என் தாய் மீனாட்சி! – இந்திரா சௌந்தர்ராஜன்


1956 இது நான் மண்ணுக்கு வந்த வருடம் 1980 இது நான் மதுரைக்கு வந்த வருடம்!

அதற்குமுன்பு சேலத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்த ஒரு சேலத்துக்காரன் நான். என் பின் வாழ்க்கை மதுரைக்கு இடம் மாறும் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. டி.வி.எஸ். சுந்தரம் பாசனர்சில் வேலை கிடைக்கப்போய் மதுரைக்குப் புறப்பட்டு வர நேர்ந்தது.

நான் பிறந்த வளர்ந்ததெல்லாம் ஆசாரமான வைணவக் குடும்பத்தில். ஆனாலும் என்னை மதுரைக்கு அனுப்பியபோது என் அப்பா சொன்னது ஒன்றைத்தான்… இன்டர்வியூ அட்டெண்ட் பண்றதுக்கு முந்தி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போ… அப்புறம் மற்ற வேலைகளை கவனி” என்றார். நானும் மதுரை வந்து இறங்கவும் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய ஹோட்டலில் ரூம் போட்டு குளித்து விட்டு முதலில் சென்றது மீனாட்சியம்மன் கோயிலுக்கு தான். அன்று ஆரம்பித்த தொடர்பு இந்த 2014-ல் என் பெண்ணுக்குக் கல்யாணம் செய்யப் போகிறேன்… அதற்கான பத்திரிகையை முதலில் மீனாட்சிக்கே வைக்கும் அளவிற்குத் தொடர்ந்தபடி உள்ளது.

குடும்ப வழக்கப்படி தாந்தோணி மலை பெருமாளுக்கு தான் முதல் பத்திரிகை வைக்க வேண்டும். அவர் தான் குலதெய்வம். இருந்தும் மீனாட்சி சன்னிதிக்கே கால்கள் முதலில் சென்றன. அடுத்து பெருமாளிடம் சென்ற போது ‘சாரிப்பா… அம்மாவை அப்புறமான்னு நினைக்க முடியல’ என்று மனதுக்குள் சொன்ன போது பெருமாளும் ‘அதனாலொன்றுமில்லை’ அவள் என் தங்கை தானே?’ என்று சொல்வது போல் தான் இருந்தது.

மதுரைக்கு நான் வந்த போது ஒரு தொடக்க எழுத்தாளன் தான். ஒரு சிறுகதை எழுதி அது பிரசுரம் ஆவதற்குள் தாய்வு தீர்ந்து விடும். ஆனால் என் எழுத்தாள கனவுக்கோ வானமே எல்லை.

ஒரு சமயம் எனக்கு அதிர்ஷ்டமேயில்லை என்று கருதிக் கொண்டேன். மீனாட்சியைக் கூட்டு சேர்த்துக் கொண்டால் அவள் தயவால் உருப்பட்டு விடலாம் என்று எப்படித் தோன்றியதோ தெரியாது. அதன்பின் அவளோடு கூட்டணி… எழுதி நூறு ரூபாய் சம்பாதித்தால் இருபது ரூபாய் அவளுக்கு என்று!

இந்த கூட்டணிப் பிரார்த்தனை ஓரளவு வேலை செய்தது. தினமும் ஆபீசில் எந்திரங்களுக்கு நடுவில் 10 மணி நேரம் அல்லாடி விட்டு வந்து பேனாவும் பேப்பருமாக உட்கார்ந்து விடுவேன்.

நான் எழுதத் தொடங்கிய நாளில் நல்ல போட்டி இருந்தது. எல்லாவிதமான கதைகளும் வந்தன. நான் பரிசுகளைக் குறி வைத்து எழுதினேன். ‘கலைமகள்’ குறுநாவல் போட்டியில் இருமுறை முதல் பரிசு. ‘அமுத சுரபி’யில் ஒரு முறை, ‘இலக்கியச் சிந்தனை’ விருது ஒரு புறம்… ஆனாலும் சொன்னால் பிறர் உடன் தெரிந்து கொள்ளும் அளவு ஒரு பிரபலத் தன்மை ஏற்படவில்லை. அதை சுஜாதா, ரா.கி.ரங்கராஜன், சாண்டியல்யன், சிவசங்கரி போன்றோர் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

தமிழ்வாணன் மறையவும் ‘குமுதம்’ ராஜேஷ்குமாரை அவர் இடத்துக்கு வர அனுமதித்தது. பட்டுக்கோட்டையில் இருந்து பிரபாகரும் வலை வீசினர். இவர்களுக்கு நல்ல மீன்களும் சிக்கின. நானும் சில மீன்களைப் பிடித்தேன். எல்லாமே குஞ்சுகள் என்பதால் ஒரு திருப்தி ஏற்படவில்லை. பாரதியார் காளி தேவியிடம் மானசிகமாய்ச் சண்டை போடுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நானும் அதுபோல் போய் சண்டை போட்டேன் மீனாட்சியிடம்!

