மொசார்ட் – இளையராஜா – பா.ராகவன்


மொஸார்ட்

மொசார்ட்டை எனக்குப் பிடிக்கும். எத்தனை பிடிக்கும் என்றால் எனக்கு இளையராஜாவைப் பிடிக்கும் அளவுக்கு மொசார்ட்டையும் பிடிக்கும். பல சமயங்களில் ராஜாவுக்கும் மொசார்ட்டுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை என்று தோன்றும். இப்படிச் சொல்வதை சனாதனவாதிகள்  அபத்தம் எனலாம். அது குறித்து எனக்குக் கவலையோ அக்கறையோ கிடையாது. மொசார்ட்டை நான் இளையராஜா மூலமாகத்தான் அறிந்தேன். ராஜாவின் பல வேலைப்பாடுகளில் மொசார்ட்டின் தாக்கத்தைப் பார்த்திருக்கிறேன். இது மகனுக்கு இருக்கும் தந்தையின் ஜாடை போன்றது. ரொம்ப உள்ளே போக எனக்கு விருப்பமில்லை. நான் இசைக்கு ரசிகன். என்னளவில் இசை என்றால் இளையராஜா மட்டுமே. மகன் வழி தந்தையைக் கண்டடைந்தவன் என்பதை மட்டும் மறக்காமல் சொல்லிவிட வேண்டும்.

இந்தப் புத்தகம் ப்ராடிஜி வெளியீடாக முதலில் வெளிவந்தது. நான் ரொம்ப ஆசை ஆசையாக எழுதிய புத்தகம் இது. இந்த ஒரு சிறு நூலுக்காகக் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் மொசார்ட்டின் அத்தனை இசைக்கோலங்களையும் இடைவிடாமல் கேட்டேன். பலவற்றை ஏற்கெனவே கேட்டிருந்தாலும் அத்தனை நுணுக்கமாக முன்னர் கேட்டிருக்கவில்லை. எனக்கென்னவோ மொசார்ட்டின் இசை என்பது அவரது வாழ்வின் மொழிபெயர்ப்பாகவே எப்போதும் தோன்றும். ஏழைமையும் நிராகரிப்பும் அவலங்களும் வேதனைகளும் எந்தக் கலைஞனுக்கு இல்லை? ஆனால் தன்னைத்தானே விழிப்புடன் கவனித்து, தனது வாழ்வை இசையில் எழுதி வைத்தவர்கள் அதிகமில்லை.

யானி - இசைப் போராளி

மிகப் பிற்காலத்தில் யானி இதனைக் கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறார். (யானி குறித்த என்னுடைய புத்தகத்தில் இது பற்றிய விவரங்கள் விரிவாகவே இருக்கும்.) இந்தியாவில் பூபேன் ஹஸாரிகா, நௌஷாத் போன்ற வெகுசிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ராஜா ஏன் செய்யவில்லை என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமூட்டும் வினா.

இருக்கட்டும். இந்தப் புத்தகத்தில் மொசார்ட்டின் வாழ்க்கைச் சுருக்கத்தை எழுத நான் தேர்ந்தெடுத்த சொற்களின் ஊடாக அவரது இசை ஒலிக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு இருந்தது. நீங்கள் இதற்குமுன் மொசார்ட்டைக் கேட்டிருக்கக்கூட வேண்டாம். ஆனால் இதைப் படிக்கும்போது உங்கள் காதுகளில் ஒரு சங்கீதம் ஒலிக்க வேண்டும். அப்படி ஒலித்துவிட்டால் அது அவரது சங்கீதமாகத்தான் இருக்கும்.

எப்பேர்ப்பட்ட பேராசை! ஆனால் அந்தப் பேராசைதான் என்னை இந்த நூலை எழுதவைத்தது.

இதுநாள் வரை நான் எழுதிய அனைத்திலும் பார்க்க, மொழி ரீதியில் எனக்கு மிகவும் உவப்பான புத்தகம் இதுவே. எல்லாமே சரியாக உட்கார்ந்துவிட்டது என்று ஒரு நினைப்பு. யார் யாருக்காகவோ என்னென்னவோ செய்கிறோம். இந்தப் புத்தகம் எனக்காகவே நான் எழுதிக்கொண்டது.

