1-துக்ளக் வயது 45


துக்ளக் 45 ஆவது ஆண்டு நிறைவு விழா 14.1.2015 அன்று சென்னை மியூஸிக் அகாடமியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் திரு. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி), திரு.ஹெச்.ராஜா (பா.ஜ.க.), திரு. டி. ராஜா எம்.பி. (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். பெருந்திரளான எண்ணிக்கையில் வாசகர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தின் தொடக்கத்தில், வழக்கம் போல் துக்ளக்கில் பணிபுரிபவர்களை ஆசிரியர் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, வாசகர்களைப் பேச அழைத்தார். விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு..

கே. ராஜேந்திரன், கோடம்பாக்கம்: லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய் – ஆகிய இவர்களுக்குப் பின், நீண்ட காலத்திற்குப் பிறகு, நேர்மையும், துணிவும் மிக்க, செயல்படும் ஒரு பிரதமர் (பலத்த கைதட்டல்) நமக்குக் கிடைத்திருக்கிறார். இதுவரை ஸெக்யூலர் பத்திரிகைகள் , காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், கழகங்களால் விமர்சிக்கப்படாத லஷ்கர் -இ -தொய்பா, ஐஎஸ்ஐஎஸ், போஹோ ஹராம், தாலிபான், இண்டியன் முஜாஹிதின் போன்ற தேச பக்தி (!)இயக்கங்கள் ஒருபுறம்; இன்னொரு புறம் உலகம் அழியும் வரை தொடரப் போகும் பாகிஸ்தான், சீனாவின் எல்லைத் தொல்லைகள் – இவற்றுக்கு நடுவே, ‘எனது தலைவர் மோடி வெற்றி பெறுவாரா’ என்பதை நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும்.


சோ: ஏதோ தீவிரவாதிகளுடன் மோடி போட்டி போடுகிற மாதிரி (சிரிப்பு) அவர் வெற்றி பெறுவாரா என்று கேட்டார். முன்பு இருந்ததை விட, தீவிரவாதத்தை மிகவும் கடுமையாக எதிர்க்கிற, தீவிரவாதிகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் துணிகிற ஆட்சி இப்போது டெல்லியில் நடக்கிறது (கைதட்டல்). ஆகையால், நிச்சயமாக இதற்குப் பலன் இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். தவிர, உலகில் ஆங்காங்கே குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைக்காமல், எல்லோரையும் கொலை செய்பவர்களாக இந்தத் தீவிரவாதக் குழுக்கள் மாறியிருப்பதால், உலகெங்கும், இது பற்றிய எதிர்ப்பு உணர்வு பலமாகத் தோன்றி இருக்கிறது. இது சம்பந்தமாக அயல் நாட்டில் மோடி பேசும்போது, இப்பிரச்னையை (தீவிரவாதத்தை) எல்லோரும் ஒருங்கிணைந்து நசுக்க முனைய வேண்டும் என்று கூறிய கருத்தை, இப்போது எல்லா நாடுகளுமே ஏற்றுக் கொண்டுள்ளன. ஆகவே, நிச்சயமாக இவருடைய ஆட்சியில் இதற்கு முழுமையான தீர்வு காணப்படா விட்டாலும், தீவிரவாதம் உறுதியுடன் ஒடுக்கப்படும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன் (கைதட்டல்).


சாந்தி, கூடுவாஞ்சேரி: அடித்தள மக்களுக்கு பா.ஜ.க.வும், நீங்களும் என்ன செய்யப் போகிறீர்கள்? (கைதட்டல்)


சோ: ஏற்கெனவே பா.ஜ.க. அரசு அடித்தள மக்களுக்காகப் பத்து கோடி வங்கிக் கணக்குளைத் தொடங்கியுள்ளது (கைதட்டல்). சாதாரணமாக வங்கிகளில், ஒரு வருடத்தில் மொத்தம் சுமார் ஒரு கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுவதாகச் சொல்கிறார்கள். தற்போது மத்திய அரசின் முனைப்பினால், சாமான்ய மக்களின் பெயரால், புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியாகப் பார்த்தால், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு பெட்ரோல் விலை வேறு நாட்டில் குறைந்தாலும், இங்கு குறையாது என்ற நிலை இருந்தது. அந்த நிலை மாறி பெட்ரோல் விலை இங்கும் குறைந்திருக்கிறது.

