4-எண்ணுகிறேன்.. எழுதுகிறேன்… – திருமதி சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

image_6

போன பதிவில் அமெரிக்கால, வீட்டு வேலை செய்யறவங்கள பத்தி பேசிட்டு இருந்தேன் இல்லயா? அதப்பத்தி ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்லணும்னு நினைச்சேன். அங்க வேலைக்காரி வச்சுகிட்டா பணம் நிறைய ஆகுதுன்னு ஒரு தமிழ் குடும்பம் என்ன செஞ்சாங்க தெரியுமா…?

எனக்கு தெரிஞ்ச ஒரு மாமி இருக்கா. அவாளுக்கு வயசு எழுபத்தைஞ்சுக்கு மேல இருக்கும். இவங்களோட தூரத்து சொந்தம் போல.. அவா என்ன பண்ணிருக்கா… இந்த மாமி வீட்ல போய் கொஞ்சம் பணம் குடுத்துட்டு,‘அமெரிக்கால எங்க வீட்ட பாத்துக்க ஆள் இல்ல. நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போறவங்க. அதனால மாமிய எங்ககூட அனுப்பினீங்கன்னா எங்களுக்கு உதவியா இருக்கும். வேலை எதுவும் இருக்காது. மூணு வேளை சமையல் செஞ்சா போதும். மாசா மாசம் பணத்த உங்க அக்கவுண்ட்ல போட்டுடறோம்’ன்னு கேட்டிருக்காங்க. அவங்களும் பணம் வருதேன்னு பாவம் வயசான காலத்துல அந்தப் பாட்டிய அனுப்பி வைச்சிருக்காங்க.

அங்க போய் ஒரு மூணு நாலு மாசம் வரைக்கும் அந்த மாமி வீட்டு வேலை மட்டும் பாத்துட்டு இருந்துருக்கா. அவங்க ஒரு ஹோட்டலும் வெச்சிருக்காங்க போல. அந்த மாமிகிட்ட வீட்ல சும்மாதான மாமி இருக்கீங்க.. கொஞ்சம் எங்க சமையல்காரங்களுக்கு நம்ம ஊர் சமையல கொஞ்சம் சொல்லித்தாங்களேன்னு சொல்லி ஹோட்டலுக்கு அனுப்பிட்டாங்க. மாமியும் அவா சமையல எல்லாரும் புகழறதப் பாத்து மாங்கு மாங்குன்னு வேலை செஞ்சிருக்கா! பாவம் அந்த மாமி. இந்த வயசுல எவ்ளோ வேலையைதான் செய்ய முடியும்? ஒரு கட்டத்துல அவங்காளல முடியல. வீட்டு வேலைய மட்டும் பாத்துட்டு இருக்கேன்னு சொல்லியிருக்கா. அதெல்லாம் முடியாது. எல்லா வேலையும் செய்யணும்ன்னு சொல்லி டார்ச்சர் பண்ணியிருக்காங்க. இந்த மாமிக்கு எப்படியோ போலீஸ் போன் நம்பர் கிடைச்சு.. வீட்டு போன்லேர்ந்து போன் பண்ணி போலீஸ்கிட்ட சொல்ல.. வீட்டுக்கு போலீஸ் வந்துடுச்சு. அவங்களும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அந்தக் குடும்பத்தை இல்ல. அரெஸ்ட் பண்ணினது அந்த மாமியை!

