1-சுஜாதாவின் முத்தான பத்து கதைகள் – இரா.முருகன்


sujatha33

வெளிவர இருக்கும் ‘சுஜாதாவின் முத்தான பத்து கதைகள்’ (அமிர்தா பதிப்பகம்) என் முன்னுரையில் இருந்து ஒரு சில பகுதிகள்…

கம்பன் ஏமாறவே இல்லை. அவனால் வார்த்தையை வளைக்க முடியும். துளி என்று எழுதினால் மோனை வரவில்லை என்பதால் துமி என்று ஒரு புதுச் சொல்லை உருவாக்கி அது உலக வழக்கு என்று நம்ப வைக்க முடியும். ஆதரித்த சடையப்ப வள்ளலை ‘உங்களை இருக்க வேண்டிய இடத்தில் இருத்துவேன்’ என்று பெருமிதமாக வாக்குக் கொடுத்து, ராம பட்டாபிஷேகத்தில் அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த, வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் முன்னோர் கையில் எடுத்துக் கொடுக்க வசிஷ்டன் வாங்கி கிரீடமான மௌலியைப் புனைந்ததாக புராணத்தில் பதினைந்தாம் நூற்றாண்டு வள்ளலை நுழைத்து பெருமிதப்பட முடியும். அவன் கவிதை, முக்கியமாகக் கவி நெஞ்சு அவனுக்குப் பலம்.

அதே கம்பன் ராமகாதையைத் தமிழில் சொல்ல முற்பட்டபோது தயங்கினான். ஓசை மிக்கதொரு பாற்கடலில் பூசை புக்குவது போல், அதாவது பூனை புகுந்தது போல், அந்தக் கதா சாகரத்தில் தயங்கித் தயங்கி நுழைகிறான். பூனைக்குப் பால் பருகக் கசக்குமா? ஆனால், எல்லையில்லாமல் விரிந்திருக்கும் பாற்கடலை எப்படிப் பருக முடியும்? அது ஆனந்தக் களிப்பின் உச்சத்தில் வெளிப்படும் புனைவு கொண்ட அச்சம். மனம் விழைகிறது. எண்ணம் முன் நடத்துகிறது. ஆனால் அறிவு ‘நீ இதற்குத் தகுதியானவன் தானா?’ என்று கேட்கிறது.

சுஜாதாவின் சிறுகதைக் கடலில் மூழ்கி பத்தே பத்து முத்துக்களை உள்ளங்கையில் பொத்தி எடுத்து வந்து கொடு. ஏன் இந்தப் பத்து? வேறு இருபது, முப்பது, நூறு ஏன் இல்லை? காரணத்தையும் சொல்லு.

அம்ருதா பதிப்பகம் இந்த அன்புக் கட்டளையை எனக்கு இட்டபோது நானும் கம்பனாக ஒரு நிமிடம் பெருமையிலும் பேரானந்தத்திலும் மிதந்தேன்,


கதையை ரசிக்கும் ஒரு மகா வாசகரே கை தேர்ந்த எழுத்தாளராக முடியும் – சுஜாதா போல.


சிறந்த சிறுகதை எது என்று இதுவரை யாரும் இலக்கணம் வகுக்கவில்லை என்பதே காரணம். அது வகுக்கப்படும்போது சிறுகதையோ அல்லது இந்த உலகமோ காணாமல் போயிருக்கலாம். இதுவே ஒரு சிறுகதைக் கருதான்.

ஆக, எந்த கருதுகோள்களும், சார்பு நிலையும் இல்லாமல் நாம் சில சுஜாதா கதைகளைப் பார்ப்போம். இதெல்லாம் கதையா என்பது தொடங்கி, இந்த சுஜாதா கதையா நல்ல கதை, (வேறே ஒண்ணைக் காட்டி).இதுக்கென்ன குறைச்சல் என்பது வரை இந்தத் தொகுப்பு பற்றிக் கருத்துகள் வரலாம். வரட்டுமே.

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s