சுஜாதாவிற்கு சினமூட்டிய பேட்டி – அரியாரவேலன் கனகசபாபதி


நிகழ்வு 1:

1992 ஆம் ஆண்டு. தினமலர் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் செய்தியாளராக நான் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். (அதன் இதழியற்கொள்கையோடு நாளும் முரண்டுபட்டு சில மாதங்களிலேயே அதனைவிட்டு வெளியே வந்தது வேறு கதை).

நெல்லை மனோண்மணியனார் பல்கலைக் கழகத்தின் கணிப்பொறியியல் துறையின் சார்பில் ஆர்த்தி விடுதியில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதற்கு ஆர்.எம்.கே.வி.யும் தினமலரும் நன்கொடையாளர்கள். சுஜாதா காலையில் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கவும் மாலையில் சுழற்சங்கத்தில் உரையாற்றவும் அங்கே வந்தார்.

அக்கருத்தரங்கத்திற்கான அழைப்பிதழை என்னிடம் கொடுத்த கணிப்பொறித் துறையின் பேராசிரியர் கிருஷ்ணன், “கோமல் சுவாமிநாதனை நீங்கள் பேட்டி கண்டு நகர்மலரில் கட்டுரை எழுதியதைப்போல, சுஜாதாவையும் பேட்டி கண்டு எழுதுங்கள்” என்றார். “சரி” என்றேன். அவரே சுஜாதாவிடம் பேசி மதியம் ஒரு மணி என நேரம் பெற்றுத் தந்தார்.

சரியாக பன்னிரண்டு ஐம்பதிற்கு சுஜாதா தங்கவைக்கப்பட இருந்த அறையின் வாசலுக்குச் சென்றேன். அரண்மனை வாயிற்காவலரைப்போல கணிப்பொறித் துறையின் மாணவர் ஒருவர் யாரையும் அந்த அறைக்கு அருகில் வரவிடாமல் விரட்டிக்கொண்டு இருந்தார்.

பேராசிரியர் கிருஷ்ணனோடு என்னை பலமுறை அவர் பாத்திருப்பதால், ‘சார் இன்னும் பேசி முடிச்சிட்டு வரல சார். நீங்க வருவிங்கன்னு ப்ரொஃபசர் சார் சொன்னாரு. கொஞ்சம் லாபில உட்காருங்க சார். அவர் வந்ததும் நீங்க சந்திக்க ஏற்பாடு செயிறேன்’ என்றார். நானும், இந்து இதழின் மதுரைப் பதிப்பில் இப்பொழுது பணியாற்றும் புகைப்படக்காரர் ஜேம்சும் (அப்பொழுது தினமலரில் இருந்தார்) அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தோம்.

சிறிது நேரத்தில் நெல்லையின் புகழ்பெற்ற துணிக்கடையின் இளைய முதலாளி தன் மனைவியோடு வந்து எங்கள் இருக்கைக்கு அருகில் அமர்ந்தார்; எங்களிடம் அவர் மனைவியை அறிமுகம் செய்துவிட்டு, ‘இவங்க கிளப்புல இருந்து இன்ஹவுஸ் பத்திரிக்கை வருது; அதுக்கு சுஜாதா சார பேட்டி எடுக்க வந்திருக்கோம்.’ எனக் கூறி விட்டு, ‘என்ன இன்டர்வியூ பண்ண ரெடியாயிட்டையா?” என்று தன் மனைவியிடம் கேட்டார்.

அவர், “என்ன கேட்கிறதுன்னே தெரியல! என்ன கேட்கலாம்? என தன் கணவனைத் திருப்பிக்கேட்க, “எதையாவது கேளு” என கணவன் பதிலளித்துக்கொண்டு இருக்கும்பொழுதே, ‘உங்களுக்கு திருநெல்வேலி அல்வா ரெம்ப பிடிக்குமான்னு கேளுங்க?” அவரை ஜேம்ஸ் நாடகத்தனமான ஏற்ற இறக்கத்தோடு அந்த அம்மையாரைக் கிண்டல் அடித்தார்.

அதற்குள் சுஜாதா கருத்தரங்கம் முடிந்து வந்து, தனக்கான அறைக்குள் நுழைந்தார். மணி ஒன்றரை ஆகி இருந்தது. வாயில் காப்போனாக இருந்த மாணவர் நாங்கள் இருந்த இடத்திற்கு ஓடிவந்து, துணிக்கடைக்காரரிடம், “சார். மேடம் போய் பேட்டி எடுக்கலாம் சார்” என்றார். ‘ஏங்க என்ன கேள்வி கேட்க” என பென்சிலை முன்பல்லால் கடித்தவாறே மனைவி கேட்க, இருவரும் எழுந்துபோனார்கள்.

“தம்பி! ஒரு மணிக்கு உங்களுக்கு பேட்டி தர்றதா சுஜாதா சொல்லிட்டாரு. சரியா வந்திருங்கன்னு கிருஷ்ணன் சொன்னாரு. இப்ப மணி ஒன்றரை ஆகுது. நீங்க பாட்டுக்கு அவங்கள பேட்டி எடுக்கப் போகச்சொல்றீங்க?” எனச் சினந்தேன். “இவங்க வந்ததும் நீங்கதான் சார்” என்று ஓடிப்போய் வாயிலில் நின்றுகொண்டார். நெல்லையப்பர் சன்னதி வாசலில் உற்சவரின் வருகைக்காகக் காத்திருக்கும் பக்தர்களைப் போல சுஜாதாவின் விசிறிகள் பலர் அவரைப் பார்க்க அங்கே காத்திருந்தார்கள்.

