101-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


Golden Maha Periyava

காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பி.ராமகிருஷ்ணன் தான் கண்டு, கேட்ட மகா பெரியவரின் மகத்தான அனுபவங்களை இங்கே (குமுதம் பக்தி ஸ்பெஷல்) பகிர்ந்து கொள்கிறார்.

ஆசார அனுஷ்டானங்கள் தவறாத குடும்பத்துல பிறந்தவன் நான். என்னோட தாத்தா பிரம்மஸ்ரீ கூத்தூர் ராமநாத சாஸ்த்ரிகள் மகா பெரியவாளோட ரொம்ப நெருக்கமா பழகக் கூடிய பாக்கியம் செய்தவர். திருவையாறுக்கும் திருக்காட்டுப்பள்ளிக்கும் இடையில இருக்கற கூத்தூர் கிராமம் தான் எங்க பூர்வீகம். அதுக்கு முன்னால கொள்ளுத்தாத்தா காசி வைத்யநாத கனபாடிகள் காலத்துல காசியில இருந்ததா சொல்வாங்க. கனபாடிகள்னு சொன்னா, பலரும் கனமான சரீரம் உள்ளவங்கன்னு இன்னைக்கு நினைக்கிறாங்க. ஆனா வேதத்துக்கு கனம்னு ஒரு பேர் உண்டு. வேதத்தை பாட்டு மாதிரி பாடிப்பாடி தான் உருப்போடணும். கனம் அதாவது வேதத்தைப் பாடம் பண்றவங்க தான் கனபாடிகள்.

காஞ்சி மகா பெரியவர் முதல் முறையா காசிக்கு விஜயம் பண்ணினப்ப, எங்க கொள்ளுத்தாத்தா வைத்யநாத கனபாடிகள் தான் அங்கே சம்ஸ்கிருத வித்வத் சதஸ்- ஐ நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்து குடுத்திருக்கார். அதோட, காசி க்ஷேத்திரம் முழுக்க பெரியவாளோட போய் வழி காட்டியிருக்கார். அதனால அவர்மேல மஹா பெரியவருக்கு ரொம்ப அபிமானம் உண்டு. இன்னொரு சமயம் பெரியவா காசிக்குப் போன போது, எங்க தாத்தா அவரைத் தரிசிக்கப் போயிருக்கார். அப்போ அவரை ஆசீர்வதித்த பெரியவா, “இங்கே வேத அத்யயனம் பண்றவா நிறையப் பேர் இருக்கா. நீ மதராஸுல இருக்கிற மயிலாப்பூருக்குப் போயேன்!” அப்படீன்னு சொல்லியிருக்கா.

ஆசார்யா வாக்கை வேத வாக்கா எடுத்துக்கிட்டு, சென்னை மயிலாப்பூரில் வந்து எங்க முன்னோர்கள் குடியேறினாங்க. கொஞ்ச நாளைக்கு அப்புறம் எங்க வீட்டு வளாகத்துலேயே சின்னதா ஒரு கொட்டகை போட்டு அதுல ஆதி சங்கரரோட சிலையை வச்சு ஆராதனை பண்ண ஆரம்பிச்சாங்க. வருஷா வருஷம் சங்கர ஜெயந்தியும் நடத்தினாங்க. அந்த சமயத்துல மயிலாப்பூருக்கு வந்த பரமாசாரியார், “சங்கர மடம் ஒண்ணை மயிலாப்பூரில் ஆரம்பிக்கலாமே”ன்னு சொன்னதை வேத வாக்கா எடுத்துக்கிட்டு, சித்திரைக் குளத்துக்குப் பக்கத்துல சங்கர மடத்தை நிறுவினார் எங்க தாத்தா. அதுக்கப்புறம் பரமாசார்யார் எப்போ சென்னைக்கு வந்தாலும் எங்க தாத்தாவும் அப்பாவும் அவரை அவசியம் தரிசனம் செய்திடுவாங்க. எங்க அப்பாவை “கூத்தூர் அம்பின்னு”தான் பெரியவர் கூப்பிடுவார்.

அந்தப் பழக்கத்தோட தொடர்ச்சியா என் காலத்துலேயும் இப்போ இருக்கற ஆசார்யார்கள், மயிலாப்பூர் பக்கம் வந்தா, “நம்ம ராமகிருஷ்ணன் இருந்தா அழைச்சுண்டு வா!” என்று என்னைக் கூப்பிட்டுண்டு அனுப்பற வரை தொடர்ந்துகிட்டு இருக்கறது நான் செய்த மகாபாக்கியம்னு தான் சொல்லணும்.

