அப்பா-சிவசங்கரி


தமிழகத்தின் வித்தியாசமான முரண்பாடுகளுள்ள பல ஆளுமைகளுள் ஒன்று G.D.நாயுடு. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். அடேய் இந்தியாவிலேயே சிறந்த அறிவாளி ஒன்று G.D.நாயுடு இன்னொன்று நான்தான் என்று.

இந்தப் புத்தகம் G.D.நாயுடுவைப் பற்றி அவரது மகன் கூறுவது போல தகவல்களை திரட்டி எழுத்தாளர் சிவசங்கரி எழுதியது.

இந்தப்புத்தகம் கையில் எடுத்தவுடன் மடமடவென்று படித்து முடித்துவிடக்கூடியதான நடை கொண்டது. நாயுடுவின் மகன் கோபாலின் பார்வையில் கதை சொல்லும் பாணி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

அடிப்படையில் நாயுடு ஒரு சுறுசுறுப்பான வணிகர். என்ன செய்தாலும் அதில் உள்ள வியாபாரத்தன்மையை சட்டென அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய புத்தி கொண்டவர். பதினெட்டு வயதில் ஊரில் ஒரு காலி மருந்து புட்டியை பார்த்து (அது அந்தக் கிராமத்துக்கு ஒரு புதிய வஸ்து…) அது என்ன என்று விசாரிக்க அது பார்க்டேவிஸ் என்கிற மருந்து கம்பெனி தயாரித்த வலி நிவாரணி (pain killer) என்று கேள்விப்பட்டு. அது எப்படியோ அங்கே வந்திருந்தது.

நம்ம ஊரிலேதான் நிறைய பேர் மூட்டு வலி, தலைவலின்னு அவஸ்தைப் படுகிறார்களே என்று உடனே அமெரிக்காவிற்கு தபால் எழுதி வரவழைத்து அக்கம் பக்கம் இருக்கும் எல்லா கிராமத்தில் எல்லாம் விற்று அந்த வருடம் லாபம் மட்டும் ரூபாய் எண்ணூறு. இது நடந்தது பதினெட்டு வயதில். 1911 ல் எண்ணூறு லாபம்! விற்கத் தெரிஞ்சவன்தான் வாழத் தெரிஞ்சவன் என்கிற மாதிரியான கேரக்டர். ஆனால் அது மட்டும் அல்ல G.D.நாயுடு.


அந்த ஊரின் குடியானவர்களுக்கான ஊதியத்தை அதிகமாக்க அவர்களுக்காக வாதாடி அந்த எண்ணூறு ரூபாயை செலவழித்தது அவரது இன்னொரு பரிமாணம்.

மோட்டார் சைக்கிளை பிரித்து மாட்டி…

தன் ஊர் கலங்கலுக்கு வந்த ஆங்கிலேய அதிகாரி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை பார்த்து மலைத்து போனவர் தான் அந்த ஊரில் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று கோயம்புத்தூர் போய் அங்கே ரயில் வண்டி, தொழிற்சாலை எல்லாம் பார்த்து விட்டு அங்கேயே ஒரு ஹோட்டலில் சர்வராக மாதம் மூன்று ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து மூன்று வருடத்தில் நானூறு சேர்ந்ததும் அந்த வெள்ளைக்காரரிடம் போய் மோட்டார் சைக்கிளை கேட்க, அவரும் கொடுக்க, வாங்கி முதல் வேலை அதை அக்கு அக்காக பிரித்து மறுபடியும் மாட்டியதுதான்.


பக்கத்தில் சைட்பாக்ஸ் பொருத்தினால் இன்னோரு ஆளும் அமரலாம் என்று அதைப் படம் வரைந்து செய்து மாட்டியவரும் அவரே! (ஷோலே படத்தில் அமிதாப்பும் தர்மேந்திராவும் பாடிக்கொண்டே வருவார்களே!)

கோயம்புத்தூரில் அடுத்து வந்த வருடங்களில் தொழிற்சாலையில் வேலை பார்த்து பின்னர் ஒரு தொழிற்சாலையையே வாங்கி, அங்கே உலக யுத்தம் நடந்து கொண்டிருக்க, தனது புத்திசாலித்தனத்தால் ஒரு ஆண்டில் ஒன்றரை லட்சம் சம்பாதித்துவிட்டார் G.D.நாயுடு. அசுரத்தனமான வளர்ச்சி. 1919 ல் அவ்வளவு பணம் என்பது நினைத்துப் பார்க்க இயலாதது. அதே வருடம்-காட்டன் வியாபாரம் செய்யப் போகிறேன் என்று பம்பாயில் அத்தனையையும் இழந்து கையைத் துடைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி வந்துவிட்டார்.

