சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்! – என்.கணேசன்


ganesan

1.அந்த இளைஞனுக்கு வித்தியாசமாக கார்ட்டூன்கள் வரையும் திறமை இருந்தது. ஆனால் அவன் பல பிரபல பத்திரிக்கைகளில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் அவனுக்கு சரியாக வரையத் தெரியவில்லை என்ற காரணம் கூறி வேலை தர மறுத்து விட்டார்கள். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக சில காலம் வேலை பார்த்தான். அவன் சகோதரன் சிபாரிசின் பேரில் இடை இடையே விளம்பரங்களுக்கு சில ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதைச் செய்து கிடைத்த சொற்ப சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான் அந்த இளைஞன்.

ஒரு முறை ஒரு சர்ச் பாதிரியார் சில ஓவியங்கள் வரைந்து தரும் வேலையைக் கொடுத்து அதற்காக சர்ச் அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தையும் அவனுக்கு ஒதுக்கிக் கொடுத்தார். அந்தக் கட்டிடத்தில் எலிகளின் தொல்லை மிக அதிகமாக இருந்தது. அமைதியாக வரைவதற்குச் சாதகமான இடமாக அது இல்லை. குறிப்பாக ஒரு சுண்டெலியின் அட்டகாசம் மிக அதிகமாக இருந்தது. அப்படி ஒரு மோசமான சூழ்நிலையிலும் அந்தச் சுண்டெலியால் கவரப்பட்ட இளைஞன் அந்த சுண்டெலியையே ஒரு நிலையான கதாபாத்திரமாகப் பின்னாளில் படைத்து விட்டான். அந்த இளைஞனின் பெயர் வால்ட் டிஸ்னி. அவன் படைத்த பாத்திரம் மிக்கி மவுஸ். பல கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை வால்ட் டிஸ்னிக்கு சம்பாதித்துக் கொடுத்ததும் அந்த மிக்கி மவுஸ் தான்!

மற்றுமொரு எடுத்துக்காட்டாக ஒரு அமெரிக்க முதியவரைப் பார்ப்போம். அறுபது வயதில் இருந்த வேலையும் போய், சேமித்த செல்வமும் பெரிதாக ஏதும  இல்லாமல் தன் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியான நிலையில்  இருந்தார் அவர். தம் இளமைப் பருவத்திலிருந்தே சந்தித்த சோதனைகள் ஏராளம். தந்தையைச் சிறு வயதிலேயே பறி கொடுத்து, தாய் வேலைக்குப் சென்று சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே சிறுவனாக இருக்கும் போதே தாய்  பணி நிமித்தம் வெளியே சென்றிருக்கும் வேளையில் மற்ற சகோதர சகோதரிகளைப் பராமரிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது.  அம்மா வீட்டில் இருக்கையிலும் சமையலில் அவருக்கு உதவும் பொறுப்பும் இருந்தது.

அம்மாவிற்கு உதவியதால் சமையல் அவருக்கு நன்றாக வந்தது. எனவே ஓட்டல்களில் சமையல்காரராக வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்தினார். பின் ஒரு சிறிய நகரத்தில் ஒரு சிறிய உணவு விடுதியை நடத்தினார். அவர் தாயாரின் கைப்பக்குவத்தில் அவர் கற்றிருந்த சிக்கன் வருவல் வாடிக்கையாளர்களிடம் மிக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த நகரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அவர் அந்தக் கடையையும் மூட வேண்டி வந்தது. அப்போது அவருக்கு வயது அறுபதைத் தாண்டி இருந்தது. வயதானவர்களுக்கு அரசாங்கம் தரும் பாதுகாப்புத் தொகை 100 அமெரிக்க டாலர்களில் வாழ்க்கை நடத்த முடியாமல் வேறு வழியும் தெரியாமல் தவித்தார்.

