எப்போதும் தனியாக சாப்பிடாதீர்கள் – என்.சொக்கன்


Never Eat Aloneஎன். சொக்கன்

முதலில், திறமை வேண்டும், சரியான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அங்கே சரியான நேரத்தில் நுழைய வேண்டும், கற்றுக் கொள்கிற ஆர்வம் வேண்டும், நல்ல குருநாதர், வழிகாட்டி வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும், விடா முயற்சி வேண்டும், அதிர்ஷ்டமும் கொஞ்சம் வேண்டும்.

இவையெல்லாம் இருந்தும் சிலர் தோற்பதைப் பார்க்கிறோம். அப்படியானால், இவை அனைத்திலும் இல்லாத ஏதோ ஒன்று வெற்றிக்கு அவசியப்படுகிறதோ ? கீத் ஃபெர்ராஜி, தாஹ்ல் ராஜ் எழுதிய, ‘Never Eat Alone‘. (க்ரௌன் பிசினஸ் வெளியீடு, விலை ரூ,836).

Never Eat Alone‘ என்றால், எப்போதும் தனியாகச் சாப்பிடாதீர்கள் என்று அர்த்தம். அப்படியானால், கும்பலாக எல்லோரோடும் உட்கார்ந்து சாப்பிடவேண்டுமா? இதுதான் வெற்றிக்கான ரகசியமா?

இந்த நூலாசிரியர்கள் ‘சாப்பாடு‘ என்று சொல்வது உண்மையில் சாப்பாடு அல்ல, அது வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், பலரோடு பகிர்ந்துகொண்டு, அனுபவித்துச் சொல்கிற விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில் நிறைய இருக்க வேண்டும் என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம்.

உதாரணமாக, ஒருவர் தினமும் காலையில் பால் வாங்கச் செல்கிறார். சிலரைப் பார்த்து சிரித்துப் பேசுகிறார்.

அலுவலகம் செல்கிறார். வழியில் சிலரைப் பார்த்துப் புன்னகை செய்கிறார். அன்றைய கிரிக்கெட் மேட்ச் பற்றிப் பேசியபடி அவரவர் பேருந்தில் கிளம்புகிறார்கள்.

இதேபோல், அலுவலகத்தில் தண்ணீர் குடிக்கும்போது, மதியச் சாப்பாட்டின் போது, தெருமுனையில் டீ அருந்தியபடி, மாலையில் கோயிலைச் சுற்றியபடி அவர் வெவ்வேறு நபர்களைச் சந்திக்கிறார். அவர்களுடன் வெவ்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

இதைத்தான் ‘Never Eat Alone‘ என்கிறது இந்தப் புத்தகம். அதாவது, தனிமையில், சிறிய வட்டத்தில் நின்று விடக் கூடாது. பிறருடன், கலந்து பழகிச் செய்யக் கூடிய விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதன்மூலம் நம்முடைய நெட்வொர்க்கைப் பெருக்க வேண்டும்.

நெட்வொர்க்‘ என்றால் வலைப்பின்னல். ஒரு வலையைப் பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஒவ்வொரு இழையும் மீதமிருக்கிற இழையுடன் ஏதோ ஒரு விதத்தில் இணைந்திருக்கும், சில இழைகள் நேரடியாக ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும், வேறு சில இழைகள், சற்றுத் தொலைவில் இருந்தாலும், நடுவில் உள்ள இழைகளால் பிணைக்கப்பட்டிருக்கும். இப்படி அவை அனைத்தும் சேரும்போதுதான் அந்த வலைக்குப் பலம் கிடைக்கிறது. வலை பெரிதாக பெரிதாக, அதில் சிக்கும் மீனின் அளவும் அதிகரிக்கிறது.

மனிதர்களும் அப்படித்தான். நம்முடைய நண்பர்கள், அவர்களுடைய நண்பர்கள், அவர்களுடைய நண்பர்கள் என்று நம்முடைய வட்டத்தைப் பெரிதாக்க பெரிதாக்க, நமக்குப் பலவிதமான மனிதர்கள் கிடைக்கிறார்கள். அவர்கள் மூலமாகப் பல்வேறு உதவிகள் கிடைகின்றன. அவற்றைக் கொண்டு, நமது முன்னேற்றத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

அப்படியானால், நெட்வொர்க் வளர்ப்பது நம்முடைய சுயலாபத்துக்காகவா?

இந்த நோக்கத்துடன், நெட்வொர்க்கை வளர்க்க ஆரம்பித்தீர்கள் என்றால், படுதோல்வி அடைவீர்கள். நீங்கள் சுயநலத்தோடு பழகியது தெரிந்தவுடன், மற்றவர்கள் உங்களிடமிருந்து விலகத் தொடங்கி விடுவார்கள்.

