56-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


அடையாறு பிள்ளையார் கோயிலுக்கு ஒருமுறை ஸ்வாமிகள் விஜயம் செய்திருந்தார்கள்.அவர்கள் வருகையை முன்கூட்டி அறிந்த ஒரு பக்தர்,  கோவில் முன்னால் பந்தல் அலங்காரம் செய்ய விரும்பினார்.  ஆகவே அவருடைய நண்பரான சங்கு மார்க் லுங்கி நிறுவன அதிபர் ஹாஜி ஸையித் அப்துல் காதிர் அவர்களை அணுகி, அந்தச் செலவை ஏற்குமாறு அவரை கேட்டுக்கொள்ள, அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார்.  குறிப்பிட்ட நாளன்று பந்தல் ஜோடனையும், மலர்களும், வண்ண விளக்குகள் அலங்காரமும் எதிர்பார்த்ததை விட வெகு நேர்த்தியாக அமைந்திருந்தது.  அதேமாதிரி அதற்கான செலவும் எதிர்பார்த்ததைவிடப் பல மடங்கு அதிகமாகிவிட்டது.மகாஸ்வாமிகள் அந்த மலர் அலங்காரத்தைப் பார்த்துவிட்டு,  “இதெல்லாம் யார் செய்தது?” என்று கேட்டார்கள். ‘அதில் ஏதும் தவறு நேர்ந்துவிட்டதோ‘  என்று பயந்த அன்பர்கள் பூ ஜோடனை செய்தவரை முன்னால் நிறுத்தி,  ‘இவர்தான் இதெல்லாம் செய்தார்.  இதற்குப் பண உதவி செய்தவர் ஒரு முஸ்லிம் அன்பர்”  என்றனர்.“அந்த முஸ்லிம் அன்பரை முடிந்தால் வரச்சொல்.  அவரை நான் பார்க்க விரும்புகிறேன்”  என்றார் ஸ்வாமிகள்.

சங்கு மார்க் அதிபரின் நண்பர்,  ஸ்வாமிகளை அவர் சந்திக்க முயற்சி எடுத்துக் கொண்டார்.  “சரி.  அப்புறம் வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கலாம்”  என்று சொல்லிவிட்டார் பாய்.

இது நடந்து எட்டு வருஷங்கள் ஆகி விட்டன.  இதற்கிடையில் நோய்வாய்ப்பட்டிருந்த அந்த நண்பரும் (பக்தர்) இறந்துவிட்டார்.  இதற்குப் பிறகுதான் சங்கு மார்க் பாய்க்கு காஞ்சீபுரம் வரும் சந்தர்ப்பம் கிடைத்தது.  ஸ்ரீ மடத்திற்கும் வந்தார்.

ஸ்வாமிகளிடம் இதைத் தெரிவித்ததும்,  “இருக்கச் சொல்”  என்றார்கள்.  தமது நித்ய அனுஷ்டானங்கள்,  பூஜை முதலியவற்றை முடித்துக் கொண்டு வந்தார்கள்.  தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் எல்லாருக்கும் ஆசி வழங்கியவாறு நடந்த ஸ்வாமிகளிடம்,  பாய் வருகையை தெரிவித்தனர்.  “இருக்கட்டும்,  சந்திக்கிறேன்”  என்ற பாவனையில் ஸ்வாமிகள் சைகை செய்தார்.

பிறகு சற்று நேரத்தில் பாய் அருகில் வந்தார்கள்.  சங்கு அதிபரைச் சற்று நேரம் ஏற இறங்கப் பார்த்தார்கள்;  மிகவும் கூர்ந்து பார்த்தார்கள்.  ஹாஜிபாய் அப்போது வழக்கமான லுங்கி, ஷர்ட் அணிந்திருந்தார்.

“வயசு எத்தனை ?”  என்று ஸ்வாமிகள் வினவினார்கள்.

“ஐம்பத்தெட்டு”

“தவறாமத் தொழுகிறாயா ?”

“தொழுகிறேன்”

“ஆறுமுறையும் தொழவேண்டும்”

“ஐவேளைத் தொழுகை தான் கட்டாயக் கடமை;  அதனால் ஐந்து வேளைகள் தொழுது வருகிறேன்.”