மணி இரண்டு ஆனது. பேட்டி காணப்போன துணிக்கடைக்காரரும் அவர் மனைவியும் வெளியே வரவில்லை. ஜேம்ஸை அழைத்துக்கொண்டு எழுந்து அறையின் வாசலுக்குப் போனான். வாயிற்காப்பாளர் மாறியிருந்தார்.

அறையின் கதவைத் தட்டினேன்; கதவு திறந்தது; திறந்தவர் முந்தைய வாயிற்காப்பாள மாணவர். “மணி இரண்டு” என்றேன். “இந்தா முடிஞ்சிருச்சு சார்” என்று கூறிவிட்டு அவர் கதவை மூடிக்கொண்டார். 15 நிமிடங்கள் ஆனது. இன்னும் அவர்கள் வெளியே வரவில்லை. மீண்டும் கதவைத்தட்டினேன். உள்ளே இருந்த வாயிற்காப்பாளர் கதவைத் திறந்தார்.

“எனக்கு வேறு வேலை இருக்கிறது; நான் கிளம்புகிறேன்; கிருஷ்ணனிடம் சொல்லிவிடுங்கள்” எனக் குரலை உயர்த்திக் கூறினேன்.

“யாரு? என்ன?” என உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது;

அது கிருஷ்ணனின் குரல் அன்று.

“அவருக்கு ஒரு மணிக்கு நேரம் சொல்லி இருந்தோம்; அதான் கோபப்படுறாரு” என்றார் வா.கா.

“தினமலர்காரருக்குள்ள ஒரு மணிக்குச் சொன்னோம்” என்றது அந்தக் குரல்.

“அவருதான்” என்றார் இவர்.

“இந்த இவங்கள முடிச்சிருவோம்” என்றார் அவர்.

“கொஞ்சம் பொறுத்துங்க சார்” என என்னிடம் கூறினார் வா.கா.

கதவு மீண்டும் மூடப்பட்டது. “கொஞ்சம் பொறுங்க அரி. பார்க்கலாம்” என்றார் ஜேம்ஸ்.

ஐந்து நிமிடத்தில் கதவு திறந்தது. அவர்கள் இருவரும் வெளியே வந்தார்கள்.

“நிறைய கேள்வி கேட்டீங்க போல” என அந்தப் பெண்மணியை வம்புக்கு இழுத்தார் ஜேம்ஸ்.

“இல்ல சார். மூணு கேள்விதான்” என்றார் அப்பெண்.

“அதுக்கே இவ்வளவு நேரமா?’ என கிண்டலடித்தார் ஜேம்ஸ்.

அதற்குள் வா.கா. வேறொரு நிருபரை அறைக்குள் அழைக்க, “தினமலர்காரரைக் கூப்பிடுப்பா” என்றது உள்ளிருந்த குரல்.

வா.கா. “வாங்க சார்” என்றார். நானும் ஜேம்ஸும் உள்ளே நுழைந்தோம்.

கதவின் மறைவில் இருந்த நீண்ட சோபாவின் ஒரு முனையில் சுஜாதா உட்கார்ந்திருந்தார். அவருக்கு அடுத்து இருந்த நாற்காலியில் நெல்லை பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

சுஜாதாவிற்கு நேர் எதிரே ஒரு நாற்காலி வெறுமையாக இருந்தது. அதற்கு பின்னால், எனக்கு முன்னே அறைக்குள் நுழைந்த நிருபர் நின்றுகொண்டிருந்தார். நான் சுஜாதா அமர்ந்திருந்த சேபாவின் மறுமுனையில் அமர்ந்தேன். எதிரே இருந்த நாற்காலியில் ஜேம்ஸ் அமர்ந்து கேமிராவை எடுத்து சுஜாதாவைச் சுட்டுத்தள்ளத் தொடங்கிவிட்டார்.

அவருக்கு பின்னர் நின்றுகொண்டிருந்த நிருபரிடம் “உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்றார் சுஜாதா. (இந்தக் குரல்தான் வா.கா. தாண்டி வெளியே இருந்த எனக்குக் கேட்ட குரல்)

“பேட்டி”

“எந்தப் பத்திரிக்கை?”

“ஜூனியர் விகடன்”

தலைமைச் செயலகம்

“அதுலதான் தலைமைச் செயலகம் தொடர் எழுதுறனே. அப்புறம் என்ன பேட்டி. போயிட்டு வாங்க”

அந்த நிருபர் வெளியேறிவிட்டார்.

சுஜாதா என் பக்கம் திரும்பினார்.

“நீங்க தினமலரா?”

“நான் அரி. தினமலரில் வேலை பார்க்கிறேன்”

“எதிர்பார்த்ததவிட கொஞ்சம் நேரமாயிருச்சு”

“கணினிகள் காலத்தை மிகத்துல்லியமாக பின்பற்றக் கூடியவைன்னு நீங்க எழுதுனத படிச்சு; கணிப்பொறியாளர்களும் அப்படி இருப்பாங்கன்னு நினைச்சது என்னோட தப்புதான்”

அருகில் இருந்த பேராசிரியர் வெடிச்சிரிப்பு சிரிக்க, சுஜாதா திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு “பேட்டியைத் தொடங்கலாமா?” எனக் கேட்க, “உங்கள் எழுத்துகள் இலக்கியமா?” என முதல் கேள்வியைக் கேட்டேன்.

அதற்கு பத்து நிமிடம் சுற்றி வளைத்து பதில் சொன்னார்.

“இதை ஒரு வரியில் சொல்லுங்கள்” என்றேன்.

