1-படம் தயாரிக்கவே பயமாக இருக்கிறது – படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன்


லகில் இன்றும் இயங்கும் ஐந்து பழமையான சினிமா ஸ்டூடியோக்களில் சென்னையிலுள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவும் ஒன்று. 70 வருடங்களாக சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஏ.வி.எம். நிறுவனம், பல மொழிகளில் 175 திரைப்படங்களையும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டி.வி. ஸீரியல் எபிஸோட்களையும் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஏ.வி.எம்.சரவணனை அவரது அலுவலகத்தில் துக்ளக் வாசகர்கள் சந்தித்து கலந்துரையாடினார்கள். அதன் தொகுப்பு இங்கே:

வி.சாரங்கபாணி: ஒரு தரமான படத்தை எடுத்தால் கூட, அதிலும் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு சில தேவையில்லாத காட்சிகளை வலியப் புகுத்துகிறார்களே? இதைத் தவிர்க்க முடியாதா?


ஏ.வி.எம்.சரவணன்: ஒரு திரைப்படத்தை கமர்ஷியலாக எடுக்கும்போது, எந்த டைப் ரசிகர்களுக்கு அது போகிறதோ, அதற்கேற்ப சில காட்சிகளைச் சேர்ப்பது அவசியமாகி விடுகிறது. இப்போது துக்ளக் பத்திரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் வாசகர்கள் அரசியல் பிரியர்கள். எனவே அரசியல் செய்திகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க முடியும். கல்கியில் வருவதைப் போல தொடர்கதை வெளியிட முடியாது. அதுபோலத்தான் சினிமாவும். எந்த டைப் ரசிகர்களுக்காகத் தயாரிக்கிறோமோ, அந்த ரசிகர்களுக்கான காட்சிகளைக் கொடுக்கத்தான் வேண்டும். எனக்குப் பிடித்த காட்சிகளை ரசிகர்களிடம் திணிக்க முடியாது. ஆனாலும், சமீப ஆண்டுகளாக நாங்கள் சில நார்ம்ஸ் ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். ‘தற்கொலைக் காட்சிகளை காட்டுவதில்லை; புகை பிடிக்கும் காட்சியோ, மது குடிக்கும் காட்சியோ இடம் பெறக் கூடாது’ என்று எங்களுக்கு நாங்களே சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். சமூகத்திற்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யக்கூடாது என்று நினைக்கிறோம். அதே நேரம், கடந்த வருடத்தில் செப்டம்பர் வரை மட்டுமே 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. 2014-ஆம் ஆண்டு முடிவதற்கு முன்பு 300 படங்கள் வரை ரிலீஸ் ஆகிவிடும். இவ்வளவு படங்கள் ரிலீஸாகும்போது, நமது படத்தைப் பார்க்க வைப்பது எப்படி என்ற பதட்டம் பலரையும் தொற்றிக் கொள்கிறது. அதனால் காம்ப்ரமைஸுக்கு ரெடியாகி விடுகிறார்கள்.


என்.வாசுதேவன்: ஆரம்ப காலத்தில் உங்கள் தந்தையார் காரைக்குடியில்தான் ஸ்டூடியோ வைத்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ சேலத்தில் இயங்கியது. கோவையிலும் பட்சிராஜா ஸ்டூடியோ இயங்கியது. ஆனால், அதன் பிறகு ஏன் எல்லோரும் சென்னைக்கே வந்து விட்டீர்கள்? இப்போதும் பெரும்பாலான திரைப் படங்களின் படப்பிடிப்பு மதுரை மற்றும் பொள்ளாச்சி பக்கம்தான் நடக்கின்றன. ஏன் அங்கேயே ஸ்டூடியோக்களை அமைக்கக் கூடாது?