“இல்லை,  நீ ஆறு முறையும் தொழவேண்டும்.”

“விரதமெல்லாம் ஒழுங்காகக் கடைப்பிடிப்பதுண்டா ?”

“சின்ன வயசிலிருந்தே ரமலான் மதத்தின் நோன்பு முழுவதையும் தவறாமல் நோற்று வருகிறேன்.”

“”அதேமாதிரி நோற்று வரவேண்டும் ”  என்று கூறிவிட்டு,  பாயின் வயிற்றைக் காட்டி,  “பசிச்சவனுக்குத் தான் பசியின் அருமை தெரியும்,”  என்றார்கள்.

அவர் விடைபெற்றுக்கொண்டு புறப்படும்முன்,  அவருக்கு ஒரு சாதரா போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

அதன் பின்னர் ‘முஸ்லிம் முரசு‘  என்ற பத்திரிகை ‘ஸ்வாமிகளை சந்தித்தது பற்றி‘  சங்கு மார்க் அதிபரைப் பேட்டி கண்டு  கட்டுரை வெளியிட்டிருந்தது.  அதிலிருந்து ஒரு பகுதி:

“ஆறு முறை தொழ வேண்டும் என்று காஞ்சிப் பெரியவர் சொன்ன அறிவுரைக்குப் பிறகே நீங்கள் ஆறு முறை தொழுவதாக வேறொரு பத்திரிகைக்கு நீங்கள் அளித்த பேட்டியில் சொல்லப்பட்டிருக்கிறதே,  அப்படியானால் அதுவரை உங்களை அவ்வாறு செய்யத் தூண்டுமளவுக்கு இஸ்லாமிய அறிவுரைகள் அமையவில்லை எனக் கொள்ளலாமா ?”

“அது என் இதயத்தில் விழுந்த சாட்டையடி.  அமைதியாக,  ஆனால் ஆழமாக அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தைகள் என் உள்ளதைத் தொட்டு விட்டன.  அவர் சொன்னார் என்பதற்காக நான் தொழுகிறேன் என்று அர்த்தமல்ல.  நியாயமாக ஐவேளையும் நான் தொழுது வருபவன் தான்.  மக்காவிலும், மதீனாவிலும் தஹஜ்ஜத்துத் தொழுகைக்கு (ஆறாவது வேளையாகப் பேட்டியில் குறிப்பிடப்படும் தொழுகை)  தனியாகப் பாங்கு சொல்லப்பட்டு அதுவும் ஒரு கடமையான தொழுகையைப் போன்று தொழப்படுவதாகக் கண்டிருக்கிறேன்.  இங்கே வந்த பிறகும் நான் அவ்வாறே  தஹஜ்ஜத்துத் தொழுகையும் நியமமாகத் தொழுதிருக்க வேண்டும்.  ஆனால் தொழவில்லை.  அதை அழுத்தமாக ஞாபகப்படுத்தும் விதத்தில் அவர் அந்த வார்த்தைகளைச் சொன்னதும் என் இதயம் கசிந்து விட்டது.  இங்கே இன்னொன்றையும் நான் சொல்லியாக வேண்டும்.  நான் முன்பு தப்லீக்கில் மிகவும் ஈடுபாடு கொண்டு பல இடங்களுக்கும் சுற்றியவன்.  ஒரு தடவை அங்கப்ப நாயக்கன் தெரு,  மஸ்ஜிதே மமூர் பள்ளி வாசலில் தப்லீக் பயான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அன்று அந்த வேலை எனக்கு வருமான வரி சம்பந்தமான முக்கிய வேலை இருந்தது.  அதற்கு நான் அவசியம் போயாக வேண்டும்.  எனவே, எழுந்து செல்ல எண்ணும்போது,  ‘பயான்’ செய்து கொண்டிருந்தவர் சொன்னார்;  “இந்தப் பயான் முடியும் முன்னால் இங்கிருந்து யாரும் எழுந்து சென்றால் அவர்கள் நாடிச் செல்லும் காரியம் கைகூடுமா ?”  என்று அவர் சொன்னது என்னைப் புண்படுத்தியது.  ஏன் இப்படி இவர்கள் வலுக்கட்டாயமாக வார்த்தைகளை விட்டு இம்சைப்படுத்துகிறார்கள்  என்ற எண்ணம் தான் வளர்ந்தது.  அப்படி அவர் சொன்னது எனக்கு ஒரு மௌடீகமாகவே பட்டது.  அவர்களின் அணுகுமுறை எனக்குப் பிடிக்கவில்லை. அதிலிருந்து நான் தப்லீக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டேன்.  அறிவுரை சிறப்பாக இருந்தாலும் அதைச் சொல்ல வேண்டிய முறையில் நளினமாகச் சொல்லா விட்டால் பலன் எதிர்மாறாகி விடுகிறது.  அதற்காகத் தான் இந்தச் சம்பவத்தைச் சொன்னேன்.  அடுத்த கேள்வி ?”