பஸ் போக்குவரத்து ;

பம்பாய் கசப்பான பயணம் அவரை வீழ்த்திவிடவில்லை. மோட்டார் பிஸினஸ் நடத்திக் கொண்டிருந்த ஸ்டேன்ஸ் என்பவரிடம் ஃபிட்டராக சேரப் போக அவரோ உனக்கு இது சரிப்பட்டு வராது. உன் உழைப்பை நான் அறிவேன். நீ ஏன் ஒரு பஸ் வாங்கி ஓட்டக் கூடாது என்று கேட்க, அப்போது கோயம்புத்தூருக்கு அது தேவையாயிருந்தது. நண்பர்களிடம் கடன் வாங்கி, மீதி பணத்தை ஸ்டேன்ஸ் துரையே கொடுக்க 1920-ல் ஒரு பஸ் வாங்கி விடுகிறார். பொள்ளாச்சியிலிருந்து பழனிவரை- டிரைவர், கண்டக்டர், கிளீனர், முதலாளி எல்லாமே அவர்தான். 1922 ல் இரண்டு பஸ்ஸானது. அடுத்து வருவதெல்லாம் ரஜினி படத்தில் தான் சாத்தியம். 1933 ல் அவரின் U.M.S. பஸ் சர்வீஸூக்கு 280 பஸ்கள் இருந்தன.

அசுர உழைப்பு. சும்மா இல்லாமல் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து (ஜெர்மனி, லண்டன், அமெரிக்கா) அங்கே உள்ள தொழிற்சாலைகளுக்கு போய் விசாரித்து இங்கே அதை தொடங்க என்ன செய்யலாம் என்று ஆரம்பித்து ,அவர் தொடங்கிய தொழிற்சாலைகள் ஏராளம். அதோடு U.M.S. ம் வளர்ந்தது.

பயணிகள் இருக்கிறார்களோ இல்லையோ பஸ் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பிவிட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். முதலில் அது நஷ்டத்தை அது உண்டு பண்ணினாலும் போகப் போக பயணிகள் நேரத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்தக் கால சாலைகளினால் பயணம் முடிந்ததும் பேருந்து முழுதும் செம்மண் படிந்து மக்கள் உடை எல்லாம் அழுக்காகி விடுகிறது என்று தினமும் எல்லா பேருந்துகளையும் கழுவி விட ஆள் ஏற்பாடு செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தினசரி பேப்பரில் மாதம் தோறும் விளம்பரம் செய்திருக்கிறார் எவ்வளவு பயணிகள் பயணித்தார்கள் எத்தனை சர்வீஸ் விடப்பட்டது. எத்தனை விபத்துகள் போன்ற புள்ளி விபரங்களை. அதோடு நீங்கள் வெள்ளை வேட்டியில் வந்தால் வெள்ளை வேட்டியிலேயே இறங்கலாம் என்று.

ஆராய்ச்சி மனம் ;

ஊசி வழியாக மருந்துகளை செலுத்தி விதைகளை உருவாக்கி அதன் மூலம் விதையில்லாத பப்பாளி, ஆரஞ்சு ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறார். 19 அடிவரை வளர்ந்த சோளம், கிலோ கணக்கில் காய்த்த துவரை, பருத்தி செடி என்று நிறைய வேலை செய்திருக்கிறார். எலக்ட்ரிக் ரேஸரை கண்டுபிடித்தது அவரே என்கிறது இந்த புத்தகம்.

தன் மகனை சமையற்காரருடன் வேலை செய்தால் உனக்கும் கூலி தருவேன் என்று சொல்லி அவனையும் எல்லாருக்கும் பரிமாறி, வீட்டை பெருக்கி எல்லா வேலையும் செய்யச் சொல்லி சம்பளம் தந்திருக்கிறார் சில வருடங்களாக!

முரண்பாடுகள் ;

சரியாக மிகச் சரியாக பஸ் எடுக்கப் பட்டு விடவேண்டும் என்பதில் கறாராக இருந்திருக்கிறார். அது தொழிலாளர்களை மிரட்டும் வரை போய் இருக்கிறது. அவரது கம்பெனியில் ஒரு செருப்பை மாட்டி வைத்து வேலை வாங்கி இருக்கிறார். இது மிகப் பெரிய அவப்பெயரை அவருக்கு வாங்கி தந்தது.

