38-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…

ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்த சமயம், பூகோள ரீதியாக ஒரு பெரும் வறட்சியை நம்நாடு சந்திக்க நேர்ந்தது. வறட்சி என்றால் சாதாரண வறட்சி அல்ல… ஜனங்கள் எப்படி உயிர் வாழ்வார்களோ என்று அஞ்சும் அளவிலான வறட்சி. இதுபோன்ற வறட்சியும் இயற்கை சார்ந்ததே… இது ஒன்றும் நடந்துவிடக்கூடாத, நடக்க முடியாத ஒன்றல்ல.

ராஜாஜி ஆட்சிக்காலத்திலும் வறண்ட போது, மிகுந்த இறை நம்பிக்கையும் நேர்மையும் உடைய ராஜாஜி, இதுகுறித்து மிகவும் கவலைப்பட்டார். அப்போது வருணஜெபம் செய்தால் மழை பொழியும் என்று சட்டசபையிலேயே பேசப்பட்டது. அதற்கு எதிரான கருத்துகளும் பேசப்பட்டதாக தகவல்.

ஆனால், ராஜாஜி இறைவழிபாட்டை நம்பினார். அதிலும் இறங்கினார். மறுநாளே ஒரு பெரும் மழை பெய்யவும் நம்பிக்கை வலுவானது. ஆனால், அன்று இருந்த வறட்சிக்கு, ஒரு மழை எல்லாம் ஒரு மூலைக்குத்தான். ஆறுகளில் வெள்ளம் பாய்ந்து, ஏரி-குளங்கள் நிரம்ப வேண்டும் என்றால் பருவ காலம் முழுக்க தவறாமல் மழை பொழிய வேண்டும். அவ்வேளையில் பெரியவரிடமும் இதுகுறித்து ஆலோசனை கேட்கப்பட்டபோது, ‘பாரதம் படிப்பது – குறிப்பாக விராட பர்வதம் படிப்பது மிகுந்த நன்மையைத் தரும்’ என்றாராம்.

உடனேயே, அன்றைய வேத வித்தகரான வழுத்தூர் ராஜகோபாலசர்மா என்னும் அன்பர், தன் இல்லத்திலேயே பாரதம் படிக்கத் தொடங்கிவிட்டார். பாரதம் பதினெட்டு பருவங்கள் கொண்டது. அதை முழுவதுமாய் வாசித்து முடிக்க பல ஆண்டுகள் ஆகும். ஞாயிற்றுக் கிழமைதோறும் அன்பர்கள் ஒன்றுதிரள வாசிக்கும் செயலும் தொடங்கியது.

கூடவே, சர்மாஜி ஒரு சங்கல்பமும் செய்துகொண்டார்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் 18000 முறை பாராயணம் செய்துவிடுவது என்பதே அது!

நன்றாக கவனியுங்கள். ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல… 18000 முறை! இதுபோக பாரதத்தின் பதினெட்டு பருவங்கள் எல்லாமே தேச நலனுக்காக… மழை வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; தர்மம் வாழ வேண்டும் – நீதி, நியாயம் விளங்க வேண்டும். வருங்காலம் மக்களுக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம்.

சரி; மழை பெய்ததா – வறட்சி நீங்கியதா என்கிற கேள்வியும் எழுகிறதல்லவா? அது எப்படி நீங்காமல் இருக்கும்? அன்று தர்ம தேவனாக ரிஷ்ய ஸ்ருங்கர் இருந்து தீர்த்தார் என்றால், இன்று பெரியவர்தானே அந்த இடத்தில் இருப்பவர். அவரே வழிகாட்டியபிறகு, வருணன்தான் வழிக்கு வராமல் போவானா? வானமும் பொழிந்து, பூமியும் மலர்ந்தது!

சர்மாஜியின் மகாபாரத வாசிப்பும் தொடர்ந்தது. நான்காவது வருடம் அது பதினெட்டாவது பருவத்தை அடைந்தது. இடையில் எவ்வளவோ தடங்கல்கள் வரப்பார்த்தது – பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டன. ஆனால், அவ்வளவையும் மீறி, ஞாயிறுதோறும், பக்தி சிரத்தையுடன் பாரதம் படித்து, சர்மாஜி கடந்துவிட்டார்.

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் 18000 என்கிற அந்த அளவை நெருங்க ஆரம்பித்தது. இது ஒரு சாதாரண விஷயமல்ல. மிகப்பெரும் செயல்!