அடித்தட்டு மக்களுக்கு நன்மை புரிய இந்த அரசு பல வகைகளிலும் முயன்று கொண்டிருக்கிறது. இங்கே பேசியவர், இந்த விஷயத்தில் நானும் மோடியும் என்ன செய்யப் போகிறோம் என்று கேட்டார்? ஏதோ நானும் அவரோடு சேர்ந்து அரசை நடத்திக் கொண்டிருக்கிற மாதிரி கேட்டார் (சிரிப்பு). அவரை அந்த அளவுக்கு இறக்கக் கூடாது (சிரிப்பு). அவர் நிச்சயமாக இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வருவார் என்று நான் நம்புகிறேன் (பலத்த கைதட்டல்). இந்த முதல் பதவிக் காலம் முடிவதற்குள், நிச்சயமாக நீங்கள் இங்கே எழுப்பிய கேள்விக்கே இடமில்லாத வகையில் இந்த அரசு செயல்படும் என்று எதிர்பார்க்கிறேன் (கைதட்டல்).

டாக்டர் எம்.அஸ்ரஃப் அலி, மயிலாப்பூர்: நான் ஏறத்தாழ முப்பத்தாறு ஆண்டுகளாக துக்ளக் வாசகர் (கைதட்டல்). 1986-ல் தஞ்சாவூர் திலகர் திடலில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் ஆசிரியரிடம், ஆர்.எஸ்.எஸ்.பற்றி ஏன் எதுவும் எழுதவில்லை என்று கேட்டேன். அப்போது அவர் அளித்த பதிலை, இங்கே கையில் வைத்திருக்கிறேன் . ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்கள், சிறுபான்மை மக்களை அரவணைத்துப் பாதுகாத்து, அச்சமில்லாமல் அவர்கள் இருப்பதற்கு, எல்லாவிதமான உதவிகளையும் செய்வது பெரும்பான்மை மக்களுடைய கடமை என்று சொன்னார். இன்றைக்கு நரேந்திர மோடிக்கு நாட்டின் வளர்ச்சி குறித்த அக்கறை இருப்பதால்தான், பெரும்பான்மையான முஸ்லிம்கள் அவருக்கு வாக்களித்தார்கள் (கைதட்டல்). இல்லாவிட்டால் 71 இடங்களில் உத்திரப் பிரதேசத்தில் பா.ஜ.க. வந்திருக்காது. நான் இங்கு துணிந்து சொல்கிறேன். மயிலாப்பூரில் நான் இல. கணேசனுக்குத்தான் வாக்களித்தேன் (கைதட்டல்). ஏனென்றால், பா.ஜ.க.தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தேன்.


பா.ஜ.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன பிரச்னை இருக்கிறது? இவ்வளவு நாட்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போட்டுத் தான் நாடு நாசமாகி விட்டதே! தமிழ்நாட்டிலுள்ள முஸ்லிம்களும், இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போடு வோம் (பலத்த கைதட்டல்). அது என்ன செய்கிறது என்று பார்ப்போம் என்று ஓட்டளித்தோம். வளர்ச்சி, வளர்ச்சி என்ற கண்ணோட்டத்துடனேயே பேசும் மோடியை நான் பாராட்டுகிறேன். ஆனால், அவரைத் தாண்டி மற்றவர்கள், அமைச்சர்கள் கூட ஏதோ அவரை (மோடியை) அந்தக் கட்சியிலேயே அழுத்துகிறார்களோ என்று கருதும்படி, ’ராமரைத் தந்தையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள், தவறான வழியில் பிறந்தவர்கள்’ என்றெல்லாம் கேவலமாகப் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பேச்சுக்களின் மூலம் பா.ஜ.க. எப்படி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்?

ராஜபக்ஷவை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாமா? அங்கே அவர் சிறுபான்மை தமிழ் மக்களை எப்படி மோசமாக நடத்தினார்? அந்தச் சிறுபான்மை மக்களாலேயே இன்றைக்குப் பதவியை இழந்திருக்கிறார். ஆகவே, இங்கே நாம் ஏன் சமத்துவத்தை நிலை நாட்டக்கூடாது? சிறுபான்மை ஓட்டு வங்கியை நீங்கள் (பா.ஜ.க.) ஏன் பெறக்கூடாது? அவர்களுக்கு எவ்வளவோ வாழ்வாதாரப் பிரச்னைகள் உள்ளனவே! அதை நீங்கள் சரியான முறையில் கையாளலாம். அது நிச்சயமாக மோடியால் முடியும். ஆனால், கடந்த ஏழு மாத காலமாக வருகிற செய்திகள், ஸம்ஸ்க்ருத விவகாரம் போன்ற பேச்சுக்கள் பல உள்ளன. இங்கே அதைச் சொல்ல நேரமில்லை. ஆசிரியருக்கும் உடல்நிலை சரியில்லை. ஆகவே, தயவு செய்து இந்த விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ளுங்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தினமும் என்னுடைய ஐந்து வேளைத் தொழுகையின்போது, ஒவ்வொரு முறையும் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டினேன் (பலத்த கை தட்டல்). துக்ளக் மூலமாகத்தான் நான் அரசியலைக் கற்றுக் கொண்டேன். 2007-ல் சுனாமியைப் பற்றியும், அப்போது முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் மேற்கொண்ட பணிகளைப் பற்றியும் பேசினேன். துக்ளக்கில் இஸ்லாத்தைப் பற்றி எழுதுங்கள். மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வழி காட்டுங்கள்.