ஏ.வி.எம்.சரவணன்: உங்கள் கேள்வி இன்றைய நிலையில் அடிப்படையில்லாமல் போய் விட்டது. ஏனென்றால் இன்று யாருமே ஸ்டூடியோவில் படம் எடுப்பதேயில்லை. சென்னையில் 28 ஸ்டூடியோக்கள் இருந்த காலம்போய், இப்போது எங்கள் ஸ்டூடியோவும், பிரசாத் ஸ்டூடியோவும் மட்டும்தான் இயங்கி வருகின்றன. ஆனாலும், இந்த ஸ்டூடியோக்களிலும் சினிமா ஷூட்டிங் நடப்பது என்பது அரிதிலும் அரிது. எல்லா ஃப்ளோர்களிலும் டி.வி. சேனல்களின் பலவித ஷோக்களுக்கான ஷூட்டிங்ஸ்தான் நடந்து வருகின்றன. நாங்கள் தயாரித்த ‘சிவாஜி’ படத்திற்கே, ரெண்டு சீனோ, மூணு சீனோதான் எங்கள் ஸ்டூடியோவில் ஷூட் பண்ணினோம். முன்பு வீடுகளுக்குச் செட் போடுவார்கள். இப்போது வீடுகளிலேயே போய் ஷூட் செய்து விடுகிறார்கள். ஸ்டூடியோ செட் தேவையில்லாமல் போய் விட்டது.

எஸ்.ராமகிருஷ்ணன்: சமீப ஆண்டுகளாக சினிமா கட்டணம் பெரியளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக மால்களில் உள்ள தியேட்டர் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. அங்கு பார்க்கிங் சார்ஜ் என்ற பெயரிலேயே, ஒரு பெரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இதுபோக உள்ளே விற்பனையாகும் உணவுப் பொருட்களின் விலையும் மிக அதிகம். ஒரு குடும்பம் சினிமாவுக்கென்று கிளம்பினால், ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலை உள்ளது. இந்த நிலையில் திருட்டு வி.ஸி.டி மூலம் படம் பார்க்க மக்கள் முனைகிறார்கள். இதைத் தவிர்க்க, படச் செலவுகளைக் குறைத்து, தியேட்டர் கட்டணத்தையும் குறைக்க முடியாதா? சமீபகாலமாக அரசாங்கம் கேளிக்கை வரியை ரத்து செய்து சலுகை வழங்குகிறது. ஆனால், அந்தச் சலுகையையும் மக்களுக்குத் தராமல், திரைத்துறையே வைத்துக் கொள்கிறது. இந்த நிலையில் கட்டணத்தைக் குறைத்து அதிக மக்களை தியேட்டருக்கு வர வழைக்க என்ன வழி?

ஏ.வி.எம்.சரவணன்: இன்றைக்கு எல்லா விலைவாசியும் ஏறியிருக்கிறது. பத்தாயிரம் ரூபாய்க்கு அம்பாஸிடர் கார் விற்ற காலமும் உண்டு. இன்றைக்கு அந்தக் காசில் ஸ்கூட்டர் கூட வாங்க முடியாது. இப்படி எல்லா விலையும், கட்டணங்களும் உயரும் போது சினிமா கட்டணம் மட்டும் அப்படியே இருக்க முடியாது. நடிகர், நடிகைகளுடைய சம்பளம் மட்டும் உயரவில்லை; டெக்னீஷியன்கள், தினசரி தொழிலாளர்கள் எல்லோருடைய சம்பளமும் உயர்ந்துள்ளது. ஷூட்டிங் செலவுகள், ரிக்கார்டிங் செலவுகள், டப்பிங் செலவுகள்.. என்று எல்லா துறைகளிலும் செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே முதலீடு அதிகரிக்கும்போது, அதற்குரிய லாபத்தைப் பெற தியேட்டர் கட்டணங்களும் உயர்கின்றன. எல்லா படங்களுக்கும் வரி விலக்குக் கிடைப்பதில்லை. அப்படியே வரி விலக்கு கிடைத்தாலும், அது தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஓரளவு குறைக்க உதவுகிறதே தவிர, தயாரிப்பாளருக்குப் பெரிய லாபத்தைக் கொடுத்து விடுவதில்லை. ஒரு சில படங்கள் வேண்டுமானால் உங்கள் கூற்றுப்படி பெரு வெற்றி பெற்று, வரிவிலக்கு வருமானத்தையும் விடக் கூடுதலாகப் பெறலாம். ஆனால், மெஜாரிட்டி படங்களின் நிலைமை அப்படியில்லை. இன்றைக்குப் படம் தயாரிக்க ஆகும் செலவைப் பார்த்து மிரண்டு போய்த்தான், நாங்கள் சினிமா தயாரிப்பையே தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.

