19-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


image003

பத்திரிகையுலக ஜாம்பவான் சாவியின் மற்றொரு அனுபவம்…

காஞ்சிப் பெரியவர்,  திருப்பதி போகும் வழியில் ஒரு சின்னக் கிராமத்தில் முகாமிட்டிருந்தார் .  மெயின் சாலையிலிருந்து வயல்களுக்கிடையே உள்ள கப்பி ரோடு வழியாக அந்த கிராமத்தை அடைய வேண்டும்.  நான் அப்போது ‘தினமணி கதிரி’ல் இருந்தேன்.  சுவாமிகளைப் பார்ப்பதற்காக நானும், எம். கே. என்று அழைக்கப்படும் திரு எம். கிருஷ்ணசாமியும் (இப்போது லூகாஸ் டி.வி.எஸ்.)  திரு டி.கே.தியாகராஜனும் போயிருந்தோம்.  எங்களைப் பார்த்ததும், சுவாமிகள் கையால் சைகை காட்டி எதிரே உட்காரச் சொன்னார்கள்.

பிறகு என்னைப் பார்த்து,  “எக்ஸ்பிரஸில் ‘கீ‘  போஸ்டில் இருக்கியோ ? ” என்று கேட்டுக் கொண்டே சாவியால் திறப்பது போல் அபிநயித்துக் காட்டினார்.  நான் பதில் எதும் சொல்லாமல் பரவசத்தோடு அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  பெரியவர்  ரொம்ப உற்சாகத்தோடு காணப்பட்டார்.

நீ அமோகமா இருப்பே.  க்ஷேமமாய் இருப்பே” என்று வாயார வாழ்த்தினார். இப்படி வாழ்த்தியதைக் கேட்டதும் எனக்கும் மற்றவர்களுக்கும் பெரு வியப்பு. ஏனென்றால் அவர் எப்போதும் ஆசீர்வாதம் செய்வாரே தவிர, இவ்வளவு வார்த்தைகளைச் சொல்லி வாழ்த்தியதைக் கண்டதில்லை.

சிறிது நேரம் மௌனம்.

“பாலிட்டி (Polity) என்றால் என்ன தெரியுமோ ?” என்றார் சட்டென்று.

எனக்குத் தெரியவில்லை.  தயங்கி விட்டு,  “  ‘பாலிடிக்ஸ்‘   என்றால் தெரியும் ” என்றேன்.

“நான் கேட்பது பாலிடிக்ஸ் இல்லை.  பாலிட்டி” என்றார்.

விழித்தேன்,  அல்லது விழித்தோம்.

“மனித சமுதாயத்துக்கு மொத்தமாகச் செய்யப்படுகிற சேவைக்கு  ‘பாலிட்டி‘  என்று சொல்லலாம்.  ‘பாலிட்டி‘  என்று தலைப்பிட்டு நீ உன் பத்திரிகையில் வாரா வாரம்  ‘ரிலிஜனை‘ப் பற்றி எழுது”  என்றார்.  ஏறக்குறைய ஒரு கட்டளை மாதிரி.

“மதம்,  பக்தி இது பற்றியெல்லாம் பத்திரிகையில் எப்போதாவது வரலாமே தவிர,  வாரா வாரம் எழுதுவது கூடாது என்ற கொள்கை உடையவன் நான்” என்றேன்.

சுவாமிகள் என்னிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை.  சற்று வியப்புடன், “ஏன் அப்படிச் சொல்கிறாய் ?” என்று கேட்டார்.

“நான் ஆசிரியர் வேலையை ஒப்புக் கொண்டபோது கதிர் பத்திரிகையின் விற்பனையை லட்சம் பிரதிகளாக்கிக் காட்றேன்னு கோயங்காவிடம் சேலன்ஜ்ச் பண்ணியிருக்கேன். அதுக்கு இடைஞ்சலா இருக்கற எதையும் நான் செய்யப் போவதில்லை.”

“ரிலிஜன் எழுதினா சர்க்குலேஷன் ஏறாதோ?” பெரியவர் விடுவதாக இல்லை.
“ஏறாதுன்னு நான் முழுமையா நம்பறேன்.”
“எப்படிச் சொல்றே நீ ?”
“இப்ப குமுதம் ஐந்து லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. அதில் அவர்கள் ரிலிஜன் பற்றி எழுதறதில்லே. ரிலிஜன் பற்றி எழுதற பத்திரிகை எதுக்குமே சர்க்குலேஷன் அதிகம் இல்லை.”
“நான் சொல்றேன். நீ எழுது. நான் பூரணமா ஆசீர்வாதம் பண்றேன். நன்னா வரும். எழுது” என்றார் பெரியவர்.

எனக்கு என் கொள்கையிலிருந்து விலகிப் போக விருப்பமில்லை.

