ரசனை ஸ்ரீராமின் கேள்வியும் பத்ரி சேஷாத்ரியின் விளக்கமும்…


புதிய எக்ஸைல் New Exile

Rasanai Sriram

சாருவின் புதிய எக்சைல் நாவல் 1000 ரூபாயாம். அட்வான்ஸ் புக்கிங்கில் 500 ரூபாயில் தருகிறார்களாம். எந்த வியாபாரமும் நஷ்டத்தோடு செய்யப்படுவதில்லை. அதிலேயே நிச்சயம் லாபம் வைத்திருப்பார்கள். ஐநூறிலேயே லாபம் என்றால் அப்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகையில் அது 100% மேல் லாபத்தில் விற்கப்படுவதாக அல்லவா ஆகிறது?

உலோகம்

உலோகமும் கிழக்கு பதிப்பகத்தால் இதுபோன்ற ஒரு பெரிய ஆரவாரத்துடன் வெளியிடப்பட்டது. வெளியான ஓரிரு வாரத்தில் பாதிவிலைக்கு குறைக்கப்பட்டது. அடடா என்று இருந்தது. ஒரு புதுப்புத்தகத்தை தடாலடியாக விலையை கூட்டியோ, குறைத்தோ விற்கையில் அந்த பதிப்பகத்தில் மேலுள்ள அடிப்படை நம்பிக்கை குறையவே செய்கிறது.

தமிழர்கள் புத்தகம் வாங்காததற்கு என்னன்னவோ காரணங்கள் பட்டியல் போடுகிறார்கள். (வாசகனை தான் எவ்வளவு வேண்ணா திட்டலாமே?உலகிலேயே கன்ஸ்யூமர் பேஸை திட்டும் ஒரே தொழில் எழுத்து தான்). சீரியல் பார்ப்பது தான் காரணம் என எழுத்திலிருந்து சீரியலுக்கு மாறிய எழுத்தாளர்களே எள்ளல் செய்கிறார்கள். ஆனால், காரணம் அங்கெல்லாம் இல்லை. ஆகப்பெரிய காரணம் விலை. தொடர்ச்சியாக பெரும் பதிப்பகங்கள் ஒல்லிப்புத்தகங்களில் ஆரம்பித்து அனைத்துக்கும் கொள்ளை விலை வைப்பதே.

நீ எவ்ளோ சம்பாதிக்கிற, ஒரு மினிடிபன் விலை தெரியுமா, சினிமாவுக்கு எவ்ளோ செலவழிக்கிற என்பது போன்ற எதிர்வினைகளுக்கு என்னிடம் பதிலில்லை. புத்தகம் சினிமாவோ, சாம்பார்வடையோ அல்ல. ஸ்கூல்ஃபீஸ், சினிமா, பொண்டாட்டி என லௌகீகம் தாண்டித்தான் புத்தகத்துக்கு வாசகன் வர்றான். அந்த லௌகீகத்துக்காக தான் நீங்களும் பதிப்பகம் நடத்துகிறீர்கள்.

தமிழன் புத்தகம் வாங்குவதில்லை என வையும் முன் அவனுக்கு எட்டும் வகையில் விலையை வையுங்கள். இல்லாவிட்டால், எக்சைல் வாங்கும் விலையில் பத்தில் ஒரு பங்குக்கு ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரனின் 2015 ஆண்டு பலன்கள் தான் வாங்குவான். அது இன்னமுமே அவனுக்கு திருப்தியை கொடுக்கலாம்.

Badri Seshadri

எல்லா வியாபாரமும் லாபத்துக்காக என்று எண்ணும் கருத்தே தவறானது. நான் நஷ்டத்தில்தான் பதிப்பகம் நடத்திவருகிறேன் என்று சொன்னால், நீங்கள் அதனை நம்புவீர்கள் என்றால் மேற்கொண்டு பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். இல்லை என்றால் பதில் சொல்லப் போவதில்லை. நன்றி.

Rasanai Sriram

சரி நம்புகிறேன் பத்ரி. பதிலை கேட்க தயாராகவே இருக்கிறேன்.