சோ: இஸ்லாத்தைப் பற்றி ஒரு தொடர் வெளியிடுவதாக முன்பே நான் கூறினேன். இன்னும் செய்யவில்லை. அதன் தத்துவம் மற்றும் அந்த நம்பிக்கைகளைப் பற்றி எளிமையான முறையில் விளக்கக்கூடிய ஒரு கட்டுரையாளர் கிடைக்கும்போது, நிச்சயமாக அதைச் செய்கிறேன். இங்கே இவர் கூறியது போல, ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறி வருகிற கருத்துக்கள் மோடியின் கண்ணோட்டத்துடன் ஒட்டியது அல்ல. இந்த ஹிந்து அமைப்புகள் எத்தனை இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது. ஆங்காங்கே யாராவது ஒருவர் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தால், உடனே அந்தப் பழி மோடியின் தலை மீதுதான் விழுகிறது. ஏதோ அவர்தான் அதற்குப் பொறுப்பு என்பது போல மோடியிடம் பதிலை எதிர்பார்க்கிறார்கள். ஒரு சிறிய அமைப்பைச் சேர்ந்த ஒருவர் எங்கேயோ செய்கிற ஒரு காரியத்துக்கு, அவர் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

இப்போது பணவீக்கம் மிகவும் குறைந்து விட்டது. பூஜ்யம் என்ற நிலைக்கு வந்து விட்டது என்றால், அதற்கும் மோடிக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள். ஆனால், யாராவது ஒருவன் ஹிந்து என்று சொல்லிக் கொண்டு, பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க என்று பேசினால், ’ ஐயோ இது என்ன, அநியாயமாக இருக்கிறது? ஹிந்துக்கள் எல்லாம் பதினாறு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் சொல்கிறான். இதற்கு மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும் (சிரிப்பு) ’என்று சொல்கிறார்கள். அவரா அப்படிப் பேசினார்? அவருக்கு நிச்சயமாக இதெல்லாம் பிடிக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

ராமருக்குப் பிறந்ததாக ஏற்காதவர்கள், முறைகேடாகப் பிறந்தவர்கள் என்று கூறிய அமைச்சரை மன்னிப்புக் கேட்க வைத்தார். கோட்ஸே விவகாரமும் அப்படித்தான். யாரோ சில பேர் பேசுவதற்கு அவர் என்ன செய்வார்? அவரைப் பொறுத்த வரையில், வளர்ச்சி என்ற ஒரே இலக்கை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார் (கைதட்டல்). அது தான் அவரது மேடை. அந்த அவரது பயணத்தில் இது போன்ற இடைஞ்சல்கள் இல்லாமல் இருப்பதுதான் நல்லது. இப்படி நான் சொல்வது போல, அவரால் வெளிப்படையாக இதைச் சொல்ல முடியாது. ஏனென்றால், அவர் ஒரு கட்சியின் கீழ் இருக்கிறார். அந்த வகையில் அவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன. இது நிச்சயமாக அவரது விருப்பப்படி நடக்கிற ஒரு சமாச்சாரம் அல்ல. இதற்கு ஒரு முடிவு காணப்படும் என்று நான் நம்புகிறேன். சுமார் 35 வருடங்களாகத் துக்ளக்கைப் படிப்பதாக இந்த வாசகர் சொன்னார். அதற்கு முன்னால், என்ன செய்தார்? ஏன் அவ்வளவு லேட்டாக ஆரம்பித்தார் என்று தெரியவில்லை (சிரிப்பு). என்னுடைய உடல்நிலை சரியாவதற்குப் பிரார்த்தனை செய்ததாகக் கூறினார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


எஸ்.பூவநாதன், மதுரை: எனக்கு வயதுதான் ஆகி விட்டதே தவிர, இன்றைய அரசியல் பற்றி எதுவும் தெரியாது. (சோ குறுக்கிட்டு) யாருக்கு வயதாகி விட்டது? (பலத்த சிரிப்பு)


வாசகர்: எனக்குத்தான்.

