அரங்கனின் அரவணை!


பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனின் ஹோலி கிச்சனை… மன்னிக்கவும்… அரங்கனின் மடப்பள்ளியை எட்டிப் பார்க்கலாம் என்கிற எண்ணம் வந்தது.

இராஜ மகேந்திரன் திருச்சுற்று மதிலுக்கு வெளியே பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு மூலையில் அமையப் பெற்றுள்ளது ஸ்ரீரங்கம் கோயிலின் மடப்பள்ளி. வைகுண்ட நாதனான பெருமாளுக்கும், வையகத்து நாயகியான தாயாருக்கும் ஆறு கால பூஜைக்கும் இங்கிருந்து தான் நைவேத்ய பிரசாத அன்னங்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன. திருக்கோயில் மடப்பள்ளிக்குள் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. அதனால் என்ன? பூஜிக்கப்பட்ட நைவேத்ய அன்னங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றியது. அரங்கனின் மடப்பள்ளி மகத்துவத்தை, பூஜிக்கப்பட்ட நைவேத்ய அன்னங்களே பறை சாற்றி விடும் அல்லவா?

காலை 8.45 மணிக்கு திருவாரதனம். கோதுமை ரொட்டி படைக்கப்படுகிறது. பெருமாளுக்கு பதினொன்று, தாயாருக்கு ஆறு. ரொட்டியின் செய்நேர்த்தியை பற்றி விளக்குகிறார் கோயிலில் இருபத்தைந்து ஆண்டுகளாக மடப்பள்ளி நாச்சியார் பரிகலமாகப் பணியாற்றி வரும் ரெங்கன்.

வெல்லத்தை நைசாகத் தேய்த்து இழைக்கணும். அந்த ஈரப்பதத்தோட கோதுமை மாவு போட்டு நல்லா பிசையணும். வெல்லமும் மாவும் இரண்டறக் கலந்ததும் உருண்டைகளாகப் பிடிச்சு கையில தட்டணும். அதனை நெய்யில் போட்டு பொரித்து எடுக்கணும். பெருமாளுக்கான ரொட்டி ரெடி. காய்ச்சாத பசும்பால் இரண்டு லிட்டர். மண் ஓட்டில் வெண்ணெய், உப்பு போட்டு வேக வைத்த பாசிப்பருப்பு.

அடுத்து தொடர்ந்தாற்போல வந்து விடுவது பொங்கல் பூஜை. காலை ஒன்பது மணிக்கு, மிளகு, சீரகம் இடாமல் பாசிப்பருப்பு, பச்சரிசி மட்டும் உபயோகித்து வெண் பொங்கல். இதற்கு கத்தரிக்காய் அல்லது வாழைக்காய் அல்லது வெள்ளைப் பூசணி வெட்டிப் போட்டு தினமும் ஒரு வகை காய்கறியமுது. பச்சரிசி உளுந்து மாவு தோசை. பெருமாள் வைத்தியரான தன்வந்திரி தயாரித்து அளிப்பதான ஜீரண மருந்து. சுக்கு, வெல்லம், சீரகம், ஏலக்காய்ப் போட்டு இடிச்சு அரைத்த மருந்து.

மதியம் 12.30 முதல் 1.30 வரை உச்சி கால பூஜை. இதற்குப் பெரிய அதிசரம் என்று பெயர். பெரிய அதிரசம் பதினொன்று. பதினெட்டு படி தளிகை (வெறும் சாதம்), பாசிப்பருப்பு கறியமுது. தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம், இட்ட ரசம் இதற்கு சாத்தமுது என்று பெயர். அரிசி, பாசிப்பருப்பு, பால், வெல்லம் இட்ட பாயசம். இதற்கு கண்ணமுது என்று பெயர்.

