2-படம் தயாரிக்கவே பயமாக இருக்கிறது – படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன்


இதன் முந்தைய பகுதி…

ராமகிருஷ்ணன்: ஒரு வருடம், வெள்ளி விழா, நூறு நாள் என்று விழாக் கண்ட தமிழ் சினிமா, இன்று மூன்று நாட்கள் தாண்டவே சிரமப்படுகிறது. அப்போதெல்லாம் குமுதம், விகடனில் விமர்சனம் வரும். அதைப் பார்த்து பலர் படம் பார்க்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்வார்கள். வாய் வழி விமர்சனங்கள் பரவுவதற்குப் பல நாட்கள் தேவைப்பட்டன. இன்றைக்கு அப்படியில்லை. வெள்ளிக்கிழமை காலை படம் ரிலீஸானதும் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப்பில் ‘படம் மொக்கை’ என்று தகவலைப் பரப்பி விடுகிறார்கள். இந்த சோஷியல் நெட்வொர்க் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஏ.வி.எம்.சரவணன்: நீங்கள் சொல்வது உண்மை தான். சமீபத்தில் புதுக்கோட்டை தியேட்டர் ஓனர் ஒருவரிடம் பேசினேன். அன்று வெள்ளிக்கிழமை புதுப்படம் ஒன்று ரிலீஸாகி இருந்தது. ‘படம் எப்படிப் போகிறது?’ என்று கேட்டேன். ரிலீஸ் ஆன அன்றைக்கே, தியேட்டருக்கு யாரும் வராததால் மேட்னி ஷோவை கேன்ஸல் செய்து விட்டதாகக் கூறினார். இதுதான் இன்று சினிமாவின் நிலவரம். வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படம் சனி, ஞாயிறு வரை ஓடி விட்டாலே வெற்றி என்ற நிலைக்கு வந்து விட்டது. இதற்காக சோஷியல் நெட்வொர்க் விமர்சகர்களைக் குறை சொல்ல முடியாது. சில சிறு படங்கள் அவர்கள் பாராட்டுதலாலேயே ஓடியும் இருக்கின்றன. பொதுவாகவே, மக்களுக்கு ஒரு கூர்மையான பார்வை இருக்கிறது. சில படங்களை அவர்கள் முதல் ஷோவிலேயே புறக்கணித்து விடுகிறார்கள். அது பெரிய ஹீரோ நடித்த படமாக இருந்தால் கூட, அந்த நிலைமை ஏற்பட்டு விடுகிறது. மக்கள் எதை வைத்து இப்படி ஒரு முடிவு எடுக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

ஆர்.சாந்தலட்சுமி: நீங்கள் அந்தக் காலத்தில் பெரிய பெரிய இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறீர்கள். அன்றைய இயக்குனர்களுக்கும் இன்றைய இயக்குனர்களுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

ஏ.வி.எம்.சரவணன்: அன்றைய இயக்குனர்கள், ‘தயாரிப்பாளர் என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு லாபம் வருகிற மாதிரி படம் எடுத்துக் கொடுக்க வேண்டும்’ என்கிற எண்ணத்தோடு செயல்பட்டார்கள் (வாசகர்கள் கைதட்டல்). இன்றைக்கு இருக்கிற இயக்குனர்கள், தாங்கள் நினைத்தபடி படமெடுக்க வேண்டும் என்று மட்டுமே செயல்படுகிறார்கள். இயக்குனர் நினைத்தபடி படம் எடுப்பதில் தப்பில்லை; அதே நேரம் தயாரிப்பாளரின் பட்ஜெட், இன்றைய வியாபார நிலை எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட இயக்குனர்களே இன்றைக்குக் கிடையாது என்று சொல்ல முடியாது. கே.எஸ்.ரவிக்குமார் போன்ற சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால், எண்ணிக்கை குறைந்து போய் விட்டது.

எஸ்.பி.முத்துராமன் அவர்கள் ‘முரட்டுக்காளை’ ஷூட்டிங்கின் போது, ஒரு ட்ரெயின் ஃபைட் எடுக்க வேண்டும் என்று பட்ஜெட் கொண்டு வந்து கொடுத்தார். ‘வித்தியாசமாக இருக்கும்’ என்றார். நானும் சம்மதித்தேன். ஐந்து நாட்கள் எடுப்பதாக இருந்த அந்த ஃபைட்டை, மூன்றே நாட்களில் எடுத்து வந்து, பட்ஜெட்டில் ஒதுக்கியதில் மீதிப் பணத்தை திருப்பிக் கொண்டு வந்து கொடுத்தார்.