“பெரியவா மன்னிக்க வேண்டும்.  என் பத்திரிகையில் நான் ரிலிஜனைப் பற்றி எழுதுவதாக இல்லை.  விற்பனை பாதிக்கும்”  என்றேன்.

நான் பிடிவாதமாகச் சொன்னாலும் பெரியவர்கள் என்னிடம் ஒரு குழந்தையிடம் காட்டும் அன்பைக் காட்டிப் பேசினார்.

“அப்படியா நினைக்கிறாய் ?” என்று இழுத்தார் போல் விட்டு விட்டார்.

ஸ்வாமிகள் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. விபூதி, குங்குமம் பிரசாதம் கொடுத்து எங்கள் மூவரையும் ஆசீர்வதித்து வழி அனுப்பினார்.

அப்புறம் மூவரும் பெரியவாளை நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.

காரில் திரும்பும் போது என்னை மற்ற இருவரும் ரொம்பவும் கோபித்துக் கொண்டார்கள்.

“அதெப்படி பெரியவா ஆணையை மீறி முடியாதுன்னு சொல்லலாம்?” என்று கடிந்து கொண்டார்கள்.
“அவர்தான் ஆசீர்வாதம் பண்றேன்னு சொன்னார் இல்லையா ? அதுக்கு மேல என்ன வேணும் ?”
இப்படி என்னைப் பேச விடாமல் டி.கே.டியும் எம்.கேயும் பொரிந்து தள்ளினார்கள்.
நான் அமைதியாக இருந்தேன். உள்ளுக்குள் ஒரு சஞ்சலம். ‘ஒரு வேளை ‘முடியாது’ என்று சொன்னது தப்பு தானோ ? அவர் அவ்வளவு சொல்லியும் அவர் கட்டளையை மீறியது சரியா ? ‘ என்று எனக்கு நானே கேள்விகள் கேட்டுக் கொண்டேன்.
பெரியவாளுடன் தர்க்கம் செய்ததை பெரிய குற்றமாகக் கருதினேன். அந்தக் குற்ற உணர்வு என் மனதில் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. ஆனாலும் எனக்குச் சரியென்று பட்டதைத் தானே சொன்னேன். அதில் என்ன தவறு என்றும் தோன்றியது.

காரில் ஏறி கப்பி ரோடில் போய்க் கொண்டிருந்தபோது சுவாமிகள் முகாமிலிருந்த பிராமணர் ஒருவர் எங்களைத் துரத்திக் கொண்டு  சைக்கிளில்  வருவதைக் கவனித்தோம்.  அவர் எங்களிடம் ஏதோ சொல்லத்தான் வருகிறார் என்பதை ஊகித்து காரை நிறுத்தச் சொன்னோம்.

“பெரியவர் உங்களைக் கூப்பிடுகிறார்”  என்றார் அந்த மடத்து ஆள் மூச்சு வாங்க.

எதற்காகக் கூப்பிடுகிறார் என்று மூவரும் யோசித்துக்கொண்டே போனோம்.

“ரிலிஜன், கடவுள் பற்றியெல்லாம் எழுதினால் பத்திரிகை விற்காது என்று சொன்னாயே,  இப்போது தினமணி பேப்பரில் தினமும் மாம்பலத்து திடீர்ப் பிள்ளையாரைப் பற்றி எழுதுகிறார்களே!  இதனால் விற்பனை ஏழாயிரம் காப்பி அதிகரித்திருப்பதாகக்  கேள்விப் பட்டேனே !” என்றார்.

அப்போது  மாம்பலத்தில் திடீர்ப் பிள்ளையார் பூமியிலிருந்து கிளம்பி தினம் ஓர் அங்குலமாக வளர்ந்து கொண்டிருந்த நேரம்.  பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த திடீர்ப் பிள்ளையாரைப் பார்க்கப் பெரும் கூட்டமாகக் கூடிக் கொண்டிருந்தார்கள்.

“பெரியவா நினைக்கிற மாதிரி அது ரிலிஜன் எழுதுவதால் ஆகும் விற்பனை அல்ல.  தெய்வ பக்திக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.  சென்சேஷன். அடுத்து என்ன ஆகுமோங்கற சஸ்பென்ஸ்.ஒரு பரபரப்பான செய்தியில் சஸ்பென்சும் சேர்ந்து கொண்டது.  அதனால் விற்பனை கூடி உள்ளது.  அவ்வளவுதான்”  என்றேன்.

ஸ்வாமிகள் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

“ஓகோ,  அப்படி நினைக்கிறாயா?”  என்பது போல் தலையசைத்து விட்டு, ‘சரி, நீங்க போகலாம்’ என்று சொல்லி அனுப்பி விட்டார்.

