84-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


1888473_616442668409685_526532623_n

நண்பர் முகுந்தன் அவர்களின் அனுபவம்…

மஹா பெரியவாளின் அருளாசியால் கிடைத்த குருநாதரும்,
அவரது அருளாசியால் நிறைவடைந்த பிள்ளையார் கோவிலும்!!!

நான் 1972-லிருந்து பணியிலிருந்த, சென்னை இராயப்பேட்டையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலக வளாகத்தில் 1988-பிப்ரவரியில் ஆன்மீக நண்பர்களால் ஒரு பிள்ளையார் சிலை நிறுவப்பட்டது. வினை தீர்க்கும் விநாயகர் என்னும் திருப்பெயர் கொண்டு ஊழியர்களுக்கு நேர்ந்த விபத்துக்கள், நோய்கள் மற்றும் அகால மரணங்கள் ஆகியவை குறைந்து அனைவரும் மன அமைதி பெற அருளிய பிள்ளையார் ஒரு சிறு குடிசையில் அமைந்திருந்தார். அந்த வருடம் விநாயகச் சதுர்த்தி விழா முடிவில் அடுத்த வருட(89) விழாவிற்கு முன் பிள்ளையாருக்கு கோவில் கட்டிவிட வேண்டும் எனத் தீர்மானித்து ஒரு குழு அமைக்கப்பட்டு அதில் என்னையும் ஒரு உறுப்பினராகச் சேர்த்திருந்தார்கள். அப்போது நான் ஊழியர் தொழிற்சங்கத்தில் பொதுச்செயலாளராக இருந்தேன். முதன்மை ஆணையர், திரு.கே.இராமமூர்த்தி.இ.ஆ.ப, அவர்களும் நல்ல காரியம்; ஊழியர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் (வெளியாரைத் தவிர்த்து) நன்கொடை பெற்றுச் செய்யுங்கள் என ஊக்குவித்தார். திருப்பணி ஆரம்பித்து கோவில் மேற்கூரை வரை வேகமாக வளர்ந்தது. கட்டுமானப் பொருள்களும் பணமும் இல்லாத நிலையில் நவம்பரோடு பணிகள் நின்றுவிட்டன. ஸ்தபதியும் காணாது போனார். இவை தவிர, தொழிற்சங்க எதிரிகள், நாத்திக நண்பர்கள், தி.க; தி.மு.க; கம்யூனிஸ்ட்; அனுதாபிகள் ஆகியோரின் எதிர்ப்புக்கள் மற்றும் மொட்டைக் கடிதங்கள்; நாங்கள் அலுவலகத்தைக் கொள்ளையடித்து விற்று விட்டதாகவும், நன்கொடை பெறுவதில் ஊழல்கள் எனவும் புகார்கள்; அவற்றின் மீது விசாரணைகள் எனப் பலவிதமான இடையூறுகள். இவை அனைத்தும் கடந்து கோவில் திருப்பணி நிறைவடைய வேண்டுமே என்று கவலை.

மே மாதம் ஒரு பிரதோஷ நாளில் மயிலை கபாலி கோவிலில் ஈசான மூலையில் பிரகார ஊர்வலத்தை தரிசித்து பிள்ளையார் கோவில் திருப்பணி விரைவில் முடிய வேண்டிக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்த விஸ்வநாத சிவாச்சாரியார் குசலம் விசாரிக்க, நானும் என் வேண்டுதலைக் கூறினேன். அவரும், “கவலைப் படாதே. வா; காஞ்சிபுரம் செல்வோம்; யந்திரம் வாங்கி வருவோம்; கோவில் விரைவாக முடியும்” என்று கூற எனக்கு புது நம்பிக்கை ஏற்ப்பட்டது. நானும் மறு நாளே, திருப்பணிக் குழு உறுப்பினர் சிலர், சிவாச்சாரியார் மற்றும் என் அன்னையையும் அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றேன். நாங்கள் மடத்தைச் சென்றடைந்தபோது, ஸ்வாமிகள் ஓய்வு எடுப்பதால் தரிசனம் இல்லை என்று அறிந்து மனமுடைந்து போனோம். மடத்தில், யந்திரம் பெற, உரிய கட்டணங்கள் செலுத்தி முன்னரே பதிவு செய்திருக்க வேண்டும்; பூஜையில் வைக்கப்பட்டுப் பின்னர் தகவல் கிடைத்ததும்தான் வர வேண்டும் என்றும் தெரிவித்தார்கள். யந்திரத்திற்குப் பதிவு செய்து விட்டு, வந்த காரியம் எதுவும் கைகூடாது போனதால் மிகவும் வேதனையடைந்த நான், “மஹா பெரியவா தரிசனமும் கிடைக்கவில்லை; யந்திரமும் கிடைக்கவில்லை கோவில் திருப்பணி நிறைவடையாதா? அருளாசி கிடைக்காதா?” என்று பலவிதமாக சிவாச்சாரியாரிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் மடத்திலிருந்து சிறிது தள்ளி ஒரு கடையின் வாசலில் நின்று கொண்டிருந்தோம். எங்களைத் தாண்டிச் சென்ற ஒருவர், “ஏன் இங்கே நிக்கறேள்? சீக்கிரம் போங்கோ; அங்கே மஹா பெரியவா தரிசனம் தரா; போங்கோ” என்று கூறிக் கொண்டு போனார். உடனே நாங்களும் மடத்தைச் சென்றடைந்து ஆவலுடன் காத்திருந்தோம்.

