இந்திரா சௌந்தர்ராஜன் நேர்காணல் – அரவிந்த் சுவாமிநாதன்


எழுத்தாளர், பேச்சாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், திரைப்பட வசனகர்த்தா என மீடியாவின் சகல துறைகளிலும் கொடிகட்டிப் பறப்பவர் இந்திரா சௌந்தர்ராஜன். 32 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் இவர் ‘வைகை வன சுந்தரி’, ‘பாண்டியன் நாயகி’, ‘சேதுநாட்டு வேங்கை’ போன்ற குறிப்பிடத்தக்க சரித்திர நாவல்களையும் ‘விடாது கருப்பு’, ‘விட்டு விடு கருப்பா’, ‘ருத்ர வீணை’, ‘விக்ரமா… விக்ரமா…’, ‘சிவமயம், சிவம், மரகதலிங்கம்’ போன்ற பல அமானுஷ்ய மர்ம நாவல்களையும், ‘என் பெயர் ரங்கநாயகி’, ‘கிருஷ்ண தாசி’ போன்ற குறிப்பிடத்தக்க சமூக நாவல்களையும் தந்திருப்பவர். இவை தவிர சுந்தரகாண்டம், சித்தர்கள் வரலாறு, ஆன்மீகம் ஆகியவை பற்றியும் சிறப்பான பல நூல்களைப் படைத்துள்ளார். சின்னத் திரையிலும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். தேசிய விருது பெற்ற ‘சிருங்காரம்’ இவரது கதை-வசனத்தில் வெளியான திரைப்படம். மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் விருது, தமிழ்ச் சங்க விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இப்படித் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அவரை ஒரு மாலைப் பொழுதில் அவரது மதுரை இல்லத்தில் சந்தித்தோம். அதிலிருந்து…

கே: சௌந்தர்ராஜன் எப்படி இந்திரா சௌந்தர்ராஜன் ஆனார்?

ப: நான் பிறந்து வளர்ந்தது சேலத்தில் ஒரு சாதாரண மத்திய தரக் குடும்பத்தில். அப்பா பார்த்தசாரதி, டிவி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்த்தார். அம்மாவின் பெயர் இந்திரா. இளவயது முதற்கொண்டே எழுத்தார்வம் எனக்குள் இருந்தது. என் பெரியப்பா ஏ.எஸ். ராகவன் பிரபல எழுத்தாளர். ஆக எழுத்து என்பது எனது மரபுவழி விஷயமாகக் கூட இருக்கலாம். ஆனால் என் எழுத்துக்கு இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் அது பா. செயப்பிரகாசம் எழுதி, சிகரம் என்ற சிற்றிதழில் வெளியான ‘இருளுக்கு இழுப்பவர்கள்’ சிறுகதைதான். அது என்னைப் பெரிதும் பாதித்தது. என்னுள் ஒரு விதையாக விழுந்தது. அப்போது சுஜாதா, புஷ்பா தங்கதுரை என்று பெண் பெயரில் எழுத்தாளர்கள் எழுதி வெற்றி பெற்றுக் கொண்டிருந்த காலம். எழுத்தாளர் மகரிஷிதான் என்னை எனது தாயின் பெயரான இந்திரா என்பதையும் பெயரில் இணைத்துக்கொண்டு ‘இந்திரா சௌந்தர்ராஜன்’ என்ற பெயரில் எழுத ஆலோசனை கூறினார். அந்தப் பெயரில் ஒரு கதையை எழுதி கலைமகள் குறுநாவல் போட்டிக்கு அனுப்பினேன். ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற அந்தக் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 1978-ல் வெளியான. அந்த கிராமத்துக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கது. தொடர்ந்து எழுதினேன்.

கே: ஆன்மீக, அமானுஷ்ய நாவல்கள் எழுதுவதில் ஈடுபாடு வந்தது எப்படி?

