சுஜாதா நினைவு – இரா.முருகன்


sujatha_portrait

நாளை மறுநாள் சுஜாதா சார் நினைவு நாள்.

நான் புதிய தலைமுறை 27-2-2014 இதழில் எழுதியுள்ள கட்டுரை இது

(புதிய தலைமுறைக்கு நன்றியோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்)

சுஜாதா நினைவு இரா.முருகன்

திரும்பிப் பார்ப்பதற்குள் சுஜாதா இல்லாத இன்னொரு ஆண்டு கடந்து போய் அடுத்த நினைவு தினம். நாற்பது, நானூறு பேர் கூடி, ஆளுக்கு நாலு சுஜாதா தொடர்பான சம்பவங்கள், திமலா சிறுகதை விசேஷம், சுஜாதா இல்லாத எந்திரன் சினிமா என்று பேசி, ஒரு நிமிடம் எழுந்து மௌனம் அனுஷ்டித்து விட்டு, மொபைல் எண்களைப் பகிர்ந்தபடி பிரியலாம். அல்லது இதுவும் செய்யலாம் –

1) ‘சுஜாதாவின் வாரிசு’ என்று இஷ்டத்துக்குப் யாருக்காவது பட்டம் கட்டுவதை இந்த மார்ச் ஒண்ணாந்தேதி காலை 5 மணியிலிருந்து நிறுத்திக் கொள்ளலாம். சமகாலத் தமிழ் உரைநடையில் சுஜாதா சாதனை பெரிது. அவருடைய் நாற்காலி காலியாகவே இருக்கட்டும். அது மடமில்லை. சின்னப் பட்டம் வேணாம்.

2) ‘சுஜாதா மாதிரி எழுதுகிறார்’ என்று யாருக்காவது சான்றிதழ் வழங்குவதையும் உடனடியாக சட்ட விரோதமாக்கலாம்.

3) சுஜாதாவின் நாவல்களை, சிறுகதைகளைத் தொடர வேண்டாம். கணேஷையும் வசந்தையும், சீரங்கத்து புதுத் தேவதைகளையும், மெக்சிகோ சலவைக்காரிகளையும் கண்ணைக் கசக்கிக் கொண்டு திரும்ப எழச் செய்ய வேண்டாம். அவர்களும் சுஜாதாவோடு விண் நாடு ஏகினர் என்பதை அறிக.

4) சுஜாதாவின் காப்பிரைட் சொல்லாடல்களை இயன்ற மட்டும் தவிர்க்கவும். ஜல்லி அடித்தல், மையமாகச் சிரித்தல், குடல் ஆப்பரேஷன் போன்றவை இதில் அடங்கும்.

5) சுஜாதா கதைகளில் எங்கே வெற்றி பெற்றார் என்பது எல்லாருக்கும் தெரியும் – புத்திசாலித் தனமான கருப்பொருள், கச்சிதமான எடுப்பு – தொடுப்பு – முடிவு. எந்த ஜானரில் புனைகதை எழுதினாலும் சுவாரசியத்தை நாடு கடத்த மாட்டேன் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். மற்றவை உசிதம் போல.

6) எந்த இனங்களில் சுஜாதா தோற்றார் என்பதையும் சங்கோஜமில்லாமல் ஆராய்ந்து பார்க்கலாம். பத்திரிகைத் தொடர்கதைப் பாணி அவருடைய கதைகளை வெகு எதிர்மறையாகப் பாதித்தது. நீங்கள் வெற்றி பெற என்ன செய்யணும்? யோசியுங்கள்.

7) அறிவியல் புனைகதைகள் சுஜாதா இறப்புக்கு அப்புறம் மிகச் சிலரே எழுதுகிறார்கள். இந்தத் துறை தமிழில் மேம்படுவது அவசியம். பத்திரிகைக்காரர் என்றால் எத்தனை பிழை இருக்கிறதோ அத்தனைக்கு சன்மானத்தில் குறைத்துக் கொண்டு அம்மாதிரிக் கதைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்துங்கள்.

8) சுஜாதாவின் அறிவியல் கட்டுரை ரசிகர் நீங்கள் என்றால், ஆட்டம் பாமிலிருந்து எக்ஸெம்மெல் கணினி நிரல் வரையான பரந்த அறிவியல் தளத்தில் உங்களுக்குப் பிரியமானது குறித்து மாதம் ஒரு கட்டுரையாவது எழுதுங்கள்.

