2-இசையமைப்பாளர் கங்கை அமரனுடன் ஒரு உரையாடல்…


இதன் முந்தைய பதிவு…

ஜான் பிரிட்டோ : நீங்கள் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம், மதுரையில் ஒரு வருடம் ஓடியது. ஆனால் இன்றைக்கு வரும் படங்கள் ஒரு வாரம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்குக் காரணம் என்ன?

கங்கை அமரன் : மதுரையில் மட்டுமல்ல, பல ஊர்களில் அந்தப் படம் ஒரு வருடம் ஓடியது. அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள மாற்றத்திற்கு எல்லாம் காரணம் சொல்லவே முடியாது. இதுதான் கால மாற்றம். அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, காரணத்தை ஆராய முடியாது. அந்த நேரத்தில் கரகாட்டக்காரன் நெடுநாள் ஓடியதற்குக் காரணம் கேட்டால், சொல்லலாம். அந்தச் சமயம், இளையராஜாவுக்கு ஒரு படம் கேன்ஸல் ஆனதால் ஃப்ரீ டைம் கிடைத்தது. அந்த நேரத்தில் என்னை அழைத்து ‘நீ ஏதோ படம் பண்ணப் போறேன்னியே… அந்த சிச்சுவேஷனைச் சொல்லு’ என்றார். வழக்கமாக இளையராஜா, படத்துடைய முழுக் கதையையும் கேட்டு, அது பிடித்திருந்தால்தான் ம்யூஸிக் பண்ணுவார். அவரது சரித்திரத்தில் முதல் முதலாகக் கதை கேட்காமல் ம்யூஸிக் போட்ட படம், கரகாட்டக்காரன்தான். அந்த ராசிதானோ என்னவோ, படம் பிச்சுக்கிட்டுப் போனது.

கணேசன் : உங்கள் இயற்பெயரே கங்கை அமரன்தானா?

கங்கை அமரன் : என் இயற்பெயர் அமர்சிங். என் அப்பா ஒரு போர்வீரனின் பெயரை எனக்கு வைத்தார். எனக்குப் பத்து வயது இருக்கும்போது, எங்க ஊர் லைப்ரரியில் ‘கங்கை’ என்ற ஆன்மீகப் பத்திரிகையை விரும்பி வாசிப்பேன். எழுத்தாளர் விக்கிர மன் ‘பகீரதன்’ என்ற பெயரில் ஆசிரியராக இருந்த அந்தப் பத்திரிகையைச் சமீபத்தில் மறைந்த திரு. பொள்ளாச்சி மகாலிங்கம் நடத்தி வந்தார்.

அந்தப் பத்திரிகை மீதான ஈர்ப்பில், என் பெயரை கங்கை அமரன் என்று நானாக மாற்றிக் கொண்டேன். இப்போதும் வருடா வருடம் தவறாமல் இமயமலை போய் விடுவேன். அங்கு கங்கை நதிக்கரையில் ஆர்மோனியத்தோடு அமர்ந்து நானாக ட்யூன்களை உருவாக்கிப் பாடிக் கொண்டிருப்பேன். அதை ரெக்கார்டும் செய்து கொள்வேன். (கடந்த வருடம் கங்கைக்கரையில் தான் பாடியதை, தனது மொபைல் ஃபோனிலிருந்து ஒலிபரப்பினார்.)

ஷ்யாமளா : நீங்கள் கர்னாட்டிக் ம்யூஸிக் கற்றுக் கொண்டுதான் சென்னை வந்தீர்களா?

கங்கை அமரன் : இல்லையம்மா… இல்லை… அப்போது எதுவுமே கத்துக்கிட்டு வரலை. இயல்பாக எங்களுக்கு இருந்த திறமையோடு மட்டும்தான் வந்தோம். அதன் பிறகுதான் கர்னாட்டிக் எல்லாம் முறைப்படி கத்துக்கிட்டோம். டி.வி.கோபாலகிருஷ்ணன்தான் எனக்கும், இளையராஜாவுக்கும் கர்னாட்டிக் இசையில் குருநாதர்.

அபிரக்ஷன் : ஒரு நல்ல இசை எங்களுக்குக் கிடைப்பதற்குக் காரணம் – இசையமைப்பாளரின் திறமையா, அனுபவமா, பயிற்சியா?

