ராயர் கஃபே – இவர்கள் பார்வையில்…


அசோகமித்திரனின் பார்வையில்…

கச்சேரி சாலைக்குப் பெருமை தந்தது இரு நிறுவனங்கள். ஒன்று வெங்கட்ரமணா வைத்தியசாலை. ஆயுர்வேத வைத்தியம் இங்கு இலவசமாகக் கிடைக்கக் கூடியதொன்று. வீட்டுக்கு மருந்து வாங்கிப் போவதாயிருந்தால் கட்டணம். இன்னொரு நிறுவனம் அருண்டேல் தெருவுக்கு நேர் எதிரே இருந்த ஒரு பழைய வீட்டில் நடந்த ராயர் காப்பி கிளப் என்ற மிகச் சிறிய உணவு விடுதி. பத்து வயதுப் பையன் போனால் கூட அங்கு இருப்பவர் “வாங்கண்ணா, உக்காருங்கோ” என்று சொல்லி ஒரு வாழையிலைக் கிழிசலை மேசை மீது விரித்து ஓர் இனிப்பு, நான்கு இட்லி, இரண்டு வடைகள் வைத்து விடுவார். வேண்டாம் வேண்டாம் என்றால்கூட, “சும்மாச் சாப்பிடுங்கோண்ணா” என்பார். பெஞ்சு, மேசை, சுவர், கூரை எல்லாமே திகிலெடுக்கும் பழையதாக இருக்கும். உலகமெல்லாம் ஸ்டெயின்லஸ் ஸ்டீலாக மாறியிருக்க அங்கு அந்த ராயர் ஓட்டலில் பித்தளைத் தம்ளர், வட்டை. ஆனால் அப்படியொரு ருசியான இட்லியும், வடையும், சட்னியும் அங்கே மட்டும்தான் கிடைக்கும். அங்கே சாப்பிட்டதற்கு பில் கிடையாது. ஒரு பள்ளிச் சிறுவர் பலகை குச்சி கொண்டு ஒருவர் கணக்குப் பார்த்து “பதினெட்டே முக்கால் ரூபாய்” என்பார்.

உலக சாசுவதங்களில் ஒன்று என்பதுபோல் இருந்து வந்த இந்த ராயர் ஓட்டல் ஒரு நாள் காணாமல் போய் விட்டது. அது இருந்த இடத்தில் இப்போது ஒரு அதிநவீன உயரக் கட்டடம். பக்கத்தில் ஒரு மிகச் சிறிய தெருவில் ராயர் ஓட்டல் தொடர்ந்து நடப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் பழைய அனுபவம் கிடைக்காது.

விமலாதித்த மாமல்லனின் பார்வையில்…

தி ஒரிஜினல் ராயர் கபே இட்லி ருசியின் ரகஸியம் என்று அந்தக் காலத்துப் பெருசுகள் ஒரு காரணம் கூறுவதுண்டு.

“அது வேற ஒண்ணுமில்லே ஓய்! ஓட்டல் ஆரம்பிச்ச அன்னிக்கி, ராயர் கிட்ட மொதல் ஈடு சாப்டவன், பிரம்மாதமா இருக்குன்னு சொல்லிட்டானாம். செண்டிமெண்டலா அந்த இட்லித் துணிய இன்னும் மாத்தவே இல்லை அதான் அதே ருசி இன்னும் மெயின்டைன் ஆயிண்டிருக்கு”

ஒரிஜினல் ராயரிடம் கச்சேரி சாலையில் க.நா.சு மட்டுமல்ல, இதயம் பேசுகிறது மணியனும் ரெகுலர் வாடிக்கையாளர். தீவிர இலக்கியமும் கமர்ஷியலும் பேதமின்றி ருசித்த இடம்.

மணியன் சிபாரிசால் கச்சேரி ரோடில், காருக்குள் உட்கார்ந்து இட்லி சாப்பிட்டிருக்கிறார் எம்ஜிஆர், முதலமைச்சராய் இருக்கும் போது, என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

rayar

ஜாக்கி சேகரின் பார்வையில்…

காலையில ஆறு மணியில் இருந்து பத்து மணி வரைக்கும், சாயங்காலம் மூணு மணியில் இருந்து ஆறு மணி வரைக்கும்தான் வியாபாரம்… ஒன்லி டிபன் அயிட்டம்தான்..