எம்.கணேஷ் குமார்: படங்கள் வந்து வருடக்கணக்கில் ஆனபோதிலும், அந்தப் படத்திற்கான டி.வி.டி. வருவதில்லையே.. ஏன் ஸார்? அந்த விற்பனை மூலமும் தயாரிப்பாளருக்கு ஒரு வருமானம் கிடைக்கும்தானே?

ஏ.வி.எம்.சரவணன்: உண்மைதான். அது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் செயல்படுத்த முடியாமல் நிற்கிறது. இன்றைக்கு ஒரு படம் ஒரு வாரம் தான் ஓடுகிறது. நூறு நாள் ஓடும் படங்கள் மிகச் சொற்பம். இருந்தாலும் விநியோகஸ்தர்கள் டி.வி.டி. வெளியிட ஒப்புக் கொள்வதில்லை. அவர்கள் உரிமையை விட்டுக் கொடுக்க அவர்கள் தயாராகயில்லை. இப்போதே தியேட்டர்கள் குறைந்து கொண்டு வருகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்த நிலை மாறி, இன்றைக்கு சுமார் ஆயிரத்து முன்னூறு தியேட்டர்கள்தான் உள்ளன. டி.வி.டி. உடனே வந்து விட்டால், தியேட்டர்கள் மேலும் பலவீனப்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால், மும்பையில் நீங்கள் சொல்கிற மாதிரி ஹிந்திப் படங்களின் டி.வி.டி.க்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கடைக்கு வருகின்றன. அதேபோல் இங்கும் வரலாம். படம் ரிலீஸாகி நூறு நாட்களுக்குப் பிறகு டி.வி.டி. வெளியிடலாம். அதன் மூலம் தயாரிப்பாளருக்கு ஒரு ரெவின்யூ கிடைக்கும். அது சினிமாத் துறைக்கு நல்லது. இல்லையென்றால் திருட்டு வி.ஸி.டி. அந்த லாபத்தைத் திருடிக் கொள்வதைத் தவிர்க்க முடியாது.

கணேஷ் குமார்: சமீபகாலமாக பல வெளிநாட்டுச் சினிமாக் கம்பெனிகள் தமிழ்ப் படம் எடுக்க ஆரம்பித்துள்ளன. இதனுடைய தாக்கம் எப்படி இருக்கும்? தமிழ் சினிமாவிற்கு நல்லதா, கெட்டதா?

ஏ.வி.எம்.சரவணன்: நல்லது இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், பாதிப்பு எதுவும் இருக்கிற மாதிரித் தெரியவில்லை. அதைத் தமிழ் சினிமாவிற்கு ஆதரவான விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஆர்.நாகராஜன்: உங்கள் ஏ.வி.எம்.மின் 69 வருட வரலாற்றில்காசேதான் கடவுளடா’ (1972) படத்தைத்தான் மிக அற்புதமான படமாக நான் பார்க்கிறேன். அந்தப் படம் எப்படி உருவானது. அதை ஏன் நீங்கள் ரீமேக் செய்யக் கூடாது?

ஏ.வி.எம்.சரவணன்: அது உங்கள் கோணம். மற்ற சிலருக்கு வேறு சில படங்கள் பிடித்திருக்கலாம். ‘அன்பே வா (1966)’, ‘அதே கண்கள் (1967)’ உள்ளிட்ட சில படங்களை டி.வி.யில் போடும்போதும், பலர் மிக விரும்பிப் பார்க்கிறார்கள்.