“சிலது இலக்கியம்; சிலது இலக்கியமில்லை”

“படிகள் போன்ற சிறுபத்திரிக்கையில் நீங்கள் எழுதுபவைகள் இலக்கியம் என்றும் வணிக இதழ்களில் எழுதுபவைகள் இலக்கியமற்றவை எனக் கொள்ளலாமா?”

“நீங்கள் படிகள் படித்திருக்கிறீர்களா?”

இந்த கேள்விக்கு கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் இதழ் தொடங்கி அப்பொழுதுதான் வரத்தொடங்கி இருந்த புதிய பார்வை வரை ஒரு பட்டியலைக் கூறி இவற்றை எல்லாம் படித்திருக்கிறேன்; படிக்கிறேன் என்றேன்.

அப்புறம் அவர் பதில் சொல்லும் தொனியே மாறிவிட்டது. மிகவும் கவனமாக எனது வினாகளை எதிர்கொண்டார்; அதைவிடக் கவனமாகப் பதில் கூறினார்.

 ரத்தம் ஒரே நிறம்

கறுப்பு, சிவப்பு. வெளுப்பு புதினத்தைப் பற்றிக் கேட்டபொழுது, ஒரு நாட்டுப்புறப் பாடலைக் கூறி, “இந்தப் பாட்டைப் பற்றி நான் எழுதினால்கூட நான் அந்த சாதியைக் குறைகூறுவதாகக் குற்றம் சுமத்துவார்கள்” என்றார்.

அடுத்து இரண்டு கேள்விகள் முடிந்ததும், ஜேம்ஸைப் பார்த்து, “உங்கள் நண்பர் நிறைய ஹோம் ஒர்க் செய்துகொண்டு வந்திருக்கிறார். நான் எழுதி, நானே மறந்த போனவைப் பற்றிக் கேட்கிறார். இப்படித்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்காக ஆர். கே. நாராயணை பேட்டிகேட்க மிகுந்த ஆயத்தத்தோடு  நான் போனேன். பல கேள்விகளுக்குப் பின்னர் நாரதரைப் பற்றி அவர் எழுதியதைப் பற்றிக்கேட்டேன்.

‘கொஞ்சம் பொறு’ எனக் கூறிவிட்டு தன் சட்டைப்பையில் இருந்து காதுகேட்கும் மெஷினை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு ‘இப்பச் சொல்லு’ என்றார்.” என தன் அனுபவத்தைக் கூற நாங்கள் மூவரும் சிரித்தோம்.

சிரிப்பு முடிந்ததும், “அடுத்த கேள்வி” என்றார் என்னைப் பார்த்து. அடுத்து நான் கேட்ட இரண்டு கேள்விகளும் அவருக்கு கடும் சினத்தை மூட்டின. பொரிந்து தள்ளிவிட்டார்.

நான் பொறுமையாக, “உங்கள் வாசகன் உங்களைச் சந்தித்தால் கேட்க விரும்பும் கேள்விகளை அவன் சார்பில் நான் கேட்கிறேன். அந்த வாசகன் நானாகவும் இருக்கக் கூடும். ஏன் கோபப்படுகிறீர்கள். உங்கள் பதிலைக் கூறுங்கள்” என்றேன்.

“எழுதிக் கொள்ளுங்கள்” எனக்கூறி தனது பதிலைச் சொன்னார்.

எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதைப்போல, ‘அதான் இவரு கண்டுபிடிச்சிட்டாருல்ல” என்றார் ஜேம்ஸ்.

சுஜாதா அவரை எரித்துவிடுவதைப் போல பார்த்தார்.

அப்படி அவருக்குச் சினமூட்டிய அந்த இரண்டு கேள்விகள் இவைதான்:

சொர்க்கத் தீவு
1. உங்களின் சொர்க்கத்தீவு நாவல் ஜார்ஜ் ஆர்வலின் 1984 என்னும் நாவலின் தழுவலா?

 தூண்டில் கதைகள் மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigalகறுப்புக் குதிரை  |  karuuppu kuthirai  |  

2. தூண்டில் கதைகளை நீங்கள் ஜெப்ரி ஆர்ச்சரின் ஃகயர் புல் ஆஃப் ஆரோஸ் கதைகளின் தாக்கத்தில் எழுதினீர்களா?

அதற்குப் பின்னர் சில கேள்விகளுக்கு விடையளித்தார். நாங்கள் விடைபெற்றுக் கிளம்பும் பொழுது தனது முகவரி அட்டையைக் கொடுத்து அதில் உள்ள முகவரிக்கு பேட்டி வெளியாகும் இதழை அனுப்பும்படி கூறினார். நாங்களும் ஒப்புக்கொண்டு அலுவலகம் மீண்டோம்.

மறுநாள் காலை, தினமலர் அதிபர்களில் ஒருவரான இரா. சத்தியமூர்த்தி தொலைபேசியில் அழைத்து, “சுஜாதாவ நேத்து நீதான் பேட்டி எடுத்தியாப்பா. அதுல அவரு சாதியப் பத்தி சொன்னத போட வேண்டான்னு சொன்னாரு. அப்புறம் கொஞ்சம் பாத்து எழுதச் சொன்னாருப்பா. எதுவும் காண்ட்ரவர்சி ஆயிராம பாத்துக்க. நேத்து ரோட்டரி கிளப் மீட்டிங்கில அவரப் பார்த்தேன்” எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

“விலாப்புறங்களில் இரண்டு வெள்ளிச் சிறகுகளோடு ஒரு தேவதை வானத்தில் இருந்து இறங்கிவந்துள்ளதைப் போன்றும் அதற்கு அருகில் சென்றால், ‘இந்தா பிடி சாபம்’ என அது சபித்துவிடும் என்பதைப்போல பாவனை செய்தவர்களைக் கடந்துசென்று சுஜாதாவைச் சந்தித்தேன்” எனத் தொடங்கி பேட்டிக் கட்டுரையை எழுதி முடித்தேன்.