எலக்ட்ரிக் ரேஸரை தயாரித்து லண்டனில் 7500 க்கும் மேற்பட்டதை விற்றிருக்கிறார். அமெரிக்காவில் அதை ஒரு கம்பெனி 3 லட்சம் டாலருக்கு தயாரிக்கும் உரிமையை கேட்ட போது மறுத்திருக்கிறார். இந்தியாவிலேயை அது தயாரிக்கப்படவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் பிளேடு கம்பெனிகள் சதி செய்து அவருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி தர மறுத்துவிட்டது.

மின்சார ஒட்டுப்பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார். அதை பரிசீலித்த அமெரிக்க அரசாங்கம் முப்பதாயிரம் எண்ணிக்கைக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது. அப்போது அவர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததால் அதை அவரால் நிறைவேற்றமுடியவில்லை. முடிவில் அந்த காப்புரிமையை அமெரிக்க அரசுக்கு கொடுத்து விட்டார்.

ஆரஞ்சு தோல் கசப்பாக இருக்கும். அதிலிருந்து வைட்டமின்களை மட்டும் பிரித்தெடுக்க இயந்திரம் கண்டுபிடித்திருக்கிறார். அதை இப்போதும் அவர் மகன் உபயோகிக்கிறார்.

போத்தனூர் போகும் வழியில் பென்ஸ் கார் தொழிற்சாலை ஆரம்பிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஆனால் வருமான வரித்துறையிடம் சண்டையிட்டதால் எல்லாமே கேன்ஸலாகிவிட்டது.

1961-ல் தன் மகனிடம் ஒரு லட்சம் ரூபாயைத் (இப்போது அது கோடி மதிப்புடையது) தந்து கம்பெனியின் வளர்ச்சிக்காக உன் இஷ்டப்படி செலவு செய்.என்று சொல்லிவிட்டு பின்னர் அவர் செலவு செய்த பின் எது வருவாய் ஈட்டக் கூடிய செலவு எது அப்படி இல்லை என்று பாடம் எடுத்திருக்கிறார். ரொம்ப காஸ்ட்லி பாடம்.

அது மட்டுமில்லாமல் திடீரென்று பதினெட்டு கம்பெனிகளின் பொறுப்பை தன் மகனிடம் கொடுத்துவிட்டு அதில் கடைசிவரை தலையிடாமல் இருந்திருக்கிறார்.

காங்கிரஸூக்காக ஆதரவாக இருந்தவர் பின்னர் அதற்காக எதிராக பிரச்சாரம் செய்திருக்கிறார்.

தேசபக்தியும் அதிகமாக இருந்திருக்கிறது. லண்டனில் மியூசியத்தில் தன் மகனிடம் உலகிலேயே முதலில் ரைஃபிள ஃகண்டுபிடித்தது திப்புசுல்தான், இண்டிகோ நிறம் உபயோகித்தது ராஜஸ்தான் மக்கள், உலகிலேயே ‘செப்டிக் டேங்க்‘ முறைப்படி கழிவுப்பொருள் அகற்றி கிராமத்தில் பொதுக்கழிவுமுறை அமைப்பு மூலம் அகற்றப்பட்டது இந்தியாவில் என்று அங்கே வைத்திருந்த வரைபடத்தை காட்டி பெருமைப்பட்டுக் கொண்டார் என்று அவரது மகன் சொல்கிறார்.

வெளிநாட்டிலுள்ள அத்தனை தொழிற்சாலைகளையும் இந்தியாவில் கொண்டு வந்து விட வேண்டும் என்று முயன்றிருக்கிறார் G.D.நாயுடு.முதல் பாலிடெக்னிக் ஆரம்பித்தவரும் அவரே.

வருமானவரிச் சண்டை

1963 ல் இந்த சண்டை ஆரம்பித்திருக்கிறது. அதுதான் ஆரம்பம். அவரின் கல்லூரிகளுக்கு செய்த செலவுகளை வருமானவரித்துறை வருவாயாக கணக்கிட அவர் வாதம் செய்ய ஆரம்பித்தார். அதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். அந்த அதிகாரி பிராமணர். G.D.நாயுடு பெரியாருக்கு நெருக்கமானவராக இருந்ததால் இந்தப் பிரச்னை வந்தது என்றும் சொல்கிறார்கள்.

அந்தக் காலத்திலேயே டிக்கெட் கொடுக்க இயந்திரம் வைத்திருந்தார். வருமான வரித்துறை நீங்கள் பஸ் கம்பெனி வருமானத்தை சரியாக காட்டவில்லை என்று சொன்னது. மொத்தமாக கூட்டிக் கழித்து வருமானவரி 24 லட்சம் என்று வந்தது.

