53-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


Periyavaa4

பெரியவாளின் மகிமையையும் ஞானத்தையும் விளக்கும்படியாக இன்னொரு சம்பவம்!

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவாளின் தீட்சண்யத்தை- தீர்க்கதரிசனத்தை விளக்கும் அந்த நிகழ்வை நம்மோடு பகிர்ந்துகொண்டவர் வைத்தியநாதன். சங்கர பக்த ஜன சபாவின் செயலாளரான இவர், தமது இளவயது முதற்கொண்டே மகா பெரியவாளின் அணுக்கத்தில் இருந்த அடியவர்.

இவரின் சிலிர்ப்பான அனுபவத்தை ஒரு விறுவிறுப்பான கதையாகவே இங்கே காண்போம்…

அது, மாசி மாதத்தின் வைகறைப் பொழுது. மார்கழியில் துவங்கிய குளிர் இன்னும் விட்டபாடில்லை. முகம் தெரியாத இருட்டை, தீவட்டி வெளிச்சத்துடன் ஊடறுத்தபடி, வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம்.

முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம்… மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி நத்தம் என்ற இடத்தை அடைந்தபோது, பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம்.

அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன.

மெயின் ரோட்டில் இருந்து இடதுபுறமாகத் திரும்பி பயணிப்பதுதான் திட்டம். ஆனால், பல்லக்கின் உள்ளே இருந்து மீண்டும் தண்டத்தால் தட்டும் சத்தம் கேட்டது. அந்த சமிக்ஞை மூலம், ஊர்வலம் வலப்புறமாகத் திரும்ப உத்தரவாகி விட்டதைப் புரிந்துகொண்டார் மாலி என்ற அன்பர். ஊர்வலம் வலதுபுறமாகத் திருப்பப்பட்டது.

”இது, மண்மங்கலம் போற பாதை ஆச்சே…” – அடியார்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பினார்.

”இப்படிப் போகணும்னு உத்தரவாயிடுச்சுன்னா அதன்படி போயிடணும். நிச்சயமா இதுக்கு ஏதாச்சும் காரண-காரியம் இருக்கும்” – அடியவர் மாலி சொல்ல, அதன் பிறகு எவரிடம் இருந்தும் வேறு கேள்வி எழவில்லை.

மண்மங்கலம் கிராமம் இன்னும் முழுமையாக விழித்துக்கொள்ளவில்லை. அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அம்மாள், திண்ணை மாடத்தில் அகல் விளக்கேற்றி வைத்தார். அப்படியே இன்னொரு விளக்கை பெருமாள் கோயில் வாசற்படியில் ஏற்றிவைத்துவிட்டு வந்து, தனது வீட்டுவாசலில் நீர் தெளித்துப் பெருக்க ஆரம்பித்தார். அதே நேரம்… தூரத்தில் ஏதோ பெரிய ஊர்வலம் வருகிற மாதிரி சத்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். குதிரையும் யானையுமாக பல்லக்கு ஊர்வலம் ஊருக்குள் வந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.

மிகச் சரியாக அவரது வீட்டுவாசலை பல்லக்கு நெருங்கியதும், மீண்டும் உள்ளே தண்டத்தின் சத்தம். பல்லக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. எத்தனையோ காப்பியங்களிலும் கதைகளிலும் சொல்லி இருக்கிறார்களே, ஆதவனைக் கண்டு தாமரை மலர்ந்ததாக… அப்படியொரு அற்புதத்தை அன்று நிஜமாகவே மண்மங்கலம் கிராமம் சந்தித்தது.

உடம்பாலும் வாக்காலும், மனத்தாலும் செயலாலும் தன்னை முழுவதுமாகப் பரம்பொருளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட அந்தத் தெய்வத் தாமரை, மெள்ள பல்லக்கின் திரையை விலக்கித் தன் திருமுகம் காட்ட… அதன்பின்னரே, இன்னும் தாமதிக்கக்கூடாது என்பதுபோல் சட்டென்று மேகத் திரையை விலக்கி, ஆதவனும் தன் ஒளிக்கிரணங்களை அந்தக் கிராமத்தின் மீது வீசி, தெய்வத் தாமரையின் திருவடிகளைத் தொட்டு வணங்கினான்.

