94-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


கண்ணதாசன் எழுதிய சங்கர பொக்கிஷம் நூலிலிருந்து…..

மனிதாபிமானத்திலிருந்து  மதாபிமானம் வரை;   விஞ்ஞானத்திலிருந்து மெய்ஞானம்  வரை;  மனித மனோ பாவத்திலிருந்து தெய்வ குணங்கள் வரை காஞ்சி பெரியவர்கள் தொடாத துறை எதுவுமே இல்லை.

அவர் விளக்கிச் சொன்னதுபோல, வேறு எந்த ஞானியும், மேதையும் விளக்கிச் சொன்னதாகவும் எனக்கு நினைவில்லை.

அவரது தனிமை, கல்வி,  அறிவு நுண்மாண் நுழைபுலம், தீர்க்கதரிசனம்,  எந்தப் பொருளின் மீதும் ஒரு தெளிவு,  தெளிவான பொருளில் கூட தன் அபிப்ராயம் என்ற தெளிவான முத்திரை இவையெல்லாம் வேறு எவரிடமும் காணமுடியாத அம்சங்களாகும்.

பல இடங்களில்,  அனுபவப்பட்ட சம்சாரிகள் கூடக் காண முடியாத கருத்துக்களை,  அப்பழுக்கற்ற துறவியான அவர் காண்கிறார்.

ஜாதியைக் கடந்த ஒரு நியதியை, சமமாகப் போதிக்கிறார்.

அவரது எழுத்துகளை கல்கியில் படித்த போது,  அவற்றை எல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.

அந்த வேலையை வேறு நண்பர்கள் வெகு அழகாகச் செய்து வருகிறார்கள்.

இந்து சமயமும்,  இந்திய நாடும் அவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கின்றன.

ஒரு மாபெரும் மேதையின் கருத்துகள் வீணாகி விடாமல், குறைந்த பட்சம் தமிழறிந்தோர் அனைவரின் மத்தியிலும் வைக்கப்பட வேண்டும்.

அதற்காகவே முக்கியமான சில கருத்துக்களைத் தொகுத்து,  குறைந்த விலையில் இப்படிக் கொண்டு வந்தேன்.

ஓராண்டுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி….

காஞ்சிபுரத்தில் ‘சங்கர பக்த ஜன சபை‘  என்று ஒன்றிருக்கிறது.

பலருடைய ஒத்துழைப்போடு அதை நிர்வகித்து வருபவர்கள்,  “வைத்தி“,  “வைத்தா”  இருவரும்.

அந்த பக்த ஜன சபை ஆண்டு தோறும் ஒரு மலர் வெளியிடுகிறது.

அந்த மலரில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் பெரியவரின் தேனம்பாக்கம் தனிமைக் குடிலும்,  அங்கிருக்கும் பசுவும், சிறு நிலமும் பாதுகாக்கப்படுகின்றன.

சென்ற ஆண்டு,  மலரை நான் வெளியிட வேண்டும் என்று  வைத்தியும்,  வைத்தாவும்  அழைத்தார்கள்.

அந்த விழாவுக்கு தலைமை வகித்தவர்,  உயர் நீதி மன்ற நீதிபதி திரு. பாலசுப்ரமணியன் அவர்கள்.

நான் விழாவில் பேசி முடிக்கும்போது மணி ஒன்பது பதினைந்து ஆகி விட்டது.

ஜஸ்டிஸ் பாலசுப்ரமணியன் விழா துவங்குவதற்கு முன்பே,   தேனம்பாக்கம் சென்று பெரியவரைப் பார்த்து வந்து விட்டார்.   நானும்,  வைத்தியும்,  வைத்தாவும்  சென்ற போது, மணி ஒன்பது நாற்பத்தைந்து.

கொட்டகைக்குள்ளே துயில் கொள்ளத் தொடங்கிய பெரியவர்,   என் பெயரை வைத்தி சொன்னதும் எழுகின்ற அரவம் கேட்டது.

அரிக்கேன் விளக்கு மெதுவாகத் தூண்டப்படுவது தெரிந்தது.

கொட்டகைக்குள் சிறு கடன்களை முடித்து விட்டு பெரியவர் வெளியே வந்து,  அதன் வாயிற்படியிலேயே ஒரு பழம் பாயை எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

என்னிடம் அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் என்னைப் பற்றி அவர் முன்பே அறிந்திருந்ததைக் காட்டின.