1941-1946 க்கான வருமான வரியை கட்டச் சொல்லி சொல்லியிருக்கிறார்கள். G.D. நாயுடுவிற்கு கோபம் தலைக்கு ஏறியிருக்கிறது. வீம்பாக நீ என்ன செய்வாயோ செய் நான் கட்டமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

வருமானவரி மீதான அபராதமும் ஏறிக்கொண்டே போனது. என் சொத்து இருந்தால் தானே ஜப்தி செய்வீர்கள் என்று புது கார், வீட்டில் இருந்த விலை மதிப்பான பொருட்கள் எல்லாவற்றையும் உடைத்துப் போட்டார்.

தான் வளர்த்த நாய்க்கு ‘போஸ்‘ என்று பெயரிட்டு அதை மூன்று கம்பெனிக்கு பங்குதாரராக்கி, அதன் கவனிப்பாளரை கையெழுத்து போடச் சொல்லிவிட்டு, பின்னர் ஒரு நாய் பங்குதாரர் என்று தில்லு முல்லு செய்தால் உங்களால் கண்டுபிடிக்க முடியாது ஆனால் நேர்மையாய் நான் வரி கட்டினால் அபராதம் விதிப்பீர்களா என்று கடிதம் எழுதியிருக்கிறார்.

அப்போதைய மதிப்பில் 2 லட்சம் மதிப்புள்ள கேஷ் பாண்ட் பத்திரங்களை வீட்டு வாசலில் உட்கார்ந்து தெருவில் போவோர் வருவோருக்கெல்லாம் விநியோகித்திருக்கிறார். தன் சொத்து எல்லாவற்றையும் தன் மனைவி பேருக்கு மாற்றி அவரை விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போடச் சொல்லியிருக்கிறார். கடைசியில் வருமானவரித்துறையிடம் என்னிடம் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் மனைவியுடன் தான் வாழ்ந்தார்.

சர்க்கரை வியாதிக்கு சித்தவைத்திய முறைப்படி மருந்து தயாரித்து இங்கே மட்டுமல்ல வெளிநாட்டிலும் விற்றிருக்கிறார். அந்த மருந்தில் பயன்படுத்தும் ஸிந்திக் கொடி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வேலை செய்கிறது மற்ற மாதங்களில் இல்லை என்று நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.

பெரியாருடன் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்திருக்கிறது. பெரியாரிடம் நீங்கள் என் பண்ணையில் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம் ஆனால் பணம் மட்டும் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

பெரியார் விடுதலை பத்திரிக்கையில் விளம்பரம் செய்துவிட்டார். கழக மாநாடு இந்தப் பண்ணையில் நடப்பதால் எல்லாரும் அங்கே வாருங்கள் என்று. எல்லாருக்கும் சாப்பாடு, மற்றும் இதர செலவு என்று நாயுடுவுக்கு பல ஆயிரம் செலவு. பெரியார் எப்படியோ வசூலித்துவிட்டார்.

அவருக்கு கடவுள் எதிர்ப்பு மீது பிடிப்பு இருந்தாலும் போகப் போக எதிர்ப்பையும் காட்டவில்லை ஆதரவையும் காட்டவில்லை. எல்லா கதைகள் சடங்குகளின் பின்னே ஒரு அறிவியல் இருப்பதாகவும் அது பாமர ஜனங்களுக்குப் புரியாததால் அதை சடங்காக மூதாதையர்கள் ஆக்கிவிட்டதாகவும் கூறி இருக்கிறார்.

பட்டப் படிப்புகளின் மீது அவநம்பிக்கை கொண்டிருந்திருக்கிறார். G.D.நாயுடுவிற்கு நல்ல பேரைப் போல கெட்ட பேரும் இருந்திருக்கிறது. அவர் ஒரு முரண்பாடான கேரக்டராக இருந்திருக்கிறார்.

சீக்கிரம் படித்துவிடக் கூடிய ஒரு புத்தகம். வானதி வெளியீடு. கிழக்குப் பதிப்பகத்தில் கிடைக்கிறது. விலை ரூபாய் எழுபது.      

மாயன்:அகமும்-புறமும்

Advertisements

One thought on “அப்பா-சிவசங்கரி

  1. rjagan49 December 18, 2014 at 12:29 PM Reply

    Truly an eccentric! Wish he had a guide he would listen to! How many inventions have been left unused because of his eccentricity! – R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s