எனது எழுத்துகள் இலக்கியம் இல்லை” என உதவி ஆசிரியர் கபிலன் அதற்குத் தலைப்புக் கொடுத்தார். நகர்மலரின் நடுப்பக்கத்தில் பேட்டிக் கட்டுரை வெளியானது. அதன் ஒரு படியை சுஜாதாவின் பெங்களூர் முகவரிக்கு அனுப்பி வைத்தேன்.

கட்டுரை வெளியான பின்னர் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற பொழுது வா.கா.வாக நின்றுகொண்டிருந்த மாணவர், “என்ன சார் இப்படி எழுதிட்டீங்க?” என்றார்.

துணைவேந்தராக இருந்த வசந்திதேவி, “உங்க பேட்டி நல்லா இருந்துச்சுன்னு பொறியியல் கல்லூரி பேராசிரியர் சொன்னார். ஆனா காரமா வெளிவந்திருக்கே” என்றார்.

நான் எல்லா கேள்விகளுக்கும் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு வந்தேன்.

இந்நிகழ்வு நடந்த சில நாள்களிலேயே தினமலருக்கும் எனக்கும் முரண்பாடு முற்றி நான் வெளியேறினேன்.

நான் அனுப்பி வைத்திருந்த பேட்டிக் கட்டுரையைப் படித்த சுஜாதா கணையாழியின் அடுத்த மாத இதழின் கடைசிப் பக்கத்தில் பொங்கித் தீர்த்துவிட்டார்; அக்கட்டுரையை தினத்தந்தியின் சர்க்குலேஷனைப் பிடிக்க பார்ப்பனப் பத்திரிக்கைகள் செய்யும் சதி என்று திட்டித் தீர்த்திருந்தார்.

நிகழ்வு 2:

நான் அத்தோடு என்னுடைய இதழியல் வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டு சமூகச் செயற்பாட்டாளனாக தமிழகத்தின் வெவ்வேறு கிராமங்களில் சுற்றிக்கொண்டு இருந்தேன். 2002 ஆம் ஆண்டில் ஒரு நாள் நிலவுரிமை இயக்கச் செயற்பாட்டின் வேலையொன்றிற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்றுவிட்டு கடற்கரைச் சாலையின் நடைமேடையில் மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தேன்.

காமராஜர் சிலைக்கு அருகில் வந்தபொழுது, அங்கு வந்து நின்ற மகிழ்வுந்து ஒன்றிலிருந்து கூன்விழுந்த ரெனாயிட்ஸ் பேனாவைப் போல ஒல்லியாய், உயரமாய், வெள்ளையாய் ஒருவர் இறங்கினார். எங்கோ பார்த்த உருவமாய் இருக்க, சற்று நின்றேன். அவர் கையைப் பின்னால் கட்டியவாறு நடைமேடையில் ஏறி நடந்து வந்தார். எனக்கு சில அடிகள் முன்னே வந்ததும் அவர் சுஜாதா என அடையாளம் கண்டுகொண்டேன். பத்தாண்டுகளில் மிகவும் தளர்ந்து போயிருந்தார்.

அருகில் வந்ததும். “வணக்கம்” என்றேன். நின்று முகத்தைப் பார்த்தார்.

“நீங்கள் எழுதுவது இலக்கியமா?” என்றேன் புன்னகையோடு.

எதுவும் பேசாது சில நொடிகள் பார்த்தார்.

“இந்தக் கேள்வியை பத்தாண்டுகளுக்கு முன்னர் நெல்லையில் உங்களை நான் கேட்டேன்” என்றேன்.

கேள்வி நினைவுகூர்ந்தவராக, “தினமலரா?” என்றார்.

“இப்பொழுது தினமலர் இல்லை; நிலவுரிமை” என்றேன்.

“அப்படியொரு பத்திரிக்கையா?” எனக் கேட்டுக்கொண்டே நடந்துகொண்டே பேசலாம் என்பதைப்போல சைகைகாட்டினார்.

சேர்ந்து நடந்தோம்.

சாலையில் இருந்து கடற்கரைக்குப் போவதற்கான பாதையில் இருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தோம்.

சட்டைப்பையில் இருந்து சாக்லெட் கட்டியை எடுத்து இரண்டாய்ப் பிய்த்து ஒன்றை என்னிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை சுவைத்துக்கொண்டே, “இப்ப நான் செய்யிறது எது சரியில்ல” என்றார்.

நான் சிரித்தேன்.

“சொல்லுங்க”

“திருக்குறளுக்கு எழுதிய உரை”


“நீங்களெல்லாம் மாறவே மாட்டிங்களா?”

நீங்க மாறிட்டா; நாங்களும் மாறிருவோம்

அதுவரை என் கண்கள் மீதிருந்த அவர் பார்வை, “ம்” என்னும் ஒலியோடு மறுபக்கம் திரும்பியது.

அதற்குள் வேறு ஒருவர் அவரைப் பார்த்து புன்னகைத்தவாறு அந்த இருக்கையை நோக்கி வந்தார்.

“வருகிறேன்” எனக் கூறிவிட்டு நான் எழுந்தேன்.

அவர் மீண்டும் “ம்” என்றார்.


நான் கிளம்பி வந்துவிட்டேன்.