ஆமாம்… அந்தக் கிராமம் செய்த புண்ணியம்… மகா பெரியவா என்ற தெய்வக் கமலம், தமது திருவடிகளை அந்த மண்ணில் பதித்துத் திருவருள் புரிந்தது.

வாசல் தெளித்துகொண்டிருந்த பெண்மணி, இப்படியொரு தெய்வீக தரிசனத்தைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண நேரம் ஸ்தம்பித்து நின்றவள், பிறகு சுதாரித்து உள்ளே ஓடி, கணவரிடம் விஷயத்தைச் சொன்னாள். அவரும் எழுந்து ஓடிச் சென்று, நான்கு சொம்பு தண்ணீரைத் தலைக்கு ஊற்றி அவசர அவசரமாகக் குளித்து முடித்து, விபூதி பூசிக்கொண்டு வருவதற்குள், நிறைகுடமும் பூரண ஆரத்தியும் தயார் செய்துவிட்டிருந்தாள் அந்த மாதரசி.

மகாபெரியவாளுக்கு ஆரத்தி எடுத்து, பாத பூஜை செய்து, அவரை வணங்கி வரவேற்றனர் அந்தத் தம்பதி. சில நிமிடங்களில்… வீட்டின் திண்ணையை அலம்பிச் சுத்தம் பண்ணி, கோலம் இட்டு வைக்க, அங்கே பெரியவா அமர்ந்துகொண்டார்.

இதற்குள் குதிரை, யானை பரிவாரங் களின் சத்தம் கேட்டு ஒட்டுமொத்த ஊரும் விழித்துக்கொண்டு அந்த வீட்டின் முன் திரண்டுவிட்டது. பழத்தட்டுக்களுடனும் மலர் மாலைகளுடனும் சாரை சாரையாக வந்து, மகாபெரியவாளை வணங்கினார்கள். யானை, ஒட்டகங்கள் எல்லாம் ஆற்றங்கரைப் பக்கம் ஓட்டிச் செல்லப்பட, மகாபெரியவாளுடன் வந்த அன்பர்கள் ஊருக்குள் தங்க வசதி செய்து தரப்பட்டது.

‘பெரியவா எப்படி இந்தப் பக்கம் வர நேர்ந்தது?’ என்று எல்லோரும் விசாரிக்கத் தொடங்கினார்கள். தகவல் எதுவும் சொல்லாமல் ஸ்ரீமடத்தில் இருந்து இப்படி திடுதிப்பென்று வரமாட்டார்களே என்று அவர்களுக்கு ஓர் ஐயம்!

”நெடுங்கரைப் பக்கம் திரும்பறதாகத்தான் திட்டம். ஆனா, பெரியவா இந்தப் பக்கம் வரச்சொல்லி உத்தரவு பண்ணினார். வந்துட்டோம். ஏதோ முக்கியமான காரணம் இருக்கும்!” என்று அவர்களுக்குப் பதில் சொன்னார் வைத்தியநாதன்.

மகா பெரியவா இரண்டு நாட்களாக மௌனம் அனுஷ்டிக்கிறார்; அவர் எப்போ வேணும்னாலும் மௌனத்தைக் கலைக்கலாம். ஊர்க்காரர்களுக்கு ஆதங்கம் என்னவென்றால்… மகாபெரியவா வருவது முன்னரே தெரிந்திருந்தால், ஊர் எல்லைக்கே சென்று அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றிருக்கலாமே என்பதுதான். ஆனால், தெய்வ சித்தம் என்ன என்று அவருக்குத்தானே தெரியும்!