அதே போல் ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தை வினியோகஸ்தர்களுக்குக் குறைந்த விலைக்குத் தர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் ஊட்டியில் பட்டாசுகள் வெடித்து எடுக்க வேண்டிய பாடல் காட்சியை எடுக்க எஸ்.பி.எம். தயங்கினார். ‘உங்கள் விருப்பம் போல அந்தப் பாடலை ஷூட் பண்ணி விடுங்கள்’ என்று அவரை ஊட்டிக்கு அனுப்பி வைத்தேன். மிகக் குறைந்த செலவில் ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா’ என்ற பாடலை சிறப்பாக ஷூட் செய்து கொண்டு வந்தார். திட்டமிட்டதை விடப் பாதிச் செலவு தான் ஆகியிருக்கும். இதற்காக ஷூட்டிங்கில் அசைவ உணவு வழங்குவதைக் கூட அவர் தவிர்த்திருந்தார் என்பது பிறகுதான் தெரிந்தது. அந்தப் படத்தில் எனக்கு லாபத்தைக் கொண்டு வந்து கொடுத்தார் அவர். இப்படி தயாரிப்பாளர்களுக்காகக் கவலைப்படும் இயக்குனர்கள் இன்றைக்குக் குறைவு. மற்றபடி டெக்னிக்கல் விஷயங்களில் இன்றைய இயக்குனர்கள் மிகவும் ஷார்ப்பாக இருக்கிறார்கள்.

ஆர்.நாகராஜன்: நீங்கள் சென்னையின் ஷெரீஃபாக இருந்தீர்கள். அந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்..

ஏ.வி.எம்.சரவணன்: ஒரு நாள் திடீரென்று உள்துறை செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் அவர்களிடமிருந்து ஃபோன் வந்தது. ‘இந்த முறை ஷெரீஃப் பதவி ப்ராமின் கோட்டாவாக இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். நான் எழுதிக் கொண்டு போன பெயர்களையெல்லாம் ஒரு கோடு போட்டு அழித்து விட்டு, உங்கள் பெயரை எழுதி விட்டார். நியாயமாக உங்கள் ஒப்புதலைக் கேட்டு விட்டுத்தான் நான் அறிவிக்க வேண்டும். ஆனால் எம்.ஜி.ஆரே சொன்ன பிறகு, உங்களுக்குச் சாய்ஸ் இல்லை. நீங்கதான் ஷெரீஃப்’ என்று கூறி விட்டு ஃபோனை வைத்து விட்டார். அவர் ஃபோனை வைத்ததுமே, சிவந்தி ஆதித்தனிடமிருந்து வாழ்த்து ஃபோன் வந்தது. பிறகுதான் தெரிந்தது, ப்ரஸ்ஸுக்குத் தகவல் அனுப்பி விட்டுதான் எனக்கே சொல்லியிருக்கிறார்கள் என்று. ஆர்.எம்.வீரப்பன்தான் என் பெயரை எம்.ஜி.ஆரிடம் கூறினார் என்றும், அதை உடனே எம்.ஜி.ஆர். ஏற்றார் என்றும் பிறகு தெரிந்து கொண்டேன்.

ஒரு வருடம் கழிந்த நிலையில், சென்னை ஏர்போர்ட்டில் ராஜீவ் காந்தியை வரவேற்க ஷெரீஃப் என்ற முறையில் நானும் போயிருந்தேன். பின் வரிசையில் இருந்த என்னைப் பக்கத்தில் அழைத்தார் எம்.ஜி.ஆர்.. அப்போது பேசுவதற்கு அவர் கொஞ்சம் சிரமப்பட்ட நேரம். மெல்லிய குரலில் என்னிடம், ‘இன்னும் ஒரு வருடம்’ என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை. ‘என்ன சொல்றீங்க. புரியலை’ என்றேன். ‘இன்னும் ஒரு வருடம்’ என்றார் மறுபடியும். எனக்குக் கொஞ்சம் புரிந்தது. ‘ஷெரீஃப் பதவியில் இன்னும் ஓராண்டு இருக்கச் சொல்கிறீர்களா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தார். ‘அந்தப் பதவியிலிருந்து நான் எதுவும் செய்து விடவில்லை. எனக்கு ஏன் மீண்டும் அந்தப் பதவி?’ என்று கேட்டேன். ‘எதுவுமே செய்யவில்லை இல்லையா? அதற்குத்தான் இன்னொரு வருஷம்’ என்றார். நான் சிரித்து விட்டேன். அவர் விருப்பத்தை ஏற்றேன்.

