நூல் அறிமுகம்: A Better India, A Better World – என்.சொக்கன்


பல்வேறு சந்தர்ப்பங்களில் நாராயணமூர்த்தி வழங்கிய முக்கியமான மேடைப் பேச்சுகள் இப்போது நூல் வடிவில் தொகுக்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. ‘A Better India, A Better World‘ என்ற இந்தப் புத்தகத்தை ‘Penguin Allen Lane‘ வெளியிட்டிருக்கிறது.

மொத்தம் பத்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தின் முக்கியமான சிறப்பு, இது தொழில் நுட்ப ஆர்வலர்களுக்கான நூல் அல்ல. சின்னப் பொடியன்கள் முதல் சீனியர் சிட்டிஸன்கள் வரை எல்லோருக்கும் இதில் விஷயம் இருக்கிறது.

1990-ம் வருடம். இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து வருடங்கள் முடியப்போகும் சூழ்நிலை.

ஆரம்பத்திலிருந்தே, இன்ஃபோசிஸ் பெரிய வளர்ச்சி எதையும் பார்த்துவிடவில்லை. இருக்கிற சொற்ப வசதிகளைப் பயன்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.

எந்நேரமும், வரவுக்கும் செலவுக்கும் இடித்துக் கொண்டிருந்தது. கையில் அதிகச் சேமிப்பு தங்கவில்லை. லாபமும் பெரிதாக வரவில்லை.

இந்த நிலைமையில், இன்ஃபோசிஸை விலைக்கு வாங்கிக் கொள்ள வேறொரு நிறுவனம் முன் வந்தது. ஒரு மில்லியன் டாலர் விலையாக நிர்ணயிக்கப்பட்டது.

அன்றைய சூழ்நிலைக்கு, ஒரு மில்லியன் டாலர் என்பது மிகப் பெரிய தொகை. ஆகவே, இன்ஃபோசிஸின் நிறுவனர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். கம்பெனியை விற்றுவிட முடிவெடுத்து விட்டார்கள்.

ஆனால், நாராயணமூர்த்தி இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘இந்த நிறுவனத்தை நாமே தொடர்ந்து நடத்த வேண்டும். இன்னும், சில ஆண்டுகளில், இது மிகப் பெரிய வளர்ச்சி அடையப் போகிறது. அதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு’ என்றார்.

அவர் இப்படிச் சொன்னதும், மற்ற நிறுவனர்களுக்கு ஏமாற்றம். ‘சுளையாக ஒரு மில்லியன் டாலர் பணம் வருகிறது. அதைப்போய் வேண்டாம் என்கிறாரே. இவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?’ என்று தங்களுக்குள் நினைத்துக் கொண்டார்கள்.

நாராயணமூர்த்தி அவர்களைக் கூர்ந்து கவனித்தார். ‘சரி, உங்களுக்கு இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் நம்பிக்கை இல்லா விட்டால், இதனைத் தொடர்ந்து நடத்துவதில் விருப்பம் இல்லா விட்டால், நீங்கள் தாராளமாக வெளியேறலாம்’ என்றார். ‘உங்கள் எல்லோருடைய பங்குகளையும் நானே காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறேன். அதன்பிறகு, நான் மட்டும் தனி ஆளாக இந்த கம்பெனியை நடத்திக்கொள்கிறேன்’.

சட்டென்று அந்த அறையில் ஓர் அமைதி சூழ்ந்துகொண்டது. எல்லோரும் அதிர்ச்சியுடன் நாராயணமூர்த்தியைப் பார்த்தார்கள்.

நாம் எல்லோரும் சேர்ந்துதானே இந்தக் கம்பெனியைத் தொடங்கினோம்? நம்முடைய குழந்தைதானே இது? சரியாக லாபம் வரவில்லை என்றதும், இதைப் பாதியில் கை கழுவிவிட்டு ஓடுவது நியாயமா? நாராயணமூர்த்திக்கு இந்த நிறுவனத்தின் மீது இருக்கும் நம்பிக்கையில் நூறில் ஒரு பங்காவது நமக்கு இருக்கவேண்டாமா?