நான் கிணற்றோரமாக நின்று கொண்டே இருந்தேன்.

இந்த நாட்டின் பிரதம மந்திரிக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பெரியவர் சுமார் ஒரு மணி நேரம் என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.

நான் எழுதிய பல விஷயங்கள் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டார்.

சேர நாட்டு மன்னராக இருந்து,   திருமால் பக்தியில் ஆழ்வாராக மாறிய குலசேகர ஆழ்வாரைப் பற்றி  அவர் முன்பே எழுதியிருப்பார் போலிருக்கிறது.   அந்த விஷயத்தையே சற்று அதிகமாகக் கேட்டார்.

பிறகு சேர நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கினார்.

“கொங்கு நாட்டில் ‘திருச்செங்கோடு‘  என்ற ஒரு ஊர் இருக்கிறது.  கேரளாவில் ‘கொல்லங்கோடு’  என்று ஊர் இருக்கிறது.   ‘கோடு‘  என்ற சொல் தமிழிலே மலையைக் குறிக்கும் என்பது உனக்குத் தெரியும்.   அப்படி பார்க்கப் போனால் சேர நாடு என்பது பழங் காலங்களில் தமிழ் நாடாகவே இருந்திருக்க வேண்டும்.  இல்லையென்றால் கொங்கு நாடு சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும்”  என்றார்.

அவர் மற்றொன்றும் சொன்னார்.

“மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தைப் பார் கண்ணதாசன்.  தமிழிலே ‘வந்தான்’ என்று சொன்னாலே ஒரு ‘ஆண் மகன் வந்தான்’ என்று அர்த்தம்.  ‘வந்தாள்’ என்றால் ‘ஒரு பெண்மகள் வந்தாள்’ என்று அர்த்தம்.  மலையாளத்தில் ‘வந்நூ’  என்கிறார்கள்.   அந்த வினைச் சொல்லில் வந்தது ஆணா பெண்ணா என்று தெரியவில்லை.   அதனால் ‘அவனா,  அவளா’  என்பதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது.   ஆங்கிலத்திலும் அந்தக் கதிதான்”   என்றார்.

இளமைக் காலத்து ஞாபக சக்தி எனக்கு இன்னும் இருக்குமானால் அந்த ஒரு மணி நேர விவாதத்தையே  நான் ஒரு புத்தகமாக்கி இருப்பேன்.  பல அற்புதமான விஷயங்கள் மறந்து போய் விட்டன.

இரவு ஹோட்டலுக்குத் திரும்பிய போது மணி பதினொன்று.

வெகு நேரம் அந்தச் சந்திப்பு என் கண்ணிலும் கருத்திலும் நின்றது.

மற்றும் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஆறு மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் தேனம்பாக்கத்துக்குப்  போனேன்.

ஆனால், அன்று கூட்டம் அதிகம்;  நான் பேச முடியவில்லை.

இப்போதெல்லாம் மனதில் ஏதாவது கவலைகள் தோன்றினால் ‘ஒரு முறை காஞ்சிபுரம் போய் வரலாமா’  என்று தோன்றுகிறது.

நான் எவ்வளவோ பேரை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்.   யாருக்கும் இவ்வளவு தீட்சண்யமான  கண்கள் இல்லை.

எதிரிகளும் களங்கம் சுமத்த முடியாதபடி துல்லியமான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவரைத் தமிழ் ஜாதி முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக  அவரை பிராமண ஜாதியின் தலைவர் என்று, பிராமணரல்லாதார் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

இது பிராமணர்கள் செய்த தவறா,  நாம் செய்த தவறா ?

இந்தத் தவறிலே இருவருக்கும் பங்கிருக்கிறது.

பிற ஜாதியினர் விரும்ப முடியாதபடி பிராமணர்கள் நடந்து கொண்டார்கள் என்பதும் உண்மை.

அது போலவே நமக்குச் சம்பந்தமில்லாதவர்  போல நாமும் நடந்து கொண்டோம் என்பதும் உண்மை.

இந்த நிலைமை இருவருமே மாற்றியாக வேண்டும்.

