சாம்பார் கிணறு – தயிர் குளம் – அன்னதான சிவன்


கோயில் திருவிழாக்களில், அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள், கூட்டம் கூட்டமாகப் பங்கேற்கிறார்கள். பத்து நாட்கள் நடைபெறும் உத்ஸவங்களின்போது, உண்ண உணவும் தங்குவதற்கு வசதியான இடமும் ஏற்பாடு செய்து கொள்ளும் அளவுக்கு வசதி இல்லாதவர்களும்கூட, கவலைப்படாமல் வந்து குவிகிறார்கள்!   ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து நீர்மோர், பானகம், உணவுப் பொட்டலங்கள் என்று விநியோகம் தொடர்ந்து கொண்டிருக்கும்.   மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்ஸவத்தின்போது, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு, இப்போது பாதாம் பால், ரோஸ் மில்க் என்று ஏகதடபுடல்.   ஆங்காங்கே அன்னதானம் வேறு!

இதற்கெல்லாம் முன்னோடியாய் இருந்த ஒருவரை இந்த வேளையில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? கும்பகோணத்தை அடுத்துள்ள தேப்பெருமாநல்லூரில் (சென்ற சிவராத்திரியின் போது பாம்பு ஒன்று வந்து பூஜை செய்ததாக அமர்க்களப் பட்டதே, அதே தேப்பெருமாநல்லூர்தான்!)   19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றியவர் இராமசுவாமி.   இவர் நடத்திய அன்ன தானங்களினாலேயே இவருக்கு `அன்னதான சிவன்‘ என்னும் புகழ்ப் பெயர் உண்டாயிற்று!

காஞ்சி மடம் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த நாட்களில்,  மகாஸ்வாமிகளிடம் அன்புடனும், நெருக்கத்துடனும், ஏன்?  உரிமையுடனும் பழகிய பெருமகனார், அன்னதான சிவன்!   தமது வாழ்க்கையை  காஞ்சி மடத்துடன் பிணைத்துக் கொண்டவர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த மிராசுதார் கயத்தூர் சீனிவாச ஐயர்தான் அன்னதான சிவனுக்குஇன்ஸ்பிரேஷன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோயில்களில் நடைபெறும் உத்ஸவங்களில் எல்லாம், சீனிவாசய்யர் செய்த அன்னதான வைபவங்களில் அவருக்கு உதவியாக, தம் சிறு வயதில் ஓடியாடி வேலை செய்தார் சிவன்.   பின்னாளில் தம் சொத்து, சுகம் அனைத்தையும் இதற்காகவே அர்ப்பணித்து விட்டார். பிரபலமான திருவிழாக்களுக்காகக் கூடும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவு படைப்பதைத் தம் வாழ்க்கையின் `மிஷன்’ என்று ஆக்கிக் கொண்டார் சிவன்.

திருச்செங்காட்டங்குடியின் அமுதுபடித் திருவிழா, அம்பர் மாகாணத்தின் சோமயாக விழா, காரைக்கால் மாம்பழத் திருவிழா, காவிரிப்பட்டணத்து ஆடி அமாவாசை, மாயூரம் துலா (ஐப்பசி) மாத உத்ஸவம், திருநாகேஸ்வரம் கார்த்திகை சோமவார விழா, நாச்சியார் கோயில் தெப்பம், திருவிடை மருதூர் தைப்பூசம், கும்பகோணத்து மாசி மகம், எட்டுக் குடி பங்குனி உத்திரம் என்று பெருந்திரளான மக்கள் கூடும் உத்ஸவங்களில் எல்லாம் அன்னதான சிவன் தன் தொண்டர் படையோடு களமிறங்கி விடுவார்!