நிற்க, கிழக்கு நஷ்டத்தில் இயங்குகிறதா, பேலன்ஸ் ஷீட்டை காமி என நான் சொல்லவில்லை. அது எனக்கு தேவையில்லாதது. எக்சைல் 500 ரூபாயிலேயே லாபம் இருக்கலாம் என்று தான் சொல்லியிருக்கிறேன். அதற்கு பதில் தந்தால் போதுமானது. அதுவும் முடிந்தால்.

Badri Seshadri

புத்தக விலையை, அதன் கட்டமைப்புக்கு ஆகும் செலவை வைத்தே தீர்மானிக்கிறேன். உலோகத்தை அடிப்படையாக வைத்து உதாரணம் சொல்கிறேன்.

உலோகம்

முதலில் அந்தப் புத்தகத்தை 1,200 பிரதிகள் அச்சிட்டோம். அப்போது ஒரு புத்தகம் அடிக்க ஆன செலவு சுமார் 25 என்று ஞாபகம். அதைப்போல நான்கு மடங்கு எம்.ஆர்.பி. எனவே ரூ. 100/- எம்.ஆர்.பி. அந்தப் புத்தகத்தை விற்க ஆரம்பித்ததும், எதிர்பார்த்த வேகத்தைவிட அதிகமாக விற்றது. எனவே பேசாமல் 5,000 பிரதிகள் அச்சடித்துவிடலாமே என்று ஒரு ஐடியா தோன்றியது. அப்படி அடிக்கும்போது ஒரு பிரதிக்கு ஆகும் செலவு சுமார் ரூ. 15/- மட்டுமே. அதனை நான்கு மடங்காக்கி, ரூ. 60/- என்று வைக்காமல், ரூ. 50/- என்று வைத்து, ஊரெங்கும் பிளாஸ்டிக் பவுச்சில் தொங்கவிட்டு விற்க முயற்சி செய்தோம். கடைசியில் 4,500 விற்றுவிட்டது. கடைசி 500 விற்க வெகு தாமதமானது. அதன்பின் அந்தப் புத்தகத்தை அச்சிடவில்லை. இப்போது நான் அதனை அச்சிட நேர்ந்தால் மீண்டும் ரூ. 100/- அல்லது ரூ. 125/- என்று வைத்து விற்பேன். ஒரு லட்சம் பிரதிகள் சீராக மாதம் 10,000 என்று போகும் என்றால் ரூ. 40 அல்லது ரூ. 50 என்று வைத்து விற்பேன். இதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Rasanai Sriram

ஒரு கல்யாணப்பத்திரிகை கூட எண்ணிக்கையை பொறுத்து யுனிட் ப்ரைஸ் மாறும். அதே நீங்கள் சொல்வது. புரிகிறது. எக்சைலின் ஐநூறு vs ஆயிரம் ரூபாய் விற்பனை ஸ்டாடிஸ்டிக்ஸ் மிகவும் சுவாரசியமான ஒன்றாய் இருக்கப்போகிறது.