தொடர்புடைய பதிவு:

சொர்க்கத் தீவு – சுஜாதா

திருக்குறள் புதிய உரை – சுஜாதா

சொர்க்கத் தீவுமீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சுஜாதாவின் முதல்சயின்ஸ் ஃபிக் ஷன் நாவல் இந்த ‘சொர்க்கத் தீவு’. அய்ங்கார் என்கிற கம்ப்யூட்டர் எஞ்சினியர் சொர்க்கத் தீவு என்கிற ஒரு விசித்திரப் பிரதேசத்துக்குக் கடத்தப்படுகிறான். அந்த சொர்க்கத் தீவைக் கட்டுப்படுத்தும் பிரம்மாண்ட கம்ப்யூட்டரின் கோளாறை நிவர்த்தி செய்வதற்காக அவன் அங்கே தேவைப்படுகிறான். இன்றைய அமைப்புக்கு மாறான ஒரு புதிய அமைப்பு அத்தீவில் நிலவுகிறது.மனிதர்கள் அன்பு, காதல், ரசனை போன்ற பிரதான உணர்ச்சிகள் நீக்கப்பட்டு சிந்தனா சக்தி மழுங்கடிக்கப்பட்டு கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் கிட்டத்தட்ட அடிமைகளாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் விழிப்புணர்வு கொள்ளும் சிலர் புரட்சிக்கு ஆயத்தமாகி தீவின் தலைவன் சத்யாவை எதிர்க்கத் துணிந்து தங்களுக்கு உதவுமாறு அய்ங்காரை அணுகுகிறார்கள். அய்ங்கார் அவர்களுடன் இணைந்தானா? புரட்சி என்னவாகிறது?

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

இறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல்தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995-ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல் மறுபடியும் குமுதத்தில், ‘மீண்டும் தூண்டில் கதைகள்’ என அவர் வாசகர்களை வசீகரித்து வாய் பிளக்க வைத்த பத்து கதைகள் இந்நூலில்.

கறுப்புக் குதிரை (புதிய தூண்டில் கதைகள்)

கறுப்புக் குதிரை  |  karuuppu kuthirai  |  

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ‘புதிய தூண்டில் கதைகள்‘ என்ற பொதுத் தலைப்பில் ஆனந்தவிகடன் பத்திரிகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை மேட்ச் ஃபிக்ஸிங் என்றால் என்ன என்றே தெரிந்திராத காலத்தில் எழுதப்பட்டது. இன்று இந்தக் கதை உண்மைக்கு மிக அருகில் வந்துவிட்டது. சுஜாதாவுக்கே ஆச்சரியம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.

தூண்டில் கதைகள்‘ என்கிற தலைப்பில் இவர் முதலில் எழுதிய 12 கதைகளும் தொகுப்பாக வந்துள்ளன. அவைகளைத் தொடர்ந்து, அதே வகையில் கடைசியில் எதிர்பாராத திருப்பம் தரும் கதைகளை எழுத வாசகர்கள் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்ட கதைகள் இவை.

Advertisements

8 thoughts on “சுஜாதாவிற்கு சினமூட்டிய பேட்டி – அரியாரவேலன் கனகசபாபதி

 1. அவர் ஒரு சிறகுடைய தேவதை போல நடத்தப்பட்டார் என்றும், அவரை பல தடைகளை தாண்டி எப்படி அவரை சந்தித்தார் என்று படித்தவுடன், எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. சே, எப்படிப் பட்ட துன்பத்திற்கு ஆளாகிவிட்டார். கட்டுரையின் முதல் வரியாக வைக்கும் அளவிற்கு துன்பமோ துன்பம். ஒரு பிரபலத்தை ஒரு இடத்திற்கு அழைத்தால் அவரை பத்திரமாக பாதுகாத்து அனுப்பிவைப்பது அழைத்தவர்களின் கடமை. இது ஒரு குற்றம்போல எழுதியுள்ளார். சாருவின் தளத்தில் அவரை சந்திக்க வந்தவர்களின் அட்டகாசங்களை கண்ணீர் மல்க எழுதியதை படித்தால் அந்த அவஸ்தை தெரியும். ஜெயமோகனும் அதை பற்றி ஒரு முறை பொங்கி தீர்த்துவிட்டார். நமக்கே சில சமயம் புதியவர்களின் பேச்சு மிகவும் எரிச்சலைதரும். பிரபலங்களுக்கு ஒரு வட்டம் தேவைதான்.

  அவருக்கு நேரம் தந்துவிட்டு மற்றவரை அழைத்தது தவறு, அவரே கூறுவது போல வந்தவர் ஸ்பான்ஸரின் வீட்டு பெண். விழாவை ஏற்பாடு செய்தவர்கள் கொஞ்சம் சலுகை காட்டியதில் ஆச்சர்யமில்லை, தவறுமில்லை. அதை இவர்களிடம் கூறி இவர்களை தயார் செய்யாமல் விட்டதுதான் தவறு.

  நேர்மையில்லை என்பது தவறான வாதம். அவரது விஞ்ஞான சிறுகதை தொகுப்பிற்கான முன்னுரையை படித்தால் தெரியும். அவரே தனக்கு தூண்டுதாலாக இருந்த பல கதைகளை, புத்தகங்களை பற்றி எழுதியுள்ளார்.

  முழுப்பேட்டியை படித்தால்தான் தெரியும் கோபத்திற்கு காரணம். விதண்டாவாதமாகவே கேள்வியை கேட்டு கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் கோபம்தான் வரும். கேள்வி இருக்கின்றது, சுஜாதாவின் பதிலைக் காணோமே. கட்டுரையை படித்தால் அவரை மடக்க வேண்டும் என்ற முன் முடிவுடன் சென்று எடுத்த பேட்டி போல தோன்றுகின்றது.