‘குமரகுருபரனுக்கு ஒரு பெயர் வாங்கித் தந்ததோடு நின்றுவிட்டாயே… என்னைக் கொஞ்சம் கவனிக்க மாட்டாயா? நானெல்லாம் ஜெயித்தால் எது தான் குறைந்து போகும்? நீ பார்த்தாலே போதுமாமே… தினம் வருகிறேனே. பார்க்கமாட்டேன் என்றால் எப்படிம்மா’ என்று… எழுத்தாளனாக உயர வேண்டும் என்று என்னைப் போல தவித்தவர்கள் இருக்கவே முடியாது. உழைத்தவர்களும் இருக்க முடியாது. எதுவும் வீண் போகவில்லை என்றே கூறுவேன். 1980-ல் மதுரை வாசியான எனக்கு 1988-ல் இருந்து கதவுகள் திறக்க தொடங்கின. ஒரு வாய்ப்பைக் கூட நான் வீணாக்கவில்லை. 1990-ல் விகடனில் தொடர் எழுதும் வாய்ப்பு அமைந்தது. அதன் வெற்றியே அடுத்தத் தொடரை சில மாதங்களிலேயே பெற்றுத் தந்தது. அது மர்ம தேசமாய் தொலைக்காட்சியில் என்னை உயர்த்தியது. இன்று புகுந்த வீடு வரை தொடர்ந்தபடியே உள்ளது.

இந்த 2014-ல் திரும்பிப் பார்க்கிறேன். இந்த கட்டுரை எழுதும் இந்த நாளில் 12 பத்திரிகைத்தொடர்களுடன் ஒரு தொலைக்காட்சி தொடர், ஒரு திரைப்படம், இது போக மாதம் குறைந்தது நான்கைந்து சொற்பொழிவு, பொதிகையிலும் தொடர் சொற்பொழிவு என்று என் குதிரை ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது.

மதுரையில் நான் கால் வைத்த போது நான் ஒரு சரியான அரைவேக்காடு, இன்று என்னை பன்முகங்களில் உயர்த்தி பக்குவப்படுத்தியிருக்கிறாள் மீனாட்சி. வீடு வாசல் தந்து மனைவி குழந்தைகள் தந்து மாப்பிள்ளையும் வர இருக்கிறார்.

எதை எப்போது தர வேண்டும் என்று எனக்கு தெரியும் என்பது போல் அதை எல்லாம் அவ்வப்போது தந்து ஆதர்ச சக்தியாக விளங்கி வருகிறாள். நிறைய திருவிளையாடல்களும் நிகழ்த்தியிருக்கிறாள். அந்த தெய்விக அனுபவங்களைச் சொன்னால் சிலிர்க்கும்.

நான் மிகுந்த விஞ்ஞான பாதிப்புடைய ஒருவன். என் அனுமானுஷ்ய படைப்புகளின் ஊடே விஞ்ஞானக் கேள்விகளும் நாத்திக வாதமும் நிறையவே இருக்கும். அந்த வகையில் ஒரு பெரும் அலசல் எல்லா விஷயத்திலும் என்னிடம் உண்டு. அந்த அனுபவத்தின் அடித்தளத்தில் இருந்து நான் பக்தியைப் புரிந்து கொண்ட விதம் அதைக் கொண்டு மீனாட்சி என்றும் சக்தியைப் புரிந்து கொண்ட விதத்தை எல்லாம் ஒரு அத்தியாயக் கட்டுரைக்குள் அடைக்க முடியாது.

இறை பக்தி சிலர் வரையில் பயம் சார்ந்தது. சிலர் வரையில் அது ஒரு சுய நலம், இன்னும் சிலர் வரையில் அது மூடத்தனம் அறிவு சார்ந்ததாக அது மாறும் போது நிறைய கேள்விகள் எழும்; அதற்கான விடைகள் நெருடலைத் தரும்.

நானும் பயத்தோடு சில காலம், சுய நலத்தோடு சில காலம், மூடமாய் சில காலம் என இதில் லயித்திருக்கிறேன். இப்போது தான் எனக்கு சூட்சமம் பிடிபட்டுள்ளது. இன்று கோயிலுக்குப் போய் தான் பக்தி புரிய வேண்டும் என்கிற நெருக்கடியில் இருந்து நான் விடுபட்டேன். மானசீகமாய் பக்தி புரிகிறேன்.

அந்த பக்தியோடு முன்போல மீனாட்சியைப் போனோம் தரிசித்தோம் என்று தரிசனமும் செய்ய முடியவில்லை. எங்கோ சிலர் செய்த தவறால் ஒரு தீவிரம் கொழுந்துவிட்டதில் இன்று உடம்பைத் தடவிப் பரிசோதித்த பிறகே உள்ளே விடுகிறார்கள். அதை ஏற்கவும் முடியவில்லை – மறுக்கவும் முடியவில்லை. உள்ளேயும் சொல்லொணாத் தலைகள்… நீண்ண்ண்டவரிசை! அதனால் மானசீகமாய் கோபுரத்தைப் பார்த்து அந்த நாள் நினைப்பில் விழுந்து பூசலார் நாயனார் போல ஆன்ம தரிசனமே செய்கிறேன். எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒரு சரியான காரண காரியம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்வதில் தான் நம் சிறப்பும் உள்ளது.

ஒரு விஷயத்தை நான் அழுத்தமாய் சொல்வேன் படைப்பாளிகளுக்கு ஒரு பெண் தெய்வம், இஷ்ட தெய்வமாய் அமைவது மிகச் சிறந்தது.

ஆறுதல், அமைதி, ஆனந்தம், ஆராதிப்பு என்று எல்லாமே அவளால் கிடைத்து விடும்.

காளமேகம், காளிதாசன், கம்பன், பாரதி என்று நீளும் பட்டியலே சாட்சி!

–நன்றி மங்கையர் மலர்

Advertisements

One thought on “என் தாய் மீனாட்சி! – இந்திரா சௌந்தர்ராஜன்

  1. bganesh55 August 31, 2014 at 6:49 AM Reply

    இந்திராஜியின் அனுபவங்கள் மகத்தானவை. அவரின் வரிகளுடன் நான் அப்படியே உடன்படுகிறேன். அதிலும் குறிப்பாக… கடைசி மூன்று பாராக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s