தனக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்த சிக்கன் வருவலை அமெரிக்க ஓட்டல்களுக்கு விற்கத் தீர்மானித்தார். நாடெங்கும் பயணித்து பெரிய ஓட்டல்களுக்குச் சென்று அங்கேயே சிக்கன் வருவலைத் தயாரித்து சுவைக்கத் தந்து  பார்த்தார். ஆனால் அந்த ஓட்டல்கள் அவருடைய சிக்கன் வருவலில் ஆர்வம் காட்டவில்லை. ஒன்றல்ல இரண்டல்ல 1008 ஓட்டல்கள் நிராகரித்தன. கடைசியில் 1009 ஆவது ஓட்டல்காரர் பீட் ஹார்மன் என்பவர் அதில் ஆர்வம் காட்டினார். அவருடன் கூட்டு சேர்ந்து “Kentucky Fried Chicken” என்ற தொழிலை 1952 ஆம் ஆண்டு உருவாக்கினார் அந்த முதியவர். அவர் பெயர் கர்னல் ஹார்லாண்ட் சாண்டர்ஸ். 1960 ஆம் ஆண்டில் 600 க்கும் மேற்பட்ட கிளைகள் உருவாகி அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசூலில் பெரும் சாதனை படைத்தது அவருடைய சில்லி வருவல். 1964 ல் தன் நிறுவனத்தை இருபது லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றார் கர்னல் சாண்டர்ஸ். கடைசி வரை பெரும் செல்வந்தராகவே வாழ்ந்த அவர் 1976 ல் உலகின் பிரபலமானவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தார்.

சோதனைகளைக் கடக்காமல் சாதனைகள் இல்லை. வெற்றியின் அளவு பெரிதாகப் பெரிதாக சோதனைகளின் அளவும் பெரிதாகவே இருந்திருக்கின்றன. இன்று நம்மை பிரமிக்க வைக்கும் அத்தனை வெற்றியாளர்களும் இப்படி பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்தவர்களே.

வெற்றிக்குத் திறமைகள் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. மேலே சொன்ன உதாரணங்களில் வால்ட் டிஸ்னியும், கர்னல் சாண்டர்ஸும் தங்கள் வெற்றிக்கான திறமைகளை ஆரம்பத்திலேயே பெற்றிருந்தார்கள். ஆனால் உலகம் அவர்களை அங்கீகரிக்க நிறையவே காலம் எடுத்துக் கொண்டது. அது வரை அவர்கள் கண்டது சோதனைக் காலங்களே. அந்தக் காலத்தில் அவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருந்தால் வரலாற்றில் அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருப்பார்கள். சோதனைக் காலங்களே இல்லாமல் போயிருந்தாலும் அவர்கள் இப்படி முத்திரை பதிக்குமளவு சரித்திரம் படைத்திருக்க மாட்டார்கள்.

வால்ட் டிஸ்னிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பிரபல பத்திரிக்கை கார்ட்டூனிஸ்டாக வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர் ஒரு நல்ல வருவாயுடன் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவராக இருந்திருக்கலாமே ஒழிய கோடிக்கணக்கான செல்வம் படைத்து புகழையும் பெற்றிருக்க முடியாது. கர்னல் சாண்டர்ஸ் அந்த சிறிய நகரத்தில் நடத்தி வந்த உணவு விடுதியை மூட நேர்ந்திரா விட்டால் ஓரளவு வசதியான சம்பாத்தியம் செய்து நடுத்தர வாழ்க்கையை ஓட்டியிருக்கலாமே ஒழிய இத்தனை செல்வத்தையும், புகழையும் அடைந்திருக்க முடியாது.

உண்மையில் சோதனைக் காலங்கள் அர்த்தம் மிகுந்தவை. அந்தக் காலத்தில் தான் உண்மையில் ஒருவன் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான். அந்தக் காலத்தில் தான் விதி அவனுக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. சோதனைக் காலங்களின் பாடங்கள் இல்லாமல் யாருமே வெற்றிக்கான பக்குவத்தைப் பெற்று விடுவதில்லை. எனவே மாபெரும் வெற்றியை விரும்புபவர் எவரும் சோதனைக் காலத்தில் சோர்ந்து விடக்கூடாது.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவருக்கு

–சுடச் சுட தங்கம் ஒளிர்வதைப் போலத் துன்பத்தைத் தாங்கத் தாங்க தவம் செய்பவர்கள் சிறப்படைவர். (திருக்குறள் புதிய உரை – சுஜாதா)

என்று வள்ளுவர் கூறுவது போல் நெருப்பிலே இட்டு சுடச்சுடத் தான் தங்கம் மின்னும். மனிதனும் சோதனைகள் மூலமாகவே சாதனைகளுக்கான வழியைக் கற்றுக் கொள்கிறான். சோதனைக் காலத்தில் சோர்ந்து விட்டால் அந்தக் காலம் காட்டும் புதுப் பாதைகள் நம் கண்ணில் படாமலேயே இருந்து விடக்கூடும்.

