6-சாவியில் சில நாட்கள் – ஷ்யாமா


இதன் முந்தைய பகுதி…

Saaviyil_Sila_Naatkal_1

கடுகு அவர்களின் சிறு குறிப்பு தொடர்கிறது…

சாவிக்கு பத்திரிகை ஆர்வம் உயிர்மூச்சு போன்றது. ‘வெள்ளிமணி’ என்கிற பத்திரிகையை வெறும் கையால் முழம் போட்டு ஆரம்பித்து வெற்றிகரமாகப் பிரசுரித்தபோது சாவிக்கு வயது 27-தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தினமணி கதிர்… பிறகு குங்குமம்… பிறகு சாவி என்று பத்திரிகைத் தொடர்புகளை விடாமல் வைத்திருந்த சாவி இடையில் சில வருஷங்கள் பத்திரிகைத் தொடர்பே இன்றி இருந்த சமயம், அவரைப் பார்க்க போயிருந்தேன். ‘மீண்டும் சாவியை நடத்தப் போகிறேன்… உங்கள் கருத்து என்ன?’ என்று என்னைக் கேட்டார்.. ‘சார்… இந்த வயதில் ஏன் பத்திரிகையை நடத்த விரும்புகிறீர்கள்? டி.வி.யுகத்தில் பத்திரிகைகளின் பாப்புலாரிட்டி குறைந்துவிட்டது. போட்டியும் அதிகமாகி விட்டது. பத்திரிகை என்பது உங்களைப் பொறுத்த வரை 24 மணிநேர வேலை… கச்சேரி, நாடகம், இலக்கிய கூட்டம், நண்பர்களுடன் பொழுதுபோக்கு என்று ஹாயாக இருங்களேன்’ என்றேன். என் பேச்சை அப்படியே ஆமோதித்த திருமதி.சாவி, ‘நீங்க சொன்னதையேதான் நானும் சொன்னேன். கேட்கமாட்டேன் என்கிறார்’ என்றார்.

‘நீங்க சொல்றதெல்லாம் சரிதான். பத்திரிகை சுமைதான். ஆனால் அது சுகமான சுமை. 24 மணி நேர வேலையாக இருந்தாலும் அது எனக்கு மிகவும் பிடித்த வேலை என்பதால், 24 மணி நேரப் பொழுது போக்கு’ என்றார்.

மற்றுமொரு நெகிழ்ச்சியான சம்பவம்… தினமணிகதிரின் ஆசிரியராக இருந்தபோது ஒரு சமயம் அமெரிக்கச் சுற்றுப் பயணம் சென்றார். சுமார் 5, 6 வாரங்கள்… அங்கிருந்து டில்லிக்கு வந்தார். விடிகாலை 5 மணி…என் வீட்டிற்கு வந்தார். அவர் திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். ‘வயது அறுபதைக் கடந்து விட்டதால் அவர் தொடர்ந்து ஆசிரியராக இருக்க முடியாது’ என்று நிர்வாகம் கூறிவிட்டது. திருமதி.சாவி அவர்கள் எனக்குப் ஃபோன் செய்து தகவலைச் சொல்லிவிட்டு, ‘அவருக்கு நாங்கள் தெரிவிக்கவில்லை. ஷாக் ஆகி விடுவார். நீங்களே சற்று நிதானமாக சொல்லுங்கள்’ என்று சொல்லி விட்டார்.

சாவியோ, வீட்டுக்குள் நுழைந்ததும் என் மனைவி கொடுத்த காபியைக் குடித்துவிட்டு, ‘5, 6 வார தினமணி கதிர் இதழ்களைக் கொடுங்கள்… எப்படி வந்திருக்கின்றது என்று பார்க்க வேண்டும்’ என்றார். நான், திருமதி.சாவியின் வேண்டுகோளை ஒதுக்கிவிட்டுச் சொன்னேன், ‘தினமணி கதிர் இதழ்களை ஏன் பார்க்கத் துடிக்கிறீங்க… உங்களுக்கும் கதிருக்கும் இனி சம்பந்தம் இல்லை’ என்றேன். சாவிக்கு பயங்கர அதிர்ச்சி… என்ன… என்ன சொல்றீங்க… என்ன சமாச்சாரம்?’ என்று பரபரப்பாகக் கேட்டார். விஷயத்தைச் சொன்னேன். அப்படியே இடி விழுந்ததுபோல் உட்கார்ந்து விட்டார். ‘கதிர் என் குழந்தைமாதிரி… அதை யார் எப்படி நடத்தப் போகிறார்களோ? எனக்கு வேலை போனதைப் பற்றிக் கவலையில்லை. கதிரின் எதிர்காலத்தைப் பற்றித்தான் என் கவலையெல்லாம்’ என்று கூற ஆரம்பித்தவர்… விடாமல்… தினமணி கதிர் அனுபவங்களையும், கிடைத்த வெற்றிகளையும், தவிர்க்க முடியாத சில ஏமாற்றங்களையும் பேசிக்கொண்டே இருந்தார். நானும் குறுக்கீடு செய்யாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். மணி ஒன்பது ஆகியிருக்கும். அப்போதுதான் பார்த்தேன். மேஜை மேல் என் மனைவி அவருக்கு வைத்திருந்த காபி எடுபடிந்து ஆறிப் போயிருந்தது!

கடுகு அவர்களின் சிறு குறிப்பு தொடரும்…

kadugu

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s