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி உணவருந்தும் இடம் என்றாலும், சமைக்கும் இடம், சாப்பிடும் இடம் எல்லாம் படுசுத்தமாக இருக்குமாம்! ஏழைகள் தானே அன்னதானத்திற்கு மொய்க்கிறார்கள் என்கிற அலட்சிய பாவத்தில் சுத்தமும், சுகாதாரமும் இரண்டாம்பட்சமாகி விடும் இந்த நாட்களில், பலதரப்பட்ட மக்களும் வந்து உணவருந்திச் சென்ற அந்த நாளில் சிரத்தையோடு செயல்பட்டார் சிவன்!

இலை போட்டுப் பரிமாறும் இடத்தைச் சுத்தம் செய்வதற்காகவே துடைப்பம் வண்டி வண்டியாக வந்து இறங்கும் என்றால், உணவுப் பண்டங்களுக்குக் கேட்கவா வேண்டும்?   ஆயிரக்கணக்கில் அரிசி,  பருப்பு மூட்டைகள்,  மளிகைச் சாமான்கள், வண்டி வண்டியாகக் காய்கறிகள், இலைக்கட்டுகள்;  அடுப்பு எரிக்க விறகு நூறு வண்டிகளில்,  ஊறுகாய்க்கான நெல்லிக்காய் மட்டும் இரண்டு மூன்று வண்டிகளில்!   மலைப்பாக இருக்கிறதல்லவா?

அத்தனை பேருக்கு வேண்டிய தயிருக்கு என்ன செய்தார்களாம் தெரியுமா? அன்னதானம் நடைபெறும் ஊரில் சில வாரங்களுக்கு முன்னதாகவே தயிரை சேகரிக்கத் தொடங்கி, கிடைக்கும் தயிரை எல்லாம் மரப்பீப்பாய்களில் நிரப்பி மூடி, மெழுகினால் அடைத்து சீல் வைத்து, அந்த ஊர்க் குளத்தில் உருட்டி விடுவார்களாம்!   அன்னதானம் நடைபெறும் நாளில் பீப்பாய்களைத் திறந்தால் நேற்றுதான் தோய்த்த தயிர் போல், புளிப்பில்லாமல் சுவையாக இருக்குமாம்! ஆமாம்! திருக்குளங்கள்தான் அந்த நாளின் `கோல்ட் ஸ்டோரேஜ்.’

ஒரு ஊரில் அன்னதானம் என்றால், அதற்கு முன் நாள் இரவு வரை அதற்கான சுவடே தெரியாதாம். இரவோடு இரவாகப் பண்டங்கள் வந்து இறங்கி, பங்கீடு ஆகி, அதிகாலையில் அடுப்பு மூட்டி உலையேற்றினால், பசி வேளைக்கு அறுசுவை உணவு தயார். ஆளுயர அண்டாக்களில் சாம்பார், ரசம், பாயசம்! கொதிக்கும் போது உண்டாகும் வாசனையை வைத்தே உப்பு, புளி, காரம், வியஞ்சனங்கள் போதுமா போதாதா என்று தீர்மானம் செய்வார்களாம்.   முறத்தில் உப்பை வைத்துக் கொண்டு சிப்பந்தி ஒருவன் நிற்க,  ருசிக்கேற்ற வாசனை வரும் வரை உப்பைப் போடுவது வழக்கமாம்.  முறம் கணக்கில் கொத்துமல்லி விதையை அரைத்து ரசத்தில் சேர்ப்பார்களாம்!

மூங்கில் பரண் கட்டி,  ஏணி வைத்து ஏறி,  மரச்சட்டத்தில் ராட்டினம் கட்டி, சிறு வாளிகளில் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது போலக் கொதிக்கும் குழம்பு,  ரசத்தை மொண்டு பரிமாறுவார்களாம்.   ஆறிப் போன சாதமாக இல்லாமல்,  அதே சமயத்தில் இலை போட்டு விட்டு மக்களைக் காக்க வைக்காமல், சுடச்சுட அரிசிச் சாதம் வடித்துப் போடத் தனி டெக்னிக் வைத்திருந்தாராம் அன்னதான சிவன்!