Badri Seshadri

புத்தகக் கட்டுமான விலையைப் போல எவ்வளவு மடங்கு வைத்து புத்தகங்களை விற்பது? 3 மடங்கு, 4 மடங்கு, 5 மடங்கு? இந்த மூன்றையும் நான் பின்பற்றியுள்ளேன். ஏன் இந்தக் கணக்கு? நாங்கள் எங்கள் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளுக்கு புத்தக விலையில் 40% டிஸ்கவுண்ட் தருகிறோம். அவர்கள் எங்கள் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு 35%-மும், கடைகளுக்கு 30 அல்லது 35%-மும் கொடுக்கிறார்கள். எங்களைப் பொருத்தமட்டில், எல்லாப் புத்தகத்துக்கும் 40% எங்கள் கையை விட்டுப் போய்விடுகிறது. அது டிஸ்ட்ரிபூஷன் சானலுக்குப் போகும் தொகை. அடுத்து, 10% எழுத்தாளர் ராயல்டி. தாமதமானாலும் இன்றுவரை மிகச் சரியாகக் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறோம். ஆக எம்.ஆர்.பியில் 50% சானலுக்கும் ஆசிரியருக்கும். மீதமுள்ள 50%-ட்டில், (நான்கு மடங்கு வைத்தால்) 25% கட்டுமானத்துக்கு, 25% நிறுவனத்துக்கு. இந்த 25%-ல் வாடகை, சம்பளம் (எங்களிடம் 70 பேர் வேலை செய்கிறார்கள் – 20 பேர் சேல்ஸ், 8 பேர் எடிட்டோரியல், அட்மின், மார்க்கெட்டிங், வேர்ஹவுஸ் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள் – இவர்கள் அனைவருக்கும் தலையே போனாலும் ஒன்றாம் தேதிக்கு முதல் தேதியிலேயே சம்பளம் கொடுத்துவிடுகிறேன், பி.எஃப், இ.எஸ்.ஐ, கிராஜுவிட்டி உண்டு), நிறுவனத்தை நடத்த வாங்கும் கடனுக்கான வட்டி, இதெல்லாம் போக கையில் ஒன்றும் எஞ்சுவதில்லை. இதில் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க ஒன்றும் இல்லை.

இதனால்தான் ஐந்து மடங்கு விலை வைக்கலாம் என்று யோசித்தேன். அப்படிச் செய்தால் எங்கள் பங்காக 30% நிற்கும். ஆனால் அதற்கு சேல்ஸ் டீமிடமிருந்து எதிர்ப்பு. சில புத்தகங்கள் போகும் வேகத்தை வைத்து, மீண்டும் நான்கு மடங்கு என்று வந்துவிட்டோம்.

Badri Seshadri

எங்கள் தயாரிப்புச் செலவு அதிகம். எனவே எம்.ஆர்.பி அதனோடு சேர்த்து மடங்காக்குதலில் அதிகரிக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பத்தாண்டுகளாக புத்தகத்தை உருவாக்கிவிட்டு, சொர்ந்துபோய் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் புத்தக உருவாக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். குவாலிட்டி கண்ட்ரோல் என்றால் என்னவென்றே தெரியாத நிலைதான் சென்னை குடிசைத் தொழில் அச்சகங்களில். நாங்களே பேப்பர் வாங்கி, நாங்களே பத்து பிரிண்டிங் பிரெஸ்ஸில் பிரிண்ட் செய்து, நாங்களே எட்டு பைண்டிங் இடங்களில் போய் பைண்டிங் செய்து எடுத்து வந்தால் ஒரே செட்டில் உள்ள பத்து புத்தகங்களும் பல்வேறு உயரங்களில் இருக்கும், அச்சு கோணல் மாணலாக இருக்கும்., பைண்டிங்கெல்லாம் அப்படித்தான் சார் வரும் என்று ஒரே போடாகப் போடுவார்கள்.

இப்போது ஒட்டுமொத்தமாக மும்பையில் ரெப்ரோ அல்லது மங்களூரில் மணிபாலில் கொடுத்துச் செய்கிறோம். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுக்கிறோம்.

ஏன், மற்ற நிறுவனங்கள் மிக அற்புதமாகப் புத்தகங்களைக் கொண்டுவரவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஒருவேளை அவர்களிடம் இருக்கும் சீக்ரெட் சாஸ் என்னிடம் இல்லை. அவர்கள் மாதம் அச்சடிக்கும் புத்தக எண்ணிக்கைக்கும் நான் அச்சடித்து விற்கும் புத்தக எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்து சண்டை போட நான் விரும்பவில்லை.

Badri Seshadri

இறுதியாக, நாங்கள் சானலுக்குத் தரும் டிஸ்கவுண்ட் அதிகம். வானதியெல்லாம் 25%-க்கு மேல் தரமாட்டார்கள். சிலர் 30, சிலர் 35. நாங்கள் 40 தரக் காரணம் உள்ளது. ஒரு வலைப்பின்னலை உருவாக்கியிருக்கிறோம். அனைவரும் பணம் சம்பாதித்தால்தான் இந்த நெட்வொர்க்கில் இருக்க விரும்புவார்கள். புஸ்தகத்தைப் பரவலாக விற்பனை செய்ய முயற்சி எடுப்பார்கள். அதனால்.