9) சுஜாதாவின் ‘கணையாழி கடைசிப் பக்கம்’, ‘கற்றதும் பெற்றதும்’ ரசிகரா? எல்லா எழுத்தாளர்களும் கதை எழுதுவதைப் பெரும்பாலும் நிறுத்தி வைத்து விட்டு பத்திரிகை பத்தியாக இதைத்தான் செய்கிறார்கள். அந்தக் கட்டுரைகள் புத்தகங்களாகவும் வந்து குவிகின்றன. நீங்களும் எழுதுவது, கட்டுரைத் தொகுப்புகளை வாங்குவது பற்றி சுஜாதா நினைவு நாளை ஒட்டி வாக்குறுதி எடுத்துக் கொள்ளலாம்.

10) நீங்கள் சுஜாதாவின் சினிமா வசன ரசிகர் என்றால், அவருக்கும், இன்னும் பலருக்கும் இன்னும் பிடிபடாதிருக்கும் திரைக்கதை என்ற துறை தமிழில் வளரச் செய்ய வேண்டியதென்ன என்று யோசிக்கலாம்.

11) சுஜாதா சுஜாதா தான், நான் நானே என நினைவு படுத்திக் கொள்வதும் மிகத் தேவை.

Advertisements

10 thoughts on “சுஜாதா நினைவு – இரா.முருகன்

 1. Raju Iyer February 25, 2014 at 5:41 AM Reply

  RAA Murgan’s writing resembles Sujatha’s writing.

 2. ஸ்ரீராம் February 25, 2014 at 8:23 AM Reply

  //சுஜாதாவின் காப்பிரைட் சொல்லாடல்களை இயன்ற மட்டும் தவிர்க்கவும்.//

  இது கொஞ்சம் கஷ்டம். அவரைப் படித்தவர்களுக்கு பல சொற்கள் மனதில் பதிந்து போய்விட்ட வார்த்தைகள். அவர்கள் பேசுவது கூட அந்த பாணியிலேயே இருக்கும். மற்றபடி, சுஜாதாவின் வாரிசு, சுஜாதா சாயலில் எழுதுகிறார் போன்றவற்றை யாரும் சொல்வதில் – சொல்லிக் கொள்வதில் – எனக்கும் உடன்பாடில்லை! சுஜாதா சுஜாதாதான். :))

 3. rjagan49 February 25, 2014 at 10:48 AM Reply

  Era Murukan’s article on Sujatha’s anniversary is ‘Nethiyadi’! I won’t say Era Murukan writes in Sujatha style, but he definitely writes like Sujatha by his interesting, and sharp words in his own style. – R. J..

 4. ரெங்ககசுப்ரமணி February 25, 2014 at 4:04 PM Reply

  இக்கட்டுரையே அவரது பாணி, “ஒண்ணாம் தேதி காலை ஐந்து மணிக்குள்”, “சுவாரஸ்யத்தை நாடு கடத்துவது”,

  • BaalHanuman February 26, 2014 at 1:19 AM Reply

   அன்புள்ள ரெங்கசுப்ரமணி,

   நீங்கள் கூறுவது சரிதான். இதில் நகைமுரண் என்னவென்றால் இலக்கிய உலகில் தனது வாரிசாக சுஜாதாவே இருவரைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

   ஒருவர் இரா.முருகன். இன்னொருவர் ரஞ்சன்.

 5. srinivasan (@sathishvasan) February 26, 2014 at 2:03 AM Reply

  அதுவும் ஃபேஸ்புக்கில் அவர் மாதிரி எழுதுகிறேன் என்று அநியாyaத்திற்கு அவர்கதைகளையே ரணம் பன்ணி இம்சிக்கும் பேர்வழிகள் நிறுத்த வேண்டும் ! குறிப்பாக உங்கள் நண்பர்கள் சிலர் ! 🙂 my comment on his face book post 🙂

 6. revathi narasimhan February 26, 2014 at 12:54 PM Reply

  சுஜாதா சாரின் நினைவுக்கு இது போலக் கட்டுரைகள் உரம்..

 7. சிவா கிருஷ்ணமூர்த்தி February 27, 2014 at 2:13 PM Reply

  ஆம், இரா.முருகன்ஜியே நிறைய சுஜாதாவை நினைவுபடுத்துவார், திரு ரெங்கசுப்ரமணி குறிப்பது போல //ஒண்ணாம் தேதி காலை ஐந்து மணிக்குள்”, “சுவாரஸ்யத்தை நாடு கடத்துவது”,//
  🙂 🙂 🙂

  • BaalHanuman March 1, 2014 at 5:13 AM Reply

   உண்மைதான் சிவா 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s