10 ரூபாய் பரிசுக்காக கதை எழுதினேன்! – க்ரைம் கதை மன்னன், எழுத்தாளர் ராஜேஷ்குமார்


டந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் எழுத்துலகுக்கு தன்னை அர்ப்பணித்து வருபவர், க்ரைம் கதை மன்னன், எழுத்தாளர் ராஜேஷ்குமார்! மழை மிகுந்திருந்த காலை வேளையில், சென்னை முகப்பேரில் உள்ள தன் மகன் வீட்டில், எளிமை பூசிய புன்னகையுடன் வரவேற்றார். சூடான தேநீருடன் சேர்த்துப் பருகினோம்… அவர் பேச்சின் சுவாரஸ்யத்தை!

”பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் கோயம்புத்தூர். நான் விவசாய அதிகாரியாக ஆசைப்பட்டேன். ஆனால், அந்தக் கனவு, ஒரு மதிப்பெண்ணில் பறிபோனது. பிறகு, கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்ஸி., தாவரவியலில் சேர்ந்தேன். அதுவரை எனக்கும் எழுத்துக்கும் சம்பந்தமே கிடையாது. மூன்றாமாண்டு படித்தபோது, என் பேராசிரியர் ஒருவர் கல்லூரி ஆண்டு மலருக்காக மாணவர்களைக் கதை எழுதித் தரச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது என் நண்பன் ஒருவன் விளையாட்டாக, ‘சார்… இவன் நல்லா கதை எழுதுவான்!’ என்று என் தலையில் தட்டிச் சொல்லிவிட்டான். அதிக தலைமுடியோடு இருந்த என்னைப் பார்த்தவர், ‘உன்னைப் பாத்தா நல்லா கதை எழுதறவன் மாதிரிதான் இருக்கு! நாளைக்கு கதையோட வகுப்புக்கு வா!’ என்றார்.

மறுநாள் நான் கதை எழுதாமல் செல்ல, ‘கதை எங்கே?’ என்றார் சார். ‘கதை எழுதத் தெரியாது’ என்றேன். கோபத்தில், ‘வகுப்பை விட்டு வெளியே போ’ என்று அனுப்பிவிட்டார். அதன் பிறகுதான் அருகில் இருந்த கடையில் ஆனந்த விகடன், குமுதம் பத்திரிகைகளை வாங்கி, கதை எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று படித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் சேவற்கொடியோன் எழுதிய ‘உன் கண்ணில் நீர்வழிந்தால்’ என்ற கதையைப் படித்த பிறகு, என் முதல் கதையை எழுத முயற்சித்தேன். ஒருவழியாக எழுதி முடித்து பேராசிரியரிடம் கொடுத்தேன். படித்துப் பார்த்தவர், ‘பரவாயில்லையே… ரொம்ப நல்லா இருக்கே!’ என்று தட்டிக்கொடுத்ததோடு, கல்லூரி ஆண்டு மலரில் வெளியிட்டார்!” என்று தன் முதல் எழுத்தைச் சொன்ன ராஜேஷ்குமார், முழுநேர எழுத்தாளரானதைத் தொடர்ந்தார்.

படித்து முடித்து ஓராண்டுக்கு மேல் நண்பர்கள் இருவருடன் வெட்டியாகப் பொழுது போக்கினேன். ஒரு பத்திரிகையைப் பார்த்த நண்பன், சிறுகதைப் போட்டிக்கு 10 ரூபாய் பரிசு என்று சொல்லி, கதை எழுதச் சொன்னான். அன்றைய 10 ரூபாய், இன்றைய 1,000 ரூபாய். ‘உன்னை விடமாட்டேன்’ என்ற தலைப்பில், க்ரைம் கதை எழுதி அனுப்பினேன். தேர்வாகி, 10 ரூபாய் பரிசு கிடைத்தது. அதைக் கொண்டு நண்பர்களுடன் பால்கனி டிக்கெட் எடுத்து சினிமா பார்த்தோம். மீதியிருந்த பணத்தில் பிடித்ததை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டோம்!