Rasanai Sriram

நன்றி பத்ரி. இந்த தகவல்கள் மேலதிகமாகவே உள்ளன. ingest செய்துகொள்ள நேரம் பிடிக்கும். அச்சடிக்கும் எண்ணிக்கை, அதற்கான செலவே விலையை தீர்மானிப்பதாக அறிகிறேன். That answers my original question, எக்சைல் 500 ரூபாய் விலையிலேயே லாபம் உண்டு என்பதாகவே புரிந்துகொள்கிறேன்.

Badri Seshadri

இப்போது எக்ஸைல் விலைக்கு வருவோம். நேரடியாக கஸ்டமருக்கு விற்பதால், 40% டிஸ்கவுண்ட் போகிறது. எனவே நேரடியாக எந்தப் புத்தகத்தை பதிப்பகத்திடம் சென்று வாங்கினாலும் டிஸ்கவுண்ட் கொடுக்க வேண்டியதுதானே என்று கேட்காதீர்கள். டிஸ்கவுண்ட் கொடுக்க மாட்டோம். ஏனெனில் அது விற்பனை சானலின் வெறுப்பைச் சம்பாதிக்கிறது. அங்குதான் எங்கள் புத்தகங்களின் பெரும்பகுதி விற்பனையாகிறது. இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை 50% டிஸ்கவுண்டில் விற்க ஒப்புக்கொண்ட ஒரே காரணம் இதில் லாபம் உள்ளது என்பதற்காக அல்ல. சாரு கேட்டுக்கொண்டதற்காக மட்டுமே. இப்படி எல்லா எழுத்தாளர்களும் கேட்டால் எனக்குக் கட்டுப்படியாகாது.

ப்ரீ-ஆர்டரில் இருக்கும் வசதி காரணமாகவே இந்த டிஸ்கவுண்ட். மொத்தம் எத்தனை புத்தகம் அச்சிட வேண்டும் என்பது தெரிந்துவிடும். கையில் காசு முதலிலேயே வந்துவிடும்.

ஆனால் இதனை எல்லாப் புத்தகங்களுக்கும் செய்ய முடியாது. ஒருசிலருடைய புத்தகங்களுக்குத்தான் கணிசமான ப்ரீ-ஆர்டர் வர வாய்ப்புள்ளது.

ஆனாலும் லாபம் உண்டு, லாபம் உண்டு என்று நீங்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் கிழக்கு பதிப்பகத்துக்குத் துளிக்கூட லாபம் இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக நான் இதுகுறித்துப் பேசுவதில்லை. புலம்புவதில்லை. இப்போதும் இது புலம்பல் இல்லை. அச்சுப் புத்தக பிஸினஸின் மீதான என் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. வேறு பிசினஸில் இறங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. நன்றி. இதுதொடர்பான கேள்விகளுக்கு இங்கு மேற்கொண்டு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை.

Rasanai Sriram

ஆவென வாய்பிளக்கவைக்கும் ஒரு entrepreneur. ப்ளம் கிரிகின்ஃபோ வேலையை விட்டுவிட்டு இதில் இறங்கினார் என நினைக்கிறேன். அவர் வந்த புதிதில் (இப்போதும்) கிழக்கின் ப்ராண்ட் வேல்யூ மிக உயரம். கிழக்கு மட்டும் தனியே தெரியும். அவர் வேறு பிசினசில் இறங்கவேண்டும் என சொல்வது கேட்க கஷ்டமாக இருக்கிறது. ஒருவிதத்தில் என் போஸ்ட்டுக்கான தேவையை justify செய்யவும் செய்கிறது.

இந்த பதிவு பதில்களுக்காக இடப்பட்டவை அல்ல. ஆயிரம் ரூபாயா என்ற எளிய வாசகனின் ஆச்சர்யம். அவ்வளவே. பத்ரியின் பதில்கள் பெருந்தன்மை.

