50-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


kadugu

இந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள அனுமதித்த நண்பர் கடுகு அவர்களுக்கு நன்றி…

ஓவர் டு கடுகு சார்…

அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனைப் பற்றி  எத்தனையோ ஆயிரம் புத்தகங்கள் வந்து விட்டாலும், இன்றும் அவரைப் பற்றிய துணுக்குத் தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுமாதிரி தான் காஞ்சி மகா பெரியாவாளைப் பற்றிய பல அரிய தகவல்கள், அனுபவ பூர்வமான சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  இதுவரை வராத ( என்று நினைக்கிறேன்!)  ஒரு வியப்பூட்டும் தகவலை இங்கு தருகிறேன்.ஆசிரியர் சாவி  பல வருஷங்களுக்கு முன்பு என்னிடம் விவரித்ததை அப்படியே தருகிறேன்..
*            *
சாவி சொன்னது:

கொஞ்ச நாளைக்கு முன்பு நான் பெரியவாளைப் பார்க்கப் போயிருந்தேன். அவ்வப்போது போய் என் மன அமைதிக்காக அவரை நமஸ்கரித்து விட்டு வருவது என் வழக்கம். என்னுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் மானேஜரும் வந்திருந்தார்.

நான் எப்போது போனாலும் தனிப்பட்ட முறையில் என் நலத்தை விசாரித்து விட்டு, ஆசீர்வதித்துக் குங்குமம் கொடுப்பார்.
இந்த தடவை போனபோது  வழக்கம்போல் நமஸ்கரித்தேன். ஆசீர்வதித்தார். குங்குமம் கொடுக்கவில்லை. ஏற்கனவே வந்திருந்த பக்தர்கள் அவர் முன்னே அமர்ந்திருந்தார்கள். அதனால் என்னை விசாரிக்கவில்லையோ அல்லது ஏதாவது பக்தி விஷயமாக சிறிய உரை நிகழ்த்தப் போகிறாரோ அல்லது அவர்கள் சென்ற பிறகு ஏதாவது என்னிடம் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகவோ என்று எண்ணி ஒரு பக்கமாகத் தரையில் உட்காந்தேன்.
சில நிமிஷங்கள் கழிந்திருக்கும். அப்போது ஒரு .குடும்பம் வந்தது.  அப்பா, அம்மா சுமார் 25 வயதுப் பெண், கூட இரண்டு ஆண்கள் என்று  ஐந்து பேர். நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் அழகு கண்ணை பறித்தது.  சிவப்பு என்றால் அத்தனை சிவப்பு. நிறமும், மூக்கும் முழியும்,  களையான முகமும், அடக்க ஒடுக்கமான  பதவிசும் அந்த மண்டபத்தையே பிரகாசமாக்கியதைப் போல் உணர்ந்தேன்.

அவர்கள் பழத்தட்டைப் பெரியவாளுக்கு முன்னே பவ்வியமாக  வைத்துவிட்டு நமஸ்கரித்தார்கள்.  பம்பாய், கல்கத்தா போன்ற வெகு தூர இடத்திலிருந்து வந்தவர்கள் போல் எனக்குத் தோன்றியது, பெரியவா அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களுக்கும் குங்குமம் தரவில்லை.

அவர்களும் பெரியவா முன்னே அப்படியே தரையில் அமர்ந்தார்கள். தொடர்ந்து மேலும் பக்தர்கள் வந்து நமஸ்கரித்துவிட்டு குங்குமம் வாங்கிக்கொண்டு போனபடி இருந்தனர்.
பெரியவா  எதுவும் பேசவில்லை. நான் அந்த குடும்பத்தினரையும்,  பெண்ணையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த பெண்ணின் அழகு முகத்தில் லேசான சோகம் இருப்பதுபோல் எனக்குப் பட்டது.


சில நிமிடங்கள் கழித்து இன்னொரு குடும்பம் வந்தது. வெளிமாநிலக் களை. தொழிலதிபர்கள் மாதிரி இரண்டு, மூன்று ஆண்கள். நாலைந்து பெண்கள்,  அவர்கள் வருவதைப் பார்த்த அந்த அழகுப் பெண்ணின் குடும்பத்தினர் லேசான பரபரப்புடன் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். அப்படி, இப்படித் திரும்பி பார்த்தனர்.  ஏற்கனவே அறிமுகமான குடும்பமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.


வந்தவர்கள் பெரியவாளை நமஸ்கரித்தார்கள். அவர்களை உட்காரும்படி பெரியவா  சைகையால் சொன்னார். 

புதிதாக வந்த குடும்பத்தினரையும் பெரியவாளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். குங்குமம் தந்ததும் கிளம்பலாம் என்று உட்கார்ந்து இருந்தோம். ஏற்கனவே குங்குமம் பெற்றவர்கள் எல்லாரும் எழுந்து கைகூப்பியபடியே போனார்கள். 