நீங்கள் சொன்னபடி ‘காசேதான் கடவுளடா’ படத்தை ரீமேக் செய்யலாமா என்று நாங்கள் கூட யோசித்தோம். ஆனால், தேங்காய் சீனிவாசன் ரோலை யாரிடம் கொடுப்பது என்று யோசித்து, யோசித்து அதற்குப் பொருத்தமானவர் என்று யாரையும் நினைக்கத் தோன்றாததால், அந்த ஐடியாவைக் கைவிட்டு விட்டோம். தேங்காய் சீனிவாசனின் நடிப்பு அந்தப் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட். அந்த நடிப்பு இல்லாமல், அந்தப் படத்தைத் திரும்ப எடுக்க முடியுமா என்ற தயக்கம் எங்களுக்கு ஏற்பட்டது. இருந்தாலும் உங்கள் ஆசை நிறைவேறுகிற வகையில், அதை மீண்டும் வெற்றிப் படமாக்கும் முயற்சியில், சிலர் எங்களிடம் ரைட்ஸ் வாங்கியுள்ளார்கள் என்ற தகவலை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்.சாந்தலட்சுமி: முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் தினத்தில் ஐந்தாறு படங்கள் வெளியானால், அதில் ஒன்றாக ஏ.வி.எம். நிறுவனத்தின் படம் இருக்கும். ஆனால் சமீபகாலமாக ஏ.வி.எம். படங்கள் அதிகம் வருவதில்லையே என்ன காரணம்?

ஏ.வி.எம்.சரவணன்: படம் தயாரிக்கவே பயமாக இருப்பதுதான் காரணம். சமீபத்தில் நாங்கள் எடுத்த ‘சிவாஜி’ கூட திட்டமிட்டு எடுத்தது இல்லை. ரஜினி ஸார் ஓய்வாக இருக்கும்போது, அவ்வப்போது இங்கு வந்து என்னிடம் பேசிக் கொண்டிருப்பார். அப்படி ஒரு நாள் ரஜினி ஸார் இங்கு வந்தபோது ‘பெருசா, பிரமாண்டமாக ஒரு படம் பண்ணணும் ஸார்’ என்றார். ‘பெருசா பண்ணணும்னா, டைரக்டர் ஷங்கரை வைத்து தான் பண்ணணும்’னு நானும், என் மகனும் சொன்னோம். அந்தச் சமயத்தில் ரஜினி ஸாருக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் ஒரு இடைவெளி இருந்தது. அதனால் ‘ஷங்கர் பண்ணுவாரா’ என்ற தயக்கம் ரஜினி ஸாருக்கு இருந்தது. ஆனால், என் மகன் போய்ப் பேசியதும் ஷங்கர் உடனே ஒப்புக் கொண்டார். எங்கள் தயாரிப்பில் படம் ரெடியானது.

அதே போல் ‘அயன்’ படம் கூட, கே.வி.ஆனந்த், ‘ஒரு கதை இருக்கு கேட்கிறீங்களா’ன்னு ஏ.வி. எம்.மை அணுகியதும், திடீரென உருவான படம் தான். படம் பண்ணணும்னு திட்டமிட்டு நாங்கள் படம் தற்போது தயாரிக்கவில்லை. ஆனால், திடீரென எல்லாம் சுமுகமாக அமைந்தால், எந்த நேரமும் ஏ.வி. எம்.மின் படம் வெளி வரலாம்.

சாந்தலட்சுமி: ஏ.வி.எம். பிரம்மாண்டமான படங்களை எடுத்த நிறுவனம். தற்போது அதைக் குறைத்துக் கொண்டு டி.வி. ஸீரியல் பக்கம் போய் விட்டீர்கள். ஆனால், தற்போது அதையும் தாண்டி சின்னதாக குறும்படம் எடுக்கத் துவங்கி விட்டீர்கள். ஒரு மாஸ் நிறுவனம் இப்படி குறும்படம் தயாரிக்கும் நிலைக்குச் சுருங்கலாமா?