நாகராஜன்: இன்றைக்கு நீங்களாகவே படத்தயாரிப்பைக் குறைத்துக் கொண்டு விட்டீர்கள். ஆனால், ஏராளமான தொழிலாளர்களோடு எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஏ.வி.எம். ஸ்டுடியோவைச் சுருக்கி, தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பும்போது உங்கள் மனநிலை எப்படியிருந்தது?

ஏ.வி.எம்.சரவணன்: கால மாற்றத்திற்கேற்ப நாமும் மாறித்தானே ஆக வேண்டும்? தென்னிந்திய சினிமாக்கள் எல்லாமே ஒரு காலத்தில் சென்னை ஸ்டுடியோக்களில் தான் படமாக்கப்பட்டன. பின்னர் கேரளா, கர்நாடகத்தில் ஷூட் பண்ணினால் சப்ஸிடி தருவதாகச் சொன்னதும், மலையாளம் மற்றும் கன்னடப் பட ஷூட்டிங்குகள் இங்கு குறைந்து விட்டன. எனினும் தெலுங்கு, தமிழ்பட ஷூட்டிங்குகள் போதுமான அளவுக்கு இங்கு நடைபெற்றன. ஆந்திராவிலும் ‘அங்கு ஷூட் பண்ணினால் வரிவிலக்கு’ என்ற அறிவிப்பு வந்ததும்தான் ஸ்டுடியோக்கள் வெறிச்சோடி விட்டன. இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. வரிவிலக்கு கிடைக்கும் என்றால் யாருமே அங்குதான் போவார்கள்.

ஏன் நாங்களே கூட ‘ஜெமினி’, ‘லீடர்’ போன்ற தெலுங்குப் படங்களை ஆந்திராவில்தான் ஷூட் செய்தோம். இதனால் ஃப்ளோர்களைக் குறைத்து, நிரந்தரப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்குச் செட்டில் செய்து அனுப்பி வைத்தோம்.

சாந்தலட்சுமி: உங்களைப் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், பாலசந்தர், பாரதிராஜா போன்ற பெரிய இயக்குனர்கள், பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் இன்று சின்னத்திரைக்கு வரத் துவங்கி விட்டனர். இந்த நிலைக்கு என்ன காரணம்?

ஏ.வி.எம்.சரவணன்: மக்களுக்குச் சினிமாவை விட வீட்டுக்குள் வரும் டி.வி. வசதியாக இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். குடும்பத்துடன் சினிமாவுக்குப் போனால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டைப் பூட்டி விட்டு சினிமாவிற்கு போனால், திரும்ப வரும் போது வீடு பத்திரமாக இருக்குமா என்ற பயம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். கடுமையான ட்ராஃபிக் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இதனால் மக்களுக்கு ஸீரியல் மேல் பிடிப்பு உண்டாகி விட்டது. ஒரு நண்பர் என்னிடம் சொன்னார்- ‘விளம்பரம்தான் ஸார் எனக்குச் சோறு போடுது’ன்னு. ‘ஓ.. விளம்பரக் கம்பெனி வெச்சிருக்கீங்களா’ன்னு கேட்டேன். ‘இல்ல ஸார்.. ஸீரியல் நடக்கிறப்போ விளம்பரம் வந்தால்தான் ஸார் மனைவி எனக்குச் சோறு போடுறா’ என்றார். (வாசகர்கள் சிரிப்பு.) அந்தளவுக்கு ஸீரியல் பெண்களை ஆக்ரமித்து விட்டது. சினிமாப் பிரியர்களுக்கும் நாள் முழுக்க பல பழைய படங்கள் எல்லா டி.வி.யிலும் ஓடுகின்றன. எனவே சினிமாவுக்கு கூட்டம் குறைந்து விட்டது.

