1-இசையமைப்பாளர் கங்கை அமரனுடன் ஒரு உரையாடல்…


இந்த வார வி.ஐ.பி.
கங்கை அமரன் – இயற்பெயர்: அமர்சிங்.
பணி : இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக் கதையாசிரியர், தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர்.
சிறப்பு : 187 படங்களுக்கு இசை. 19 படங்களுக்கு கதாசிரியர் மற்றும் இயக்குனர். சர்வதேச தமிழ் சினிமா விருதுகளில் ITFA வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார்.
சந்தித்த வாசகர்கள்
ஷ்யாமளா ரங்கநாதன், சென்னை
வங்கி உதவி மேலாளர் (ஓய்வு)
பி. பத்மா, சென்னை (பள்ளி ஆசிரியை)
கணேசன், சென்னை (நாடக நடிகர்)
வி. சங்கர், சென்னை (இசைப் பயிற்சியாளர்)
எம். ஜான் பிரிட்டோ, மதுரை (பள்ளி ஆசிரியர்)
பி. அபிரக்ஷன், சென்னை (கல்லூரி மாணவர்)

பிரபல திரைப்பட இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், ‘துக்ளக்’ வாசகர்களுடன் கலந்துரையாடினார். வி.வி.ஐ.பி. தொடரில் இடம் பெறும் முதல் திரையுலக பிரமுகர் என்பது தெரிந்ததும், ‘யார் தருவார் இந்த அரியாசனம், புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்’ என்ற பாடலைப் பாடி வாசகர்களை சகஜமான நிலைக்குக் கொண்டு வந்தார். இனி வாசகர்கள் வீசிய கணைகளையும், அதை லாவகமாக எடுத்துக் கொண்டு கங்கை அமரன் தந்த பதில்களையும் பார்க்கலாம்:

எம்.ஜான் பிரிட்டோ : பாவலர் சகோதரர்களான நீங்கள் வந்த காலகட்டத்திற்கும்; யுவன் சங்கர் ராஜா (இளையராஜாவின் மகன்), வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி (கங்கை அமரன் மகன்கள்) ஆகியோர் கோலோச்சும் இந்தக் காலகட்டத்திற்கும் சினிமாவில் என்ன வித்தியாசத்தைத் தாங்கள் பார்க்கிறீர்கள்?

எம். ஜான் பிரிட்டோ

கங்கை அமரன் : தபேலா ஆகட்டும், வயலின் ஆகட்டும், வீணை ஆகட்டும்… எல்லாவற்றையும் உடலோடு அணைத்து, ஆன்மாவை இணைத்து வாசிக்கும் காலகட்டமாக எங்கள் காலகட்டம் இருந்தது. இன்று எந்த வாத்தியக் கருவி வாசிக்க வேண்டுமானாலும், அதை கீ போர்ட் மூலமாக வாசித்து விட முடிகிறது. இப்போது கீ போர்டையும் தாண்டி, கம்ப்யூட்டரிலேயே எல்லா இசையையும் கொண்டு வந்து விட முடிகிறது. இன்றைய இசையில் க்ளாரிட்டி இருந்தாலும் கூட, ஏதோ ஒன்று மிஸ்ஸிங் மாதிரி தெரிகிறது.

ஆனாலும், இது போன்ற ஒரு வளர்ச்சியை நாம் தவிர்க்க முடியாது. விஞ்ஞான வளர்ச்சி வரும்போது, நாம் அதன் போக்கில்தான் போய் ஆக வேண்டும். குறை சொல்லிக் கொண்டே இருக்க முடியாது. ஆனால், அந்தக் காலத்தில் ஒவ்வொரு மொழிக்கும் இசையில் ஒரு ஸ்டைல் இருந்தது.