அதற்குப் பிறகு, பணம் தேவைப்படும் போதெல்லாம் கதை எழுதினேன். ஆனந்த விகடன், குமுதம் போன்றவற்றுக்கும் எழுதச் சொல்லி நண்பர்கள் உசுப்பேற்ற, மாறி மாறி எழுதி அனுப்பினேன். எல்லாக் கதைகளும் போன வேகத்தில் திரும்பிவிட்டன. ஒரு கட்டத்தில் விரக்தியாகி, ‘என் கதை ஏன் தேர்வாகவில்லை?’ என்று நேரடியாகக் கேட்டுவிடலாம் என்று, சென்னைக்கு வந்தேன். ரா.கி.ரங்கராஜனை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் எழுதிய கதைகள் திரும்பி வருவதைச் சொன்னேன். அவர்தான் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு விதத்தில் கதை எழுதும் சூத்திரத்தைக் கற்றுக்கொடுத்தார். இன்னும் பட்டைத் தீட்டிக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஒரே சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட பிரபல பத்திரிகைகளில் என் கதைகள் வந்த காலம் மலர்ந்தது!”

நினைவுகளை நமக்காக மீட்டுக் கொடுத்தவர், இடையில் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை பார்த்து ராஜினாமா, அப்பாவின் தொழில் காரணங்களுக்காக அவருடன் இந்தியா முழுவதும் பயணம் என காலம் உருண்டது. ஒருகட்டத்தில் எழுத்துலகமே எனதானது! 80ம் வருடம் பிரபல க்ரைம் எழுத்தாளர் தமிழ்வாணன் மறைந்தார். ‘கல்கண்டு’ இதழில் அவர் எழுதி வந்த ‘க்ரைம் ஸ்டோரி’ பக்கத்தை, அவருக்குப் பிறகு எழுதும் வாய்ப்பு வரவே, அதைப் பயன்படுத்திக்கொண்டேன்” என்று சொல்லும் ராஜேஷ்குமார்… மனைவி தனலட்சுமி, இரண்டு மகன்கள், இரு பேரன்கள், இரு பேத்திகள் என்றமைந்த அழகான குடும்பஸ்தர் இன்று.

முதன் முதலில் ஆனந்த விகடனில் தொடர்கதை எழுதும் வாய்ப்புக் கிடைத்தபோது, கதையோடு ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் அவர்களைச் சந்தித்தேன். பயம், தயக்கம் என ஒருவழியாக கதையைச் சொல்லி முடித்தேன். கண்ணை மூடியபடியே கதை முழுவதையும் கேட்ட அவர், ‘பேஷ்… பேஷ்’ என்று சொல்லி கதையின் க்ளைமாக்ஸில் கண்ணைத் திறந்து ‘இந்த இடத்துல மட்டும் நான் கொஞ்சம் கதையை மாற்றலாமா?’ என்று தயக்கத்தோடு அனுமதி கேட்டு அருமையாக மாற்றினார். இந்தக் கதைக்கு பிரம்மாண்ட விளம்பரம் கொடுத்தார். வாசகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், அந்தஸ்தும் கிடைத்தது! எனக்கு கதை எழுத ஆரம்பத்தில் உந்துசக்தி கொடுத்த சேவற்கொடியோன் இவர்தான் என்று தெரிந்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்தேன்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார் ராஜேஷ்குமார்.

எழுத்து, ஆன்மிகம் என்று எக்ஸ்பிரஸாகப் பயணித்துக் கொண்டிருக்கும் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார், ‘நள்ளிரவு வானவில்’ என்ற க்ரைம் தொடரை, அடுத்த இதழில் இருந்து அவள் விகடனில் எழுத உள்ளார். பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண், அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறாள் என்பதுதான் கதையின் கரு. இதை தனக்கே உரிய ஸ்டைலில் பெண்களுக்கான பல பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லும் வகையிலும் எழுதப்போகிறார் என்பதுதான் ஸ்பெஷலே! அதுவும் பொங்கல் ஸ்பெஷல்!