ஏ.வி.எம்.சரவணன்: அது எங்கள் குழந்தைகள் ஆசைப்பட்டார்கள் என்பதற்காக எடுத்தது. படத் தயாரிப்புக்கு ஆகும் செலவைப் பார்த்து நாங்கள் சினிமா எடுப்பதைக் குறைத்து விட்ட நிலையில், எனது பேத்திகள் இருவரும் குறும்படம் எடுக்க ஆசைப்பட்டார்கள். எனவே ‘இதுவும் கடந்து போகும்’ என்ற குறும்படத்தைத் தயாரித்தோம். ஆனால் நாங்கள் யாரும் அதில் தலையிடவில்லை. எனது பேத்திகளே கதை கேட்டு, நடிகர்களை முடிவு செய்து அந்தப் படத்தைத் தயாரித்தார்கள். கடைசியில் அது கூடக் கட்டுப்படி ஆகிற மாதிரியில்லை. இன்றைக்கு அவ்வளவு செலவாகிறது. அது ஒரு பரீட்சார்த்த முயற்சிதான்.

நாகராஜன்: சிவாஜி’ படத்தில் சஹானா பாடலுக்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவானதாகவும், அந்தப் பாடல் காட்சி மட்டும் 28 நாட்கள் ஷூட் செய்யப் பட்டதாகவும் படித்தேன். எஸ்.பி.முத்துராமன் ‘குரு சிஷ்யன்’ படத்தையே 28 நாட்களில் எடுத்து முடித்து விட்டதாகக் கூடப் படித்தேன்.

ஏ.வி.எம்.சரவணன்: சிவாஜி’ படத்திற்கு மூன்று முறை பட்ஜெட்டை ரிவைஸ் செய்ய வேண்டிவந்தது. நீங்கள் குறிப்பிடும் ‘சஹானா’ பாடல் காட்சிக்கான ஸெட் மட்டுமே இரண்டரை கோடி ரூபாயை எடுத்துக் கொண்டது. ஆனால், அந்தச் செலவுக்கான ரிச்னெஸ்ஸை ஷங்கர் திரையில் கொண்டு வந்தார். ‘சிவாஜி’ எங்களுக்கு லாபகரமான படமாகவே அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

sahana_large


வாசுதேவன்: தெய்வப்பிறவி’ படத்தில் நீங்கள் தயாரிப்பு நிர்வாகியாக ஃபீல்டிற்குள் வந்தீர்கள். இன்றைக்குத் தயாரிப்பு நிர்வாகியின் ரோல் எந்தளவுக்கு மாற்றம் கண்டுள்ளது?

ஏ.வி.எம்.சரவணன்: தயாரிப்பு நிர்வாகி ரோலில் மாற்றம் எதுவும் இல்லை. அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் தொழில்நுட்பம்தான் பெரியளவில் மாறியுள்ளது. இதோ எங்கள் அலுவலகம் முழுவதிலும் நாங்கள் முன்பு பயன்படுத்திய சினிமா கருவிகளைப் பார்வைக்கு வைத்துள்ளோம். அதில் எதுவுமே தற்போது பயன்பாட்டில் இல்லை. அந்தக் காலத்தில் எங்கள் அப்பா அமெரிக்காவிலிருந்து ஒரு நவீன காமெராவை இறக்குமதி செய்தார். அதில் அவ்வப்போது லென்ஸ்களை மாற்றுவோமே தவிர, அந்தக் காமெராவை ‘நல்லவனுக்கு நல்லவன்’ படம் வரைக்கும் பயன்படுத்தினோம். இன்றைக்கு அப்படியில்லை. ஒரு படம் எடுத்து விட்டு, அடுத்த படத்திற்குப் போகும்போது, அடுத்த ஜெனரேஷன் காமெரா வந்து விடுகிறது. ஆனால், நவீன தொழில்நுட்பத்தில் தமிழக இயக்குனர்களும், காமெராமேன்களும் இந்தியாவுக்கே சவாலாக இருப்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

வாசுதேவன்: ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ், வார்னர் ப்ரதர்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், 80 ஆண்டுகள், 90 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிலைத்திருக்கும் போது, இங்குள்ள தயாரிப்பு நிறுவனங்கள் பின்வாங்குவது ஏன்?