‘மேரே ஸப்புனக்கே…’ ட்யூனைக் கேட்டால் இது ஹிந்திப் பாடல். ‘காலங்களில் அவள் வசந்தம்’ ட்யூனைக் கேட்டாலே தமிழ்ப் பாடல் என்று அடையாளம் காணலாம். தெலுங்கு பாடல், மலையாள பாடல் என்று ஒவ்வொரு மொழிப் பாடலுக்கும் ஒரு அடையாளம் இருந்தது. இன்று அப்படி ஏதும் இல்லை. இந்தியா முழுக்க எந்தப் பாடலைக் கேட்டாலும், அது ஒரு வெஸ்டர்ன் டைப்பில்தான் இருக்கிறது. ‘பாவாடை தாவணியை விட்டுட்டோம்; மஞ்சள் பூசுறதை விட்டுட்டோம்; குங்குமம் வச்சுக்கிறதை விட்டுட்டோம்; கோலம் போடறதை விட்டுட்டோம்’ என்கிற மாதிரிதான் இந்த அடையாளத்தையும் விட்டுட்டோம். அதில் எனக்கு வருத்தம். ஏன் இதை உங்கள் பசங்க காப்பாத்த முடியாதா என்று நீங்கள் அடுத்ததாகக் கேட்கலாம். முடியாது. இங்கு நீங்க ஊரோடுதான் ஒத்துப் போகணும்.

பி.பத்மா : உங்களோட அடையாளம், இளையராஜாவின் அடையாளத்தோடு உங்க பசங்க ஈஸியா சினி ஃபீல்டுக்குள் வந்து விட்டார்கள். ஆனால், நீங்களும், இளையராஜாவும் அந்தக் காலத்தில் இந்த ஃபீல்டில் இடம் பிடிக்க எந்தளவு கஷ்டப்பட்டீர்கள்?

பி. பத்மா

கங்கை அமரன் : அந்தக் காலத்தில் மதுரையில் நாங்கள் தெருத் தெருவாய் பாடி கஷ்டப்பட்டோம். சென்னை வந்தபோது, எந்தவித ஆதரவும், ஆதாரமும் இல்லாமல் அலைந்தோம். அப்போது பாரதிராஜா எங்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து, சிவாஜியைப் போல் ஒரு பெரிய நடிகனாகணும் என்கிற வெறியோடு அலைந்து கொண்டிருந்தார். உஸ்மான் ரோட்டில் இருந்த ஒரு சிறிய ரூமில் ஏற்கெனவே நான்கு பேர் தங்கியிருந்தார்கள். அவர்களோடு அண்ணன் பாஸ்கர், இளையராஜா, நான் ஆகிய மூவரும் தங்கிக் கொண்டு வாய்ப்புகளுக்கு அலைந்தோம்.

அந்தச் சமயத்தில் என்.ஜி.ஓ.க்கள் எல்லாம் சேர்ந்து நிறைய நாடகங்கள் போடுவார்கள். காகித ஓடம், சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற நாடகங்கள் நடந்து வந்த காலகட்டம் அது. அதுலே மியூசிக் பார்ட்டியில் வேலைக்குச் சேர்ந்து, முப்பது ரூபாய், நாற்பது ரூபாய் சம்பளம் வாங்கினோம். அதுவும் மாசத்தில் ஒருநாள், இரண்டு நாட்கள்தான் கிடைக்கும். அதில் ஜீவனம் நடத்திக் கொண்டே கம்பெனிகளில் ஏறி இறங்கி வாய்ப்புத் தேடுவோம். அப்போது எவ்வளவு அவமானங்கள் படணுமோ, அவ்வளவு அவமானங்கள் பட்டிருக்கிறோம்.

ஷ்யாமளா ரங்கநாதன் : நீங்கள் வளர்ந்து வந்த பிறகு, உங்களிடம் வாய்ப்புக் கேட்டு வந்தவர்களை எப்படி நடத்தினீர்கள்?

ஷ்யாமளா ரங்கநாதன்

கங்கை அமரன் : (சிரிப்பு) என்னிடம் வந்த சிலருக்கு, வாய்ப்புக் கொடுத்திருக்கிறேன். சிலருக்கு இன்னார் இன்னாரைப் பாருங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறேன். நானே இசையமைப்பாளர், பாடலாசிரியர் எனும்போது, என்னிடமே இசையமைக்க வாய்ப்பும், பாடல் எழுத வாய்ப்பும் கேட்டு வந்தால், என்ன செய்ய முடியும்? இட்லி விக்கிறவனிடமே இட்லி விற்க வரக் கூடாதுப்பான்னு சொல்லி அனுப்புவேன்.