  அவரை நோக்கி பல முறை எறியப்பட்ட கேள்வி, அவர் எழுதியது இலக்கியமா இல்லையா என்று. அவர் அதைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்றுதான் தோன்றுகின்றது. எழுதியவரே அதைப்பற்றி கவலைப்படாத போது மற்றவர்களுக்கு பதட்டம் வர காரணம், அவரது புகழ். அப்புகழ் எல்லாம் சும்மா என்று நிறுவவே அவர் மீது எறியும் அம்புகள். அவரது நினைவு நாளில் பலரின் கட்டுரைகள் பலரை பதட்டப்பட வைத்திருக்கின்றது. அவரே கூறுவது போல “சிலது இலக்கியம், சிலது இலக்கியமல்ல

  அவரது அனைத்து எழுத்துக்களும் சிறந்தவையல்ல, குறிப்பாக நாவல்கள். தொடர்கதைகளாக வந்தவை அதற்குரிய பலவீனங்களுடன் இருப்பவை. அவரது சாதனை அவரது சிறுகதைகள்தான் என்பது என் கருத்து.

 2. ஒரு எழுத்தாளரிடம் பேட்டி எடுப்பது எப்படி, அவரது அப்போதைய மனநிலை என்ன, வாசகர்களுக்கு எந்தச் செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும், எது அவர்களுக்குத் தேவை, தேவையில்லாதது என்பது போன்ற அக்கறையில்லாமல் “தனக்கும் எல்லாம் தெரியும்” என்ற எண்ணத்தில் ஒருவரை பேட்டி எடுக்கச் சென்றால் இப்படித்தான் ஆகும். இது எழுத்தாளருக்கு மட்டுமல்ல; இன்னும் எல்லோருக்கும் பொருந்தும்.

  ’காபி’ என்று எடுத்துக் கொண்டால் அதில் புதுமைப்பித்தன், கல்கி ஆரம்பித்து இன்றைய பிரபல எழுத்தாளர்கள் பலரது பெயரும் அந்த லிஸ்டில் இருக்கத்தான் செய்யும்.

  சுஜாதா இலக்கியவாதியா இல்லை என்பதைச் சொல்ல கநாசுவுக்கும், வெங்கட்சாமிநாதனுக்கும்ம், அசோகமித்திரனைப் போன்ற அவரது சமகால இலக்கியவாதிகளுக்கே உரிமை உள்ளது. page filler ஆசாமிகளுக்கல்ல.

  இந்தக் கட்டுரையினால் எல்லாம் சுஜாதாவை இழிவுபடுத்திவிட முடியாது. அவர் நிறையவே குப்பைகளை எழுதியிருந்தாலும், மாணிக்கங்களையும் எழுதியிருக்கிறார் என்பதை மறுக்க முடியுமா?

  சுஜாதா, சுஜாதாதான்! அதனால்தான் இன்றும் அவர் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

  நன்றி.

 3. சுஜாதா March 3, 2014 at 7:29 PM Reply


  திருநெல்வேலி தினமலர் நிருபர் என்னை பேட்டி கண்டு பிரசுரித்திருந்தார். முதல் கேள்வியிலிருந்தே கோபம் மூட்ட வேண்டும் என்னும் குறிக்கோளுடன் வருகின்ற இந்த வகையினர் இப்போது மலிந்திருக்கிறார்கள். பேட்டி கொடுப்பவரைப் பற்றிய விவரங்களிலோ, அவர் யார், அவர் கவலைகள் என்ன, எழுதும் முறை, உத்தி என்ன, ஏன் பிரபலமாக இருக்கிறார் போன்றவற்றில் ஏதும் ஆர்வமின்றி, “நீங்கள் படைப்பது இலக்கியமா?” என்று கேட்டார். நான் அதைப் போய் சீரியசாக எடுத்துக் கொண்டு, “சிலது இலக்கியம், சிலது இலக்கியமல்ல” என்று யோக்கியமாக பதிலளிக்க, உடனே தலைப்புச் செய்தி “என் எழுத்து இலக்கியமில்லை – சுஜாதா

  இத்தனைக்கும் இந்த நிருபருக்கு உண்மையை முழுவதும் சொல்வதன் முக்கியத்தைப் பற்றி பாலபாடமே நடத்தினேன். அவர் கவனிக்காமல் அடுத்த கேள்விகளை யோசித்துக் கொண்டிருந்திருக்கிறார். நிருபரைக் குற்றம் சொல்ல மாட்டேன். ‘தினமலர்‘ போன்ற பத்திரிகைகள் இயங்கும் சூழ்நிலை அப்படி. தந்திக்கு எதிராக பிராமணப் பத்திரிகை பிழைக்க இந்த தந்திரங்கள் செய்ய வேண்டியுள்ளது. சென்ஸேஷன் என்பது அவர்களுக்கு பிராணவாயு போல. ஏன்யா இப்படிக் கேக்கறீங்க என்றதற்கு நிருபர், “என்னுடைய வாசகன் தங்களை நேரில் பார்த்தால் என்ன கேட்பானோ அதைத்தான் அவன் சார்பில் கேட்கிறேன்” என்று சப்பை. யார் அந்த வாசகன்? அவன் நிருபனுக்கு அத்தாரிட்டி கொடுத்தானா என்று விசாரிக்க விரும்புகிறேன். ஏனெனில் என்னுடைய வாசகர்கள் எல்லாம் எனக்கு எழுதிக் கேட்கும் கேள்விகள் வேறு தினுசில் இருக்கின்றன.