சின்ன பேப்பரில் என்ன சாப்பிட்டோம் என்று எழுதி கணக்கு போட்டு பணம் வாங்கி மீதி சில்லரை கொடுக்கின்றார்கள்..

ஞாயிற்றுக்கிழமை காலையில் மட்டும்தான் என்றார்கள்..

என்ன பெரிய ருசி பொல்லாத ருசி என்று பொங்கல் ரெண்டு விள்ளல் வாயில் போட்டு விட்டு ராயர் மெஸ்ஸில் யாராவது விதண்டாவாதத்துக்குக் கேட்கலாம்…

ருசி உணவில் இல்லை….

ருசி அங்கே இருக்கும் மனிதர்களிடத்தில் இருக்கின்றது…

அங்கே இருக்கும் பழமைதான் என்னை பொறுத்தவரை பெரிய ருசி…

எல்லோரையும் அலட்டல் இல்லாமல் சரிசமமாய் மதித்து புசிக்க உணவு தருவதுதான் ராயர் மெஸ்ஸின் வெற்றி.

எஸ்.வி. சேகரின் பார்வையில்…

”மைலாப்பூர்காரன்னு சொல்லிக்கிறதுல எனக்கு எப்பவுமே தனிப் பெருமை உண்டு. என் உயிரோடும், உணர்வோடும், மனதோடும் கலந்த ஊர் இது” என்று மைலாப்பூர் பற்றிய நினைவுகளில் மூழ்குகிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

ராயர் கஃபே இந்தப் பகுதியின் அடையாளம்ன்னு சொல்லலாம். அங்கேதான் நாகேஷ், வி.எஸ்.ராகவன், ஆர்.எஸ்.மனோகரா, சோன்னு பலபேர் காலை சாப்பாடே சாப்பிடுவாங்க.

சுகநிவாஸின் தயிர் சேமியாவுக்குப் பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. சாம்பார் நிரம்பி வழியும் சாந்தா பவன் இட்லிக்குப் பல பேர் அடிமையாக இருந்தார்கள்.

சாரு நிவேதிதாவின் பார்வையில்…

நான் ஒரு சாப்பாட்டுப் பிரியன் என்பதால் அடிக்கடி ராயர் கஃபே பற்றி எழுதுவதுண்டு. ராயர் கஃபேவில் காலை நேரத்தில் கிடைக்கும் இட்லி, பச்சை மிளகாய்ச் சட்னி, கொத்சு, கெட்டி சட்னி மற்றும் மாலையில் கிடைக்கும் அடை, மைசூர் போண்டா, ரவா தோசை, குலாப் ஜாமூன், கேசரி போன்ற ஐட்டங்களில் இருக்கும் ருசியை நான் வேறு எங்கேயும் கண்டதில்லை என்று உறுதியாகக் கூறுவேன். நானே மிக நன்றாக ஃபில்டர் காஃபி போடுவேன். ஆனால் ராயர் கஃபே காஃபியை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது என்பது என் அனுபவம். அப்படி ஒரு திவ்யமான டிஃபன் கடை அது. எத்தனையோ ஆண்டுகளாக கச்சேரி ரோட்டில் இருக்கிறது ராயர் கஃபே. முன்பெல்லாம் இப்போது இதை நடத்திக் கொண்டிருக்கும் சகோதரர்களின் தந்தை கவனித்துக் கொண்டார். எத்தனை பேர் எவ்வளவு ஐட்டங்கள் சாப்பிட்டாலும் அவரவர் கணக்கை மிகத் துல்லியமாக மனதில் வைத்திருப்பார் ராயர். ருசி தவிர ராயர் கஃபேயின் இன்னொரு விசேஷம், இங்கே பரிமாறும் பாங்கு. நம்முடைய தாய் கூட இவ்வளவு பிரியமாகப் பரிமாற மாட்டாள். அவ்வளவு பிரியமாகவும், பாசமாகவும் பரிமாறுவார் ராயர். இன்னொரு முக்கிய விஷயம், விறகு அடுப்பில்தான் சமையல் நடக்கும். அதனால் சமயங்களில் ஈர விறகு என்றால் கஃபே முழுவதும் புகை மண்டி நம் கண்கள் எரியும். ஆனாலும் கண்கள் எரிச்சலை ராயர் கஃபேயின் ருசி காலி பண்ணி விடும். தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் ஹீரோவும் ஹீரோயினும் டூயட் பாட ஆரம்பித்தால் அந்த இடமே புகை மண்டலமாக மாறும். அதற்கான இன்ஸ்பிரேஷன் இந்த ராயர் கஃபேவாகத்தான் இருக்கும் என்று அடித்துச் சொல்வான் என் நண்பன்.