ஷ்யாமளா : நீங்கள் இசையமைப்பாளராக இருந்திருக்கிறீர்கள். பாடி இருக்கிறீர்கள். இன்னும்…

கங்கை அமரன் : இன்னும் கன்னா பின்னான்னு என்ன என்னவோ பண்ணியிருக்கீங்கன்னு சொல்ல வர்றீங்க… அதானே? (பலத்த சிரிப்பொலி)

ஷ்யாமளா : ஐயையோ… இல்லே ஸார்… இசையமைப்பாளராக இருந்திருக்கீங்க. பாடியிருக்கீங்க. படம் டைரக்ட் பண்ணியிருக்கீங்க. பாடல் எழுதியிருக்கீங்க. இப்படி ஒரு பன்கலை வித்தகராக நீங்க இருந்திருக்கீங்க. இதுலே நீங்க விரும்பிச் செய்தது எந்தப் பார்ட்டுன்னு கேட்க வந்தேன்.

கங்கை அமரன் : நான் எப்போதும் பாடிக்கிட்டே இருப்பேன். அதனாலே பாடுறது ரொம்பப் பிடிக்கும். இசையமைக்கிறதும் ரொம்பப் பிடிக்கும். நான் ரொம்ப ரசிச்சுப் பண்ற விஷயம் அது.

பத்மா : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா…’ என்ற பாடல், உங்க அண்ணன் இசையில் நீங்கள் எழுதிய பாடல். நீங்கள் சென்னை வந்து செட்டில் ஆன பிறகு, உங்கள் கிராமத்தை இதே ஃபீலிங்கோடு மிஸ் பண்ணியதுண்டா?

கங்கை அமரன் : அந்தப் பாடல் நாங்கள் வெற்றி பெற்றுப் பெரிதாக வளர்ந்த பிறகு எழுதிய பாடல். ஆரம்பத்தில் நாங்கள் ஊரை விட்டுச் சென்னை வந்த பிறகு, வெற்றி அடையாமல் ஊர் பக்கமே போகக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தோம். இன்று எவ்வளவு புகழோடு இருக்கிறோமோ, அன்று அதற்கு இணையாகக் கடுமையாகக் கஷ்டப்பட்டிருக்கிறோம்.

சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். இன்று கோடீஸ்வரர்களாக இருக்கும் இளையராஜா, பாரதிராஜா, நான், எங்கள் அண்ணன் பாஸ்கர் நான்கு பேரும், வாரத்திற்கு ஒருநாள் அரிசிச் சாப்பாடு சாப்பிட்டால், அது அதிசயம். அது மார்ட்ன் ப்ரெட் அறிமுகமாகியிருந்த காலம். ஒரு ரூபாய் இருந்தால் 90 பைசாவிற்கு ஒரு ப்ரெட் பாக்கெட்டும், 10 பைசாவிற்கு நாட்டுச் சக்கரையும் வாங்கி, அந்த ஒரு பாக்கெட்டை நால்வரும் சமமாகப் பங்கு போட்டுச் சாப்பிடுவோம்.

அப்புறம் ஒரு வழியாக இளையராஜாவும், நானும் ஆளுக்கொரு இசையமைப்பாளரிடம் வேலைக்குச் சேர்ந்தோம். அங்குதான், பாடல் எப்படி கம்போஸ் செய்வது, ரீ-ரிக்கார்டிங் செய்வது எப்படி என்பதையெல்லாம் கற்றுக் கொண்டோம். பின்னர் காலம் கனிந்தபோது, அந்தப் பயிற்சிகளோடு எங்கள் சரக்கை வெளிக்கொணர்ந்து வெற்றி பெற்றோம். அதற்கு முன் பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம். ‘பாவலர் பிரதர்ஸ்’ என்ற பெயரில் நாங்கள் இசையமைத்த பாடல்கள் வெளிவராமலே போய் விட்டது. நாங்கள் ஃபர்ஸ்ட் ரெக்கார்ட் பண்ணின பாட்டு ‘சித்தங்கள் தெளிவடைய சிவனருளை நாடு’ என்ற பாடல்தான் (பாடிக் காட்டுகிறார்).

எஸ்.கே.எஸ். கணேசன் : முதன் முதலில் ரெக்கார்ட் பண்ணிய பாடலே சிவன் பாடலாக இருக்கிறது. உங்களுடைய கடவுள் நம்பிக்கையைப் பற்றிச் சொல்லுங்களேன்.