விதி சோதிக்கும் போது பெரிய வெற்றிக்கு இந்த மனிதன் தகுதி உள்ளவன் தானா என்று கூர்ந்து கவனிக்கிறது. புலம்புவதும், குற்றம் சாட்டுவதுமாகவே அவன் இருந்து விடுகிறானா இல்லை தாக்குப் பிடிக்கிறானா என்றும் கவனிக்கிறது. தாக்குப் பிடித்து மனிதன் தன் தகுதியை நிரூபிக்கும் போது பிறகு விதி அவனுக்கு வழி மட்டும் காட்டுவதில்லை. பின்னர் அவனிடம் மிகவும் தாராளமாகவே நடந்து கொள்கிறது. அவன் எதிர்பார்த்ததற்கும் பல மடங்கு அதிகமாகவே அவனுக்கு வெற்றியைத் தந்து அவனைக் கௌரவிக்கிறது.

எனவே சோதனைகள் வரும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். தாக்குப் பிடியுங்கள். பாடம் படியுங்கள். பக்குவம் அடையுங்கள். ஒரு கட்டத்தில் எங்கோ ஒரு கதவு கண்டிப்பாகத் திறக்கும். அதன் வழியாகப் பயணித்து சோதனையைக் கடந்து சாதனை படையுங்கள்.

–நன்றி வல்லமை

நூலின் பெயர் – வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
நூலின் ஆசிரியர் – என்.கணேசன்
நூல் வெளியான ஆண்டு – 2013
பக்க எண்ணிக்கை – 141
விலை – ரூ-110/-
பதிப்பக முகவரி – BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No 7/1 3rd Avenue, Ashok Nagar,
Chennai-600 083
Tel : 044 43054779

நூலின் ஆசிரியர் பற்றி:

நூலின் ஆசிரியர் என்.கணேசன் அவர்கள் கோவையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிகிறார். வேலை மற்றும் குடும்ப கடமைகளின் மத்தியிலும் படிப்பவர்களை மேம்படுத்தும் விதமாக சிறு கதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை தொடர்ந்து எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்கள் தன்னம்பிக்கை, மன அமைதி, நற்பண்புகள், அறிவார்ந்த ஆன்மீகம் போன்ற நல்ல விஷயங்களை உணரச்செய்வதுடன் அவற்றை ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பின்பற்ற தூண்டுகிறது.

இந்த நூல் யாருக்காக?

சிலர் தங்கள் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் சில மனிதர்களாலும், இக்கட்டான சூழ்நிலைகளாலும் எதிர்பாரா சம்பவங்களாலும் மிக முக்கியமான தன்னம்பிக்கை, மன அமைதி,காலம் ஆகியவற்றை இழந்து விரக்தி அடைகிறார்கள். அதன் பின் என்ன வாழ்க்கை இது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? இதற்கு சுற்றி இருப்பவர்கள் காரணமா இல்லை என்னுடைய வாழ்க்கை முறை தான் காரணமா ? நான் காரணமென்றால் வாழ்கையைச் சரியாக வாழ்வது எப்படி ? போன்ற கேள்விகள் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தேடுபவர்களுக்கு இந்நூல் ஒரு விலைமதிப்பில்லா பொக்கிஷமாகும்.

சிலர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த அனுபவங்கள் உணர்த்தும் உண்மைகளை தவற விட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

வாழ்க்கையை வாழத் தொடங்குபவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாகும்.

இயல்பாகவே கற்றுக்கொள்ளும் திறனாலும்,வளர்ப்பு முறையாலும், சூழ்நிலையாலும் வாழ்க்கையை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்நூல் மற்றவர்களுக்கு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும்.

 

Advertisements

One thought on “சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்! – என்.கணேசன்

  1. R. Jagannathan July 11, 2014 at 8:11 AM Reply

    நாம் எத்தனையோ படிக்கிறோம், ஆனால் வாழ்க்கையை நடத்த அனுபவ அறிவும் விடா முயற்சியும் தேவை என்பது இந்த இருவர் வெற்றிகளாலேயே புரிகிறது! அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அந்த வள்ளுவர் தன் ஒரு வாழ்க்கையிலேயே ஏழை, சாதாரணன், பணக்காரன், அரசன், மந்திரி, படை வீரன், நண்பன், பகைவன், காதலன், காதலி, என்று எத்தனை வாழ்க்கைகளை வாழ்ந்து இவ்வளவு குறள்களை, இத்தனை சிக்கனமாக பொருள் செறிந்து எழுதினார் என்பதுதான்! – ஜெ.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s