கங்கை அமரன் : அந்தந்த நேரத்தில் இசையமைப்பாளரின் மூடுக்கு என்ன வருகிறதோ, அதுதான் இசை. அது ரசிகர்களின் மூடுக்கும் ஒத்துப் போய் விட்டால், அது நல்ல இசையாகி விடுகிறது. ‘நாயகன்’ படத்திற்காக கம்போஸிங்கில் ‘தென்பாண்டி சீமையிலே…’ என்ற சோகப் பாடலுக்குப் பதிலாக ‘நிலா அது வானத்து மேலே…’ என்ற பாடலின் ட்யூன்தான் முதலில் ஸ்லோவாகப் போடப்பட்டது. திடீரென்று இளையராஜா ‘தென்பாண்டிச் சீமையிலே’ ட்யூனை வாசித்துக் காட்டவும், அது எல்லோருக்கும் பிடித்துப் போனது. உடனே ‘நிலா அது வானத்து மேலே’ ட்யூனை ஃபாஸ்ட் பீட்டிற்கு மாற்றி, அதைக் குத்துப் பாட்டாக ஆக்கி விட்டார் ராஜா. இரண்டுமே சூப்பர் ஹிட்! ‘பாடல்கள் ஒரு கோடி…. எதுவும் புதிதில்லை..’ (பாடிக் காட்டுகிறார். சிரிப்பு).

கணேசன் : அன்றைக்கு டி.எம்.எஸ்., சுசீலா கிட்டே இருந்த வசீகரம், இன்றைக்கு வரும் பாடகர்களிடம் இல்லையே?

கங்கை அமரன் : உங்களில் பெரும்பாலோரின் கேள்விகள் – அன்றைய இசைபோல இன்னைக்கு இல்லையே, அன்றைய சினிமா போல் இன்னைக்கு இல்லையே, அன்றையக் குரல் போல் இன்னைக்கு இல்லையே – என்கிற வகையிலே இருக்கு. (எல்லோரும் சிரிக்கிறார்கள்.) நமக்கெல்லாம் வயசாகிப் போயிடுச்சு. (எல்லோரும் சிரிக்கிறார்கள்).

நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, இங்கு யாரும், எதுவும் நிரந்தரமில்லை. ட்ரெண்ட் மாறிக்கிட்டேதான் இருக்கும். நாம்தான் அதை ரசிக்கப் பழகிக்கணும். எங்க காலத்தில், படத்துக்கு ஐந்து ஸாங், ஆறு ஸாங் இருந்தால், ஒரு பாட்டுதான் குத்துப்பாட்டு இருக்கும். மச்சானைப் பார்த்தீங்களா, கேட்டேளே அங்கே அதைப் பார்த்தேளா இங்கே, ஏ ஆத்தா ஆத்தோரமாய் வாரியா… இப்படி, ஒரு படத்துக்கு ஒரு குத்து ஸாங்தான் இருக்கும். அந்தப் படங்களின் மற்றப் பாடல்கள் எல்லாம் மெலடியாக இருக்கும். இப்போ அப்படியில்லை. ஐந்து ஸாங் இருந்தால் ஐந்தும் குத்துப் பாட்டாக இருக்குது.

ஜான் பிரிட்டோ : உங்களது மௌன கீதங்கள், வாழ்வே மாயம் உட்படப் பல படங்களின் பாடல்களைப் பலர் ‘இளையராஜாவின் பாடல்கள்’ என்று கூறும்போதும், ‘இளையராஜா ஹிட்ஸ்’ சி.டி.க்களில் நீங்கள் இசையமைத்த பாடல்களைச் சேர்த்து விடும்போதும் உங்களுக்கு எப்படியிருக்கும்?

கங்கை அமரன் : மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். ஒருமுறை நானும், இளையராஜாவும் கம்போஸிங்கில் இருந்தபோது வெளியேயிருந்து ‘நீதானா நிசந்தானா… நிக்க வச்சு நிக்க வச்சுப் பார்க்கிறே’ என்ற பாடல் ஒலித்தது. உடனே இளையராஜா ‘இந்தப் பாட்டை எந்தப் படத்துக்குடா போட்டேன்?’ என்று கேட்டார். ‘அது நீ போட்ட பாட்டில்லை. நான் போட்ட பாட்டு’ன்னேன். (சிரிப்பு).

அவரை மாதிரி நான் இசையமைச்சிடுவேன். ஆனால், ஆர்கஸ்ட்ரேஷன் அவர் மாதிரி என்னால் பண்ண முடியாது. இரண்டு பேரின் இசையமைப்பும் ஒரே மாதிரி தெரிஞ்சாலும், ஆர்கஸ்ட்ரேஷனைக் கவனிச்சால் வித்தியாசம் கண்டுபிடிச்சிடலாம்.