ப: நான் எழுதத் தொடங்கிய காலத்தில் நிறைய மாத நாவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. எழுத்துத் துறையில் இடம் பிடிப்பது மிகக் கடினம். இன்று போல் டி.வி., டி.வி.டி. கம்ப்யூட்டர் என்றில்லாமல் அன்று மக்களுக்கு இருந்த பொழுதுபோக்கே புத்தகம் வாசிப்பதுதான். மாத நாவல்களின் மூலம் எழுத்தாளர்களுக்கு ஓரளவு நல்ல வருவாயும் வந்து கொண்டிருந்தது. 1980-லேயே ஒரு நாவலுக்கு 2000 ரூபாய் வரை கொடுத்தார்கள். நிறையப் போட்டி. விறுவிறுப்பான மர்மக் கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ராஜேஷ்குமார், ராஜேந்திர குமார், புஷ்பா தங்கதுரை என்று பலர் எழுதிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் நானும் சில மர்மக் கதைகளை எழுதினேன். ஆனால் எனக்கு அதில் நிறைவு ஏற்படவில்லை. அப்போது எனக்குள் பிரத்யேகமாக ஒருவித அமானுஷ்யத் தாக்கங்கள், வாழ்க்கையில் தேடல்கள், கேள்விகள் இருந்தன. நிறைய மிராகிள்ஸ் பார்க்கும்போது “எப்படி இது சாத்தியம்?” என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதன் விளைவாக அமானுஷ்ய நாவல்கள் எழுத ஆரம்பித்தேன்.

‘மாய நிலவு’, ‘காற்று காற்று உயிர்’ என நான் எழுதிய எல்லாவற்றுக்குமே வாசகர்களிடம் பெரிய வரவேற்பு.

பின்பு ஆனந்த விகடனில் எழுதிய முக்கியமான தொடர்தான் ‘கோட்டைப்புரத்து வீடு’.

அடுத்து ‘ஐந்து வழி மூன்று வாசல்’ அதில் மிஸ்டரியும் இருக்கும்; ஹிஸ்டரியும் இருக்கும். அடுத்து ‘ரகசியமாய் ஒரு ரகசியம்’. அதற்குப் பிறகுதான் எனது வேகமான வளர்ச்சி ஆரம்பம். அதன்பின் எனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அமானுஷ்யம், சித்தர்கள் பற்றிய விஷயங்களையும், ஆன்மீக மர்மங்களையும் களமாகக் கொண்டு பல நாவல்களை எழுத ஆரம்பித்தேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தக் கதைகள் எழுதவேண்டும் என்று நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை. எனக்குள்ளேயே அதுபோன்ற விஷயங்கள் இருந்ததால் எழுதுவது எளிதாக இருந்தது.


கே: ஆன்மீக, மர்ம, அமானுஷ்ய நாவல்களுக்காக தனியான ஆராய்ச்சி எதுவும் மேற்கொள்வீர்களா, அல்லது முழுக்கக் கற்பனைதானா?

ப: இல்லை. ஆராய்ச்சிகள் என்று எதிலும் பெரிதாக ஈடுபடவில்லை. நான் பார்த்த, கேள்விப்பட்ட, எனக்குள் விவாதித்த விஷயங்கள்தான் எனது கதைகளுக்கு அடிப்படை. இதற்காக பல நூல்களைப் படிக்கவோ, ஆராய்ச்சி செய்யவோ எனக்கு நேரமும் இல்லை. படிப்பதைவிடப் பார்ப்பது, கேட்பது, விவாதிப்பதுதான் எனக்கு அதிகம். அவ்வாறு எனக்குள் விவாதித்து நான் எடுக்கும் முடிவுகளைத் தான் கதைகளாகத் தருகிறேன். அவற்றில் கற்பனையும் கலந்திருக்கும்.

கே: உங்களுக்கு அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டதுண்டா?

ப: நிறைய. ஒருமுறை சென்னையில் இறந்துபோன என் பாட்டியாரின் ஆன்மாவை, இறந்த சில மணி நேரத்தில் எங்கள் மதுரை வீட்டில் என் மனைவி பார்த்ததுண்டு. அதுபோல நிறைய அனுபவங்கள். அவை எல்லாம் கற்பனை கலந்து எனது நாவல்களில் வெளிப்படுகின்றன.

கே: சித்தர்களை மையமாக வைத்து அதிக நாவல்களை எழுதியிருப்பது நீங்கள்தான். சித்தர்களை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?

ப: எனக்கு சித்தர்கள் சந்திப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை. சித்தர்கள் என்று சொல்லிக்கொண்டு வந்த சிலரிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்படவுமில்லை. சித்தர்கள் என் கதைகளில்தான் நிறைய வருவார்கள். பெரும்பாலும் கற்பனைதான்.

கே: இந்த ஃபாஸ்ட்புட் விஞ்ஞான யுகத்திலும் சித்தர், ஆன்மீகம், ரசவாதம் போன்ற விஷயங்களைக் கொண்ட கதைகளை மக்கள் படிக்கிறார்களா?