சண்டமாருதத்தில்…

சினிமா வாய்ப்புகளைத் தட்டிக் கழித்து வந்த ராஜேஷ்குமார், விரைவில் வெளிவரவிருக்கும் சரத்குமார் நடித்துள்ள ‘சண்டமாருதம்’ படத்துக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார். இதைப் பற்றி பேசியவர், ”ஒரு படைப்பாளி எப்போதும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். சினிமாவில் அந்த சுதந்திரம் கிடைக்காது என்பதை நேரடியாக உணர்ந்தவன். அதனால்தான் ஒதுங்கியே இருந்தேன். சமீபத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா, இயக்குநர் வெங்கடேஷ் மூவரும் தாங்கள் எடுக்கவிருக்கும் படம் குறித்துப் பேசினார்கள். ‘முழுக்க உங்க படம். நீங்க விரும்பற மாதிரிதான் கதை இருக்கும்’ என்று சரத்குமார் சொன்னார். அதன்பிறகுதான் சம்மதித்தேன்” என்றார்!


கின்னஸ் ராஜேஷ்குமார்!

”நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் எல்லாவற்றிலும் பல கதைகள் உள்ளன. அதை எப்படி எடுக்க வேண்டும், எப்படிக் கையாள வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பதில்தான் ஒருவரின் சாமர்த்தியம் அடங்கியுள்ளது. உதாரணமாக, நான் இதுவரை பதினைந்துக்கும் அதிகமான கதைக் கருக்களை அவள் விகடன் இதழிலிருந்தே எடுத்துள்ளேன்!” என்று ஆச்சர்யம் கொடுக்கும் ராஜேஷ்குமார்,

”என்னுடைய கதையில் ஆபாசம் இருக்காது. என் கதையை என் மனைவி தொடங்கி என் பேரப்பிள்ளைகள் வரை, என் தெருவினர் தொடங்கி, உலகில் உள்ள பலரும் படிக்கிறார்கள். இதைப் படிக்கும் ஒருவர்கூட என்னைப் பார்த்து… ‘இவன்தாண்டா அப்படி எழுதினான்…’ என்று தவறாகச் சுட்டிவிடக் கூடாது. ‘சார்… உங்க எழுத்தாலதான் நான் இப்போ நல்லாயிருக்கேன்!’ என்று சொல்லும் ஆயிரக்கணக்கான தமிழ் உள்ளங்களை என் சொத்தாக இதுவரை சம்பாதித்திருக்கிறேன். இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு என்ன வேண்டும்?!” என்கிறார்.

இதுவரை 1,500-க்கும் அதிகமான நாவல்களையும், 2,000-க்கும் அதிகமான சிறுகதைகளையும், ஏராளமான நாடகங்களையும் எழுதியுள்ளார். 950 நாவல்களை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் ஒருவரின் கின்னஸ் சாதனையை எப்போதோ முந்திவிட்ட ராஜேஷ்குமார், கூடிய விரைவில் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெறவிருக்கிறார்.

–நன்றி அவள் விகடன்

Advertisements

One thought on “10 ரூபாய் பரிசுக்காக கதை எழுதினேன்! – க்ரைம் கதை மன்னன், எழுத்தாளர் ராஜேஷ்குமார்

  1. கிரி February 18, 2015 at 3:38 AM Reply

    இவருடைய புத்தகங்கள் பல சிறு வயதில் படித்ததுண்டு.. தற்போது ஆர்வமில்லை..

    சமீபமாக வரலாற்று புத்தகங்கள் மீது ஆர்வம் வந்து இருக்கிறது. இவருடைய சண்டமாருதம் எப்படி இருக்குதுன்னு பார்ப்போம் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s