எஸ்.ராமகிருஷ்ணன்: எந்த நேரத்திலும், எந்தப் படத்தையும் ஏதேனும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து மிரட்ட முடியும் என்ற சூழல் குறித்து உங்கள் கருத்து?

ஏ.வி.எம்.சரவணன்: கஷ்டமான சூழல்தான் இது. அந்தக் காலத்தில் ஏ.வி.எம்.மும், பீம்சிங்கும் சேர்ந்து ‘பாவமன்னிப்பு’ படத்தை எடுத்தோம். இன்றையச் சூழலில் அப்படி ஒரு படத்தை எடுப்பது குறித்து சிந்திக்கக் கூட முடியாது. நாகையா- முஸ்லிம். சுப்பையா- கிறிஸ்டியன். எம்.ஆர்.ராதா- ஹிந்து. இதில் ஹிந்து கேரக்டர்தான் நெகட்டிவ் கேரக்டர். இன்றைக்கு அப்படி எடுத்தால் ஹிந்து அமைப்புகள் நிச்சயம் கண்டனம் தெரிவிக்கும். அன்றைக்கு ஒரு ஹிந்துப் பெண், முஸ்லிமால் வளர்க்கப்பட்டு, ஒரு கிறிஸ்தவரை மணந்து கொள்வதான கதை அது. அது போன்ற படத்தை இன்று எடுக்க முடியாது. எல்லாவற்றிற்கும் பிரச்னை செய்கிறார்கள். ஒரு நெகட்டிவ் கேரக்டர் இந்த மதத்தைச் சேர்ந்தவர், இந்தத் தொழில் செய்பவர் என்று எதைக் காட்டினாலும் யாராவது சிலர் எதிர்ப்புத் தெரிவிக்க கிளம்பி விடுகிறார்கள்.

கணேஷ்குமார்: ஹாலிவுட் படங்களை டப் செய்து, இங்கு அனுப்புகிறார்கள். ஹிந்திப் படங்கள் இங்கு வருகின்றன. ஆனால், தரமான தமிழ்ப் படங்கள் கூட பிற மாநிலங்களுக்கும், உலகத் திரைப்பட விழாக்களுக்கும் போய் வெற்றி பெறுவதில்லையே என்ன காரணம்?

ஏ.வி.எம்.சரவணன்: நமக்கு ப்ரொமோஷன் தெரியவில்லை என்பதுதான் காரணம். அந்தக் காலத்திலேயே ‘தெய்வமகன்’ திரைப்படத்தை பட விழாவிற்கு அனுப்பினார்கள். ஆனால், அது அங்கு திரையிடப்படவில்லை. படத்தை அனுப்பினார்களே தவிர, அதை ஃபாலோ செய்து ப்ரொமோட் செய்யும் யுக்தி நமக்குத் தெரியவில்லை. படத்திற்கான பப்ளிஸிட்டி செய்வதில் கூடச் சிலர் தடுமாறுகிறார்கள். எங்கள் படங்களுக்கு நாங்கள் எடுத்த எடுப்பில் பெரிய விளம்பரம் செய்ய மாட்டோம். இரண்டாவது வாரம், மூன்றாவது வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பப்ளிஸிட்டியைக் கூட்டுவோம். படத்தில் ‘ஸ்டஃப்’ இருந்தால், இந்த யுக்தி படத்தை தூக்கி நிறுத்தி விடும். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை நாங்கள் தயாரித்தபோது, விநியோகஸ்தர்கள் அந்தப் படத்தை வாங்கவே முன்வரவில்லை. ‘இதை வாங்கினால்தான் அடுத்து ரஜினி, கமல் படங்களைத் தருவோம்’ என்று மிரட்டித்தான் வியாபாரம் செய்தோம். ஒரு வினியோகஸ்தர் அந்தப் படத்திற்கான செக்கை என்னிடம் கொடுத்தபோது, ‘இது படத்திற்காக நான் தரும் செக் அல்ல; இது உங்களுக்கு நான் தரும் கிஃப்ட் செக்’ என்று கூறி விட்டுச் சென்றார்.