கணேசன் : பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களில் உங்களுக்கு நெருக்கமானவர் யார்?

கங்கை அமரன் : பெரிதாகச் சொல்ல முடியா விட்டாலும், எழுத்தாளர்களில் ஜெயகாந்தனுடன் அந்தக் காலத்தில் நெருக்கம் இருந்தது. பத்திரிகையாளர்களில் சோ ஸார்தான். எதை நகைச்சுவையாகச் சொல்வது, எதை ஸீரியஸாகச் சொல்வது என்பது ‘துக்ளக்’கிற்கே உரித்தான சாமர்த்தியம். புரியாத விஷயங்களில் ஒரு தெளிவையும், சிறிய விஷயத்தைக் கூட எப்படி அரசியலாக்க முடியும் என்பதையும் ‘துக்ளக்’கைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

அபிரக்ஷன் : வெளிநாட்டுடன் கம்பேர் பண்ணினால், இந்தியாவில் அந்தளவிற்கு இசைக் குழுக்கள் பிரபலமடைவதில்லை. அது ஏன்?

கங்கை அமரன் : வெளிநாட்டில் இருக்கிற இசைக் குழுக்களுக்கும், இந்தியாவில் இருக்கிற இசைக் குழுக்களுக்கும் ஒரு பெரிய அடிப்படை வித்தியாசம் இருக்குது. அங்கே இருக்கிற இசைக் குழுக்கள், அவர்களே ம்யூஸிக் கம்போஸ் பண்ணி, அதைப் பாடுபவர்கள். இங்கே இருக்கிற இசைக் குழுக்கள் சினிமா பாடல்களை மட்டுமே பாடுகிறார்கள். அங்கே சினிமாவில் பாடல்கள் கிடையாது. எனவே, இசைக் குழுக்கள்தான் பாடல்களைத் தர வேண்டும். இங்கே ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஆல்பம் கிடைத்து விடுகிறது.

ஷங்கர் : தமிழ்நாட்டில் தமிழ்ப் பாடகர்களை விட, மலையாளம், தெலுங்கு பாடகர்களே அதிகமாக வந்தது ஏன்? நடிகைகளும் இப்படித்தான் வருகிறார்கள்.

கங்கை அமரன் : சினிமாவில் அப்படிக் கட்டுப்பாடு வைக்க முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழரான இளையராஜாவோ, ஏ.ஆர்.ரஹ்மானோ இந்தியில் இசையமைக்கப் போக முடியாது. கலைகள் எல்லாமே மொழிகளுக்கு அப்பாற்பட்டவை. நல்ல குரல் எங்கே இருக்கோ அதை எடுத்துக்கிறதில் தப்பில்லை.

ஜான் பிரிட்டோ : மௌன கீதங்கள்’ படத்தின் டைட்டிலில் ‘இசை – கங்கை அமரன்’ என்று கார்டு போடும்போது, இளையராஜாவின் நோட்ஸ்களை நீங்கள் திருடித் திருடி நோட்ஸ் எழுதுவது போன்ற கார்ட்டூனைப் போட எப்படி ஒத்துக் கொண்டீர்கள்?

கங்கை அமரன் : அது காமெடிக்காக பாக்யராஜ் செய்தது. அந்த நேரம், இளையராஜா ஸ்வரங்கள் எல்லாம் எழுதி வைக்கும் ஒரு நோட்டு, ரிக்கார்டிங் தியேட்டரில் தொலைந்து போனது. அது நாளிதழ்களில் செய்தியாகவும் வெளியாகி விட்டது. அந்த நேரம் மௌன கீதங்கள் படத்திற்கு, காமெடியான கார்ட்டூன் டைட்டில் கார்டுகளை பாக்யராஜ் ரெடி செய்து கொண்டிருந்தார். இந்தச் செய்தியைப் பார்த்ததும், ‘பாட்டெல்லாம் நம்ம படத்தில் நல்லா வந்திருக்குது. அந்த நோட்டு இவர் கிட்டதான் இருக்குமோ?’ என்று காமெடி செய்தபடி, அப்படி ஒரு டைட்டில் கார்டை வைத்தார் பாக்யராஜ்.