மாலை ஆறு டு ஏழு. சீராண்ணம் பூஜை. உளுந்து வடை பெரியது பதினொன்று. பெரிய அப்பம் ஆறு. பெரிய தேன் குழல் எனப்படும் அரிசி முறுக்கு ஆறு. பால், பச்சரிசி, வெல்லம் இட்ட பால் பொங்கல் இது அரை இனிப்பாக இருக்கும். இவற்றில் தாயாருக்கு மட்டும் கூடுதலாக வெல்லம் இட்ட பச்சரிசிப் புட்டு. இரவு ஒன்பது முப்பது மணிக்கு செலவு சம்பா. எட்டுப்படி வடிசல் சாதம், பாசிப் பருப்பு என்று முடித்தார் ரெங்கன்.

காலை முதல் இரவு அரவணை வரைக்குமாக பெருமாளுக்கும் தாயாருக்கும் வைத்து பண்ணப்படும் நைவேத்ய அன்னங்கள் யாவுமே, உடனே ஸ்ரீ பண்டாரம் வந்து சேர்ந்து விடும். பக்தர்களுக்கும் பெருமாள் நைவேத்ய பிரசாதம் போலவே பல அன்னங்களும் பணியாரங்களும் மிகவும் செய்நேர்த்தியுடன் ஆத்மார்த்தமாகத் தயாரிக்கப்பட்டு திருக்கோயில் பிரசாத ஸ்டால்களில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது!” என்கிறார் பணியாளர்களில் ஒருவரான மாதவன்.

இரவு பத்து மணிக்கு பெருமாளுக்கு அரவணை பூஜை. ஆறுகால பூஜை வேளை நைவேத்யங்களிலேயே இரவு அரவணை தான் மிகவும் ஹைலைட். அதனைப் பெற்றுக் கொள்ள இரவு பதினோரு மணியளவில் கூட, கோயிலின் ஸ்ரீ பண்டாரம் மண்டபத்தில் பக்தர்களின் பெருங்கூட்டம் சேர்ந்து விடும். இரண்டரை படி பச்சரிசி, ஏராளமான நெய், ஏலக்காய், வெல்லம் இட்டு அரவணைப் பொங்கல். குங்குமப்பூ, ஏலக்காய் வெல்லம் இட்டு சுண்டக் காய்ச்சிய பசும்பால். (காலையில் காய்ச்சாத பால். இரவு காய்ச்சிய பால்) இதில் தாயாருக்கு மட்டும் ஸ்பெஷலாக அரவணைப் பொங்கலுடன், மிளகுக் குழம்பு (உப்புச்சாறு என்பார்கள்) நெய் விட்டு வேகவைத்த முளைக்கீரை.

இரவு ஒன்பதரை மணிக்கு மேலாக தாயாருக்கு பூஜித்த அரவணை, ஸ்ரீ பண்டாரம் வந்து சேரும் பக்தர்களுக்காக. அடுத்து இரவு பத்தரை மணிக்கு மேலாக அரங்கனுக்குப் பூஜித்த அரவணை, பக்தர்களுக்காக ஸ்ரீ பண்டாரம் வந்து சேரும். பிறகென்ன? போட்டி போட்டு பக்தர்கள் பெற்றுச் செல்வார்கள். அதன் ருசியே தனி. பூலோக வைகுண்டத்தின் இனிய அமுது தான் அரங்கனின் அரவணை.

திருக்கோயில் மடப்பள்ளியில் மண்பாண்டங்கள் தான் சமையல் பாத்திரங்கள். அடுப்பெரிய மர விறகுகள் தான் அடுப்பு. எத்தனையோ நவீனங்கள் வந்து விட்டாலும், மடப்பள்ளிக்குள் புராதன நடைமுறைகளே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு காலை ஒன்பது முதல் இரவு ஒன்பது மணி வரை தினசரி அன்னதானம்.

சராசரியாக ஒரு நாளைக்கு மூவாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம். அதற்கான கிச்சனோ அத்தனை சுத்தம்.

–நன்றி மங்கையர் மலர்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s