கல்கத்தா சேட்ஜி பதினெட்டு புராணத்தை வெளியிட்டு, மகா பெரிய வியாதியில் இருந்தே, விடுதலை பெற்றுக் கொண்டார். என்றால், இந்தச் செயலுக்கு எத்தனை பெரிய அனுக்கிரகம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

கடவுள் நம்பிக்கையே இல்லாத நாத்திகன்கூட இப்படி ஒரு எத்தனத்தை கேள்விகேட்க யோசிப்பான். ஏனென்றால், இதன்பின்னால் அப்படி ஒரு நம்பிக்கை – அப்படி ஒரு முயற்சி ஒளிந்து கிடைக்கிறது. இதன் உச்சக்கட்டம்தான் நாம் அறியவேண்டிய முக்கிய விஷயமாகும்.

பன்னிரெண்டு கோடி முறை ராம நாமம் ஜெபித்தவருக்கு ஹனுமனின் தரிசனம் வாய்க்குமாம். பதினெட்டு கோடி முறை ஜெபித்தவருக்கு ராம தரிசனம் சித்தியாகுமாம். இது அனுமானமாய் சொல்லப்படுவதல்ல… நடந்திருக்கிறது. ராம தரிசனமும், ஹனும தரிசனமும் வாய்க்கப் பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.

என்றால், இந்த 18000த்துக்கு அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…?

வந்தான் – பெரியவர் வடிவில்!

சர்மாஜி பதினெட்டாயிரத்தை நெருங்கிய சமயம், பெரியவர் சென்னையில் வந்து முகாமிட்டிருந்தார். சர்மாஜியும் அவரை சந்தித்து, தனது பாரத வாசிப்பையும், சஹஸ்ரநாமம் 18000த்தை தொட இருப்பதையும் கூறினார். பெரியவர் பூரித்துப்போனார். அந்த பதினெட்டாயிரக் கணக்கு, இங்கே என் எதிரிலேயே பூர்த்தியாகலாமா என்று கேட்டார். சர்மாஜிக்கும் பழம் நழுவி பாலில் விழுந்தது போலானது. அன்பர்களோடு கூடி, அங்கேயே பாராயணம் செய்து பூர்த்தி செய்தார். பெரியவரும் அன்றைய நிகழ்வில் பூர்ண கும்ப கலசத்தை, தன் கரம் தொட்டு ஆசீர்வதித்து தரவும் அது வினியோகமாயிற்று.

பாராயணம் புரிந்தவர்களுக்கு மடத்திலேயே பிரசாத போஜனம். சொல்லி வைத்த மாதிரி ஆனந்தம் ஆனந்தம் என்று வானமும் குதூகலித்தது. நனைந்து கொண்டுதான் போனார்கள்.

சர்மாஜியும் வீட்டை அடைந்தார்.

அதுவரை நடந்த பாராயணங்கள் எல்லாம் ஒரு லக்ஷ்மி நாராயணர் படத்தின் முன்தான் நடந்தது. நிறைவு பெரியவர் முன் நிகழ்ந்துவிட்டிருந்தது. அந்த நினைவுகளோடு அந்தப் படத்தை பார்த்து வணங்கினார்.

உள்ளே ஒரு சிறு நெருடல்.

இறுதிப் பாராயணத்தில் இந்த படம் இருந்திருக்கலாமோ? இவர் இடத்தில் பெரியவரே இருந்துவிட்டார். இருந்தாலும் சற்று நிரடியது. அந்த உச்சக்கட்டமும் இனிதான் வேலை செய்தது. மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து சர்மாஜியிடம், பெரியவர் உங்காத்துக்கு வரப் போறதா தகவல் சொல்லிவிட்டார்” என்றார்.

சர்மாஜி பாதாதி கேசம் சிலிர்த்துப் போனார். ‘என் வீட்டுக்கா… அவர் பாதம் இங்கே படப்போகிறதா? நான் அவ்வளவு புண்ணியசாலியா?’ – அவருக்குள் கேள்விகள் ஓடத் தொடங்கிவிட்டன.

சர்மாஜி வீடு மைலாப்பூரில்… வழியில் நாகேஸ்வரராவ் பூங்கா, லஸ் கார்னர், கற்பகாம்பாள் நகர், விவேகானந்தர் கல்லூரி தெரு வழியாகத்தான் வந்தாக வேண்டும். விஷயம் பரவி ஜனங்களும் அவரை தரிசனம் செய்யத் தயாராகிவிட் டனர்.

சர்மாஜி என்ன செய்தார் தெரியுமா?

அந்த லட்சுமி நாராயணர் படத்தை வீட்டு வாசலில் ஒரு மேஜை போட்டு, அதன்மேல் வைத்து மாலை போட்டு ஒரு விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டார்.

அதேசமயம், பெரியவரின் இந்த வருகை தெரிந்து, நாத்திக வாதிகளும் தங்கள் எதிர்ப்புணர்வை காட்டும் விதமாய், கறுப்புச் கொடி மற்றும் தங்கள் வாதங்களுடன் நிற்பதாக தகவல்.

பெரியவரும் புறப்பட்டுவிட்டார்.