Andhimazhai Image

எனக்கு 43 வயதாகிறது. பல வீடுகள் மாறியிருக்கிறேன். பல ஊர்கள் மாறியிருக்கிறேன். பல நிறுவனங்களில் பணியாற்றி இடம் மாறியிருக்கிறேன். பல நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். பல உறவினர்கள் இருந்திருக்கிறார்கள். பலர் உதிர்ந்திருக்கிறார்கள். புதிதாகப் பலர் இணைந்திருக்கிறார்கள். நானே கூட எப்படி எப்படியெல்லாமோ இருந்து என்னென்னவாகவோ மாறியிருக்கிறேன். என் விருப்பங்கள், ரசனைகள், ஆர்வங்கள் யாவும் காலம்தோறும் மாறி வந்திருக்கிறது. நினைவு தெரிந்த நாளாக இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் என் மனத்துக்குள் நான் ஆராதிக்கும் ஒரே விஷயம் இளையராஜாவின் இசை. தெய்வாம்சம் பொருந்திய அந்த மாகலைஞனுக்கு இந்த நூலை என் எளிய சமர்ப்பணமாக முன்வைப்பதில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன்.

இனி இது உங்களுடையது.

மொஸார்ட்

[விரைவில் FreeTamilEbooks மூலம் விலைமதிப்பற்ற மின்னூலாக வெளிவரவிருக்கும் தனது ‘மொசார்ட்’ புத்தகத்துக்கு பாரா எழுதிய புதிய முன்னுரை.]

இருநூற்றைம்பது வருடங்கள், இன்னும் சுரந்துகொண்டேதான் இருக்கிறது. உலகம் பருகிக்கொண்டேதான் இருக்கிறது. ஆம். மொஸார்ட்டின் இசைக்கு நிகராக இன்னொரு இசை இன்றுவரை இல்லை. நிச்சயம் ஒருநாள் சிம்ஃபொனி எழுதுவாய் என்று இன்னொரு இசை மேதையான பாக்கினால் சிறுவயதில் ஆசிர்வதிக்கப்பட்டவர் மொஸார்ட். சிம்ஃபொனி மட்டுமா எழுதினார்? இன்றுவரை நம் காதில் விழும் அநேக இசை வடிவங்கள் அவர் அளித்தவைதான். நூற்றுக்கணக்கான இசை அமைப்பாளர்களின் ஒரே பெரிய ஆதர்சமும் அவர்தான்! யாராலும் அடையமுடியாத கலை உயரங்களை அடைந்தவை மொஸார்ட்டின் இசை. காலம் உள்ள அளவும் வாழும் இசையை வழங்கியவரின் வாழ்க்கை வரலாறு இது. அதை மொஸார்ட்டின் இசைக்குறிப்புகள் ஆமோதிக்கின்றன.
Advertisements

2 thoughts on “மொசார்ட் – இளையராஜா – பா.ராகவன்

  1. krishnamoorthys February 19, 2014 at 7:28 AM Reply

    என் வாழ்வு காலம் முழுதுமாய் என்னுடன் தொடர்ந்து வரும் வேதனையான விசயம் சிம்ஃபொனி போன்ற விச்யங்களை எந்த தளத்தில் புரிந்து கொள்வது என்பதுதான் .மிக சிறிய விசய ஞானம் கூட இல்லாத நான் நல்லவேளை இளையராஜா என்ற கலைஞனால் இசை என்ற ஒரு கலையின் லயம் ஆத்ம மொழியின் ஒரு அம்சம் என்பதை உணந்து கொண்டேன் .ஆனால் அடுத்த படி அவரை உணர என்னால் முடியவில்லை .How to name it ,Nothing but wind ,மட்டுமல்ல நல்லா இருக்கிறதே பிறகென்ன என்று கேட்டுவிட்டு போக வேண்டியதுதானே என்று இருக்க முடியவில்லை எதையோ இழந்து கொண்டு இருக்கிற உணர்வும் அந்த மனவெளி பயணம் ஆரம்பித்து நின்று போய் விட்ட துக்கமும் விடாது பரவி வருகிறது .சொல்லித்தாருங்கள் எப்படி புரிந்து கொள்வது ?உதவுங்கள் .

  2. chandran aadhav September 23, 2016 at 2:28 PM Reply

    உங்களது பதிவுகளை வாசித்த உடனேயே அந்த மகா கலைஞனின் வரலாற்றை படிக்க எண்ணம் தோன்றுகிறது. உங்களிடம் இருந்தால் குறித்த நூலை மின்னஞ்சல் செய்வீர்களா ?
    chandranaadhav24@gmail.com இது தான் எனது மின்னஞ்சல் முகவரி. தந்து உதவூவீர்கள் என்ற பேரவாவில் சந்திரன் ஆதவ் (இலங்கை)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s