தரிசனம் அளித்துக் கொண்டிருந்த மஹா பெரியவா நமது சிவாச்சாரியாரைப் பார்த்து கை ஜாடை செய்து அழைக்க, நாங்களும் ஸ்வாமிகளின் சமீபம் சென்றோம். சிவாச்சாரியாரும் எங்கள் வேதனைகளை சுருக்கமாக தெரிவித்தார். மஹா பெரியவா எங்கள் பக்கம் திரும்பி என்னைப் பார்த்தார். எனக்கோ கை கால்கள் நடுங்க, ஹை வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. பெரியவா என்னிடம், “என்ன? கோவில் முடியலையா? மயிலாப்பூரில் சுந்தரம்னு ஒருத்தன் இருக்கான்; அவனிடம் போ; அவன் பாத்துப்பான்; அவன் சொல்லறத கேளு” என்று கூறினார். எங்களுக்கு ஏதும் புரியவில்லை. வெளியில் வந்த பிறகு சிவாச்சாரியாரும் என் அன்னையும் விளக்கிக் கூறியதால் தெளிவடைந்தோம். அடுத்த நாளிலிருந்தே சிவாச்சாரியாரையும் என் அன்னையையும் மயிலை சுந்தரம் அவர்களை பார்க்க வேண்டுமென்று நச்சரிக்க ஆரம்பித்தேன்.

ஓரிரு வாரங்கள் கடந்தபின் ஒரு நாள் என் அன்னை உடனே சுந்தரம் அவர்களது வீட்டிற்கு (ஜெயராம் விலாஸ், அரச மரம் எதிரில், மேற்கு மாட வீதி) வருமாறு அழைத்தார்கள். நாங்கள் நாற்பத்தைந்து நிமிடம் தாமதமாகச் சென்றோம். அதற்குள் அங்கே பக்தர்கள் கூட்டம் சேர்ந்து விட்டது. நான்கு மணி நேரம் கடந்தும் கூட்டம் குறையவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பினோம். மறு நாள் ஆவலுடன் சென்றபோது, அவர் அன்று மவுன விரதம் இருப்பதால் சந்திக்க இயலாது என்றறிந்து விரக்தியின் எல்லைக்குச் சென்றோம். நான்கு நாட்களுக்குப் பிறகு என் அன்னை எனக்கு உடனே வா என்று தொலை பேசியில் அழைக்க, நாங்களும் மீண்டும் அவரது வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் இம்முறையாவது சந்திக்க வேண்டுமே என்று காத்திருந்தபோது, ஏதோ செய்தி வந்து எங்கோ மிகவும் வேகமாகச் சென்றுவிட்டார். ஏமாற்றம், விரக்தி, வேதனை எல்லாம் ஒன்று சேர்ந்து நாங்கள் நொந்து போனோம். மஹா பெரியவா குறிப்பிட்டுக் கூறிய ஒருவரைச் சந்திக்கவே முடியவில்லை என்கிற ஆதங்கம். என் அன்னையும் சிவாச்சாரியாரும் எங்களை சமாதானம் செய்தனர்.

