17-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


1888473_616442668409685_526532623_n
அது 1980 -களின் துவக்கம்… காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மஹா பெரியவா, ஓர் உதவியாளரை அழைத்தார். வெகு பவ்யத்துடன் வந்து நின்றார் அந்த உதவியாளர். மகானின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் காத்திருந்தார்.
“திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் தெரியுமோ உனக்கு ?”
உதவியாளர் மெல்லிய குரலில் சொன்னார்: “தெரியும் பெரியவா. அருணாச்சலேஸ்வரர் தரிசனத்துக்காக திருவண்ணாமலை போனப்ப ரெண்டு மூணு தடவை அவரை நான் சேவிச்சிருக்கேன்.”

“ம்ம்… உடனே பொறப்படு. திருவண்ணாமலைக்குப் போ. அவர்கிட்ட, நான் கூப்பிட்டேன்னு சொல்லி, உடனே காஞ்சிபுரத்துக்குக் கூட்டிண்டு வா” என்றார்.

“உத்தரவு பெரியவா” என்று நமஸ்காரம் செய்து விட்டு அந்த உதவியாளர் அடுத்த நிமிடம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சென்றார். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினார்.

திருவண்ணாமலையில் யோகியின் ஆசிரமம் சென்று அவரை நமஸ்கரித்த பின் , விஷயத்தைச் சொன்னார். “சரி… புறப்படுவோம்” என்று ஆசீர்வதித்தார் அந்த உதவியாளரை. அங்கிருந்து ஒரு காரில் இருவரும் பயணமானார்கள்.

அடுத்த ஒரு சில மணி நேரத்துக்குள் மஹா பெரியவாளின் முன்னே இருந்தார் யோகி ராம்சுரத்குமார். அதுவரை ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்த மஹா பெரியவா, திடீரென்று கீழே தரையில் அமர்ந்தார். யோகியும் சுவாமிகளுக்கு முன்னால் — அதாவது அவரை நேர் பார்வை பார்த்தவாறு தரையில் அமர்ந்தார். இரு மஹான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். நிமிடங்கள் கரைந்தன. ஆனால், இவருடைய அதரங்களில் இருந்தும் ஒரு வார்த்தை கூட வந்து விழவில்லை.

யோகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்த உதவியாளருக்கு வியப்பு. ‘ஏதோ பெரிய விஷயம் பேசப் போகிறார்கள்’  என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸ்வாமிகளும் பேசக் காணோம்.  யோகியும் பேசக் காணோம். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்ப்பது மாதிரி பார்த்துக் கொண்டே இருக்கிறார்களே என்று குழம்பினார்.

சில நிமிடங்கள் கரைந்தவுடன், மெள்ளப் புன்னகைத்தார் பெரியவா.

‘யப்பா… நீண்ட நேர அமைதி ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இனிதான் இருவரும் மனம் விட்டுப் பேசப் போகிறார்கள் போலிருக்கிறது’  என்று தீர்மானித்தார் உதவியாளர்.

அப்போது உதவியாளரை அருகே வருமாறு அழைத்தார் பெரியவா.

உதவியாளர் அருகே வந்து வாய் பொத்தி பவ்யமாக நின்றார்.

“யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைப் பத்திரமாக திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா”  என்றார்.

உதவியாளருக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி. ‘பேசவே இல்லை. ஆனால், அதற்குள் வந்த வேலை முடிந்து விட்டது என்கிறாரே ?’ என்று குழம்பி நின்ற போது, யோகி எழுந்து விட்டார்.

இருவரும் மடத்தை விட்டு வெளியே நடந்தனர்.

பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன ?

விடை தெரியாமல் விடுவாரா உதவியாளர் ?

மடத்தில் இருந்து வெளியே அந்த உதவியாளர் தவித்துப் போனார்.

‘அப்படி என்னதான் மஹா ஸ்வாமிகளும், யோகி ராம்சுரத்குமாரும் உள்ளே சம்பாஷணை நடத்தி இருப்பார்கள்.  இருவரும் பேசியதாகக் காணோம். மௌனமாகவே நிமிடங்கள் கரைந்தன. ஆனால் யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைத் திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா என்கிறாரே மஹா பெரியவா ?’