“திரு கஅலூபாவையும், திரு ரவ்ழாவையும் பார்க்கின்ற பாக்கியத்தைப் பெற்ற நீங்கள் அந்தப் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியதைப் பெரும் பேறாகக் கொள்ள வேண்டிய தாங்கள்,  …..  “அந்த சாந்த முனிவர் என் மேல் அன்புகொண்டு ஆசீர்வதித்ததை நான் என் வாழ்நாளில் கிட்டிய பெரும்பேறாகக் கருதுகிறேன்’  என்று சொன்னது சரியா ?”

இந்தக் கேள்விக்கு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டு, “பஷீர் மௌலானாவை சந்தித்ததையும் சொல்லியிருக்கிறேனே ?”  என்றார் ஹாஜியார்.

“அதுசரி.  அதெல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்புகள் என்று குறிப்பிடத் தக்கவையே தவிர, அதைப் பெரும்பேறு என்ற நிலையில் அவ்வளவு பொருத்தமாக இல்லை என்பது என் கருத்து.”

“வேறு கேள்விகள் உண்டா ?”

“இல்லை.  போயிட்டு வர்றேன்.  அஸ்ஸலாமு அலைக்கும்.”

“வஅலைக்குமுஸ்ஸலாம் “

மஹா பெரியவா அருள்வாக்கு : –

”குரங்கு புத்தி’ என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் சித்தம் க்ஷணகாலங்கூட நிற்காமல் ஸதாஸர்வதா ஒன்று மாற்றியொன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு உதாரணம் அதுதான். இதனால்தான் மனுஷ்யர்களான நம் சித்தமும் எதிலும் கட்டுப்பட்டு நிற்காமல் சாஞ்சல்யமயமாக இருக்கிறபோது ‘குரங்கு புத்தி’ என்கிறோம்.

ஹ்ருதய – கபிம் அத்யந்த சபலம்

என்று ஆசார்யாளே சொல்கிறார் (சிவானந்தலஹரி – 20).  ‘பரமேச்வரா! ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக் கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துப் போ ! வெறுமனே கபாலத்தை வைத்துக் கொண்டு பிச்சை கேட்பதைவிட இப்படி ஒரு வித்தை, கித்தை செய்து காட்டினாயானால், உனக்கும் நல்ல வரும்படி வருகிற பிழைப்புக் கிடைக்கும்; நானும் பிழைத்துப் போவேன்’ என்று பரமேச்வரனிடம் அவர் வேடிக்கையாக ப்ரார்த்திக்கும் போது, ‘ஹ்ருதய கபி’ அதாவது ‘மனக்குரங்கு’, என்கிற வார்த்தையைப் போட்டிருக்கிறார்.

வெள்ளைக்காரர்களும் ‘மன்கி மைண்ட்’ என்கிறார்கள்.

கட்டுப்பாடேயில்லாமல் ஸதா ஸர்வகாலமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம்.

 

Advertisements

2 thoughts on “56-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. Vathsala July 6, 2014 at 9:01 AM Reply

    Excellent!

  2. mahesh July 19, 2014 at 1:10 PM Reply

    Reblogged this on Sage of Kanchi and commented:
    Never read this before….Amazing incident…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s