என் மனதுக்கு ஒவ்வாத விஷயங்களைச் செய்யக் கூடாது என்கிற தீவிரம் எனக்கு எப்போதுமே உண்டு.

நான் பெரிதும் மதித்துப் போற்றிப் பூஜித்த காஞ்சி பரமாச்சார்யார் முன்பும் என் கருத்தை வெளியிடத் தயங்கியதில்லை. இதில் அதிசயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சிக்குப் பின் கதிர் சர்க்குலேஷன் ஏறவே இல்லை.
மஹா பெரியவா அருள்வாக்கு : –

நல்லதும் கெட்டதுமாகப் பலது நம்மை பாதிக்கிறது. அதனால் அழுகிறோம், சிரிக்கிறோம். இரண்டும் பாதிப்புதான். இரண்டுமே போதும் போலத்தான் இருக்கிறது. சிரித்தால்கூட ஒரு அளவுக்கு மேலே போனால் வயிற்றை வலிக்கிறது! பலஹீனமாகிறது. சிரிப்பு மூட்டாதே!” என்று கோபித்துக் கொள்கிறோம். ஆனந்தமாக டான்ஸ் பண்ணினாலும் உடம்பு அசந்து போகிறது. போதும் என்றாகிவிடுகிறது. ஒரு பாதிப்பும் இல்லாமல் விச்ராந்தியாக இருக்க மாட்டோமோ என்றுதான் இருக்கிறது. இதுதான் நமக்கு வேண்டியது. அத்வைதமுமில்லை, த்வைதமும் இல்லை.

இதற்கு என்ன பண்ணலாம் என்று பார்க்கிறோம். பாதிப்பு எப்படிப் போகும் என்று ஆலோசித்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. ‘முதலிலே காங்கோ சண்டை ந்யூஸ் வந்தபோது விழுந்து விழுந்து படித்தோமே, அப்புறம் ஏன் விட்டுப் போச்சு? அது ஏன் இப்போது நம்மை பாதிக்கவில்லை’ என்று ஆலோசித்தால், இடத்தில் (space-ல்) ஒன்று தள்ளிப் போகப் போக அதன் பாதிப்பு குறைகிறதென்று தெரிகிறது. பத்து வருஷம் முந்தி பிதா காலமானபோது அத்தனை அழுத நம்மை இப்போது அது ஏன் பாதிக்கவில்லை என்று யோசித்துப் பார்த்தால், காலத்திலே தள்ளிப் போகப் போக, பாதிப்பு குறைகிறது என்று தெரிகிறது. அதனால் நாம் பாதிப்பே இல்லாமலிருக்க வேண்டுமானால் பக்கத்திலேயே நடப்பதை காங்கோவில் நடக்கிற மாதிரி பாவிக்கப் பழக வேண்டும்; இந்த க்ஷணத்தில் வருகிற நல்லது பொல்லாததுகளைப் பத்து வருஷத்துக்கு முந்தி நடந்த மாதிரிப் பார்க்க அப்யாஸம் செய்ய வேண்டும்.

எத்தனை ஸந்தோஷமும், துக்கமும் சாச்வதமாக இல்லாததால், எல்லாம் relative-தான் (ஸ்வய சக்தி இல்லாமல், இன்னொன்றைச் சார்ந்திருப்பதுதான்) என்று தெரிந்து விட்டது. அதனால் இன்னொன்றைச் சாராமல் தன்னில் தானாக நிறைந்து Absolute– ஆக இருப்பதைப் பிடித்தால்தான் பல தினுஸான பாதிப்பு இல்லாமல் சாச்வத அமைதியாக இருக்கும் என்று தெரிகிறது. இதுதான் spirituality-யில் (ஆத்மிகத்தில்) ஐன்ஸ்டீனின் Relativity Theory (சார்புக் கொள்கை)! அவரும் Time, Space-ஐத்தானே சொல்கிறார்?

One thought on “19-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

  1. rjagan49 March 19, 2014 at 5:07 AM Reply

    சாவியின் கொள்கைப் பிடிப்பு பெரியவாளுக்கு முன்னாலும் தளராமல் நின்றது பாராட்டத்தக்கது. உண்மையில் தலைவர்களை ஸ்துதி பாடும் கூட்டத்தை விட அவர்களுடன் விவாதிக்கும் தொண்டர்களைத் தான் அவர்கள் மதிப்பார்கள். (தன் பதவி போய்விடுமோ என்று தன்னம்பிக்கை இல்லாத தலைகள் தான் இவற்றை விரும்ப மாட்டார்கள்.) அந்த சம்பாஷனைக்குப் பிறகு கதிர் விற்பனை கூடவில்லை என்று ஒத்துக்கொண்டதிலும் நேர்மை தெரிகிறது. – ஜெ.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s