ஆனால், அந்தப் படம் நாங்கள் படிப்படியாக செய்த விளம்பர யுக்தியால் மெதுவாக பிக்அப் ஆகி பெரு வெற்றியடைந்தது. வினியோகஸ்தர்கள் அனைவருக்கும் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்ததோடு, தமிழுக்கு முதல் தங்கப் பதக்கத்தையும் வென்று கொடுத்தது. இயக்குனர் விசுவும், அவரது தம்பி கிஷ்முவும் அந்தப் படத்தை ஒரு தவம் போல் செய்து முடித்தனர். மிக சிக்கனமாக, ஆனால் வெற்றிகரமாக உருவாக்கிக் கொடுத்தனர்.

வி.சாரங்கபாணி: முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி பல நாட்கள் கழித்து ஹிட்டாகியுள்ளன. நீங்கள் சொன்ன ‘சம்சாரம் அது மின்சாரம்’ மாதிரி, ‘அன்னக்கிளி’, ‘பூவே பூச்சூடவா’ என்று பல படங்கள் லேட்டாக ஹிட்டாகியுள்ளன. இன்றைக்கு அந்தச் சூழல் இல்லாமல் போய்விட்டதே?

ஏ.வி.எம்.சரவணன்: ஆமாம். அன்றைக்கு வாய் வழியே தகவல் பரவி, மக்கள் தியேட்டருக்குத் தேடி வந்தார்கள். இன்றைக்கு தகவல் பரவும் முன்பே படம் தியேட்டரை விட்டுப் போய் விடுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு படம் எடுத்தால் கூட, இரண்டு கோடி ரூபாய் பப்ளிஸிட்டிக்கு செலவழித்தால்தான், அப்படி ஒரு படம் திரைக்கு வருகிறது என்ற செய்தியே மக்களைப் போய்ச் சேர்கிறது. படம் பற்றி பேச்சு பரவும் வரை தியேட்டர்காரர்கள் காத்திருப்பதில்லை. ஒன்பது மாதத்தில் 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவதின் விளைவு இது.

என்.வாசுதேவன்: காமெராமேன், நடிகர்களெல்லாம் இயக்குனர் ஆகி விட்ட நிலையில், சினிமாவில் A to Z வரை தெரிந்த நீங்கள் ஏன் இயக்குனர் ஆகவில்லை?

ஏ.வி.எம்.சரவணன்: அதனால்தான் ஆகவில்லை (வாசகர்கள் சிரிப்பு). ‘வாழ்க்கை’ படம் ஹிட்டானபோது, எனது தந்தையிடம் ‘ஏன் அப்புச்சி நீங்களே டைரக்ட் பண்ணக்கூடாது?’ என்று கேட்டேன். அவரோ ‘டைரக்டர் ஒருத்தர் இருக்கும் போது அவருக்குன்னு ஒரு ஐடியா இருக்கும். அதோடு நம்ம ஐடியாவும் சேரும்போது அது இரட்டை பலம்தானே’ என்றார். அதையே நானும் ஃபாலோ செய்து விட்டேன்.

கதை விவாதங்களில் நானும் பல பரிந்துரைகள் செய்ததுண்டு. ‘சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மனோரமா கேரக்டரை நுழைக்கச் சொன்னது; ‘சகலகலா வல்லவன்’ படத்தில் மாட்டுவண்டி சண்டை சேர்க்கச் சொன்னது; ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் க்ளைமாக்ஸை மாற்றச் சொன்னது… என்று எனது பல ஐடியாக்களும் இயக்குனர்களோடு சேர்ந்ததால்தான் படம் மேலும் பலமடைந்தது.

சாந்தலட்சுமி: இப்போதெல்லாம் இசை வெளியீட்டு நிகழ்ச்சியையே பெரிய விழாவாக நடத்திச் செலவு செய்கிறார்களே.. இது தேவைதானா?

ஏ.வி.எம்.சரவணன்: அது ஒரு வகை பப்ளிஸிட்டி என்று நினைக்கலாம். அல்லது இன்னொரு காரணமும் இருக்கலாம். முன்பெல்லாம் நூறாவது நாள் விழா, வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் ஒருவரை ஒருவர் பாராட்டிப் பேசுவார்கள். இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போய் விட்டது. எனவே, முன்கூட்டியே ஒருவரை ஒருவர் பாராட்டிப் பேசும் வாய்ப்பாக இதை அமைத்துக் கொள்கிறார்களோ என்னவோ (வாசகர்கள் பலத்த சிரிப்பு.) படம் வருவதற்கு முன்பு பெரிய விளம்பரம் தேவையாயிருக்கிற இந்தக் கால கட்டத்தில், இப்படி ஒரு விழா தேவைப்படலாம்.