ப: நிச்சயம். சொல்லப் போனால் முன்பைவிட மிக அதிகமாக இப்போதுதான் இருக்கிறது.

கே: உங்களது தொலைக்காட்சித் தொடர் அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்!

ப: விகடனில் ‘ரகசியமாக ஒரு ரகசியம்’ என்ற தொடர் எழுதினேன். அதை பாலசந்தரின் மகன் கைலாசம் படித்துவிட்டு என்னோடு பேசினார். அதைத் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்க விரும்புவதாகச் சொன்னார். என்னையே திரைக்கதை-வசனம் எழுதச் சொன்னார். அதுதான் ‘மர்மதேசம்’ தொடரின் ஆரம்பம். நாகா இதன் இயக்குநர். இன்றைக்கு நிறையச் சேனல்கள், நிறைய சீரியல்கள். ஆனால் அன்று சில சேனல்கள்தான் இருந்தன. மர்ம தேசம் தொடரில் எல்லோருமே சிறந்த பங்களிப்பைத் தந்தனர். மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த சன் தொலைக்காட்சியில் அது உயரத்தைத் தொட்டது. பின்னர் விடாது கருப்பு, கிருஷ்ணதாஸி, ருத்ர வீணை, சிவ மயம், அது மட்டும் ரகசியம் என பல தொடர்கள். கிட்டத்தட்ட 3000 எபிஸோடுகள் செய்துவிட்டேன். தற்போது மதிய நேரத்தில் முதல் இடத்தில் இருக்கும் ‘அத்திப் பூக்கள்’ சீரியலுக்கு 850 எபிசோடுக்கு மேல் எழுதியிருக்கிறேன். அது போக 2 சீரியல்களுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கே: பத்திரிகைகளில் இயங்குவதற்கும் சின்னத் திரையில் இயங்குவதற்கு என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?

ப: எங்கு இருந்தாலும் உழைப்பு வேண்டும். தொலைக்காட்சித் தொடர்களால் ஓரளவு வருமானம் வருகிறது. பத்திரிகைகளில் எழுதுவதால் கிடைக்கும் பேர் காலத்துக்கும் நிலைத்திருக்கும். ஆனால் தொலைக்காட்சிகளில் நீங்கள் லைம்லைட்டில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இல்லை. கிட்டத்தட்ட நான் எல்லா பிரபல இயக்குநர்களிடமும் வேலை செய்திருக்கிறேன். எல்லா பிரபல சேனல்களிலும் எனது தொடர்கள் வெளியாகி இருக்கின்றன.

anandhapuram

கே: திரைத்துறை அனுபவம் குறித்து…

ப: எனது முதல் திரைப்படம் ‘சிருங்காரம்’. அது விருது பெற்ற படம். சாரதா ராமநாதன் அதன் இயக்குநர். இன்றைக்கு 70, 80 ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சாவூர் பின்புலத்தில் வாழ்ந்த தேவதாசிகளைப் பற்றிய கதை அது.

அவர்கள் அந்தக் காலகட்டத்தில் சந்தித்த உணர்ச்சி மயமான பிரச்சனைகள், அவர்களது வாழ்க்கை முறை, போராட்டங்கள் போன்றவற்றை மையமாக வைத்து எழுதப்பட்டது. இரண்டாவதாக ஷங்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘அனந்தபுரத்து வீடு‘ படத்தின் திரைக்கதை-வசனத்தில் பங்கேற்றேன். கதை, இயக்கம் – நாகா. இன்னும் சில படங்களுக்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

கே: ஆன்மீகம் குறித்து பத்திரிகைகளில் நிறைய எழுதி வருகிறீர்கள், அது குறித்து உங்கள் கருத்தென்ன?