ஸ்நானம், பூஜை எல்லாம் முடிந்து எல்லோருக்கும் ஆகாரம் ஆயிற்று. மகாபெரியவா பசும்பாலும் உலர் திராட்சையும் மட்டும் எடுத்துக்கொண்டார். மற்றவர்களுக்கு ஒவ்வொருத்தர் வீட்டிலும் இலை போட்டுப் பாயசம், அப்பளம் என்று உணவு பரிமாறினார்கள். அதற்குள் செய்தியை அறிந்து அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஜனங்கள் வந்து சேர்ந்தார்கள். மாசிமாதம் அறுவடை முடிந்த நேரம் என்பதால் மிராசுதாரர்கள், குடியானவர்கள், தொழிலாளர்கள் என்று எல்லோரும் வந்துவிட்டார்கள். தாமரைப் பூ, இளநீர், வாழைத்தார் என்று ஜனங்கள் தாங்கள் கொண்டுவந்ததை பெரியவா முன் சமர்ப்பித்து வணங்கினார்கள். வயதான ஓர் அம்மாள் தினக்கூலி நெல்லை மடியில் கட்டி எடுத்து வந்திருந்தாள். அதை அப்படியே பெரியவா முன்னே கொட்டி, அவரை நமஸ்காரம் பண்ணினாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கணுமே… அப்படியொரு சந்தோஷம்! காணிக்கைகளால் அந்தத் திண்ணையே நிரம்பிவழிந்தது.

மகா பெரியவாளிடம் முறையிடுவதற்கு அந்த ஜனங்களுக்கெல்லாம் நிறைய விஷயங்கள் இருந்தன. கல்யாணம் ஆகலை, வீடு கட்ட முடியலை, பாகப்பிரிவினைல சிக்கல்… இப்படி ஒவ்வொருத்தரும் தங்களின் குறையை அவர் முன் சமர்ப்பித்தார்கள். ‘வடக்கே  சமயச் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை. ரத்தம் ஆறா ஓடுறது. பெரியவாதான் அமைதி உண்டாக்கி வைக்கணும்.’ – இப்படியும் நிறையக் கோரிக்கைகள்.

மகா பெரியவா எதுவும் பேசவில்லை. எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கை தூக்கி, வந்தவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். சிலருக்கு எலுமிச்சை, துளசி எனப் பிரசாதமும் கிடைத்தது. நேரம் நகர்ந்துகொண்டு இருந்தது. மகா பெரியவாளின் மௌனம் கலையவில்லை. திடீரென மாலியை அருகில் அழைத்து, சைகையால் பேசினார். கைகளால் லிங்கம் போன்றும், கோயில் கோபுரம் போன்றும் அபிநயித்துக் காட்டி, ‘எங்கே இருக்கிறது?’ என்பதுபோல் சைகையால் கேட்டார்.

அதை மாலி புரிந்துகொண்டார். கூட்டத்தைப் பார்த்து, ”இந்த ஊரில் சிவன் கோயில் எங்கே இருக்கு?” என்று கேட்டார்.

அன்பர் மாலியின் இந்தக் கேள்விக்கு, கூட்டத்தில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை.‘இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?”

அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், ‘இங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்கு. அதுபோக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரியலையே?” என்றார். 90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவருக்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லையே!

மகா பெரியவா மறுபடியும் ஏதோ சைகையால் கேட்டார்… ‘மேல் கோடியில பெருமாள் கோயில் இருந்தா, கீழ்க் கோடியில சிவன் கோயில் இருந்திருக்கணுமே?”

நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அங்கே சிவாலயம் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததா என்றால், அதுகுறித்தும் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய தம்பதி அங்கே வந்தனர். தன்னை லத்தீஃப் பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இஸ்லாமிய அன்பர், தன் மனைவியின் பெயர் மெகருன்னிசா என்றும் தெரிவித்தார். தாம் கொண்டு வந்திருந்த இரண்டு சீப்பு பேயன் பழங்களையும், ரோஜாப்பூக்களையும் மகாபெரியவா முன் சமர்ப்பித்தார்.