வாசுதேவன்: சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., வைஜெயந்தி மாலா, கமல்ஹாசன் ஆகியோரை அறிமுகம் செய்த நீங்கள், அதன் பிறகு புதுமுகங்களை அறிமுகம் செய்யாதது ஏன்?

ஏ.வி.எம்.சரவணன்: சிவகுமாரை நீங்கள் விட்டு விட்டீர்கள். 1980 வரை இருந்த சினிமா வேறு. அதன் பிறகு வேறு. 1975-ல் தூர்தர்ஷன் வந்தது. அப்போதே வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலைகளில் தியேட்டருக்குக் கூட்டம் குறையத் துவங்கியது. டி.வி.யில் ஒலியும் ஒளியும் மற்றும் திரைப்படங்களும் ஒளிபரப்பானதால், அந்தப் பாதிப்பு ஏற்பட்டது. 80-க்குப் பிறகு ஸாட்லைட் சேனல்கள் வரத் துவங்கி விட்டன. எனவே ஸ்கிரிப்ட்டுக்காக நடிகர்களைத் தேடிய நாங்கள், ‘முரட்டுக்காளை’க்குப் பிறகு, ஹீரோவுக்காக ஸ்கிரிப்ட் தேட ஆரம்பித்து விட்டோம். எனவே புதுமுகங்களை அறிமுகம் செய்ய முடியாமல் போய் விட்டது.

நாகராஜன்: ஒரு நோபிள் பெர்சன், தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரை வில்லனாக்கியது எப்படி ஸார்?

ஏ.வி.எம்.சரவணன்: முரட்டுக்காளை’ படத்திற்கு வில்லனாக யாரைப் போடலாம் என்று யோசித்தபோது, பஞ்சு அருணாச்சலமும், எஸ்.பி.எம்.மும்தான் ஜெய்சங்கர் பெயரைச் சொன்னார்கள். கூடவே அவர் ஒத்துக்குவாரா என்ற சந்தேகமும் எழுந்தது. நான் ஃபோன் பண்ணினேன். நேரில் வந்து விட்டார். ‘நீங்க எல்லாம் சரியா இருக்கும்னு நினைக்கிறதாலே நான் வில்லனா பண்றேன்’ன்னு உடனே ஒத்துக்கிட்டார். அவருக்குப் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கவும், போஸ்டர்களில் அவர் படத்தைப் பெரிதாகப் போடவும் ரஜினியே சிபாரிசு செய்தார்.

வாசுதேவன்: ஒரு பெர்ஸனல் கேள்வி ஸார்.. எப்போதும் கைகட்டிக் கொள்ளும் பழக்கம் உங்களுக்கு எப்படி வந்தது?

ஏ.வி.எம்.சரவணன்: அது திட்டமிட்டுப் பண்ணினதில்லை. ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போதுதான் அப்படின்னு இல்லை. இப்போ கூட பாருங்க கை கட்டிக்கிட்டுத் தானே பேசுறேன்? கார் ஓட்டும்போது சிக்னலில் நின்றால் கூட, ஸ்டியரிங்கிலிருந்து கையை எடுத்து இப்படி கட்டிக்குவேன். கால் மேலே கால் போட்டுக்கிற மாதிரி, இது ஒரு ஹாபிட் அவ்வளவுதான்.

தொகுப்பு : எஸ்.ஜே. இதயா, பங்கேற்க: thuglak45@gmail.com, http://www.facebook.com/thuglakweb, படங்கள்: பேஜர் கிருஷ்ணமூர்த்தி


சந்தித்த வாசகர்கள்

வி.சாரங்கபாணி, சென்னை (தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனி)
எம்.கணேஷ் குமார், சென்னை (ஸாஃப்ட்வேர் கன்ஸல்டன்ட்)
என்.வாசுதேவன், சென்னை (ரியல் எஸ்டேட்)
ஆர்.சாந்தலட்சுமி, சென்னை (பிஸினஸ்)
எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை (ஸாஃப்ட்வேர் துறை)
ஆர்.நாகராஜன், சென்னை (அக்கவுண்டண்ட்)
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s