ப: ஆன்மீகம் என்பது மனிதனுடைய மிகப்பெரிய நம்பிக்கை. நம்பிக்கைதான் வாழ்க்கை. வாழ்க்கையில் நம்பிக்கைகள் இரண்டு விதமாக இருக்கலாம். ஒன்று நிதர்சனம்; மற்றொன்று ஊகம். இன்று வெள்ளிக்கிழமை என்றால் நாளை சனிக்கிழமை என்பது நம்பிக்கை. ஆனால் இன்றிரவே உலகம் அழிந்து போகலாம். அல்லது பார்க்க நாம் இல்லாமல் போகலாம். அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆக நம்பிக்கையும் நிதர்சனமும் கலந்துதான் வாழ்க்கை. வாழ்க்கையே அந்த இரண்டிற்குள்தான் இருக்கிறது. எனவே இறைநம்பிக்கை என்பது அவசியம். அது மனிதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. அவனை ஒழுக்கமுள்ளவனாக, கருணை உள்ளவனாக, பாவ, புண்ணியங்களுக்கு அஞ்சுபவனாக, பிற உயிர்களுக்குத் தீங்கு செய்ய அஞ்சுபவனாக வைக்கிறது. ஆன்மீகம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு விஷயம்.

கே: கைலாச யாத்திரை உட்படப் பல பயணங்கள் செய்திருக்கிறீர்கள். அதில் நிகழ்ந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் குறித்து…

ப: நிறைய சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்து ‘யாத்திரை ஞானம்‘, ‘என் யாத்திரை அனுபவங்கள்‘ என்ற பெயர்களில் நூலாக வெளியிட்டிருக்கிறேன்.

கே: தற்போதைய பத்திரிகைச்சூழல் குறித்து…

ப: பத்திரிகைத் துறை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது கால மாற்றத்திற்கேற்ற வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். சினிமாவின் வருகையால் எப்படி நாடகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டதோ அதுபோல வருங்காலத்தில் இப்போதுள்ளவற்றுக்கும் ஏதாவது புதிய ஒன்றின் வருகையால் பாதிப்பு நேரலாம். ஆனாலும் படிப்பது நிச்சயம் தொடரும். பார்ப்பதில் மனிதனுக்குச் சிந்திக்கும் வேலையில்லை. ஆனால் ஒன்றைப் படிக்கும்போது அவன் அதை மனதுள் நிறுத்திச் சிந்திக்கிறான். கற்பனை செய்கிறான். எனவே, எதிர்காலத்தில் நிலைமை மாறும். மீண்டும் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கும் என்பது எனது கருத்து.

கே: ஒரு எழுத்தாளராக இன்றைய கல்விமுறை, பண்பாட்டுச் சூழல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப: இன்றைய கல்விச் சூழலில் மாற்றம் தேவை. தாய்மொழி வழிக்கல்வி மிகவும் அவசியம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் நன்கு, பேச எழுதத் தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போலத் தமிழும் நன்கு படிக்க எழுதத் தெரியவேண்டும் என்றும் விரும்ப வேண்டும். ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் போதும் எங்கு சென்றாலும் பிழைத்து விடலாம் என்று நினைப்பது நல்லதல்ல. நான் தமிழ்ச் சூழலிலேயே பிறந்து, தமிழர்களுடனேயே வளர்ந்தவன். எனது தாய்மொழி தமிழ். நான் தமிழில் மிகுந்த செழுமையானவன். பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி; பல மணிநேரம் ஆங்கிலக் கலப்பின்றித் தூயதமிழில் உரையாட முடியும். அதே சமயம் நான் அமெரிக்காவில் 6, 7 மாதம் தங்கியிருந்த போது ஆங்கிலத்தைத்தான் பயன்படுத்தினேன்.

பண்பாட்டைப் பொறுத்தவரை தற்காலத்தில் 30 வயதுக்குக் கீழுள்ளவர்கள் இன்டர்நெட், சினிமா, டிவியில் கவனம் செலுத்தும் அளவு வாசிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. 30 வயதுக்குக் கீழாக தமிழுக்குப் பெரிதாக வாசகப் பரப்பில்லை என்பதுதான் உண்மை. ஒரு 10 சதவீதம் பேருக்கு வேண்டுமானால் ஆர்வம் இருக்கலாம். ஆனால் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று பார்த்தால் ஒரு 50-60 சதவீதமாவது படிப்பதில் ஈடுபாடு உடையவர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் கடந்த 30 ஆண்டுகளில் நமது கல்வித் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தாம். ஆங்கிலக் கல்வியில் உள்ள மோகம். வெளிநாடுகளுக்குச் சென்று அங்கேயே இருந்து அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம். வெளிநாட்டவரைப் போலத் தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் இவைதான் காரணம். நமது வாழ்க்கை முறைக்குப் பொருந்தாத விஷயங்கள் மாற வேண்டும்; அவற்றை மாற்ற வேண்டும்.

கே: எத்தனையோ பணிகளுக்கிடையே எழுத்துக்கு எப்படி உங்களால் நேரம் ஒதுக்க முடிகிறது?