அவர்களை தலை முதல் பாதம் வரை ஏற இறங்கப் பார்த்தது நடமாடும் தெய்வம். கருணை மிகுந்த அந்தப் பார்வையில் மெய்ம்மறந்து போனார்கள் அந்த இஸ்லாமிய தம்பதியர். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, சிலிர்ப்பான அந்தத் தருணத்தில் இருந்து மீண்டு, லத்தீஃப் பாய் பேசத் தொடங்கினார். அற்புதமான ஒரு தகவலை விவரித்தது அவரது பேச்சு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அங்கே சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. காலமாற்றத்தில் கோயில் சிதிலமாகி, மண்ணுக்குள் புதையுண்டு போனது. கோயில் இருந்த இடமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலப் பல கைகள் மாறி, இப்போது லத்தீஃப் பாயின் வசம் இருக்கிறது.

‘எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களைக் கவனிச்சுக்கும்போது, கூடவே கோயில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக. ஒரு மரக்கால்கூட குறையாம அளந்து கொடுப்பாக. ‘சிவன் சொத்து குலம் நாசம்’னு அவுகளுக்கு இருந்த அதே நேர்மையையும், நல்ல எண்ணத்தையும், புத்தியையும் எனக்கும் கொடுத்திருக்கான் இறைவன். ஆனாலும் என்ன… எனக்குப் பொறந்த ஒரு பெண் பிள்ளையும் மன வளர்ச்சி இல்லாம இருந்து, பத்து வருஷத்துக்கு  முன்னாடி இறந்தும் போச்சு.

சரி… நாம அறிந்தோ அறியாமலோ பாவம் செஞ்சிருக்கோம்போல; அதனால்தான் அல்லா நமக்கு இப்படியொரு தண்டனையைக் கொடுத்திருக்காருன்னு சமாதானம் பண்ணிக்கிட்டோம். காலமும் அப்படியும் இப்படியுமா ஓடிப் போயிடுச்சு. நேத்திக்கு கொல்லைப்பக்கம் மண்ல வேலை செஞ்சுட்டிருந்தேன். அப்ப… மண்வெட்டி ஏதோ கல்லுல பட்ட மாதிரி ‘ணங்’குனு ஓசை கேட்டுச்சு. கவனமா மண்ணை விலக்கிப் பார்த்தால்… பெரிய சிவலிங்கம்! ராத்திரி முழுக்க உறக்கம் வரல்லே சாமி! ‘அல்லா… இப்ப என்ன பண்றது!’ன்னு புரியாம, விசனத்தோட உட்கார்ந்திட்டிருந்தோம். விடிஞ்சதும் தான், சாமி இங்கே வந்திருக்கிறதா பக்கத்துல இருந்த ஜனங்க பேசிக்கிட்டாங்க. உடனே இங்கே ஓடி வந்துட்டோம். இதுக்குமேல நான் என்ன செய்யணும்னு சாமி தான் வழி காட்டணும்.

மனசார என் நிலத்தை எழுதித் தர்றேன். இதுக்காக எனக்கு பணம், காசு எதுவும் வேணாம். முன்னே இருந்த மாதிரியே அங்கே சிவன் கோயில் கட்டிக்கலாம். ஊர் ஜனங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா, அதனால ஊர் ஜனங்க சந்தோஷப்படுவாங்கன்னா, அதுவே அல்லாவையும் சந்தோஷப்படுத்தும்!” என்று நெகிழ்ச்சியோடு, கண்ணீர் மல்கப் பேசி முடித்தவர், அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்தார்.

”இந்தாங்க, கோயில் கட்ட எங்களோட காணிக்கையா நூத்தியொரு ரூபாய். முதல் வரவா இதை வாங்கிக்குங்க!’ என்று வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அங்கிருந்த அனைவருக்கும் உடம்பு சிலிர்த்துப் போட்டது.

அதுவரை மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த மகா பெரியவா, புன்னகையோடு சைகையால் அந்த இஸ்லாமிய அன்பரை ஏதோ கேட்டார். அது அவருக்குப் புரியாமல் போகவே, ஒரு சிலேட்டும் பலப்பமும் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் தந்தார்கள். அவர் சிலேட்டில் எழுதிக் காண்பித்தார்… ‘மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று.