எனக்கு நினைவு தெரிஞ்சு மகா பெரியவரோட நெருங்கிப் பேசற அனுபவம் எனக்குக் கிடைச்சது, என்னோட உபநயனத்துக்கு சில நாட்கள் முன்னால தான். எங்க அப்பாவுக்கு வேத உபதேசம் பண்ணினவர், ப்ரும்மஸ்ரீ அனந்த நாராயண  வாஜபேயி.  எங்க குலகுருன்னே அவரைச் சொல்லலாம். அவர்தான் எனக்குப் பூணூல் போட்டுவிட நிச்சயம் பண்ணினார். உடனே எங்க குடும்ப வழக்கப்படி, மகா பெரியவாளோட ஆசீர்வாதம் வாங்க என்னைக் காஞ்சி மடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே நாங்க போயிருந்த சமயத்துல ஜகத்குரு ஆதிசங்கரர் சன்னதி வாசலில் அமர்ந்திருந்தார்.

என்னோட அப்பா என்னை பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துக்கச் சொன்னார். அப்படியே பண்ணினேன். அப்போ பெரியவா, “குழந்தை ஏதாவது ஸ்லோகம் சொல்லேன்’ னு சொன்னார்.

வழக்கமா குழந்தைகள் எல்லாம் குரு பிரம்மா, குரு விஷ்ணு ஸ்லோகத்தையோ இல்லைன்னா சரஸ்வதி நமஸ்துப்யம் மாதிரியான ஏதாவது சின்ன ஸ்லோகத்தையோ அவர் முன்னால சொல்றதை நான் பார்த்திருக்கேன்.

ஆனா, எனக்கு என்னவோ அன்னிக்கு பெரிசா ஏதாவது சொல்லணும்னு தோணிச்சு. உடனே, “முதாகராத்த மோதகம்…!” னு தொடங்கி கணேச பஞ்சரத்னத்தை பெரியவா முன்னால பாட ஆரம்பிச்சுட்டேன்.

எங்க அப்பா, என்னடா, இவன் பெரிய ஸ்லோகமா சொல்ல ஆரம்பிச்சுட்டானே, சரியா சொல்லணுமேன்னு ஒரு பக்கமும், பரமாச்சார்யா முழுசா கேட்பாராங்கற சந்தேகத்திலேயும் என்னைப் பார்க்க ஆரம்பிச்சுட்டார்.

ஆனா நடந்தது என்ன தெரியுமா ?

அந்தத் துதியில நாலு வரிய நான் பாடிட்டு அஞ்சாவது வரியை, “நதேகராதி பீகரம்..” னு நான் பாட ஆரம்பிச்சதும், யாருமே எதிர்பார்க்காத வகையில பரமாச்சர்யாரும் என்கூட சேர்ந்து அந்தத் துதியைச் சொல்ல ஆரம்பிச்சுட்டார். அப்போ அவரோட கைகள்ல கொஞ்சம் உலர்ந்த திராட்சையையும், குங்குமத்தையும் வைச்சுக்கிட்டு இருந்தார். ஸ்லோகம் சொல்லி முடிச்சதும் ஆசீர்வாதம் பண்ணி, அந்த திராட்சையையும் குங்குமத்தையும் தந்தார். அதோட, “குழந்தையை ராமேஸ்வரத்துக்கும், மதுரைக்கும் அழைச்சுக்கிட்டுப் போய் சுவாமியை தரிசனம் செய்த பிறகு உபநயனம் நடத்துங்கோ” அப்படீன்னு சொன்னார். அப்படியே இரண்டு தலங்களுக்கும் போயிட்டு வந்து பூணூல் போட்டுக்கிட்டேன்.

பரமாசார்யாளை முதன் முதல்ல தரிசனம் செய்தப்ப நான் சொன்னது பிள்ளையார் துதி. பரமாசார்யாருக்கும் எனக்குமான தொடர்புக்கு பிள்ளையார் சுழி போட்டதும் அதுதான்.

இன்னைக்கு நினைச்சாலும் பிரமிப்பும், பெருமையுமா இருக்கு. அந்த மகான் நடத்தின அற்புதங்களை நான் நேரடியா பார்த்ததும், மடத்துல இருக்கறவங்க அப்பா கூட பேசுறபோது சொன்ன சிலிர்ப்பான விஷயங்களைக் கேட்டதும் என்னால என்னிக்குமே மறக்க முடியாது.

நல்லவங்களைப் பத்தி கேட்கறது, சொல்றது, படிக்கிறது எல்லாமே புண்ணியம் சேர்க்கும்னு சொல்வாங்க. அதுலயும் காஞ்சிப் பெரியவர் மாதிரியான மகானைப் பற்றி சொல்றது, கேட்கறதுன்னா, அது பலகோடி மடங்கு புனிதமானது, புண்ணியமானது.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

தனக்கு மிஞ்சி தானம்‘ என்பதற்கு நான் புது விளக்கம் கொடுக்கிறேன். எது உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமோ, அந்த அடிப்படைத் தேவைகளைத் தான் “தனக்கு” என்று இங்கே சொல்லியிருக்கிறார்கள். தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பதுதான் “தனக்கு மிஞ்சித் தானம்“. நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகச் செலவைக் கட்டுப்படுத்தி, தனக்கு மிஞ்சும்படிப் பண்ண வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s