ஏ.வி.எம்.சரவணன்: அந்த நிறுவனங்களுக்கும், இங்குள்ள நிறுவனங்களுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உள்ளது. ஏ.வி.எம்.மை எங்கள் குடும்பம் தான் இன்றும் கையாண்டு வருகிறோம். பிரஸாத் ஸ்டூடியோ என்றால், எல்.வி.பிரஸாத்துக்குப் பிறகு அவரது மகன், பேரன் கவனித்து வருகிறார்கள். வெளிநாடுகளில் அப்படியில்லை. அன்றிருந்த சேர்மன் இன்று இருப்பதில்லை. ஷேர் ஹோல்டர்ஸ் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். புதுப்புது சேர்மன்கள் வருகிறார்கள். எனவே அதையும், இதையும் ஒப்பிட முடியாது.

சாரங்கபாணி: ஏராளமான படங்கள் பாதியிலேயே நின்று விடுவதாகச் செய்திகள் வருகின்றன. அந்தப் படங்கள் எல்லாம் என்ன ஆகும்? அதில் போடப்பட்ட பணம் ஏதாவது திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு ஏதும் உள்ளதா?

ஏ.வி.எம்.சரவணன்: நஷ்டம் என்றால் நஷ்டம்தான். எதுவும் திரும்பக் கிடைக்காது. முன்பாவது ஷூட் பண்ணின ஃபிலிம் நம் கையில் இருக்கும். அதில் ஏதோ பை தைத்தாவது விற்றார்கள். இன்று எல்லாம் டிஜிட்டல் ஆகி விட்டது. ஃபிலிம் கூட மிச்சம் இருக்காது. போனது எல்லாம் போனதுதான்.

வாசுதேவன்: தமிழக சினிமாவின் பொற்காலம்’ என்று கருதப்பட்ட காலத்தில், ஒரு தயாரிப்பாளர் இயக்குனரை முடிவு செய்வார்; நடிகர், நடிகைகளை முடிவு செய்வார்; டெக்னீஷியன்களை முடிவு செய்வார். ஆனால், இன்றைக்கு இருக்கும் தயாரிப்பாளரின் நிலை வெறும் பணம் மட்டும் கொடுக்கும் ஃபைனான்ஸியர் நிலைக்குத் தள்ளப்பட்டு வேறு எதிலும் தலையிட முடியாத நிலையில் இருப்பதாக…

ஏ.வி.எம்.சரவணன்: (இடைமறித்து) ஃபைனான்ஸியர் என்று கூடச் சொல்ல முடியாது. ஃபைனான்ஸியரிடம் பணம் வாங்கிக் கொடுக்கும் ஒருங்கிணைப்பாளர் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் சொந்தப் பணத்தைப் போட்டுப் படம் எடுப்பதில்லை. ஃபைனான்ஸியர்களிடம் கடன் வாங்கித்தான் படம் எடுக்கிறார்கள். இதற்கு நாங்களும் கூட விதிவிலக்கல்ல. ‘சிவாஜி’ படம் எடுத்தபோது, அதில் போடப்பட்ட பெரும்பாலான பணம் எங்கள் சொந்தப் பணம் அல்ல. இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் கடன் வாங்கித்தான் அந்தப் படத்தை எடுத்தோம். முதல் முறையாக சினிமா எடுப்பதற்கு வங்கிக் கடன் வழங்கிய நிகழ்வு அதுதான். எங்களது சொத்துக்களை ஆதாரமாகக் கொண்டு கடன் வழங்கினார்கள். இன்று பட்ஜெட் போட்டு அதற்குள் படம் எடுப்பது சாத்தியமில்லாமல் போய் விட்டது. எனவேதான் டி.வி. ஸீரியலோடு நான் திருப்திப்பட்டுக் கொள்கிறேன். அதில் வருமானம் குறைவுதான். இதுபோக எங்கள் ஸ்டூடியோவில் கலைஞர் டி.வி., விஜய் டி.வி., ஏஞ்சல் டி.வி. ஆகியோர் நிரந்தர செட் போட்டுள்ளார்கள். அவர்கள் மாதாமாதம் வாடகை கொடுத்து விடுகிறார்கள். இது போதும் என்ற மன நிலைக்கு வந்து விட்டோம்.