மறு நாள் மீண்டும் எங்களுக்கு உடனே வருமாறு அழைப்பு. நாங்களும் விரைந்தோம். என் அன்னையும் சிவாச்சாரியாரும் மட்டுமே சுந்தரம் அவர்களுடன் இருந்தார்கள். அவரும் எங்களை வரவேற்று என்ன விஷயம் என்று கேட்க, இதுவரை அடைந்த ஏமாற்றம் குறித்து பட படவென்று பேசிவிட்டேன். மற்றவர்கள் என்னை தடுக்க, அவர் என்னை மேலும் பேச சொல்லிக் கேட்டார். பிறகு பஞ்சாங்கம் எடுத்துவரச் சொல்லி, தீவிரமாகப் பார்த்து, “ஆகஸ்ட் 27-ம் தேதி கும்பாபிஷேகம் வைத்துக் கொள்ளலாம்” என்றார். எங்களுக்குத் தலை சுற்றியது. நான் அவரிடம்,”ஐயா! தற்போது எங்களிடம் பணமோ கட்டுமானப் பொருள்களோ சிறிதும் இல்லை. ஸ்தபதியும் காணவில்லை. கோவில் ஒரு அட்டைப் பெட்டியைக் கவிழ்த்து வைத்தது போல உள்ளது. எங்களால் இரண்டு மாதங்களில் எப்படி திருப்பணி முடிக்க இயலும்?” என்று கேட்க, அவரோ சிவாச்சாரியாரிடம் யாகசாலை மற்றும் விழா ஏற்பாடுகள் குறித்துப் பேச ஆரம்பித்தார். திரும்பத்திரும்ப நான் எதுவும் இல்லை இல்லை என்று சொல்ல, அவர் சிரித்துக் கொண்டே, “போய் வா; உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன; கும்பாபிஷேகம் சிறப்பாக நடை பெற வேண்டாமா? கிளம்புங்கள்” என்று கூற நாங்கள் நொந்து போய் திரும்பினோம்.

பன்னிரண்டு மணியளவில் சென்ற நாங்கள் அலுவலகம் திரும்பும் போது மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. நாங்கள் அலுவலகத்தில் நுழையும் போது உள்ளிருந்து ஒருவர் எங்களை நோக்கி வேகமாக ஓடி வந்தார். அருகில் வந்தவுடன் பார்த்தால், அது காணாமற் போன ஸ்தபதி!!! அவர், “சார்! உங்களுக்காக இரண்டு மணி நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்; அதிக பணத்திற்கு ஆசைப் பட்டு இங்குள்ள வேலையை விட்டு, பெங்களூருக்கு ராஜராஜேஸ்வரி கோவில் வேலைக்குச் சென்றுவிட்டேன்; நேற்று ஒரு யானை என்னை தூக்கி எறிவது போல கனவு கண்டேன்; உடனே செய்த தவறை உணர்ந்து இன்று இங்கே வந்துவிட்டேன்; வீட்டிற்குகூட போகவில்லை; இனி இந்த கோவில் திருப்பணி முடியும்வரை எங்கும் போகமாட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறினார்!!!


அவரிடம் பேச முற்பட்டபோது இரு நண்பர்கள் என்னை அணுகினர். ஒருவர், “முகுந்தா கோவிலுக்கு செங்கல் ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தேன் முடியவில்லை அதற்கு ஈடாக இந்த பணத்தைப் பெற்றுக்கொள்” என்று கூறி ஒரு தொகையினை அளிக்க, மற்றொருவர், “ஒரு லோடு சிமெண்ட் இரவு பத்து மணிக்கு மேல் வரும்; பெற்றுக்கொள்; மீண்டும் தேவைப்படும்போது இன்னொரு லோடு வரும்” என்றார்!!!
அடுத்து ஒரு அன்பர் ஓடி வந்து, “உன்னை எங்கெல்லாம் தேடுவது? கோவிலுக்கு இரும்புக் கம்பிகள் நான்கு டன் ஏற்பாடு செய்துள்ளேன்; இரவு ஒரு மணிக்கு வரும்; பெற்றுக்கொள்” என்று கூறிச் சென்றார்!!!


மேலும் ஒருவர், “நாங்கள் ஐந்து நண்பர்கள் இணைந்து கோவிலுக்கு வேண்டிய மண் மற்றும் செங்கல் ஏற்பாடு செய்துள்ளோம்; இன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலா இரண்டு லோடு என்று வரும்; தாமதமாகி விட்டது; மன்னித்துக்கொள்” என்று சொல்லிச் சென்றார்!!!