இந்த நாத்திகவாதிகள் பார்வையில் படாமல், அவரை அழைத்துச் செல்ல முயன்றவர்களை தவிர்த்தவர், ‘ஒளிபவனா துறவி? – இம்மாதிரி இடங்களில் ஒளிர்பவனல்லவா துறவி!’ என்பது போலவும், ‘வாழ்த்தும் வசவும் எனக்கு சமமானதே’ என்பதை உணர்த்துவது போலவும், அதேவழியில் அவைகளை ஏற்றுக் கொண்டபடியே, சர்மாஜி வீட்டு வாசலுக்கும் வந்து சேர்ந்தார்.

காத்திருந்தது அந்த லக்ஷ்மிநாராயணர் உருவப்படம்!

அதை நோக்கி நின்றார் பெரியவரும். சர்மாஜியின் உறுத்தலுக்கு விடைபோன்ற அந்த வேளையில்…

வாசலில் லக்ஷ்மி நாராயணர் படத்தை வைத்துக்கொண்டு சர்மாஜி காத்திருக்க, பெரியவரும் வந்து சேர்ந்தார். உடனே சர்மாஜி பெரியவரை உபசரிக்கத் தொடங்கினார். படத்துக்கு பக்கத்திலேயே ஒரு பலகை போடப்பட அதில் பெரியவரும் ஏறி அமர்ந்தார்.

ஒன்று வைகுண்டபதியின் வரிவடிவத் தோற்றம்!

இன்னொன்று அவனுடைய மானுட ஞானத்தோற்றம்!

சர்மாஜியும் தம் குடும்பத்தோடு பெரியவரையும் படத்தையும் சுற்றிவந்து கீழே விழுந்து வணங்கிச் சேவித்தார்.

நான்கு ஆண்டுகாலம் அவர் செய்த உபன்யாசத் தவத்துக்கு வரமானது வீட்டு வாசல் தேடி வந்துவிட்டது. பெரியவரும் சுற்றி நிற்பவர்களை எல்லாம் விலகச் சொல்லிவிட்டு சர்மாஜியின் வீட்டை ஒரு பார்வை பார்த்தார்.

எளிமையான ஓட்டுக்கூரை வீடு!

இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டுதான் இதை நீ சாதித்தாயா?” என்று கேட்டு ஆசீர்வதித்தார்.

அதன்பின் வெகு சீக்கிரத்தில் அந்த வீடு, தன் முதுமைக்குரிய பலவீனங்களைப் போக்கிக் கொண்டு பலமானதாக மாறி, அதன்பின் பல நல்ல காரியங்களும் அந்த வீட்டில் அடுத்தடுத்து நடந்தன.

அதுமட்டுமல்ல; பத்ரிநாத், கேதார்நாத் என்று சர்மாஜி யாத்திரை சென்று வரவும் வாய்ப்பு உருவாகியது. பெரியவரே ஒரு ஸ்படிக மாலையை அணிவித்து அனுப்பி வைத்தார்.

மொத்தத்தில் சர்மாஜியின் கடைத் தேற்றத்துக்கு எதுவெல்லாம் தேவையோ, அதுவெல்லாம் நிகழத் தொடங்கியது.

அவ்வளவுக்கும் ஒரு ஆரம்பம்தான் காரணம்.

ஊரும் உலகும் வாழ்ந்திட, பாரதம் படிப்பது என்கிற அந்த சுயநலமில்லாத ஆரம்பம், படிப்படியாக சர்மாஜியை அவர் குடும்பத்தையே சுத்திகரித்து நமக்கும் ஒரு நல்ல உதாரணமாக மாறிவிட்டது.

பதினெட்டு புராணங்கள் ஒரு சேட்ஜி வாழ்வில் மறுமலர்ச்சி புரிந்தது என்றால், மகாபாரதம் சர்மாஜி வாழ்வில் அவரை தெய்விக அனுபவங்களுக்கு ஆட்படுத்தி ஞானியாக்கியது.

பின்னாலே, கண்களைத் திறந்துவிட்ட ஒரு குருநாதராய் நம் பெரியவர்!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

நீ நித்தியம் படுக்கப்போகும் போது, சத் விஷயங்களையே நினைத்துக் கொள். சதா “ராமா, ராமா” என்று ஜபம் பண்ணிக் கொண்டிரு. இந்த மந்திர ஜபத்திற்கு விதி நிஷேதம் ஒன்றுமில்லை. நீ இதை எப்போதும், எந்த நிலையிலும் ஜபம் செய்யலாம்.

 

Advertisements

2 thoughts on “38-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. mahesh April 11, 2014 at 3:14 PM Reply

    Reblogged this on Sage of Kanchi.

  2. vidya soundar April 14, 2014 at 8:35 AM Reply

    Eagerly awaiting more posts on Maha Periyava…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s