கணேசன்

கங்கை அமரன் : கடவுள்தான் எனக்கு எல்லாமே. கடவுள் இல்லாமல் எதுவும் இல்லை. எங்கள் அம்மா ஒரு கிராம தேவதை. அங்குள்ள பதினெட்டு பட்டிக் கிராமங்களிலும் எங்கள் அம்மா இல்லாமல், எந்தத் திருவிழாவும் நடக்காது. எல்லாத் திருவிழாவுக்கும் எங்கள் அம்மா கையால்தான் முளைப்பாரி போடுவார்கள். அவர்கள் விதைத்தால்தான் ராசி என்றொரு சென்டிமென்ட் அந்தக் கிராமங்களில் உண்டு. எங்கம்மா கடவுளோட இருந்த அம்மான்னு சொல்லலாம். அவர்கள் எப்பவும் என்ன சொல்வாங்கண்ணா… ‘நீ ஏம்பா சாமிகிட்டே போய் அது வேணும், இது வேணும்னு கேட்கிறே? அதுவா கொடுக்கும்பா… நீ கேட்டால் கூட அது சின்னதா இருக்கும்பா….’ என்று சொல்வார்கள்.

அபிரக்ஷன் : பொதுவாக எந்த மாதிரியான பாடல்கள், மனிதர்களை அதிகம் மயக்குகிறது?

பி. அபிரக்ஷன்

கங்கை அமரன் : அது கேட்பவரின் மன நிலையைப் பொறுத்தது. ஒரு காதலன் தனது காதலியைப் பிரிந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவன், ‘உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே… உன் மேலே ஆசைப்பட்டு பாத்துக் காத்து நின்னேனே..’ன்னு ஒரு பாடல் ஒலித்தால், அது அவனை உருக்கும். ஒரு தாய் இறந்து போன சோகத்தில் இருப்பவனுக்கு, ‘என் தாயெனும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே’ன்னு பாட்டு ஒலித்தால், அவன் மேலும் உருகிப் போய் விடுவான். ஒரு பார்ட்டி மூடில் இருக்கும்போது, குத்துப் பாட்டுதான் பிடிக்கும். அதனாலே மயக்கும் பாடல் என்பது, கேட்பவனின் மூட் மற்றும் ஃபீலிங்கைப் பொறுத்தது.

வி. சங்கர்

வி.சங்கர் : இன்றைக்கு இருக்கிற இசை, அன்றைக்கு மாதிரி இனிமையாக இல்லையே ஸார்… என்ன காரணம்?

கங்கை அமரன் : இன்றைக்கு நாங்கள் இல்லையே ஸார்… (பலத்த சிரிப்பொலி)

பலரும் : மறுபடியும் நீங்கள் ஏன் வரக் கூடாது…?

கங்கை அமரன் : நான் என்ன வர மாட்டேன்னா சொல்றேன்? ஒரு விஷயத்தை நாம கவனிக்கணும். எம்.எஸ். விஸ்வநாதன் திரும்பவும் ஒரு ரவுண்ட் வர முடியாது. இளையராஜா இனி வர முடியாது. கங்கை அமரனும் இனி வர முடியாது. இன்னொரு ஏ.ஆர். ரஹ்மான் வர முடியாது. எல்லோருக்கும் ஒரு பீரியட்தான். அந்தக் காலகட்டத்தில் மட்டும்தான் யாரும் உச்சத்தில் இருக்க முடியும். ஒருவரே இறுதி வரை உச்சத்தில் இருந்தால், அடுத்தவர்களுக்கு எப்படி வாய்ப்பு மலரும்? அந்த யதார்த்தத்தை நாம் உணர வேண்டும்.

ஷ்யாமளா : நீங்கள் பல்துறை வித்தகரா இருந்திருக்கீங்க. அதுலே எல்லாம் போதுமான அங்கீகாரம் உங்களுக்குக் கிடைச்சிட்டதா நினைக்கிறீங்களா?

கங்கை அமரன் : நீங்க என்ன நினைக்கிறீங்க? எனக்குக் கிடைச்சிருக்கிறதா நினைக்கிறீங்களா, இல்லையா?