30 ஆண்டுகளுக்கு முன்பு ராயர் கஃபே மைலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே இருந்தது. அப்போது அங்கே அடிக்கடி மணியன், குமுதம் எஸ்.ஏ.பி. போன்ற பிரமுகர்களைப் பார்த்திருக்கிறேன். பிறகு நான் தில்லி சென்ற பிறகும் விடுமுறையில் வரும்போது ராயர் கஃபேவுக்கு செல்லத் தவறுவதில்லை. மேலும், அதற்கு அருகில்தான் ஒரு சந்தில் என் நண்பரின் அச்சகம் இருந்தது. அவரைப் பார்க்க வரும் போதெல்லாம் ராயர் கஃபேதான். பிறகு ராயர் கஃபே இடம் மாறி விட்டது. யாரைக் கேட்டாலும் தெரியவில்லை. பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அது முன்பு இருந்த இடத்துக்கு சற்று எதிரில் உள்ள அருண்டேல் தெருவில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். அப்போதிருந்து வாரம் ஒருமுறை ராயர் கஃபேவுக்கு செல்வேன். அதற்குப் பக்கத்தில் பேயாழ்வார் அவதரித்த ஸ்தலம் இருக்கிறது. இன்னும் உள்ளே போய் பார்க்கவில்லை.

ராயர் கஃபேயின் விசேஷம் என்னவென்றால், 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதன் தரமும் ருசியும் குறையவில்லை என்பதுதான். ஒரே ஒரு மாற்றம், முன்பு இருந்த விறகு அடுப்பு இல்லை. இப்போது எரிவாயு அடுப்பு. ஆனால் இவ்வளவு பிரசித்தி பெற்ற, பழமையான மற்ற உணவு விடுதிகள் காலத்தின் கோலத்துக்கு ஏற்ப இன்று முழுக்க மாறி விட்டன.

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த ராயர்!    — மணக்கும் மயிலாப்பூர் மெஸ்

காபி சாப்பிட்டீங்களாண்ணா? டிபன் சாப்பிட்டீங்களாண்ணா?” என்று வாடிக்கையாளர்களை உறவினர்போல் உபசரித்துக்கொண்டு இருக்கிறார் மயிலாப்பூர் ராயர் மெஸ் உரிமையாளர் குமார். ‘இது ஏதோ சினிமா காமெடி டயலாக்’ என்று நாம் யோசித்தால், ”ஆமாம்ண்ணா, இங்கே சாப்பிட வர்றவங்களை, விருந்தாளி கணக்கா கவனிப்போம். ‘சார்’ போட்டு சொன்னா, அந்நியமாத் தெரியும்ங்கிறதால ‘டிபன் சாப்பிட்டீங்களாண்ணா?, காபி சாப்பிட்டீங்களாண்ணா?’னு கேட்போம். இதைத்தான் சினிமா வில் காமெடி பண்ணிட்டாங்க!” என்று சிரிக்கிறார் குமார். கச்சேரி சாலையை ஒட்டி உள்ள  அருண்டேல் தெரு சந்துக்குள்  15 பேருக்கு மேல் அமர முடியாத அறைக்குள், அமைந்து இருக்கும் ராயர் மெஸ் மயிலாப்பூரின் அடையாளங்களுள் ஒன்று.

 ”ஆரம்பத்தில் ராயர் கஃபேனு இருந்துச்சு. இப்போ ராயர்ஸ் மெஸ். பேரை நாங்க மாத்தலை. எம்.ஜி.ஆர். மாத்த வெச்சிட்டாரு. எம்.ஜி.ஆர். முதல்வரா இருந்தப்ப, ‘சின்ன ஹோட்டல்களுக்கு, கஃபேனு பேரு வைக்கக் கூடாது. மெஸ்னுதான் பேர் வைக்கணும்’னு சட்டம் போட்டாரு. அப்ப மாத்தினோம்ண்ணா.