என் ஒப்புதலோடுதான் அந்தக் கார்ட்டூன் போடப்பட்டது. அதுதான் என் முதல் படம் என்றால், கொஞ்சம் யோசித்திருப்பேன். அதற்கு முன்னாடியே 15 படங்களுக்கு இசையமைத்து, என்னை ஓரளவு நிலை நிறுத்திக் கொண்டதால், அந்தக் கார்ட்டூனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல பேர் என்னை இசையமைக்க அழைத்ததன் காரணமே, இவன்கிட்டே இளையராஜாவின் நோட்ஸ் நிறைய இருக்கும் என்ற நம்பிக்கைதான் என்பது எனக்கும் தெரியும். (சிரிக்கிறார்).

ஷ்யாமளா : ரீமிக்ஸ் பாடல்கள் அதிகம் வருவது எதனால்?

கங்கை அமரன் : இரண்டு காரணங்கள் என்று நினைக்கிறேன். ஒன்று – இசையமைப்பாளரிடம் ஒரு குறிப்பிட்ட பாடலைச் சொல்லி, ‘இந்தப் பாடல் மாதிரி வேணும்’னு கேட்கிறப்போ, அந்த இசையமைப்பாளர் அதுபோல் பல ட்யூன்களைப் போட்டுக் காட்டுவார். அதில் எதுவுமே பிடிக்காமல் போகும் போது, ‘பேசாமல் அந்தப் பாடலையே ரீமிக்ஸ் பண்ணிடலாம் விடுங்க’ என்ற முடிவுக்கு அவர்கள் வரலாம். இன்னொரு காரணம் – அந்தக் காலத்து இனிமையான பாடல்களை இன்றைய சமூகத்தையும் கேட்க வைக்கலாம் என்ற எண்ணம். ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ என்ற நமது காலத்து சூப்பரான பாடலை, ரீமிக்ஸ் மூலம் இன்றைய தலைமுறையும் ரசிக்கிறதே?

பத்மா : குழந்தைகள் பாடும் டி.வி. ஷோக்களில் நடுவர்கள் எழுந்து மரியாதை தருவதும், சாக்லேட் ஷவர் கொடுப்பதும், அழுவதைக் காட்டுவதும் எல்லாமே மிகைப்படுத்தப்பட்ட விஷயமாகவே தெரிகிறதே?

கங்கை அமரன் : உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்வதில் தவறில்லை. நாங்கள் இதுபோன்ற ஷோக்களில் நடுவர்களாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் எந்தப் பாடலைப் பாடப் போகிறார்கள் என்பது எங்களுக்கு முன் கூட்டியே தெரியும். அவர்கள் ப்ராக்டிஸ் பண்ணும் போதிலிருந்தே எங்களுக்குத் தெரிந்து விடும். இருந்தாலும், ஷூட்டிங் நடைபெறும் நேரத்தில், நாங்கள் எதிர்பார்த்ததை விட அந்தக் குழந்தை மிகச் சிறப்பாகப் பாடி விட்டால், நாங்கள் எங்கள் பாராட்டை சிறப்பாக வெளிப்படுத்தி விடுகிறோம். எழுந்து சென்று கட்டியணைத்து முத்தமிடுவதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது.

குழந்தைகளின் பெற்றோர் அழுதால், எங்கள் நிகழ்ச்சியில் நான்கு வினாடிகளுக்கு மேல் காட்டுவதில்லை. சில தொலைக்காட்சிகளில் அங்கு சைலன்ட் செய்து, அழுவதை ஸ்லோமோஷனில் அதைப் பெரிதுபடுத்தி விடுகிறார்கள். அது தவறுதான். நாங்கள் செய்வதில்லை. அதையும் தாண்டி, கடந்த வாரம் ஒரு தாயார் தனது மகள் தோற்றதற்காக அழுதபோது, நாங்கள் அவரைச் சத்தம் போட்டோம். ஒரு குழந்தை தன்னால் முடிந்ததைச் செய்கிறது. அந்தம்மா செய்யாத சாதனையை அந்தக் குழந்தை செய்துள்ளது. அது போதாதா? ‘நீ எத்தனை டி.வி. ஷோக்களில் பரிசை அள்ளிக் குவித்தாய்’ என்று அந்தம்மாவிடம் நான் கோபப்பட்டேன்.

அபிரக்ஷன் : பாடகர்களுக்கு நிறைய டி.வி. ஷோக்கள் வருவது போல், பிற துறைகளுக்கு ஷோக்கள் வருவதில்லையே ஏன்?

