97-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


photo (19)

புண்ணிய நதிகள் ஏழு. அவற்றில் முதலாவது- கங்கை; 7-வது நதி- காவிரி. இந்த நதியில் பொன் எனும் உலோகமும் கலந்திருப்பதால், ‘பொன்னி’ என்றும் பெயர் உண்டு காவிரிக்கு!


புண்ணிய நதிகளான கங்கையையும் காவிரியையும் இணைத்தால், இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்னையே இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு நதிகளையும் என்றைக்கோ இணைத்து விட்டது புராணம்!

என்ன… ஆச்சரியமாக இருக்கிறதா?

துலா மாதம் எனப்படும் ஐப்பசியில், அதிகாலை வேளையில் எழுந்து வீட்டில் நீராடுவது நல்லது. நதியில் நீராடுவது மிகச் சிறப்பு. அதிலும் குறிப்பாக காவிரியில் அல்லது அதன் உற்பத்தி ஸ்தானமான தலைக்காவிரியில் நீராட வேண்டுமாம். முக்கியமாக, மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடுவது வெகு விசேஷம்!

துலா புராணப்படி, ஐப்பசி மாதத்தில்… காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள்! ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே நீராடுவதற்கு ‘கடை முழுக்கு’ என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர்!

வான் நதியாம் கங்கையை பூமிக்கு அழைத்தான் பகீரதன்.

”எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு, எல்லோரும் அதனை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நான் வரமாட்டேன்” என்று தயங்கி மறுத்தாள் கங்காதேவி.

உடனே பகீரதன், ”பாவம் செய்பவர்களை ஏன் சிந்திக்கிறாய்? எத்தனையோ மகான்கள் நீராடுவார்களே…” என்று சொல்ல, பூமிக்கு வர சந்தோஷத்துடன் சம்மதித்தாளாம் கங்காதேவி! அதன்படியே வடக்கே குடிகொண்டாள். அதுமட்டுமா? தென்னக மக்களும் பயனுறும் வகையில், இங்கே… ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் வாசம் செய்கிறாள்!

இதையறிந்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவர்… பாவம், அவருக்கு கால் ஊனம்… கடைமுழுக்கு நாளன்று மிகவும் கஷ்டப்பட்டு நடந்து வந்தார். கடைமுழுக்கின் மறுநாள்தான் அவரால் துலா கட்டத்துக்கு வந்து சேர முடிந்தது. இதையறிந்து வருந்திய கங்காதேவி, அந்த நாளிலும் காவிரியில் இருந்தாள். இதனால், கடைமுழுக்குக்கு அடுத்த நாளை (கார்த்திகை முதல் நாள்) ‘முடவன் முழுக்கு’ என்பர்!

Maha Periyava 30

காஞ்சி பெரியவாள் ஒருமுறை மயிலாடுதுறையில் முகாமிட்டிருந்தார். காவிரி ஸ்நானம் செய்வதில் லயித்துப் போவார் ஸ்வாமிகள். இந்த வேளையில், கோயில் திருப்பணி விஷயமாக மடத்து ஊழியர் ஒருவரை அழைத்த ஸ்வாமிகள், ஊரில் உள்ள பிரமுகர் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு, அவரிடம் ஆலயத்துக்கான கைங்கர்யத்தைச் செய்ய முடியுமா என்று கேட்டுவரும்படி பணித்தார்.

மடத்தில் இருந்து எந்தவொரு வேலையாக வெளியே கிளம்பினாலும், விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைத்து வணங்கிவிட்டுச் செல்வதே வழக்கம். இதனை அந்த சிப்பந்தியிடம் நினைவுபடுத்தினார் ஸ்வாமிகள். அப்படியே செய்தார் ஊழியர்!

சிறிது நேரம் கழிந்தது. பிரமுகரைப் பார்த்து விட்டு வந்த மடத்தின் ஊழியர், ”போன காரியம் நிறைவேறவில்லை. அதுமட்டுமின்றி, விக்ன விநாயகருக்கு தேங்காய் உடைத்தேன்; அவர் விக்னத்தைப் போக்குவதற்கு பதிலாக விக்னத்தை உண்டு பண்ணி விட்டார்!” என்று சொல்ல, மகாபெரியவாளின் முகம் மாறியது. எவருடனும் எதுவும் பேசாமல், அன்றைய பூஜை அனுஷ்டானங்களில் மூழ்கிப்போனார் ஸ்வாமிகள்.

அந்த ஊழியர் ஆடிப்போனார். ‘எல்லோரிடமும் பேசுவது போல பெரியவாளிடம் பேசியது தவறுதானே?’ என்று வருத்தப்பட்டார். ‘குருநாதரின் மனம் நோகும்படி நடந்து கொண்டோமே…’ என்று தவித்து மருகினார். சாப்பிடவும் முடியவில்லை; வேறு வேலைகளில் ஈடுபடவும் மனம் ஒத்துழைக்கவில்லை.

ஒருகட்டத்தில், விறுவிறுவென ஸ்வாமிகளிடம் சென்று, அவரை விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்டார் ஊழியர். ஆனால் பெரியவாள், ”ஒரு தப்பும் செய்யலியே நீ? வருத்தப்படாதே! என்ன… ‘விக்னத்தை களையறதுக்கு பதிலா உண்டு பண்ணிட்டார்’னு நீ சொன்னதுதான் தப்பு. இன்னொரு விஷயம்… நீ தேங்காயை உடைச்சதுமே, ‘இந்த வேலை இந்த பிரமுகரால நடக்காது; வேற ஒரு பிரமுகரை அனுப்பி வைக்கிறேன்’னு பிள்ளையாரே சொல்லிட்டார். அப்படியிருக்க, விக்னத்தை உண்டு பண்ணிட்டதா சொல்லிட்டியே… அவ்ளோதான்!” என்று மெள்ள புன்னகைத்தார் ஸ்வாமிகள்.

தெய்வத்திடம் நாம் வைக்கிற நியாயமான பிரார்த்தனைகள் ஒருநாளும் வீண் போகாது! நாம் எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்தபடி நடக்காவிட்டாலும்கூட, ஏதோவொரு நாளில்… நிறைவேறியே தீரும்! இதை உணர்ந்து, தெளிந்து வணங்கும் நாளெல்லாம் திருநாள்தான்!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும் அடையாவிட்டாலும் நம்முடைய மனஸின் அஹங்காரம் குறையும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s