ஷ்யாமளா : இல்லை. எனக்கு அப்படி ஒரு ஆதங்கம் இருக்கிறதாலேதான் கேட்கிறேன். சிவாஜிக்குக் கூட அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கலைன்னு சமீபத்தில் கூட சிலர் வருத்தப்பட்டாங்க.

கங்கை அமரன் : சிவாஜிக்கு அவர் காலத்திற்குப் பிறகு, அவரை யாரும் போற்றிப் புகழலை. விருதுகள், பட்டங்கள் தரவில்லை என்பதால், அவருக்கு அங்கீகாரம் கிடைக்கலைன்னு நீங்க சொல்றீங்க. இன்றைக்கு ஒரு நடிகரிடம், ‘நீங்க இப்படி நடந்து வர்றீங்க… சோகமா பார்க்கிறீங்க… அடுத்த விநாடி இப்படி திரும்பி நடந்திடுறீங்க…’ இப்படி நடிக்கச் சொன்னால், அந்த நடிகருக்கு உடனே சிவாஜிதான் மனதில் வருவார். அவரை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டுதான் அந்த நடிகர் தனது சோக முக பாவத்தையும், அலட்சியமான நடையையும் வெளிப்படுத்துவார். சிவாஜிதான் இங்கே நடிப்புக்கு அகராதி. இதை விடவா சிவாஜிக்கு அங்கீகாரம் வேணும்? ஏழைகளுக்கு உதவணும், சூப்பர் மேன் மாதிரி காப்பாத்த வரணும்னா எம்.ஜி.ஆர்.தான். அது ரெஜிஸ்டர் ஆகிடுச்சு. இதுக்கு மேலே என்ன அங்கீகாரம் வேணும்? என்னைப் பற்றிக் கேட்டீங்கன்னா நான் இந்தத் துறையில் மட்டும் கவனம் செலுத்தி, நம்பர் ஒன் ஆகணும்னு பிடிவாதம் பிடிக்கிறவன் இல்லை. எந்த வேலை வந்தாலும் உடனே அதை செய்யத் தயாராக இருப்பேன். அதுதான் என் மைனஸ் பாயிண்ட்.

(வாசகர்கள் சிரித்தபடி இடைமறித்து ‘அது ப்ளஸ் பாயிண்ட்’ என்றனர்).

இல்லை. நிஜமாக அதுதான் என் மைனஸ் பாயிண்ட். இதோ பத்திரிகைக்குக் கூப்பிட்டாங்க. வந்துட்டேன். வாரம் ஒரு பக்கம் எழுதுங்கன்னு கேட்டுக்கிட்டா எழுதத் துவங்கிடுவேன். நீங்க வந்து ஒரு 10 செகண்ட் விளம்பரத்திற்கு ம்யூஸிக் போடக் கூப்பிட்டால், அதுக்கும் உடனே ரெடியாகிடுவேன். பத்தாயிரம் சம்பளம் சொன்னால் கூட, அந்த வேலையில் இறங்கிடுவேன். என்னடா இவ்வளவு உயரத்தில் இருக்கிறவன், இவ்வளவு இறங்கி வந்துட்டானேன்னு பலர் என்னை அங்கீகரிக்காமல் விட்டிருக்கலாம். ஆனால், சும்மா இருப்பதற்கு எதையாவது செய்யலாம் என்பது என் பாலிஸி.

சங்கர் : பல துறைகளில் நீங்கள் இன்று புகழ் பெற்றிருந்தாலும், முதலில் நீங்கள் தொட்டது எதை?

கங்கை அமரன் : பேஸிக்கல்லி ஐ ஆம் எ கிடாரிஸ்ட். ஆனால், முதலில் நான் செய்த வேலை, பாடல் எழுதுவதுதான். இளையராஜா ஆர்மோனியம் தொடுறதுக்கு முன்னாடியே நான் எழுத ஆரம்பிச்சுட்டேன். அப்போ இளையராஜாவுக்கு மியூஸிக் போடப் பாடல்கள் இல்லை. இளையராஜா முதலில் ம்யூஸிக் கம்போஸ் பண்ணினது, நேரு மறைந்தபோது கவிஞர் கண்ணதாசன் எழுதிய இரங்கற்பாவிற்குத்தான்.