சோ: அதுதானே பார்த்தேன். இங்கு வந்து தகாத வார்த்தைகளைப் பேசுகிறீர்களோ என்று பார்த்தேன். (சிரிப்பு, பலத்த கைதட்டல்)

(வாசகர் தொடர்ந்து): இன்றைய அரசியல் என்று கேட்கும் போது, தமிழ்நாட்டில் வருங்கால அரசியல் எப்படி இருக்கும்?

சோ : ஜோஸ்யம் பார்க்க வேண்டுமா? (சிரிப்பு, கைதட்டல்) அதற்கு இதுதான் இடம் என்று முடிவு செய்து விட்டீர்கள்? ( சிரிப்பு, கைதட்டல்) சரி, ஜாதகம் அனுப்புங்கள், பார்க்கிறேன் (சிரிப்பு, பலத்த கைதட்டல்).

ரவி, ஆதம்பாக்கம்: வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் பட்சத்தில், அதன் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? ‘தி.மு.க.வை யாராலும் அழித்து விட முடியாது, பா.ஜ.க. தமிழகத்தில் வெற்றி பெற முடியாது’ என்று கருணாநிதி கூறியுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?


சோ: சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வின் வாய்ப்பைப் பற்றிக் கேட்கிறார். தேர்தலுக்கு இன்னும் நிறைய அவகாசம் உள்ளது. என்ன மாதிரிக் கூட்டணிகள் அமையப் போகின்றன என்பது தெரியவில்லை. பா.ஜ.க. எப்படிப்பட்ட கூட்டணியை அமைத்துக் கொள்ளப் போகிறது என்பதும் தெரியவில்லை. இப்போது இங்கே நிறைய முதலமைச்சர்கள் தயாராகி விட்டார்கள் (சிரிப்பு, கைதட்டல்). ஒவ்வொரு கட்சித் தலைவரும், ‘நான்தான் முதல்வர் வேட்பாளர், எங்கள் தலைமையில்தான் கூட்டணி’ என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் நான் ஒருவன்தான் அப்படிச் சொல்லவில்லை (சிரிப்பு, கைதட்டல்). எனக்கும் 0.1 சதவிகித ஓட்டு இருக்கும். இப்படி ஆசைகளை ஒவ்வொருவரும் பெரிதாக வளர்த்துக் கொண்டு விட்டதால், என்ன மாதிரியான கூட்டணி உருவாகும் என்று சொல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் பா.ஜ.க.வின் வாய்ப்புப் பற்றி நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால், முன்பை விட, பா.ஜ.க.வின் வாய்ப்புக் கூடியுள்ளது. ஏனென்றால், மோடி மீதான நம்பிக்கை நாடு முழுவதும் வியாபித்துள்ளது. அதனாலேயே இங்கும் பா.ஜ.க.வின் ஓட்டுக்கள் சற்று அதிகரிக்கும்.

தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று கலைஞர் கூறியதாகச் சொன்னார். தி.மு. க.வை அழித்துக் காட்டுகிறேன் பார் என்று இப்போது யார் சொன்னார்கள்? யாரும் சொல்லவில்லை. அவராக நினைத்துக் கொண்டிருக்கிறார். தூக்கத்தில் என்னென்னெவோ கெட்ட கனவெல்லாம் அவருக்கு வருகிறது போல் இருக்கிறது (பலத்த சிரிப்பு). இதிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்று அவர் நம்பாத, நான் நம்புகிற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் (சிரிப்பு, கைதட்டல்).

பா.ஜ.க. இங்கு வரவே முடியாது என்று அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த மாதிரி நினைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் பா.ஜ.க. வந்து கொண்டிருக்கிறது (கைதட்டல்). அதனால், அதற்கும் வாய்ப்புண்டு. ஆனால், அது எப்போது என்று இப்போது சொல்ல முடியாது.

தொகுப்பு: எஸ்.ரமேஷ், ஃபோட்டோ: சிவா


(தொடரும்)
(துக்ளக் ஆண்டு விழா டி.வி.டி. வேண்டுவோர், 044-24984050 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்)

–நன்றி துக்ளக்

Advertisements

One thought on “1-துக்ளக் வயது 45

  1. N.Paramasivam January 25, 2015 at 9:23 AM Reply

    இந்த வருடம் ஊரில் இல்லாத காரணத்தால் துக்ளக் விழா செல்ல முடியவில்லை. அக் குறை தற்போது நீங்கியது்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s