அடுத்த சில நிமிடங்களில், அவர்கள் எல்லோருடைய மனமும் மாறிவிட்டது. ‘இன்ஃபோசிஸை யாருக்கும் விற்கவேண்டாம். நாமே இதைத் தொடர்ந்து நடத்துவோம். இன்னும் பெரிய வெற்றிகளை நோக்கி முன்னேறுவோம்’ என்று ஒருமனதாக முடிவெடுத்தார்கள்.

அடுத்த வருடம், இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் ஒரு மிகப் பெரிய மாற்றம் வந்தது. அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு, இன்ஃபோசிஸ் நிறுவனம் பெரிய அளவில் வளரத் தொடங்கியது.

இன்றைக்கு இன்ஃபோசிஸின் சந்தை மதிப்பு 33 பில்லியன் டாலர்கள். அதாவது, 1990-ல் யாரோ நிர்ணயித்த 1 மில்லியன் டாலர் விலையைப் போல, 33000 மடங்கு பெரிதாக உயர்ந்திருக்கிறது இன்ஃபோசிஸ்.

‘அன்றைக்கு நானும் அந்த ஒரு மில்லியன் டாலர்களுக்கு மயங்கியிருந்தால், இப்போது இன்ஃபோசிஸ் என்கிற மிகச் சிறந்த கம்பெனி இல்லாமல் போயிருக்கும்’ என்கிறார் நாராயணமூர்த்தி, ‘நாம் எப்போதும் இன்றைய நிலைமையைப் பார்க்கக் கூடாது. நம்பிக்கையோடு நாளைய வளர்ச்சி சாத்தியங்களைப் பார்க்க வேண்டும். எதுவும் நல்லபடியாக நடக்கும் என்கிற பாஸிட்டிவ் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது இன்ஃபோசிஸுக்கு மட்டுமில்லை, இந்த நாட்டுக்கும் பொருந்தும், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொருந்தும்!’

தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில், இன்றைய இந்திய இளைஞர்களுக்கு ஆறு அறிவுரைகளை வழங்குகிறார் நாராயணமூர்த்தி. ‘பெரிய தலைவர்கள், வெற்றியாளர்கள், நிறுவனங்களை உருவாக்கக்கூடிய அடித்தளங்கள்’ என்று அவர் குறிப்பிடும் அந்த ஆறு கட்டளைகள்:

1. நீங்கள் எதைச் செய்தாலும் சரி, யாரிடம் பழகினாலும் சரி, எப்போதும் அவர்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் மீது ஒருவருக்கு நம்பிக்கை போய்விட்டது என்றால், அவ்வளவுதான். அதன்பிறகு, அவர் உங்களிடம் எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்கமாட்டார். அதன்மூலம் நீங்கள் இழக்கும் வாய்ப்புகள் ஏராளம். எந்தச் சூழ்நிலையிலும், அப்படி ஒரு நிலைமைக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்!

2. ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைச் செய்யும்போது, உங்களுக்குள் இயல்பாகவே ஒரு பயம் வரும். அந்தப் பயத்தை அலட்சியப் படுத்தாதீர்கள். அதேசமயம், அங்கேயே தயங்கி நின்று விடாதீர்கள். அது நியாயமான பயம்தானா என்று கவனித்து, வேண்டிய மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொண்டு முன்னேறுங்கள். உங்களுடைய பயம், புதிய அனுபவங்கள், வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது.

3. நீங்கள் எப்பேர்ப்பட்ட சாதனையாளராக இருந்தாலும் உங்களுடைய குடும்பத்தைப் புறக்கணிக்காதீர்கள். உங்களுடைய வெற்றிகளில் சந்தோஷப்படுகிற, நீங்கள் தோல்வியடைகிறபோது ஆறுதல் சொல்லி, தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிற ஒரு நல்ல குடும்பம் அமைந்துவிட்டால், எதையும் சாதிக்கலாம்!