  –கணையாழி கடைசிப் பக்கங்கள் (1965-1998) – நவம்பர் 1992

 4. R. Jagannathan March 5, 2014 at 6:18 AM Reply

  I fully agree with Sri Renga subramani and ‘famous’ critic with their responses to Mr. Ari. one can always ask uneasy questions when the time and mood are right. Sujatha is a VIP – otherwise Ari wouldn’t have been sent to interview him – and he has to be given some respect and questions requiring long answers need a longer interview session. Dinamalar sub-editor’s caption for the interview was nothing but cheap. Media always takes a few lines or words out of context from a celebrity’s speech. There is no honesty in this. – R. J.

 5. சந்திரன் March 6, 2014 at 1:32 AM Reply

  எழுத்தாளர் சுஜாதா மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமான ஒன்று – எந்த மாதிரியான விமர்சனங்களையும் எதிர்கொள்ள… சந்திக்க, ஏற்க மறுக்கிறார் என்பது.

  இந்த விஷயத்தைப் பார்ப்போம்… ‘விமர்சனத்தை ஏற்க மறுக்கிறார்‘ என்பது, எனக்கென்னவோ மிக பெரிய ஜோக்காக தோன்றுகிறது. தன்னைப் பற்றிய… தனது படைப்புகள் குறித்த விமர்சனத்தை வெளிப்படையாக வரவேற்கும்… முக நகையுடன் ஏற்றுக் கொள்ளும் எத்தனை மனிதர்கள் இப்போது இருக்கிறார்கள்? எனக்கு எண்ணிக்கை தெரியவில்லை. நேற்றுதான், தன் முதல் கவிதையை பிரசவித்த நபர்களேகூட, அது குறித்த விமர்சனங்களை எதிர்கொள்ள மறுக்கும் ஒரு சிக்கலான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எனது கருத்து. இங்கு மட்டுமல்ல; இன்று உலக அளவிலும் அப்படித்தான். இதில் சுஜாதா மட்டும் மாறுபட்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் நியாயம் எனக்கு புரியவில்லை.

  அடுத்தது, நான் அறிந்த வரையில் சுஜாதா தன் மீதான விமர்சனங்களை முடிந்தவரை கேட்காமல் இருக்க… பார்க்காமல் இருக்க… அல்லது தவிர்க்க விரும்பினார் என்பது ஓரளவு நிஜமே! பெரும்பாலும் பதில் சொல்ல மாட்டார். அதற்கு காரணம், அவரைப் பொறுத்தவரை என்னவோ! நான் புரிந்து கொண்ட வரையில், அவரை விமர்சிப்பவர்களில் இருதரப்பினர் இருந்ததாக நம்புகிறேன்.

  ஒருதரப்பு, நிஜமாகவே சுஜாதாவின் அணுகுமுறை குறித்து அதிருப்தியடைந்து, அந்த காரணத்துக்காக அம்புகளை நாணேற்றியவர்கள். இன்னொரு தரப்பு – எழுத்தாளர் சுஜாதாவின் பிரபலம் குறித்த வயிற்றெரிச்சல் கேஸ்கள். இவர்கள் – சுஜாதாவைப் போலவே… அல்லது அவருக்கு இணையான திறமையை தானும் பெற்றிருப்பதாக நம்பும் ‘புண்ணியாத்மா‘க்கள்! சுஜாதாவின் சாயலில் ‘பிரதி எடுக்கும்‘ திறமையை வளர்த்துக் கொண்டவர்களும் இந்த பஜனை கோஷ்டியில் உண்டு. இவர்களுக்கெல்லாம் ‘சுஜாதாவுக்கு இணையான தாமும் வெளிச்சம் பெற வேண்டும்‘ என்ற ஆவல்… எதிர்பார்ப்பு… ஆசை! அவருக்கு கிடைக்கும் அளவு இல்லாவிட்டாலும், அதில் சில சதவீதமாவது தங்களுக்கும் பெற்றுவிட ஏங்குபவர்கள். அது கிடைக்காதபோது… ‘என்ன செய்வது?’ என அறியாமல், ‘போட்டுதாக்கு…!‘ என, எதிர்மறையாக இந்த காரியத்தில் இறங்கி விடுபவர்கள். ஆனால், இவர்கள் பூனைக்கு மணி கட்ட இறங்கிவரும் தைரியம் இல்லாதவர்கள். யாராவது முதலில் திரிக்கு தீ வைக்க வேண்டும். அதில் கொஞ்சம் சத்தம் கேட்டால் போதும்… பின்னாலேயே, பல ‘பத்தாயிரம் வாலா‘களால் சாலையை நிறைத்து விடுவார்கள்.

  இந்த பஜனை கோஷ்டியில் ஒரு சிலரை எனக்குத் தெரியும்.-60களில்… 50களில்…ஏன் இன்னும்-வயது 40களில்உள்ள சிலருக்கே… பெரிதாக எதையும் சாதிக்காதபோதே, இந்த எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதுதான் ஆச்சரியத்திலும் அதிசயம். இதில் வினோதம் என்னவென்றால் இவர்களில் சிலரை, எழுத்தாளர் சுஜாதாவே பெயர் குறிப்பிட்டு தனது எழுத்துகளில் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த மாதிரி ஆட்கள், வேறு சிலருக்கு ‘பெத்தட்டின் ஊசி போட்டு‘ தூண்டிவிடுவதும், அரிதாரம் பூசி மேடையேற்றுவதும் தொடர்ந்து நடந்தது. இத்தகைய சிலரும், தங்கள் அடையாளங்களை மறைக்க சுஜாதாவுக்கு ‘பிராமண வேடம்‘ போட துணிந்து களமிறங்கினர். இப்படி ஒரு அரசியல் நடந்ததை, நடப்பதை எழுத்தாளர் சுஜாதா அறிந்திருந்தார் என்றுதான் நம்புகிறேன். நான் ஓரிரு முறை-Hint-செய்திருக்கிறேன். ஆனால், ஒரு அளவுக்கு மேல், அவர் இதுபோன்ற விஷயங்கள் குறித்து பேச விரும்புவதில்லை; செவி சாய்க்கவும் மாட்டார்.