சிலர், தங்களுக்கு ஏதேனும் தேவை இருக்கும்போது மட்டும் மற்றவர்களோடு பழகுவார்கள். தாங்கள் எதிர்பார்த்தது கிடைத்தவுடன் அவர்களைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவார்கள். பிறகு மீண்டும் தேவை வரும்போதுதான் மறுபடி அவர்களைத் தேடி வருவார்கள்.

இப்படிப்பட்டவர்களுடைய நெட்வொர்க் வலுவாக இருக்காது. ஏதோ இவர்கள் கேட்கிறார்களே என்கிற பரிதாபத்தால் ஓரிருவர் உதவக் கூடும். ஆனால் அதுவும் ஆத்மார்த்தமான உதவியாக இருக்காது.

ஆகவே, நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் அது சும்மா ஒரு ஹாய், ஹலோ, எப்படி இருக்கீங்க, ஹாப்பி நியூ இயர் ரேஞ்சுக்கு இருந்தால்கூடப் போதும். அப்படியே, அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன பொதுவான விஷயம் (கிரிக்கெட், இசை, சாப்பாடு, தோட்டக் கலை… இப்படி) என்று யோசித்துக் கண்டுபிடித்து, அதைக் காரணமாக வைத்து அவ்வப்போது சந்திப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அது இயலாது என்றால், இருக்கவே இருக்கிறது ஃபோன். அதிலேனும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

தொழில் சார்ந்த வெற்றிக்கும் இதே சூத்திரம் பொருந்துமா ?

நெட்வொர்க்கைப் பொறுத்தவரை, தனிப்பட்ட நண்பர்கள், தொழில் சார்ந்த நண்பர்கள் என்று வேறுபடுத்திப் பார்க்கவே கூடாது என்கிறது இந்தப் புத்தகம். தொழில் சார்ந்து பழகுவோரிடமும் நட்பை வெளிப்படுத்தினால் அவர்கள் இன்னும் அதிகம் உங்களிடம் ஒட்டுவார்கள்.

உண்மையில், எல்லாரும் சக மனிதர்களுடன் பழகத்தான் விரும்புகிறார்கள். அவர்களுடன் கலகலப்பாகப் பேசி, உங்களுடைய ஆசைகள், எதிர்பார்ப்புகள், வெற்றிகள், தோல்விகள், பலங்கள், பலவீனங்களைப் பகிர்ந்துகொண்டு நண்பரானால், நூறு ரூபாய் ஆர்டர் தருகிறவர்கள் ஆயிரம் ரூபாய் தருவார்கள். காரணம், அவர்கள் ஒரு நண்பருக்குத் தொழில்முறையில் உதவுகிறார்கள், நீங்களும் பதிலுக்கு நல்ல சேவையைத் தந்து உதவுகிறீர்கள் என்கிற பிணைப்புதான்.

நெட்வொர்க் எந்த அளவு பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவு நல்லது என்று பார்த்தோம். அதற்கு நாம், புதிய நட்புகளைத் தேடிச் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு திருமண விழாவுக்கோ, பிசினஸ் கான்ஃபரன்ஸுக்கோ செல்கிறீர்கள் என்றால், அங்கே வருகிறவர்கள் யார் யார் என்று முன்கூட்டியே கேட்டுக்கொண்டு, அவர்களைப் பற்றி பிறரிடம் விசாரிக்கலாம். இணையத்தில் தேடலாம். அவர்களுடைய தனிப்பட்ட ஆர்வங்களை, எதிர்பார்ப்புகளைத் தெரிந்துகொண்டு பேச்சுக் கொடுக்கலாம். அல்லது, இருவருக்கும் பொதுவான ஒரு நண்பரிடம் சொல்லி அறிமுகம் கேட்கலாம்.

அதன்பிறகு, உங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு புள்ளி எது என்று நீங்கள்தான் கண்டறிய வேண்டும். அதில், அதிக நேரம் செலவிட வேண்டும். எந்த நட்பையும், சுய நல நோக்கத்துடன், அதாவது அவர்களிடம் உதவியை மட்டும் எதிர்பார்த்து அணுகக் கூடாது. அவர்களுக்கு நம்மால் என்ன செய்ய இயலும் என்று யோசிக்க வேண்டும். பலன் என்ன என்று யோசிக்காமல் நெட்வொர்க்கை வளர்க்கிறோம் என்ற எண்ணத்துடன் செயல்படும்போதுதான் அந்தப் பிணைப்பு வலுவாகும்.

வலை பெரிதாக பெரிதாக, அதில் சிக்கும் வேட்டை அதிகமாகும், வெற்றி தேடி வரும்!

–நன்றி குமுதம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s