மாமியோட விசா முடிஞ்சு ரொம்ப நாளாச்சாம். அதனால மாமிய அரெஸ்ட் பண்ணி பத்து நாள் உள்ள வச்சுட்டா. அப்புறம் அந்தக் குடும்பத்தை விசாரணை செய்ய.. அந்தக் குடும்பம் மாமிகிட்ட போய் கேஸை வாபஸ் வாங்குங்க. அப்பதான் நாங்க உங்கள இந்தியாவுக்கு அனுப்புவோம்ன்னு சொன்னதும் உயிர் பிழைச்சா போதும்னு அந்த மாமி கேஸை வாபஸ் வாங்க.. அவங்களும் இனிமே மாமியை இங்க வச்சிருந்தா பிரச்னைன்னு விசா எடுத்து இந்தியா அனுப்பிட்டாங்க. ஆனா பாவம் அந்த மாமி. வந்து ஒரு வருஷம் கூட உயிரோட இல்லை. பணத்துக்காக எப்படியெல்லாம் கொடுமை பண்றாங்க பாருங்க. வயசானாலே வீட்டுக்கு தேவையில்லாத பொருளாக்கிடறாங்க.

அமெரிக்கால வீட்டுக்கு முன்ன கார் நிறுத்தறதப் பத்தியும் பேசிட்டு இருந்தோம் இல்லயா? நம்மள மாதிரி அங்க தெருவ அடைச்சிகிட்டு அடுத்தவங்களை தொந்தரவு கொடுக்க முடியாது. என் தங்கை வீட்ல நாங்க ஒரு ஃபங்ஷன் வெச்சு நிறைய நண்பர்களை கூப்பிட்டிருந்தோம். அவ வீட்ல மூணு கார்தான் வைக்க முடியும். அதனால முதல்லயே யார் யாரெல்லாம் வராங்கன்னு அவங்களுக்குள்ள பேசி வச்சுக்கறாங்க. அப்புறமா ஒரு கார்ல எவ்வளவு பேர் வர முடியுமோ, அத்தனை பேரையும் கார் வச்சிருக்கிறவர் வர்ற வழியில இருக்கறவங்களை கூட்டிட்டு வந்துபோகும்போது அந்தந்த வழியில விட்டுட்டு போயிடறார். அதேமாதிரி நம்ம ஊர்ல ஃபாலோ பண்ணினா எவ்ளோ நல்லா இருக்கும்? ஆனா இங்கே அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.

ஒருத்தர் கார்ல இன்னொருத்தர்கூட வரமாட்டேன்னு வம்பு பண்ணுவா. எங்ககிட்ட கார் இல்லையா? நம்ம எதுக்கு கண்டவங்க கார்ல போகணும்னு சண்டையே நடக்கும். ஒரு வீட்லயே அண்ணனோட காரை தம்பி எடுக்கக்கூடாது. அப்பாவோட காரை பையன் தொடவே மாட்டான். இப்படி இருந்தா அரசாங்கத்தை குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம். நாமளே ஒழுங்கா இல்லையே? அங்கே குப்பைத் தொட்டியில குப்பையை மாத்தி போடக்கூடாதுன்னு சட்டம் இருக்கு. ஒருத்தர் மாத்தி போட்டுட்டதனால குப்பையை எடுக்க மாட்டான்னு சொன்னனே. ஆனா அதே சட்டம் இங்க இருந்தா… ஒருத்தர் வீட்லயும் சரியா குப்பையை கொட்றது இல்லை. நம்ம அரசாங்கம் அவங்களை மாதிரி தண்டனை குடுத்தா அவ்ளோதான்! ஊரே குப்பையாதான் கிடக்கும்.

என் கணவர்கூட ஒரு படத்துல வசனம் எழுதியிருந்தார், ‘மத்த நாடுகள்ல கடமைய மீறதுக்கு லஞ்சம் வாங்குவாங்க. நம்ம ஊர்லதான் கடமைய செய்யறதுக்கே லஞ்சம் கேக்கறீங்க’னு. அரசாங்கமும் தனி மனுஷங்களால ஆனதுதானே! ஒவ்வொரு தனி மனுஷனும் ஒழுங்கா இருந்தாலே நாடும் நல்லா இருக்கும், நாட்டு மக்களும் நல்லா இருப்பாங்க.

அடுத்த பதிவில்…

-நன்றி சைரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s