென்னிஸ் லில்லி, விவியன் ரிச்சர்ட்ஸ். இந்த மூணு பேர்தான் எனக்கு ஹீரோஸ்.

ஜீவன்: நீங்கள் ஏன் ஒரு கிரிக்கெட் அகாடமி துவங்கி, இளைஞர்களுக்குப் பயிற்சி தரக் கூடாது?


பி.கே.ஜீவன்
ஸ்ரீகாந்த்: அப்படி ஐடியாவெல்லாம் எனக்கு இல்லை ஸார். http://www.cricketstrokes.comஎன்று ஒரு வெப்ஸைட் நடத்திட்டு வர்றேன். அதுபோக எனது வழக்கமான ஸிஸ்டத்தின்படி ஸ்போர்ட்ஸ் மூலம் Maths, Science, English சொல்லிக் கொடுக்கிறேன். http://www.edustrokes.com என்ற வெப்ஸைட்டில் அதை நீங்கள் பார்க்கலாம். அகாடமி துவங்கி, ஃபீல்டுக்குப் போய் அங்கேயும், இங்கேயும் நின்று கிரிக்கெட் சொல்லித் தருமளவிற்கு எனக்குப் பொறுமை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஜீவன்: நீங்கள் தேர்வுக் குழுச் சேர்மனாக இருந்து அனுபவம் பெற்றவர். நீங்கள் சொல்லிக் கொடுத்தால், தேர்வுக் குழுவில் தேர்வாகும் நிலைக்குப் போவது எப்படி என்று முழுமையாகப் பயிற்சி கொடுக்க முடியும். அது தமிழக இளைஞர்களுக்கு உதவுமே என்றுதான் கேட்டேன்.

ஸ்ரீகாந்த்: தேர்வுக் குழு சேர்மனாக இருந்தவர்கள் பயிற்சியளிக்கும் ப்ளேயர்கள்தான் இந்திய அணியில் இடம் பிடிக்கிறார்களா, என்ன? நான் பல இளைஞர்களை மோட்டிவேட் செய்கிறேன். அதுதான் என்னால் முடியும். அதுபோதும் என்று நினைக்கிறேன்.

ஜி.ரங்கநாதன்: ஆரம்பத்தில் ‘ஸ்ரீகாந்த் மடேர் மடேர்னு கண்ணை மூடிக்கிட்டு ஆடுறார்பா’ என்று விமர்சனங்கள் வந்தன. அதை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?


ஜி.ரங்கநாதன்
ஸ்ரீகாந்த்: ஸார்…. எந்த விஷயத்திலும் புதுசா ஒரு ஸ்டைலை அறிமுகம் செய்தால், அது விமர்சனத்திற்கு உள்ளாகத்தான் செய்யும். ‘இது மடத்தனம். இது வேலைக்கு ஆகாது’ என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நான் விமர்சனங்களைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுபவன் இல்லை. எனவே, அது போன்ற விமர்சனங்கள் என்னைப் பாதிக்கவில்லை. புதுசா எதையும் ட்ரை பண்ணப் பலருக்கும் பயம். அந்தக் காலத்தில் குழந்தைகளிடம் ‘டாக்டர் ஆகணும், வக்கீல் ஆகணும், எஞ்ஜினியர் ஆகணும்’னு அறிவுரை சொல்வாங்க. இப்போ ஐ.டி.ஃபீல்டுக்கு அனுப்பத் துடிக்கிறாங்க. யாராவது ‘படிக்க வேணாம்டா…. போய் விளையாடு. அதுலே முன்னுக்கு வா’ன்னு சொல்வாங்களா? மினிமம் க்யாரண்டி குறித்து கவலைப்படுகிறவர்கள்தான் இங்கு அதிகம். துணிச்சலாக, புதுமையாக ஒன்றைச் செய்ய பலருக்கும் பயம்தான். எதையும் ‘முதலில் அவன் ட்ரை பண்ணிப் பார்க்கட்டும். அதுக்கு என்ன ரிஸல்ட்டுன்னு பார்த்திட்டு, அப்புறம் நாம் ட்ரை பண்ணலாம்’ என்ற மனோபாவம்தான் இங்கு அதிகம்.


எஸ்.ஜே. இதயா
(20-20 கிரிக்கெட் காலத்தில் நாம் ஆடவில்லையே என்ற வருத்தமுள்ளதா? உங்களைப் பயமுறுத்திய பௌலர் யார்? கவாஸ்கர் – கபில்தேவுக்கு இடையில் ஒரு மோதல் இருந்தது உண்மையா? தேர்வுக் குழுவில் பாரபட்சம் காட்டப்படுவது உண்மைதானே? என்பது முதலான இன்னும் பல கேள்விகளுக்கான பதில்கள் – அடுத்த பதிவில்…)

தொகுப்பு : எஸ்.ஜே. இதயா, பங்கேற்க: thuglak45@gmail.com, படங்கள்: பேஜர் கிருஷ்ணமூர்த்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s