4. வேலைதான் முக்கியம் என்று எந்நேரமும் அலுவலகத்தைக் கட்டிக்கொண்டு அழாதீர்கள். வாழ்க்கையில் அனுபவிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். நிறையச் சிரியுங்கள். உங்கள் மனம் மகிழ்ச்சியுடன் இருந்தால்தான், அலுவலகத்திலோ, சொந்தத் தொழிலிலோ வேலை ஒழுங்காக நடக்கும்.

5. உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும், உங்களை நீங்களே ஆட்சி செய்யப் பழக வேண்டும். இல்லாவிட்டால், மற்றவர்களை உங்களால் நிர்வகிக்க முடியாது. ஒரு குழுவையோ, நிறுவனத்தையோ வழிநடத்த முடியாது.

6. கடைசியாக, பணம் சம்பாதிப்பது முக்கியம்தான். ஆனால் அதுமட்டுமே வாழ்க்கை அல்ல. நம்மிடம் உள்ள செல்வத்துக்கு நாம் தாற்காலிகச் சொந்தக்காரர்கள், அவ்வளவுதான். அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, நாம் சமூகத்துக்கு என்ன நன்மை செய்கிறோம் என்பதுதான் நம்முடைய பெயரை நீண்ட காலத்துக்கு நிலைக்கச் செய்யும். உங்களிடம் உள்ள செல்வத்தின் மூலம், நலிந்தவர்களுக்கு உதவி செய்யுங்கள். இருக்கும் சொற்ப வாழ்நாளுக்குள், உலகத்தில் உங்களால் முடிந்த ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்கிவிட்டுச் செல்லுங்கள்!

நூலின் தலைப்பு : வெற்றிக்கு சில புத்தகங்கள்
நூலின் ஆசிரியர் : என். சொக்கன்
பதிப்பகம்         : மதி நிலையம் , சென்னை 86
மொத்த பக்கங்கள்: 184, விலை ரூ 120

வெற்றிக்கு சில புத்தகங்கள் (சுய முன்னேற்ற வகையைச் சேர்ந்த முப்பது ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகக் கட்டுரைகள், நூல் சுருக்கம், குமுதம் வார இதழில் இரண்டரை ஆண்டுகள் வெளிவந்த ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடரின் முதல் பகுதி)

புத்தகம் படிக்கும் பழக்கமே குறைந்துவரும் காலகட்டம் இது. என்னதான் பயனுள்ள விஷயங்களைப் புத்தக வடிவில் தந்தாலும், ‘அதையெல்லாம் உட்கார்ந்து படிச்சுகிட்டிருக்க முடியாதுங்க. சுருக்கமா அஞ்சு நிமிஷத்துல சொல்லுங்க சார்’ என்று கேட்கிறவர்கள் ஏராளம்.


குமுதம் இதழில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியான ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடர் இதனைச் சாதித்துக் காட்டியது. பல பிரமாதமான புத்தகங்களை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் நான்கே பக்கங்களுக்குள் அதனைச் சுருக்கமாகவும், சுவை குறையாமலும் அறிமுகப்படுத்திய விதம், லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்தது. இதைப் படித்துவிட்டு அந்தப் புத்தகங்களைத் தேடிச் சென்று முழுப்பலன் பெற்ற வாசகர்களும் ஏராளம்

அந்தத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் அறிமுகங்களை இங்கு தொகுத்து அளித்திருக்கிறோம். ஒரு அலமாரி முழுக்க நிரம்பக்கூடிய புத்தகங்களை ஒன்றிரண்டு மணி நேரத்துக்குள் படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய அபூர்வமான வாய்ப்பை இது உங்களுக்குத் தரும்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s