ப: எனக்கு வயது 58. ஆனாலும் சுறுசுறுப்பாக இருக்க, உழைக்க முயல்கிறேன். காரணம், நான் இப்போது இருக்கும் இடம் எனக்கு லேசில் கிடைத்து விடவில்லை. இதற்காக ஒருகாலத்தில் நான் மிகவும் ஏங்கியிருக்கிறேன். பல வலிகளைச் சந்தித்திருக்கிறேன். பல பத்திரிகைகள் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கத் தயாராக இல்லை. இதில் எனக்கு ஒரு passion இருக்கிறது. நிர்ப்பந்தம் என்பது ஒரு நல்ல நண்பன். பல சிரமங்களுக்கு இடையில்தான்; சமயத்தில் தூக்கத்தை இழக்கிறேன்; சமயத்தில் உடல்நலத்தை இழக்கிறேன். இப்படிப் பல்வேறு கஷ்டங்களுக்கு நடுவில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

கே: வெகுஜன நாவல்கள் இலக்கியம் கிடையாது என்ற கருத்து குறித்து..

ப: இது ஒரு ஜனநாயக நாடு. யாருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு. என்னைக் கேட்டால், வெகுஜன நாவல் எழுதி வெற்றி பெற முடியாதவர்கள், வெகுஜன அங்கீகாரம் பெற முடியாமல் தோற்றுப் போனவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்பேன்.

கே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார், யார்?

ப: எல்லா எழுத்தாளர்களையுமே நான் மிகவும் மதிக்கிறேன். இதைவெறும் முகஸ்துதிக்காகவோ, பெருந்தன்மைக்காகவோ சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன். ஏன் என்றால் ஒரு பத்திரிகையில் ஒரு படைப்பு வருகிறது என்றால் அதற்கான தகுதி இருந்தால்தான் முடியும். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதத் திறமை இருக்கிறது. அது படைப்புகளில் வெளிப்படுகிறது. இதில் சிறந்தது, சிறப்பில்லாதது என்று எதுவும் இல்லை. நமக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று வேண்டுமானால் இருக்கலாமே தவிர, உயர்ந்தது, தாழ்ந்தது எல்லாம் எழுத்தில் இல்லை. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லலாமே தவிர நன்றாக இல்லை என்று சொல்லக் கூடாது. ஆனால் அதுதான் இப்போது எழுத்துலகில் நடக்கிறது. அது நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், வேறு யாருக்காவது பிடித்திருக்கக் கூடும் அல்லவா? என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர் என்றால் அது லா.ச. ராமாமிர்தம் அவர்கள்தான்.

கே: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

ப: ஆன்மீகத்தில் மக்களுக்கு நிறையக் குழப்பம் உள்ளது. இந்து மதத்தில் இல்லாத விஷயம் இல்லை. அதில் எந்த ஒரு விஷயமும் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஒவ்வொன்றும் அற்புதமான விஷயம். தற்காலத்தில் அவை பலருக்குத் தெரியவில்லை. இதுபோன்ற விஷயங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. மற்றபடி, எழுத்துத் துறையில் மறக்க முடியாத ஒரு படைப்பை எழுதிவிட்டதாய் நான் நினைக்கவில்லை. நான் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால் உலகம் கவனிக்கத் தக்க மிகச்சிறந்த படைப்பைத் தர வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

குமுதம் சிநேகிதியில் ‘ரங்கநதி’ என்ற சமூகக் கதையை இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். அந்தக் கதையில் ஓரளவு எனது ஆளுமையைக் காட்டியிருப்பதாகக் கருதுகிறேன். அதுபோன்று நிறைய நிறைவான படைப்புகளைத் தர வேண்டும் என்பது எனது எண்ணம். அது என் கையில் இல்லை. காலம் அனுமதித்தால் நடக்கும்.