இவை எல்லாமே, நாங்கள் அலுவலக வாயிலில் இருந்து தொழிற்சங்க அறைக்கு (சுமார் 50-60 அடிகள்) செல்வதற்குள் நிகழ்ந்தன. சிறிது நேரத்திற்குள் பல அதிசய நிகழ்வுகள் கண்டு எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர் இல்லம் நோக்கி விரைந்தோம். அவர் என்னிடம், “ஸ்தபதி திரும்ப வந்து விட்டாரா? இல்லை-இல்லை என்று சொன்னதெல்லாம் இப்பொழுது இருக்கிறதா? ஆகஸ்ட் 27-ம் தேதி கும்பாபிஷேகம் வைத்துக் கொள்ளலாமா?” என்று அடுக்கடுக்காக கேட்க, நான் அவர் பாதம் பணிந்து, “குருநாதா! மன்னியுங்கள். அறியாது பேசியதை மறந்து விடுங்கள். மஹா பெரியவா கூறியதன் உட்பொருள் விளங்கியது. இனி என்றுமே உங்கள் சொற்படி நடப்பேன். எங்களுக்கு நல்லாசி தந்து வழி காட்டுங்கள்” என்று வேண்டினேன். “எல்லாம் நன்றாக நடக்கும், சென்று வாருங்கள்” என்றார். அன்றிலிருந்து தொடர்ந்து வேலைகள் நடந்து கோவில் திருப்பணி நிறைவடைந்தது. இதற்கிடையே மடத்திலிருந்து யந்திரம் பெற்று கொள்ளலாம் என்று செய்தி வந்தபோது, நான் வெளியூரில் இருந்ததால், மற்ற சில உறுப்பினர்களும் சிவாச்சாரியாரும் சென்று யந்திரம் வாங்கி வந்திருந்தனர். நல்ல மனங்கொண்ட அதிகாரிகள் உதவியதாலும், எங்கள் நடவடிக்கைகள் மீது முதன்மை ஆணையர் நற்சான்றிதழ் அளித்ததாலும் எதிர்ப்புகளும், இடையூறுகளும் அகன்றன.

1989, ஆகஸ்ட் 10-தேதி காப்பு கட்டப் பெற்று, 26-தேதி பிள்ளையார் சிலை பிரதிஷ்டையும், 27-தேதி கும்பாபிஷேகமும் மிக விமரிசையாக நடந்தேறின!!!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

அன்புடைமை, அருளுடைமை போன்றவற்றை தான் அப்யாசம் பண்ணாமல், பகவான் தனக்கு மட்டும் அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை, யாகம் செய்தும் பிரயோஜனம் இல்லை. அப்பய்ய தீஷிதர், கோவிந்த தீட்சிதர், திருவிசநல்லூர் அய்யாவாள் மாதிரியான பெரியவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் சேரி ஜனங்கள் உட்பட எல்லோருக்கும் உபகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது. ரொம்பவும் கலந்து போகவும் கூடாது; ஒரேயடியாக பிரிந்தும் இருக்கக்கூடாது. ஸ்வதர்மப் படியான காரியத்தில் பிரிந்திருக்க வேண்டும்; மனதிலே ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.

 

Advertisements

6 thoughts on “84-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. Cuddalore Ramji September 15, 2014 at 4:30 AM Reply

  பிரமாதம்

 2. varagoorannarayananv September 15, 2014 at 7:08 AM Reply

  உங்கள் சேவைக்கு நன்றி-அற்புதமாக உள்ளது.சில கட்டுரைகள் முன்பே நான் தட்டச்சு செய்து ஃபேஸ்புக்கில் பல குருப்களில் போட்டுருக்கேன். இருந்தாலும் உங்களின் பதிவு படிக்காமல் இருக்க மாட்டேன். வாழ்த்துக்கள். இப்பவும் சில கட்டுரைகள் காபி பண்ணி ஃபேஸ்புக்கில் ஏற்றுகிறேன். நன்றி-பால ஹனுமான் என்று போட்டுடுவேன்.

 3. varagoorannarayananv September 15, 2014 at 7:09 AM Reply

  வாழ்த்துக்கள்.

 4. Vathsala September 15, 2014 at 4:51 PM Reply

  Arputham!

 5. Keshav Venkatraghavan September 19, 2014 at 1:24 AM Reply

 6. Mukundan M Venkatesan September 19, 2014 at 1:29 AM Reply

  இனிய நண்பர்களுக்கு,

  வணக்கம்!!!