அன்னதானம் முடிந்ததும், “இந்த இடத்திலா அத்தனையும் நடந்தது!” என்று மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும் வகையில் இடத்தைச் சுத்தம் செய்யும் அளவுக்கு பெர்ஃபெக்ட் எக்ஸிகியூஷன்!    இத்தனையிலும் அன்னதான சிவனது ஆகாரம் என்னவோ நாலு கவளம் பழையதுதான்!.

Advertisements

5 thoughts on “சாம்பார் கிணறு – தயிர் குளம் – அன்னதான சிவன்

 1. Ramji April 22, 2014 at 3:11 AM Reply

  what an excellent article. you are doing a great service by providing info about unknown matters. thanks a ton. let your work continue.

  • BaalHanuman April 22, 2014 at 2:22 PM Reply

   Thanks Ramji for your kind words!!

 2. Right Mantra Sundar April 23, 2014 at 7:39 AM Reply

  மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த நாடாயிற்றே சோழநாடு. அங்கு அன்னதானம் இப்படியெல்லாம் நடைபெற்றது என்பதை அறிந்துகொண்ட போது சிலிர்ப்பாக இருக்கிறது. நாம் இந்த காலத்தில் செய்வதெல்லாம் ஒன்றுமேயில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

  ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
  மாற்றுவார் ஆற்றலின் பின்

  என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க ஏழைகளின் பசி போக்குவது அறங்களில் எல்லாம் மிகப் பெரிய அறம்.

  இது போன்ற அரிய தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

  தொடரட்டும் உங்கள் நற்பணி.

  வாழ்த்துக்கள்!

  – ரைட் மந்த்ரா சுந்தர்

  • BaalHanuman April 25, 2014 at 5:52 AM Reply

   இந்தப் பதிவை ரசித்த உங்களுக்கு நன்றி சுந்தர். தொடர்ந்து வருகை தாருங்கள்.

 3. BaalHanuman October 16, 2017 at 3:26 AM Reply

  சாதம்னா….அப்டியே வெள்ளைவெளே..ர்னு ஹிமய மலை மாதிரி குவிச்சிருக்கும்! சாம்பார் அண்டால யானையே மூழ்கி போனாக்கூட தெரியாது! ஹிமாச்சல சிவன் மதுரை மீனாக்ஷி கல்யாணத்ல குண்டோதரனுக்காக அன்னக்குழி ஸ்ருஷ்டிச்சார்…ன்னு சொல்லுவாளே! அதையே இந்த ஏழை ப்ராம்மண சிவன் பண்ணாரோ?…ன்னு ப்ரமிக்கும்படியா அவர் பண்ணிண்டிருந்தார் “….என்று “அன்னதான சிவன்” பண்ணிய அன்னதானம் பற்றி பெரியவா ஆரம்பித்தார்.

  1897 ல் பெரியவா மூன்று வயஸ் குழந்தையாக இருக்கும்போதே ஸ்ரீ சிவனின் மாமாங்க அன்னதானம் பெரியவாளின் பரமகுருவின் ஆசியுடன் ஸ்ரீமடத்தில் ஆரம்பித்தது. பெரியவா பட்டத்துக்கு வந்தபின்னும் அது தொடர்ந்தது.

  “…..ஒருதடவை த்ளாயிரத்து முப்பத்தி மூணாம் வர்ஷ மாமாங்கத்துலதான், வெறகே நூறு வண்டி வந்துது! ஊறுகாய்க்காக நெல்லிக்கா மட்டும் பத்து வண்டி வந்துது! ஆவி வர்ற வாசனைலேர்ந்தே இன்ன இன்ன பண்டம் இன்னும் எவ்வளவு
  சேக்கணும்ன்னு கரெக்டா சொல்லிடுவார். அப்டி….