அந்த அழகுப் பெண் குடும்பம், புதிதாக வந்த குடும்பம். நாங்கள் இருவர் மட்டும் அமர்ந்திருந்தோம்.

திடீரென்று பெரியவா ‘தொழிலதிபர்’ குடும்பத்தினரைச் சைகையால் அழைத்தார். அந்த இளைஞனையும் அழைத்தார். அவனும் வந்து குடும்பத்தினருடன் சேர்ந்து நின்றான். அவனைப் பார்த்து “நான் சொல்றதைச் செய். உனக்குக் குறையில்லாத வாழ்க்கை அமையும்… கிளி  மாதிரி இருக்கிற பெண் கிடைச்சிருக்கா.  அவளை உதாசீனப்படுத்தாதே..” என்று சொல்லியபடியே  அந்த அழகுப் பெண்ணைத் தன்னிடம் வரும்படிக் கூப்பிட்டார். அவள் பொல பொலவென்று கண்ணீர் விட ஆரம்பித்தாள். அவளுடைய. அம்மா  “ போம்மா .. போ.. பெரியவா கூப்பிடறா பார்” என்று சொல்லியபடியே  பாசத்துடன் அவளை அணைத்து, லேசாகத்  தூக்கி விட்டாள். அந்தப் பெண் துக்கம் நெஞ்சை அடைக்க , கேவலை அடக்கி கொண்டு, கண்ணீரை துடைத்தபடியே  எழுந்து வந்து நின்றாள்.


பெரியவா மறுபடியும் அந்தப் பையனைப் பார்த்து “ இப்படி வா.. இவளை அழைச்சிண்டு போ.. சந்தோஷமா இருங்கோ” என்று சொல்லி அவர்களுக்குக் குங்குமம் கொடுத்தார். அந்தப் பையன் அடக்கமாகத் தலையை ஆட்டினான். யாரும் எதுவும் பேசவில்லை.  

திடீரென்று இரண்டு குடும்பத்தினரின் முகங்களில் பிரகாசம். பரவசம்!

விவாக ரத்து என்ற கட்டத்தைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்ட ஒரு தம்பதியை தனது அற்புத சக்தியால் பெரியவா சேர்த்து வைத்து விட்டார். இத்தனைக்கும் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்குத் தெரிந்தவர்கள் இல்லை (என்பது எனக்குப் பின்னால் தெரிந்தது). அவர்கள் தங்கள் பிரச்னையைக் கூட அவரிடம் சொல்லவில்லை. அந்தப் பையனும் சிறிது நேரத்தில் அங்கு வரப்போகிறான் என்பதை பெரியாவாள் தனது தெய்வீக சக்தியால் உணர்ந்திருக்க வேண்டும்  அதனால்தானோ என்னவோ  குங்குமம் கொடுக்காமல் பெண்ணின் குடும்பத்தினரைக் காக்க வைத்திருந்தார். அவர்கள் எல்லாரும் போன பிறகு எனக்குக் குங்குமம் கொடுத்தார்!
மஹா பெரியவா அருள்வாக்கு : –

*நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த பூமியில் பிறப்பெடுத்துவிட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இவ்வுலகைவிட்டுப் போய் தான் ஆக வேண்டும். அதுவரை இந்தப்பிறவியால் நம் மனதில் எவ்வளவோ அழுக்கை ஏற்றுக்கொண்டு விடுகிறோம்.

* மனம், வாக்கு, உடம்பு ஆகியவற்றால் எவ்வளவோ பாவங்களைச் செய்துவிட்டோம். அதே உடலைக் கொண்டே பாவங்களுக்குப் பிராயச்சித்தமும் தேடவேண்டும்.

* சாஸ்திர நூல்கள், திருத்தலங்கள், தீர்த்தம் முதலிய நல்ல விஷயங்களில் நம் மனம் ஈடுபடவேண்டும். புண்ணியங்களைச் செய்து பாவங்களைக் கரைத்துவிடவேண்டும்.

* நம் மனதில் எப்போது ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை எல்லாம் உண்டாகிறதோ அப்போது தான் உண்மையான பக்தியும், ஞானமும் உண்டாகும். அதுவரை நாம் செய்யும் பூஜை, வழிபாடு எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.

* நல்லதையே சிந்தித்து இறையருளைப் பூரணமாகப் பெற்றவன் ஒருவன் உலகில் இருந்தாலும் போதும். அவன் மூலமாக இந்த தேசம் முழுதும் நன்மை பெறும்.

 

Advertisements

One thought on “50-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. Ramji May 28, 2014 at 2:43 PM Reply

    this is some thing we have never heard of

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s