எங்களுக்குப் பூர்வீகம் கர்நாடக மாநிலம். அப்பா 70 வருஷம் முன்னாடி மெட்ராஸ் வந்து இந்த டிபன் கடையை ஆரம்பிச்சார். கர்நாடகாவில் இருந்து வந்தவங்களை ராயர்னு சொல்வாங்க. அதான் ‘ராயர்ஸ் கஃபே’ங்கிற பேர்லயே ஹோட்டல் ஆரம்பிச்சோம்!” என்று பூர்வீகம் சொல்லிவிட்டு தற்போதைய நிலவரம் சொல்கிறார் குமார்.

”சந்துக்குள்ள இருந்தாலும், தேடி வந்து சாப்பிட்டுப் போற வி.ஐ.பி-கள் நிறைய இருக்காங்க. ‘டேஸ்ட் நாக்குல ஒட்டிக்கிச்சுண்ணா’னு எல்லாரும் மறக்காம சொல்லிட்டுப் போவாங்க. ஜெயகாந்தன், பிரபஞ்சன் தொடங்கி எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதானு எழுத்தாளர்கள் பலர் எங்க ரெகுலர் வாடிக்கையாளர்கள். எம்.ஜி.ஆர்.முதல் வர் பதவிக்கு வர்றதுக்கு முன்னாடி மெயின் ரோட்ல  காருக்குள்ள  உட் கார்ந்துக்கிட்டே எங்க கடை டிபனை வாங்கிச் சாப்பிடுவாரு. முதல்வரான பிறகு பார்சல் வாங்கி வரச் சொல்லி சாப்பிடுவார்.

அப்போ இருந்து இப்போ வரை ‘துக்ளக்’ சோ வந்து சாப்பிடுவார். விவேக், ஜீவன்னு ஏகப்பட்ட நடிகர்களும் இங்க வாடிக்கையா வந்து சாப்பிடுவாங்க. கிரேஸி மோகன் ரெகுலரா இங்கே வருவார். அவரோட நாடகத்துல கூட யாராவது, அடிக்கடி அண்ணானு சொன்னா, ‘யோவ், என்னயா இது ராயர்ஸ் கஃபேவா?’னு கிண்டல் பண்ணுவார்!” என்றவர், ”ரெண்டே ரெண்டு நிமிஷம்ங்கண்ணா” என்றபடி வடை மாவை உருட்டி கைகளில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கிறார். சமைப்பது, பரிமாறுவது, கல்லாவில் காசு வாங்கிப் போடுவது என சகல வேலைகளையும் குமார் மட்டுமே செய்கிறார். தண்ணீர் கொடுப்பது, இலை போடுவதற்கு மட்டும் இருவர் உதவிக்கு இருக்கிறார்கள்.

வடை சுட்டு முடித்துவிட்டு, அடைக்கு மாவு பிசைந்து கொண்டே தொடர்கிறார் குமார். ”காத்திருந்து சாப்பிடற அளவுக்குக் கூட்டம் வருதே, கடையை விரிவாக்கலாமேனு சொல்றாங்க. ஆனா, எங்க வெற்றியே இந்தச் சின்னக் கடையில்தான் இருக்கு. அதனாலதான் ஒவ்வொருத்தரையும், கவனிச்சு பரிமாற முடியுது. பணம் மட்டும் முக்கியமில்லைங்ண்ணா. நாம செய்யறத் தொழில் மத்தவங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கணும்.  அதுதான் நிரந்தர செல்வம். அந்தச் செல்வத்தை யாராலும் அழிக்க முடியாதுண்ணா!” என்று தத்துவம் சொல்கிறார்.

Advertisements

3 thoughts on “ராயர் கஃபே – இவர்கள் பார்வையில்…

 1. Raghunathan July 29, 2014 at 10:40 AM Reply

  ராயர் கஃபே…………….என் பார்வையில்….

  “ அது இன்னும் இருக்கிறதாம். ஒரு நாள் போய்ப்பாக்கணும்”

  “ இல்லியே, கச்சேரி ரோடு முழுக்க ரெண்டு மூணு தரம் வலம் வந்துட்டேன் அன்னிக்கி! கண்ணுல தட்டுப்படலியே!”