—(சினிமாவுக்குக் கிளம்பும் திடீர் திடீர் எதிர்ப்புகள் சரியா, நீங்கள் இயக்குனராக மாறாதது ஏன், தென்னகத்து ஜேம்ஸ்பாண்டை வில்லன் ஆக்கியது நியாயமா… உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கான பதில்கள்- அடுத்த பதிவில்…)


தொகுப்பு : எஸ்.ஜே. இதயா
பங்கேற்க: thuglak45@gmail.com, http://www.facebook.com/thuglakweb
படங்கள்: பேஜர் கிருஷ்ணமூர்த்தி

இந்த வார வி.ஐ.பி.
பெயர்: ஏ.வி.எம்.சரவணன்
பணி : ஸ்டூடியோ அதிபர். சினிமா – தொலைக் காட்சித் தொடர் தயாரிப்பாளர்.
சிறப்பு :
 • தொடர்ந்து இரு வருடங்கள் சென்னை ஷெரீஃபாக இருந்தவர்.
 • ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தைத் தயாரித்து, தமிழுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர்.
 • பல அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்.
 • கலைமாமணி மற்றும் ராஜா ஸாண்டோ விருதுகளைப் பெற்றவர்.
 • சினிமா நூற்றாண்டு விருதுகளை முதல்வர் கையாலும், ஜனாதிபதி கையாலும் பெற்றவர்.


சந்தித்த வாசகர்கள்

வி.சாரங்கபாணி, சென்னை (தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனி)
எம்.கணேஷ் குமார், சென்னை (ஸாஃப்ட்வேர் கன்ஸல்டன்ட்)
என்.வாசுதேவன், சென்னை (ரியல் எஸ்டேட்)
ஆர்.சாந்தலட்சுமி, சென்னை (பிஸினஸ்)
எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை (ஸாஃப்ட்வேர் துறை)
ஆர்.நாகராஜன், சென்னை (அக்கவுண்டண்ட்)
Advertisements

2 thoughts on “1-படம் தயாரிக்கவே பயமாக இருக்கிறது – படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன்

 1. bandhu January 7, 2015 at 11:43 PM Reply

  இவரிடம் நான் கேட்க நினைக்கின்ற கேள்வி.. தமிழில் உதிரிப்பூக்கள் / முள்ளும் மலரும் போன்ற நல்ல நல்ல படங்கள் வந்து மக்களின் ரசனையை அந்தப் படங்கள் உயர்த்திக் கொண்டிருக்கும்போது ஏன் முரட்டுக் காளை / சகல கலா வல்லவன் போன்ற குப்பைகளை எடுத்து நல்ல படங்களுக்கு பெரிய பூட்டு போட்டீர்கள்?

 2. கிரி February 18, 2015 at 3:36 AM Reply

  சஹானா பாடலுக்கு இவ்வளவு செலவு செய்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை.. தலைவரையும் இயல்பா நடிக்க வைக்காமல் செய்து.. இடமும் மனதில் ஒட்டவில்லை..இவ்வளவு ;ஆடம்பரமாக இருந்தும். வாஜி வாஜி இருந்தது.

  ஷங்கர் படத்திற்கு அதிக செலவு பாடல்களுக்குத் தான். சிவாஜி படத்தின் வெற்றிக்காக சரவணன் அவர்கள் 25K அவரது ஊழியர்களுக்கு போனஸ் அளித்தார் செய்தியில் வந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s