உலோகம்

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.

9 thoughts on “ரசனை ஸ்ரீராமின் கேள்வியும் பத்ரி சேஷாத்ரியின் விளக்கமும்…

  1. srisri4 December 4, 2014 at 1:23 AM Reply

    Very interesting facts.
    Thanks for sharing.
    tgranganathan

    Jaya Sri Ramana!

    Landline 044-49523264
    Mobile +919445554660

    >

  2. vidya (@kalkirasikai) December 4, 2014 at 7:23 AM Reply

    //வாசகனை தான் எவ்வளவு வேண்ணா திட்டலாமே?உலகிலேயே கன்ஸ்யூமர் பேஸை திட்டும் ஒரே தொழில் எழுத்து தான்).//
    காரணம் இல்லாமல் இல்லை. மற்ற எந்தப் பொருளையும் விலை கொடுக்காதவர் நுகர முடியாது, காரணம் பகிர முடியாது. ஹோட்டலில் ஒரு தோசை வாங்கிவிட்டு ஒரே தோசையை 10 பேர் 10 முறை தின்ன முடியாது. மற்ற பெரும்பாலான பொருட்கள் அப்படித்தான். புத்தகங்கள் விஷயத்தில் பகிரல் விலை கொடுத்து நுகர்வதைக் குறைக்கிறது. எல்லா வாசகர்களும் நுகர்வோர் அல்லர் என்ற நிலைமையே கன்ஸ்யூமர் பேஸையே திட்டக் காரணம்.. அதிலும் தமிழ் வாசகர்கள் பெரும்பாலோர் புத்தகம் என்றாலே இலவசம்தான்- இரவல் அல்லது PDF Downloadதான் என்ற விரதம் வைத்துள்ளனர். கேஸட் /சினிமா சிடி விஷயமும் இதுபோல்தான். அங்கும் திருட்டு சிடி பார்க்கிறவர்கள் சினிமாக்காரர்களால் ஏசப்படுகின்றனர். ஒன்று விலை குறைய வேண்டும். அல்லது மக்கள் மனோபாவம் மாற வேண்டும். திருட்டு சிடியோ இலவச PDFஓ கிடைத்தாலும் நுகர மாட்டேன் என்று சொல்கிற அளவு தர்மபுத்திரர்கள் இங்கு யாரும் இல்லை.

    • BaalHanuman December 5, 2014 at 5:37 AM Reply

      உண்மைதான் வித்யா நீங்கள் கூறுவது…

  3. vidya (@kalkirasikai) December 4, 2014 at 7:26 AM Reply

    இது தொடர்பாக நம் அபிமான பாரா எழுதியுள்ளாரே. படித்தீர்களா பால்ஹனுமான்? http://www.writerpara.com/paper/?p=10449

    • BaalHanuman December 5, 2014 at 5:32 AM Reply

      படித்தேன்… படித்(தேன்)… ரசித்தேன்…

  4. rjagan49 December 4, 2014 at 8:20 AM Reply

    புத்தகங்களின் விலை பற்றியும், MRP பற்றியும் எப்போதும் கேள்விகள் உண்டு. அதனால் ரசனை ஸ்ரீராம் அவர்களின் எண்ணம் பற்றி குறை சொல்ல முடியாது. பத்ரி அவர்களின் பதிலில் நேர்மையும் உண்மையும் மிளிர்கின்றன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விற்பனையாளர் கமிஷன் மற்றும் ஆபீஸ் செலவுகள், போக்குவரத்து செலவினங்கள் புத்தகங்களின் விலையை ரொம்பவும் உயர்த்துகின்றன என்பது தெரிந்ததுதான். எல்லா புத்தகங்களும் நல்ல விற்பனை என்பதும் எதிர் பார்க்கமுடியாததுதான். கிழக்கு புத்தகங்களின் தரம் உண்மையிலேயே சிறப்பு. என் ஒரே ஒரு கருத்து – எல்லா புத்தகங்களையும் online storeகளிலேயெ விற்றால் அதிக புத்தகங்கள் விற்க முடியுமா இல்லையா? 50%, 75% தள்ளுபடி என்று படிக்கும் எல்லொருக்கும் இந்த எண்ணம் உண்டு. அதுவும் அந்த தள்ளுபடி இல்லாமல் வாங்கியவர்கள் இன்னும் வேதனைப் படுவார்கள். – ஜெ.