‘சீரிய நெற்றி எங்கே, சிவந்த நல் இதழ்கள் எங்கே, கூரிய விழிகள் எங்கே…’ என்று போகும் அந்தப் பாடலை கண்ணதாசன் எழுதி, சீர்காழி கோவிந்தராஜன் சீரணி அரங்கில் பாடினார் என்று எங்க ஊர் நியூஸ் பேப்பரில் செய்தி வந்தது. அந்தப் பாடலை எந்த ராகத்தில் பாடினார்கள் என்று கூடத் தெரியாது. இளையராஜா அந்தப் பாடலை எடுத்து வைத்துக் கொண்டு, அதற்கு ட்யூன் போட்டார். அப்புறம் நான் பாட்டெழுத, பாட்டெழுத அதற்கு இளையராஜா ம்யூஸிக் போடுவது வாடிக்கையானது. சென்னை வந்த பிறகு, இளையராஜா ஆர்மோனியம் எடுக்கையில், நான் கிதாரைக் கையில் எடுத்தேன். அப்புறம் ‘இந்த ஆள் இளையராஜா பக்கத்தில் இருக்கான். இளையராஜா யூஸ் பண்ணாத ட்யூன் எல்லாம் இவன் கிட்டே இருக்கும்’ என்று கணக்குப் போட்ட சிலர், என்னை இசையமைப்பாளராகப் புக் செய்ய ஆரம்பித்தார்கள்.

மௌன கீதங்கள், வாழ்வே மாயம் என்று, நானும் உயரத்திற்குப் போனேன். 187 படங்கள் இசை அமைத்த பிறகு, டைரக்ஷன் வாய்ப்பு அதுவாகத் தேடி வந்தது. நான் ஏன் வேணாம்னு சொல்லணும்? எனக்கு டைரக்ஷனே தெரியாது. ஆனாலும் கூப்பிட்டாங்க. சரின்னு ஒரு கதையோடு களமிறங்கிட்டேன். இடையில் சிலர் பாடக் கூப்பிட்டபோது, அதையும் விடலை. இப்படி அதுலே, இதுலேன்னு அலை மோதிட்டு எதையும் முழுசாச் செய்யாமல், ஏன் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கலைன்னு கேட்டால் நான் என்ன பண்ணுவேன் (சிரிப்பு).

(187 படங்களுக்கு இசையமைத்த நீங்கள், உங்கள் இயக்கத்தில் உருவான படங்களுக்கு மட்டும் இளையராஜாவை இசை அமைப்பாளராக நியமித்துக் கொண்டது ஏன்? ரீ-மிக்ஸ் பாடல்கள் தேவையா? தமிழ்த் திரைப்படப் பாடகர்கள் பெரும்பாலும் மலையாளம், தெலுங்கு மொழிக்காரர்களாக இருப்பது ஏன்… என்பவை உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கான பதில்கள் – அடுத்த பதிவில்…)

– தொகுப்பு : எஸ்.ஜே. இதயா, பங்கேற்க: thuglak45@gmail.com, படங்கள்: பேஜர் கிருஷ்ணமூர்த்தி

3 thoughts on “1-இசையமைப்பாளர் கங்கை அமரனுடன் ஒரு உரையாடல்…

  1. rjagan49 December 27, 2014 at 5:09 AM Reply

    Gangai Amaran is not what he looks like – I mean, he is not a common man like he looks to be. His responses – and that too spontaneous – show how deeply he has analysed his situations! He has expressed his opinions with great understanding of reality and with his trade mark humour without ever showing off or hurting some one. My regards to him has grown multifold on reading this interview. Another recent QA which impressed me is that of Kamal Haasan’s in Kumudam. He is simply … class! – R. J.

  2. கிரி February 18, 2015 at 3:43 AM Reply

    இவருடைய சொர்க்கமே என்றாலும்.. எனக்கு ரொம்பப் பிடித்த பாடல். உங்களுக்கும் குறிப்பாக நம்மைப் போல வெளிநாட்டில் உள்ளவர்களை சென்டிமென்ட்டாக கவர்ந்த பாடல் 🙂

    இளையராஜாவின் அற்புதமான இசை.. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. இது போல இதே மாதிரி ஒரு பாட்டு.. நேத்து ஒருத்தர ஒருத்தர பார்த்தோம்.. இரண்டுமே இளையராஜா பாடியது.

    இந்தப் பாடல்கள் இரண்டுமே ராமராஜனக்கு என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s