படித்துப் பார்த்த இஸ்லாமிய அன்பர், ”இன்னும் இல்லே சாமி! அதுக்கான பண வசதியை அல்லா இன்னும் எங்களுக்குக் கொடுக்கலை. எத்தனையோ வருஷம் முயற்சி பண்ணியும் மக்கா- மதீனா போகும் பாக்கியம் இன்னும் வாய்க்கலை” என்றார் கண்ணீர் மல்க.

உடனே பெரியவா, வைத்தியநாதன் நின்றிருந்த பக்கமாகத் திரும்பினார். ”இத்தனை உசத்தியான மனுஷர் நிலத்தைத் தரேன்கிறார். அவாளுக்கு நாம எந்த ஒத்தாசையும் செய்ய வேண்டாமா?” என சைகையால் கேட்டார். தொடர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சைகையாலேயே உத்தரவு பிறப்பித்தார். பெரியவாளின் விருப்பத்தை அப்படியே கூட்டத்தாரிடம் எடுத்துச் சொன்னார் வைத்தியநாதன்.

அவ்வளவுதான்… ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ஒரே குரலில் ஒப்புக்கொண்டது… ”அவங்க புனித யாத்திரை போய்வர ஆகற செலவு மொத்தமும் நம்மளோடது!”

அதைக் கேட்டு இஸ்லாமிய தம்பதிக்கு மனம்கொள்ளா மகிழ்ச்சி! அவர்களுக்கு மட்டுமில்லாமல், அங்கிருந்த எல்லோருக்குமாக, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தது மானுட தெய்வம்.

பிறகு, மெள்ள எழுந்த மகாபெரியவா, தூணில் சாத்தியிருந்த தண்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். அப்படியே நடந்து வந்து பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டார். மீண்டும் ஊர்க்காரர்களைப் பார்த்து ஒரு புன்னகை; கரம் உயர்த்தி ஆசீர்வாதம்!

பரிவாரங்கள் பின்தொடர, பல்லக்குப் புறப்பட்டது.

ஊர்வலத்துடன் வந்த அன்பர் மகாலிங்கம் சொன்னார்… ‘எனக்கு இப்பத்தான் தெரியுது… மகாபெரியவா ஏன் திடீர்னு இந்த ஊருக்கு வர முடிவு பண்ணினார்னு!”

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

* எந்தவித குற்றமும் செய்யாத பாவமற்றவன் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. தைரியம் அவன் முகத்தில் பிரகாசமாய் ஜொலிக்கும்.

* ராமநாமத்தை தாரக மந்திரம் என்பார்கள்.தாரகம் என்றால் பாவங்களைப் பொசுக்கி மேலே போவது எனப்பொருள்.

* நீ தானதர்மங்களைச் செய்தால் பலனை எதிர்பார்க்காமல் செய். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலை.

* மருந்தை வாங்கி விட்டு சாப்பிடாமல் இருந்தால் அதன் வீரியம் குறைந்துவிடும். அதுபோல, மந்திரத்தை ஜெபிக்காமல் இருந்தால் அதன் வீரிய சக்தி குறைந்துவிடும்.

* உன்னுடைய துன்பத்தையே பெரிதாக எண்ணாதே.உலகம் உன்னால் சிறிதாவது நன்மை பெற வேண்டும் என்று பாடுபட முயற்சி செய்.

* முதலில் மனிதன் மிருகநிலையிலிருந்து மனிதனாக மாறவேண்டும். அப்புறம் தெய்வமாகத் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும்.

* இறைவனே சர்வசாட்சியாக இருந்து நம் செயல்களுக்குப் பலன் தருகிறான் என்ற பயஉணர்ச்சி வேண்டும். அந்த எண்ணம் தான் தர்மவழியில் செல்ல நமக்கு துணை நிற்கும்.

 

 

Advertisements

One thought on “53-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. Vathsala June 15, 2014 at 9:50 AM Reply

    Jaya jaya Sakkara,Hara hara Sankara

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s