உலகமே அறிந்து கொள்ள வேண்டிய ஒரு மேதையை,  ஒரு ஜாதியினர் தங்களுக்குள் அடக்கிக் கொள்வதன் மூலம்,  பக்தி மார்கத்துக்கு மட்டுமின்றி,  தத்துவ மார்க்கத்துக்கும்,  உலகத்துக்குமே அவர்கள் துரோகம் செய்திருக்கிறார்கள்.

அவரைக் கண்டு கொள்ளாதிருப்பதன் மூலம் பிற ஜாதியினர்,  ஞானம் என்னும் பெரும் பொருளையே இழந்து விடுகிறார்கள்.

சாதித் துவேஷத்தை மாற்றக் கூடியதும்,   நீக்கக் கூடியதும் பக்தி மார்க்கம் ஒன்றே.    நாத்திகம் அதை வளர்க்குமேயல்லாது,  நீக்காது  என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.

ஆத்திகம் தழைத்தோங்கி வரும் காலம் இது.

தமிழக மக்கள் அனைவருமே அய்யப்பனாகவும்,  பழனியப்பனாகவும்  அவதாரம் எடுக்கும் காலம் இது.

அற்புதமான எதிர்காலத்தை நோக்கி நாடு நடை போடுகிறது.

இந்த நேரத்தில்,  ‘பூணூல் அணிந்தவனா,  இல்லாதவனா‘  என்று பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு காஞ்சிப் பெரியவரின் பெயரால் எல்லாரும் ஒன்று படுவதே நல்வாழ்வுக்கு நல்ல வழி.

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைபேசி : 24332682, 24338712.

கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார். சம்சாரியின் அனுபவ ஆற்றலைவிட, ஞானியின் சிந்தனை ஆற்றல் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு அவரது உரைகள் உதாரணங்கள். இன்றைய இளைஞனோ, பெரியவர்களோ அறியாத, பல்வேறு விஷயங்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சில சொற்களை நாம் பேச்சு வழக்கில் கையாளுகிறோம். ஆனால் அவற்றின் பொருளை முழுக்க உணர்ந்து கொண்டிருப்பதில்லை. அந்தச் சொற்கள் பலவற்றுக்கான விளக்கத்தை இந்த நூலில் காணலாம்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

வாஸ்தவமாகவே ஒருவன் ஆத்ம அபிவிருத்திக்காக ஏகாந்தமாக, சமூகத்தை விட்டு, ஒரு தொழிலும் செய்யாமல் இருக்கிறான் என்றால், அவன் சமூகத்துக்குப் பயன் இல்லாதவன் தானா ? இப்படி நினைப்பது தவறு. நம்மில் ஒருவன் அப்படி உயரப் பாடுபடுகிறான் என்றால் அதுவே நமக்கு சந்தோஷம் தரத்தான் வேண்டும். அவனது சரீர யாத்திரை நடப்பதற்கு அவசியமான சஹாயத்தை நாம் செய்யத் தான் வேண்டும்.   அவன் பக்குவம் அடைந்து யோக சித்தனாக ஆகிவிட்டால், தன்னாலேயே அவனிடமிருந்து ஜனங்களின் தாபங்களைத் தீர்க்கும் சக்தி வெளிப்படும். அவர்களை ‘பாரசைட்‘ என்று திட்டக் கூடாது.

 

Advertisements

2 thoughts on “94-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. Rightmantra Sundar September 27, 2014 at 1:50 AM Reply

  மகா பெரியவாவை பற்றி கண்ணதாசன் கூறியிருப்பதை அவரது அர்த்தமுள்ள இந்துமதத்தில் படித்திருக்கிறேன். என் தளத்தில் கூட பகிர்ந்திருக்கிறேன். ஆனால் ‘சங்கர பொக்கிஷம்’ என்ற பெயரில் நூலே வெளிவந்திருக்கும் தகவல் எனக்கு தெரியாது. கண்ணதாசன் பதிப்பகத்திற்கு சென்று இன்றே வாங்கிவிடுகிறேன்.

  //எதிரிகளும் களங்கம் சுமத்த முடியாதபடி துல்லியமான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவரைத் தமிழ் ஜாதி முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும்.//

  எத்தனை சத்தியமான வார்த்தைகள்….!

  பகிர்வுக்கு நன்றி.

  • BaalHanuman September 27, 2014 at 4:30 AM Reply

   மிக்க மகிழ்ச்சி சுந்தர். இந்த சிறிய நூலின் விலை ரூபாய் நாற்பது மட்டுமே…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s