 6. srinivasan (@sathishvasan) March 6, 2014 at 10:49 AM Reply

  #அடுத்து நான் கேட்ட இரண்டு கேள்விகளும் அவருக்கு கடும் சினத்தை மூட்டின. பொரிந்து தள்ளிவிட்டார்.# அவர் என்ன பதில் சொன்னார்னு சொல்லாம இந்த மாதிரி அபத்தமா எழுதுவது நியாயமற்ற செயல் ! எனக்கு அவர் கணயாழியின் கடைசி பக்கங்களில் எழுதினதுதான் ஞாபகம் வருகிறது

  #
  ‘டைம்’ பத்திரிக்கையில் Andy Warholஇன் இந்த ‘அருள் வாக்கு’ என்னைச் சிந்திக்க வைத்தது;

  In the future, everybody will be famous for at least fifteen minutes.
  #
  பதினைந்து நிமிடப் புகழ் ! 🙂

  • BaalHanuman March 6, 2014 at 3:10 PM Reply

   உண்மைதான் சதீஷ். அனால் இந்தக் கட்டுரையை இங்கே வெளியிட்டதன் காரணம் நிச்சயம் அந்த பதினைந்து நிமிடப் புகழுக்காக இல்லை 🙂

 7. //இப்ப நான் செய்யிறது எது சரியில்ல” என்றார்.
  நான் சிரித்தேன்.
  “சொல்லுங்க”
  “திருக்குறளுக்கு எழுதிய உரை”
  “நீங்களெல்லாம் மாறவே மாட்டிங்களா?”
  “நீங்க மாறிட்டா; நாங்களும் மாறிருவோம்”
  அதுவரை என் கண்கள் மீதிருந்த அவர் பார்வை, “ம்” என்னும் ஒலியோடு மறுபக்கம் திரும்பியது.//

  என்ன எளவுய்யா இது? திருக்குறளுக்கு ஆசைப்பட்டு ஒரு எழுத்தாளர் உரை எழுதினது தப்பா? எவன் எவனோ சுப்பாண்டி, குப்பாண்டி எல்லாம் கூட குறளுக்கு உரை எழுதிருக்கான். வள்ளுவர் சொன்னதற்கு எதிராவே கூட நிறைய பேரு எழுதியிருக்காங்க. அவங்களை எல்லாம் போய் கேட்க வேண்டியது தானே! சாதாரண லெக்சரர் எல்லாம் குறளுக்கு உரை எழுதி தன்னை ‘பேராசிரியர்’னு போட்டுக் கிட்டுத் திரியுறான். சுஜாதா எழுதினது தப்பா? ஏன் அவர் எழுதக் கூடாதா?

  எனக்கு ஒரு விஷயம் புரியல. அவரு ஐயருங்கறதுனால எழுதக் கூடாதா? இல்ல எழுத்தாளருங்கறதுனாலயா?

  ஐயருன்னா, பல நூல்களைத் தேடிப் பதிப்பிச்சதே ஒரு ஐயரு தானே!

  சரி, எழுத்தாளரு குறளுக்கு உரை எழுதக் கூடாதுன்னா, மு.வ.வும் ஒரு எழுத்தாளரு இல்லையா? ஏன் இப்போ பட்டுக்கோட்டை பிரபாகர் கூட சூப்பரா ஒரு உரை எழுதி வெளியிட்டிருக்காரு குறளுக்கு. ரொம்ப அட்டகாசமா சிறப்பா இருக்கு. விலையும் கம்மிதான். இதோ அடுத்து ஜெயமோகனும் எழுதப் போறாரு குறளுக்கு உரை. இப்போ என்ன செய்யப் போறீங்க?

  சுஜாதாவ கேள்வி கேட்டவங்களுக்கு இவங்களைக் கேள்வி கேட்க, விமர்சிக்க தைரியம் இருக்குதா? இல்லை, முடியத்தான் முடியுமா?

  சுஜாதா மரணமடைந்து விட்டார். ஆனால் அவர் எழுத்துக்கள் அவ்வளவு சீக்கிரம் சாகாது என்றே நினைக்கிறேன். (சுஜாதாவின் திருக்குறள் தெளிவுரை எனக்குப் பிடிக்கவில்லை. அதில் கருத்தாழம் இல்லை. ரொம்ப ரொம்ப எளிமையாக எழுதியிருக்கிறார் என்பது எனது தனிப்பட்ட கருத்து.)

  ஆனால் இன்னமும் ஏன் சுஜாதாவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு, அவரது படைப்புகளை பிராண்டிக் கொண்டிருக்க வேண்டும்? வேறு ஆட்களை விமர்சித்தால் தங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பதுதான் காரணம். வேறென்ன?

  செய்யுங்கய்யா.. செய்யுங்க. நல்லாச் செய்யுங்க. அதுவும் ஒரு விளம்பரதான். செய்ங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s