  கொதிச்சிண்டு இருக்கற ரஸத்தோட வாசனைலேர்ந்தே அதுக்கு இன்னும் எவ்வளவு கொத்தமல்லி அரச்சு விடணு ..ம்பார்! அது எவ்ளோவ்..ன்னு தெரியுமோல்லியோ? ஒரு பிடி கொத்தமல்லி, ஒரு கத்தையோ இல்லே! ஒரு மொறம் அரச்சு விடுடா…ன்னு அதட்டல் போட்டாராம்! ஏற்கனவே அரச்சு விட்டதுக்கு மேலே ஒரு மொறம் கொத்தமல்லி சேக்கணும்ன்னா…..எவ்வளவு ரஸம் வெச்சிருப்பா, எவ்வளவு பேர் சாப்டிருப்பான்னு நீங்களே கணக்கு பாத்துக்கோங்கோ!

  சாப்டற எடத்தை சுத்தி பண்ணறதுக்காக தொடப்பக்கட்டையே ரெண்டு வண்டி வந்துதுன்னா…..பாத்துக்கோங்கோ!……

  …..எத்தனை அண்டா வெச்சாலும்,எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும் சாதம் வடிச்சு மாளாது…ன்னு அவர் என்ன பண்ணுவாராம்னா, பத்து இருபது மூட்டை வடிச்சு, அதை அப்டியே நீள நீளப் பாய்ல பரத்திக்கொட்டி, கொதிக்க
  கொதிக்க இருக்கற அந்த அன்னப் பாவாடை மேலேயே மெலிசா ஒரு துணியைப் போட்டு மூடி,கிடுகிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து, இருவது மூட்டை ஈரப் பச்சரிசியை, ஆமா! பச்சையா இருக்கற அரிசியாவேதான்! பரத்திக் கொட்டிட்டு,
  அதுக்கு மேலே கெட்டி கோணியாப்போட்டு, நன்னா அடிப்பாய்க்கு அடிவரைல அதை ஓரளவு இறுக்க சொருகி மூடிப்…டுவாராம்! காமணியோ, அரைமணியோ கழிச்சு கோணியை எடுத்தா…….அத்தனை அரிசியும் புஷ்பமாட்டம் சாதமாயிருக்குமாம்!

  அதாவுது சாதம் வடிக்கற கார்யத்ல பாதி மிஞ்சும்படி இப்டி யுக்தி பண்ணிண்டிருந்திருக்கார்!

  இத்தனை ஆயிரம், பதினாயிரம் பேருக்கு நன்னா, கெட்டியா நெறைய மோர் விடணும்னா, அத்தனை பாலுக்கு எங்க போறது? இதுக்கும் அவர் புது மாதிரி refrigerator வெச்சிருந்தார்…..அந்தக்காலத்ல ஏது இதெல்லாம்? என்ன பண்ணுவார்னா, உத்ஸவத்துக்கு பல மாசம் முந்தியே தயிர் சேகரம் பண்ண ஆரம்பிச்சிடுவார்! சேர சேர, பெரிய பெரிய பீப்பாய்கள்ல அந்த தயிரை எல்லாம் விட்டு, ஒவ்வொண்ணும் ரொம்பினதும், வாயை மொழுகால அடைச்சு, அப்டியே….ஆழமா இருக்கற கொளங்களுக்கு அடீ….ல தள்ளிப்பிடுவார்…

  அப்றமா எப்போ வேண்டியிருக்கோ, அப்போ தொறந்தா….மொத நா ராத்ரிதான் தோச்சா மாதிரி தயிர் சுத்தமா,துளிகூட புளிக்காத, அவ்ளோவ் சுத்தமா இருக்கும்! கொளத்தோட குளிர்ச்சி மட்டுந்தான் காரணம்…ன்னு சொல்லறதுக்கில்லே……அவரோட மனஸ் விசேஷமும் சேந்துதான் அப்டி இருந்திருக்கணும்..” என்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s