அமெரிக்காவில் இருக்கும் தமிழர்கள் நம் மண்ணின் மீது அக்கறை கொண்டிருப்பதும், கலாசார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதும், தமிழ் இதழ்கள், எழுத்தாளர்கள் மீது அக்கறை கொண்டிருப்பதும் மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது. அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அது இன்னமும் மகிழ்ச்சி என்று கூறுகிறார் இந்திரா சௌந்தர்ராஜன். இரவு முழுதும் கண்விழித்துப் பயணம் செய்து ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து விட்டு வந்த களைப்பில் இருந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் தென்றலுக்காகத் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

சன்யாசி செய்த அற்புதம்

காயத்ரி சுவாமிகள் என்ற ஒரு சித்த சன்யாசி சேலத்தில் இருந்தார். அவர் மக்கள் முன்பு பல சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தியிருக்கிறார். மேஜிக்கா சித்தா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனக்கே ஒரு அனுபவம். நான் அவரைச் சந்திப்பதற்காக ஒருமுறை சேலம் சென்றிருந்தேன். சில ஆரஞ்சுப் பழங்களை வாங்கிச் சென்றிருந்தேன். நான் வாங்கிப் போயிருந்த ஆரஞ்சுப் பழங்களை வாங்கிச் சில நிமிடங்கள் அப்படியே கையில் வைத்திருந்து விட்டு, என்னிடம் திருப்பிக் கொடுத்தார். “இதை நீ வீட்டில் போய் உரித்துப் பார்” என்று சொன்னார். அவர் சொன்னபடி வீட்டுக்குப் போய் உரித்துப் பார்த்தால், அதற்குள் ஒரு சிறிய மகாலக்ஷ்மி விக்கிரகம்! அதுபோல ஒருமுறை பூசணிக்காயில் இருந்து முருகன் சிலையை எடுத்தார். வாழைப்பழத்தில் இருந்து வேல் எடுத்தார். இதை எல்லாம் எனக்கு முன்னால் மட்டும் இல்லை. நிறையப் பேருக்கு முன்னால் செய்தார். இது மாதிரி நிறையச் செய்திருக்கிறார். இது எப்படி சாத்தியம்? சிலர் இதை ‘கண்கட்டு’ என்று சொன்னார்கள். சிலர் ‘குட்டிச் சாத்தான்’ வேலை என்றார்கள். சிலர் அவருக்கு ஏதோ ஒருவித ‘மாயசக்தி’ இருப்பதாகச் சொன்னார்கள். இதுதான், இப்படித்தான் என்று காரண, காரியத்தோடு யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இது போன்ற விஷயங்கள் என்னை யோசிக்க வைத்தன.

–நன்றி தென்றல் மாத இதழ் – மார்ச் 2011

Advertisements

3 thoughts on “இந்திரா சௌந்தர்ராஜன் நேர்காணல் – அரவிந்த் சுவாமிநாதன்

 1. chandruwesee September 4, 2014 at 12:54 AM Reply

  Nice interview sir

 2. கிரி September 8, 2014 at 5:11 AM Reply

  சுவாரசியமான பேட்டி 🙂

  மர்மதேசம் மிக மிக பிரபலமான ஒரு நாடகமாக இருந்தது. இதில் வரும் பின்னணி இசையும் கலக்கலாக இருக்கும். விடாது கருப்பும் பிரபலமாக இருந்தது.

  இதில் வரும் கருப்புசாமி எங்கள் ஊரில் பிரபலம்.. அதோடு எங்கள் குல தெய்வமும் கூட.

  “எனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அமானுஷ்யம், சித்தர்கள் பற்றிய விஷயங்களையும், ஆன்மீக மர்மங்களையும் களமாகக் கொண்டு பல நாவல்களை எழுத ஆரம்பித்தேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தக் கதைகள் எழுதவேண்டும் என்று நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை. எனக்குள்ளேயே அதுபோன்ற விஷயங்கள் இருந்ததால் எழுதுவது எளிதாக இருந்தது.”

  இவர் கூறுவதை புரிந்து கொள்ள முடிகிறது.. சில விசயங்கள் தானாகவே வரும்..நாம் அதற்காக முயற்சி எடுக்க வேண்டியதில்லை. இது தானாக கிடைக்கும் ஒரு சிறப்பு. இது அதிர்ஷ்டம் தான்.. அல்லது கிடைத்த ஒன்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது.

  தான் எந்த ஆராய்ச்சியும் செய்யாமலே இவற்றை எழுதியதாக குறிப்பிட்டு இருந்தார்.. ரொம்ப பெரிய விஷயம் தான்.

 3. KAMARAJ November 28, 2015 at 5:07 AM Reply

  சன் டிவியில் ஒளிபரப்பபட்ட நாகம்மா மற்றும் ஜெயா டிவியின் ருத்ரம், இவைகளின் நாவல் புத்தகம் கிடைக்குமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s