  5. Rasanai Sriram December 5, 2014 at 6:00 AM Reply


    புதிய எக்சைல் விலையை பற்றிய என் பதிவு ஓரளவு சற்று பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது போல.
    அதற்கான, சாருவின் எதிர்வினை என் பதிவினை நேரடியாக பல இடங்களில் ரெஃபர் செய்கிறது (”இதில், நாங்கள் (எழுத்தாளர்) கன்ஸ்யூமர்களைத் (வாசகர்) திட்டுகிறோமாம்”) http://charuonline.com/blog/?p=1917

    ஜெமோவினுடையது நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் கேள்வி கேட்ட ‘சிவராம்’ என்ற நேயர் ஸ்ரீராமாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு http://www.jeyamohan.in/66713
    பல நீண்ட பதில்களூம், எதிர்வினைகளும் வந்தாலும், இன்னமும் வாசகனின் பார்வையில் அமைந்த என் கேள்வியின் நியாயம் அப்படியேதான் உள்ளது.

  6. vidya (@kalkirasikai) December 6, 2014 at 3:34 AM Reply

    கிழக்கு 100% லாபம் வைப்பதாக இருந்தாலுமே அதில் தவறில்லை என்பது என் கருத்து. ஒவ்வொரு இண்டஸ்ட்ரியிலும் லாப அளவு ஒவ்வொரு சதவீதமாக இருக்கும். பொதுவாக அத்தியாவசியப் பொருட்களைவிட ஆடம்பரப்பொருட்களுக்கான இண்டஸ்ட்ரியில் விலை அதிகமாக, பல சமயங்களில் arbitraryஆகவும் கூட நிர்ணயிக்கப் படுகிறது. இன்றைய நிலவரப்படி தமிழர்கள் புத்தகத்தை அத்தியாவசியப் பொருளாகப் பார்க்கவில்லை. ஆடம்பரம் யாருக்குக் கட்டுப்படியாகிறதோ அவர்கள் மட்டும் வாங்கட்டும். மற்றவர்கள் வழக்கம்போல் இரவல் அல்லது PDFக்குக் காத்திருந்தால் போகிறது.
    ‘ஜெ’யின் கட்டுரையில் உங்கள் அடிப்படைக் கேள்விக்கான பதில் இருக்கிறதே? அவர் கூறுவதுபோல் அத்தியாவசியமான வீட்டு விலையில் கூட லாபம் 100%க்கு மேல் வைக்கப்படுகிறது. சுமாராக ஒரு வீடு வாங்க வாழ்நாள் முழுக்கக் கடன் அல்லது வாடகை என்றால் சம்பளத்தில் பாதி என்பதற்குக்கூடப் பழகிவிட்ட நாம் புத்தகத் தொழிலில் இருப்பவர்கள் சம்பாதிக்கும் அதிகப்படி லாபம் பற்றி மட்டும் ஏன் வருந்த வேண்டும்? அவ்வளவு ஏன், பற்பசைக்குக்கூட திடீரென்று ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று ஆஃபர் வருகிறது. அப்ப இவ்வளவு நாள் நம்மை நல்லா ஏமாத்தியிருக்காங்களோ என்று ஐயப்பட்டுக்கொண்டே வாங்குகிறோமே தவிர அவர்களின் லாப நஷ்டங்களை நாம் ஆராய்வதிலையே?
    எழுத்தாளர்களை ஏமாற்றாத வரை, அதாவது அவர்களுக்கு உரிய ராயல்டியைக் கொடுத்துவிட்டால் அதிகப்படி லாபம் என்பது தவறில்லை. மற்ற பதிப்பகங்கள் எப்படியோ ராயல்டி விஷயத்தில் கிழக்கு மிக நேர்மையாகவே நடந்துகொள்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s