உதவியாளரின் முகத்தைப் பார்த்து, அவருக்குள் இருக்கும் ஐயத்தைப் போக்க எண்ணினார் யோகி. “என்னப்பா….உள்ளே நாங்கள் என்ன செய்தோம் என்று யோசிக்கிறாயா ?” என்று மெள்ளக் கேட்டார்.
“ஆமாம்ஜி. நீங்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே?” என்றார் படபடப்பாக உதவியாளர்.
“ஆம். நாங்கள் இருவரும் பேசாமலேயே பல விஷயங்களைப் பேசினோம்” என்று யோகி சொல்ல…. உதவியாளர் விழித்தார்.
பிறகு, யோகியே ஆரம்பித்தார். அதை அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் பாங்கிலேயே காண்போம்.
பெரியவா: “போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யராக இருந்தார். கோவிந்தபுரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கிறார். தன் வாழ்நாளில் கோடிக்கணக்கான ராம நாமத்தை ஜபித்து வந்தார்.”
யோகி: “ஆம்….”
பெரியவா: “கலியுகத்தில் ராம நாம ஜபத்தைப் பரப்பும் பணி தனக்குக் காத்திருக்கிறது என்பதற்காக தனக்கு அடுத்து ஒரு ஆச்சார்யரை பீடத்தில் அமர்த்தி விட்டு, கிராமம் கிராமமாகச் சென்று ராம நாம ஜெபத்தின் மகிமைகளைச் சொல்லி, அனைவரையும் ராம நாம ஜபம் உச்சரிக்கச் செய்தார்.
“யோகி: “ராம்…. ராம்…
“பெரியவா: “ஜாதி, மதம் என்று எதுவும் பாராமல் பலருக்கும் உபதேசம் செய்தார். கலியுகத்தில் ராம நாம ஜபம் ஒன்றுக்கே மகத்தான சக்தி இருக்கிறதுஎன்று பிரச்சாரம் செய்தார். இறுதியில், அவர் கோவிந்தபுரத்திலேயே ஜீவ சமாதி ஆனார்.”

யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குப் புரிகிறது.”

பெரியவா: “அங்கே அவர் ஜீவ சமாதி ஆகி இருக்கிற இடத்தில் இன்றைக்கும் ராம ராம என்று ஜப ஒலி வந்து கொண்டிருப்பதை அனுபவப்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அந்த மகான் குடி கொண்டிருக்கிற இடமே — கோவிந்தபுரமே ராம நாம பூமியாக இருக்கிறது.”
யோகி: “ராம்…. ராம்…

பெரியவா: “பேசாமல் நீ அங்கே போய் விடேன். ராம நாம சிந்தனையில் வாழும் நீ அங்கேயே நிரந்தரமாக இருந்து விடேன்.”

யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குத் திருவண்ணாமலையே போதும். நான் அங்கேயே தங்கி விடுகிறேன்.”

பெரியவா: “உனக்கு அப்படி எண்ணம் இருந்தால் சரி.”

யோகி: “ஆம். இந்தப் பிச்சைக்காரன் திருவண்ணாமலையே போதும் என்று நினைக்கிறான்.

பெரியவா: “ஆஹா… அங்கேயே இருந்து கொள். உனக்கு இதைச் சொல்லலாம் என்றுதான் இங்கு வரச் சொன்னேன். நான் உன்னைக் கூப்பிட்டு அனுப்பிய வேலை பூர்த்தி ஆகி விட்டது. நீ புறப்படு.”

இந்த சம்பாஷணையை இப்படி உதவியாளரிடம் சொல்லி முடித்ததும், அவர் திறந்த வாய் மூடவில்லை. மௌனத்தின் மூலமே மிகப் பெரிய சம்பாஷணையை யோகிகள் நடத்த முடியும் என்பது உதவியாளருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக் கொண்டு வந்து தன்னை நினைக்கும் படியாகப் பண்ணும்.

இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகின்றன என்கிறார்கள். குறிப்பாக, வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள்.

தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம் ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன.

சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் “போ, போ” என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா? போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸத்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான – ‘ஏகம் ஸத்’தான – பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான்.

இந்த நல்ல வாஸனையை ‘வா, வா’ என்று – சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக் கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும் அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பிவிட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டால் அது இருந்த இடம் தெரியாமல் போகிறது.

கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும்; மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s