கங்கை அமரன் : ஏன் நடனங்களுக்கு என்று பல டி.வி. ஷோக்கள் வருகின்றனவே? மானாட மயிலாட, ஜோடி நம்பர்-1 என்று வருகின்றன. இளம் தலைமுறை இயக்குனர்களை வளர்க்கும் குறும்படங்களுக்கான ப்ரோக்ராம்களும் வருகின்றனவே?

ஜான் பிரிட்டோ : மற்றவர்கள் இயக்கிய 187 படங்களுக்கு இசையமைத்த நீங்கள், உங்கள் படங்களுக்கு மட்டும் இளையராஜாவை இசையமைப்பாளராக ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டது என்ன நியாயம்? (பலத்த சிரிப்பு)

கங்கை அமரன் : மற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இளையராஜாவை அணுகிச் சம்மதிக்க வைப்பது கடினம். ராஜா அப்போது அவ்வளவு பிஸியாக இருந்தார். ஆனால், நான் பக்கத்திலேயே இருக்கிறவன் என்பதால், எனக்கு அது ஈஸி. இளையராஜாவுக்கு அப்போது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. ராஜாவின் இசையிருந்தாலே படங்கள் விற்றுப் போகும் என்கிற அளவுக்குச் செல்வாக்கு நிலவியதால், என்னை இயக்குனராகப் போடும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில், நான் இளையராஜாவின் இசையைப் பயன்படுத்திக் கொண்டேன். என் இசை எப்போதும் இளையராஜாவுக்குக் கீழேதானே ஸார்? அவர் இசையைப் பெறும் வாய்ப்பு இருக்கும்போது அதை நான் ஏன் விட வேண்டும்…?

ஷ்யாமளா : நீங்கள் பல்கலை வித்தகராக இருக்கீங்க. இதில் உங்களின் எந்த முகம் உங்கள் மனைவிக்குப் பிடிக்கும்?

கங்கை அமரன் : எந்த மனைவிக்கும் கணவன்களைப் பிடிப்பதே இல்லை என்பதுதான் உண்மை. ‘வீட்டிலேயே தங்க மாட்டார்… பேசவே தெரியாது… அது பாட்டுக்குப் புலம்பிட்டு இருக்கும்…’  இப்படித்தான் புருஷன் மேல் மனைவிகள் விமர்சனம் பண்றாங்க. (வாசகிகள் இருவரும் அதை மறுக்கிறார்கள்.)

நீங்க மறுத்தாலும் நான் சொல்றதுதான் உண்மை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பதெல்லாம் சும்மா. இருக்கிற மாதிரி நடிப்பாங்க… பேர் வாங்கிக்குவாங்க… பத்து பேர் முன்னாடி ஒரு கணவன் கிட்டே ஒரு மனைவி நடந்துக்கிற விதத்துக்கும், எல்லோரும் போன பின்னாடி நடந்துக்கிற விதத்துக்கும் உண்மையிலேயே வித்தியாசம்

பத்மா : நீங்க ‘துக்ளக்’ ஆஃபீஸில் உட்கார்ந்து பேசுறதாலே இப்படிப் பேசுறீங்கன்னு நினைக்கிறேன்.

கங்கை அமரன் : அப்படியில்லை. என் அனுபவம் அப்படித்தானம்மா. என் அனுபவம் மட்டுமல்ல. (சில வி.ஐ.பி.களின் பெயரைக் குறிப்பிடுகிறார்). இவர்களின் அனுபவங்களும் இப்படித்தான். பக்க பலம் என்பதெல்லாம் பாவ்லா. பக்கபலமாக சோறாக்கிப் போடுறாங்கன்னு வேணா ஒத்துக்கிறேன். அவங்களுக்கு நாம ஈஸியா கிடைச்சிடுறோம்… அதனால் நம்ம பெருமை அவங்களுக்குப் பிடிபடுறதில்லை. நம்மைப் பார்க்க எத்தனையோ பேர் தவமிருப்பான். சந்தித்ததைப் பெருமையா நினைப்பான். ஆனால், அவங்களுக்கு ஆஃப்டரால் புருஷன்தான்.

ஷ்யாமளா : உங்க பசங்களுக்கு நீங்க இப்போ என்ன அட்வைஸ் கொடுக்கறீங்க?

கங்கை அமரன் : இதை நீங்க என் பசங்ககிட்டேதான் போய்க் கேட்கணும். உங்க அப்பாவுக்கு என்ன அட்வைஸ் பண்றீங்கன்னு… உலகம் அப்படி இருக்கும்மா….