  “ இப்போ கச்சேரி ரோடுல இல்ல. உள்ள தள்ளி எங்கியோ இருக்காம்”

  ”நான் கண்டு பிடிச்சுட்டேன்! பக்கத்துல அருண்டேல் தெருன்னு ஒரு சின்ன சந்து, அங்க இருக்கு!”

  கச்சேரி ரோடுலேர்ந்து சரேலெனத் திரும்பும் அந்த சந்தில் ஒரு கார், எருமை மாடு. டாப் கிழிந்த ஒரு ஆட்டோ, சைக்கிள், மற்றும் ஏப்பம் விட்டுக்கொண்டு, குடுமி வைத்த அய்யங்கார் – ஒரே சமயத்தில் எதிரும் புதிருமாக, பின் நவீனத்துவக்கதைகளில் வருவது போல ஒரே குழப்படியாக இருந்தது.

  முதலில் தாண்டிப்போய் விட்டோம்.

  தெரு முக்கு வீட்டில் கண்ணாடியுடன், ஈரத்தலையை ஆற்றிக்கொண்டிருந்த மாமியிடம் கேட்ட போது ஏதோ கெட்ட காரியம் பண்றவாளப்பாக்கறா மாதிரி பார்த்துக்கொண்டே, நிஷித்தமாக “ அங்க போய் திரும்பி சின்ன சந்தில உள்ள போகணும்.”

  விருட்டென உள்ளே போய்விட்டார்.

  ” தின்னு நாசமாய்ப்போங்கோ” என்று மனசுக்குள் சொல்வது போல இருந்தது.

  வாசலில் போய் நின்றோம்.

  மைலாப்பூரின் சமன் ரெப்ரசண்டேஷனாக சிறிய கூட்டம் காத்துக்கொண்டு இருந்தது.

  உள்ளே இரைச்சலாக இருந்தது. பேச்சுக்குரல்கள், ஆவி சத்தம், டம்ளர் வைக்கப்படும் ஓசை, நாற்காலி இழுக்கப்படும் நாராசம், தோசையின் சொய் எல்லாம் கலந்து கட்டி ஒரு மெட்லி.

  இட்லி வாசம், வெங்காய சாம்பார்,கூடவே லேசாக மனுஷ்ய கோமியம்..

  எச்சல் இலைகளை ஒரு சேர தூக்கிக்கொண்டு வந்த பையன் எங்களைக் கடந்து போனபோது, அந்த குப்பையிலிருந்து விழுந்தது ஒரு துண்டு வடை, பச்சை மிளகாயுடன்!

  லொக் லொக்கென்று இருமிக்கொண்டு கையில் பெரிய தோசை திருப்பியுடன் ஒரு மலையாலத்துண்டு முண்டா பனியன் ஆசாமி வேர்வையுடன் வெளியே வந்து இன்னும் கொஞ்சம் இருமி விட்டு ஓரமாக இருந்த காதில்லா அழுக்குப்பச்சை பக்கெட்டில் ”கர்ரெ”ன்று துப்பி விட்டு உள்ளே போனார்.

  “ஒரே கூட்டம், இன்னொரு நாள் வரலாம்” என்று போலியாகச் சொல்லி விட்டு கிளம்பிவிட்டோம்.
  .

 2. bganesh55 July 30, 2014 at 12:25 AM Reply

  பிரபலங்களின் விருப்பக் கடையா இது..? மொத்த விஷயமுமே புதுசு எனக்கு.

 3. Chandramowleeswaran V July 30, 2014 at 1:21 AM Reply

  ராயர் மெஸ். சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருது. முன்பு கச்சேரி ரோடு போலிஸ் ஸ்டேஷன் சமீபத்தில் இருந்தது. இப்போது அருண்டேல் தெருவில் இயங்குது. போஸ்டாஃபீஸ் சமீபம்.

  தொபே எண் : 24670519 உரிமையாளர்கள் மோகன், குமார் ., மொபைல் எண் 9382118126
  No 13/1, Near Kutchery Road Post Office, Arundale Street, Mylapore, Chennai – 600004

  உரிமையாளர்களின் போட்டோவை இங்கே தந்திருக்கேன்.

  ஒரு சரித்திர ஆராய்ச்சிக்கு உதவிய‌ திருப்தியோடு நிறைவு செய்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s