  வினை தீர்க்கும் விநாயகர் ஆலயக் கட்டுமானம்; பிரதிஷ்ட்டை மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை குருநாதரின் அருளாசியால் இனிதே நிறைவடைந்த அற்புத செய்திகளை தெரிவித்திருந்தேன். அவற்றின் தொடர்ச்சியாக . . . . . . . . . . . . .
  கும்பாபிஷேகம் நடைபெற்ற 27-8-1989-அன்று மாலை, முதல் நாள் மண்டலாபிஷேகம் எனது அன்னையாரின் “கற்பகாம்பாள் சுவாசினி சங்கம்” உபயத்தில் நடந்தது. பின்னர், மிகப் பெரிய நல்ல காரியம் ஒன்றினை செய்துமுடித்த அனுபவங்கள் குறித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்தோம். நேரம் ஏழு அல்லது ஏழரை என்று நினைவு. அப்போது குருஜி சுந்தர் ராம் சுவாமிகள் கோவிலுக்கு வந்தார். எந்த விதமான முன் தகவல் இல்லாமல் வருகை தருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு அவரை வரவேற்று மண்டலாபிஷேகம் துவங்கியது பற்றி கூறினோம். நடந்தவை பற்றி பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தவர், “என்ன? ஒரு குறையும் இல்லையே? உங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே?” என்று கேட்டார். நான், ” எல்லாம் குருவின் அருளால் நன்றாகவே நடந்தது. அன்ன தானம்தான் பெரிய அளவிலும் முழுமையாகவும் இல்லாமல் போனது சிறு குறையாக உள்ளது” என்றேன்.

  குருநாதர், “கவலைப் படாதே! இன்னும் மூன்று நாட்களுக்குள் இங்கு மிகப் பெரிய அளவில் அன்ன தானம் நீ விரும்பியபடி நடக்கும்! நீயே அதை நடத்தி வைப்பாய்!” என்று கூறியவுடன் நாங்கள் மிகவும் வியப்படைந்தோம். நானும், “குருநாதா! விநாயகர் கிருபையாலும், மஹா பெரியவா மற்றும் உங்களது அருளாசியினாலும் எல்லாம் நல்ல விதமாக நிறைவேறின. அன்பர்களின் உபயத்தால் இன்று தொடங்கிய மண்டலாபிஷேகமும் நன்கு நிறைவேறிவிடும். ஆனால் பெரிய அளவில் அன்னதானம் செய்ய எங்களிடம் ஏதுமில்லையே” என்று யதார்த்த நிலையினை தெரிவித்தேன். அவரோ, “நடக்கும், நடக்கும். நன்றாகவே நடக்கும். நீயே வந்து சொல்லுவாய்” என்று கூறிக் கொண்டே காரிலேறிச் சென்றுவிட்டார். நாங்களும் மற்ற வேலைகள் காரணமாக, இது பற்றி மறந்து போனோம்.

  இரு தினங்கள் கடந்து, அதாவது 29-ஆம் தேதி காலை பதினோரு மணியளவில் ஆணையர் என்னை, ஊழியர் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில், மறு நாள் எதிர்கட்சியினரால் நடைபெற இருக்கும் “பாரத் பந்த்” குறித்துப் பேச அழைத்தார். நானும், “சிறப்பு விடுமுறை அளித்துவிடுங்கள், எங்களால் அலுவலகம் வர இயலாது” என்று கூறிவிட்டேன். ஆணையர், “மத்திய அரசின் உத்தரவு. ஆகவே அனைவரும் பணிக்கு வந்தாகவேண்டும். தொலைவில் உள்ளவர்கள் அலுவலகத்திலேயே தங்கலாம். அவ்வாறு தங்குபவர்களுக்கும், மறு நாள் வருபவர்களுக்கும் தேவையான வசதிகளுடன் உணவும் நீயே ஏற்பாடு செய்துவிடு. ஆகும் அனைத்து செலவும் அலுவலக நிர்வாகம் செய்யும்” என்று கூறினார். நானும் நண்பர்கள் உதவியுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். அன்று மாலை சிற்றுண்டியும் இரவு விருந்து; மறுநாள் காலை டிபன்; பகல் விருந்து; மாலை சிற்றுண்டி என்று பல வகை இனிப்புடன் கல்யாண வைபோகம்தான். எங்களது அலுவலகம், போலீஸ், பி.எஸ்.என்.எல், தபால் தந்தி, வங்கிகள் என்று சுமார் இரண்டாயிரம் நபர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தோம்.

  குருநாதர் மொழிந்தது நினைவிற்கு வந்தது. விரும்பியதைப் போன்று மிகப் பெரிய அளவில் வகை வகையாக அன்னதானம்! அதுவும் நான் முன்னின்று ஏற்பாடு செய்யும் பாக்கியம் பெற்றேன். குருநாதரது இல்லம் சென்று நடந்தவற்றை கூறி ஆசி பெற்றோம். அவரும், “விநாயகரது பேரருளால் இது நிகழ்ந்தது. அறிந்து கொள். அடிபணியும் அனைவரது வினைகளையும் தீர்த்து, வேண்டியதைத் தந்திடுவார்” என்று எங்களது விநாயகரின் பெருமைகளை விளக்கினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s