கணேசன் : உங்களைப் பொது இடங்களில் பார்த்து விட்டு, இன்றைய இளைய தலைமுறையினர் ‘டேய் இங்க பாருடா, வெங்கட் பிரபுவின் அப்பா… ப்ரேம்ஜியின் அப்பா’ என்று உங்களை அடையாளம் காட்டினால் உங்களுக்கு எப்படியிருக்கும்?

கங்கை அமரன் : சந்தோஷமா இருக்கும். நிச்சயமா சந்தோஷமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் ஏர்போர்ட்டில் பதினைந்து நிமிடமாவது அங்கு வருவோர் போவோருடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. அதில் சிலர், நீங்கள் சொல்கிற மாதிரி வெங்கட்டின் அப்பா, ப்ரேம்ஜியின் அப்பா என்று குறிப்பிடுகிறார்கள். பெருமையாத்தான் இருக்குது. அப்பா என்னதான் பேர் வாங்கி இருந்தாலும், பிள்ளைகள் அதைவிடப் பெரிதாகப் பேர் வாங்கும்போது அது அப்பாவுக்குப் பெருமைதானே?

ஷ்யாமளா : உங்க அப்பாவைப் பற்றிச் சொல்லுங்களேன்…

கங்கை அமரன் : என் அப்பாவும், அவரது அப்பாவும் பெரிய மேதாவிகள். எங்கள் தாத்தா ஆன்மீகச் சொற்பொழிவுகளையும், பாடல்களையும் மேடைகளில் தந்தவர். எங்கள் அப்பாவிற்கு இசை கம்போஸ் செய்யும் ஞானம் இருந்ததால்தான், இளையராஜாவுக்கும் எனக்கும் இசை அறிவு வந்திருக்கிறது.

கணேசன் : வருங்காலத்திற்கு நீங்கள் சொல்லும் அட்வைஸ் என்ன?

கங்கை அமரன் : நாங்கள் எங்கள் கால கட்டத்தில் கெட்ட பெயர் எடுக்கவில்லை. சரியான நேரத்தில் வேலைகளை முடித்து விடுவோம். இன்று அப்படியில்லை. இன்றைக்குப் பெரும்பாலும் எல்லோரும் இரவு நேரத்து மனிதர்களாகி விட்டார்கள். பெரும்பாலான இசையமைப்பாளர்கள் இரவில்தான் ரெக்கார்டிங் வைக்கிறார்கள். எங்கள் பீரியடில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரு கால்ஷீட். மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு கால்ஷீட். ஒவ்வொரு கால்ஷீட்டிலும் ஒரு பாடல் பதிவு செய்து விடுவோம்.

இன்று நீங்கள் கேட்கிற இளையராஜா அல்லது கங்கை அமரனின் பாடல்கள் எல்லாமே, சுமார் 5 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட பாடல்கள். ஆனால், இன்றைக்கு 15 நாட்கள் கூட ஆகிறது. நேரம் தவறாமையும், நேர வரையறையும் சினிமாவில் அவசியம். தயாரிப்பாளர் கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டிப் படமெடுக்கிறார். தினசரி வட்டி ஏறிக் கொண்டு போகும். அந்தச் செலவை அதிகப்படுத்தாமல் இருப்பது ஒவ்வொரு கலைஞனின் கடமையாகும்.

– தொகுப்பு : எஸ்.ஜே. இதயா, பங்கேற்க : thuglak45@gmail.com,
படங்கள் : பேஜர் கிருஷ்ணமூர்த்தி

Advertisements

2 thoughts on “2-இசையமைப்பாளர் கங்கை அமரனுடன் ஒரு உரையாடல்…

  1. D. Chandramouli December 29, 2014 at 6:23 AM Reply

    Very interesting observations by Gangai Amaran and hard-hitting realism in most of his replies. In my opinion, the majority of the old songs used to be sweet melodious with great lyrics. Just listen to the Tamil movie songs from Missiamma onwards upto the Seventies’ movies. On the other hand, the majority of current crop of songs are nothing but noise and if by chance, the lyrics could be heard, the contents are of poor taste.

  2. nparamasivam1951 December 29, 2014 at 5:30 PM Reply

    மிக யதார்த்தமாக அதே சமயம் உண்மையாக பேசி உள்ளார். ரசித்துப் படித்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s