7-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்


இதன் முந்தைய பகுதி…

sujatha33

90-களின் தொடக்கத்தில் சுஜாதா சென்னைக்குக் குடி பெயர்ந்து விட்டார். ஆழ்வார்ப்பேட்டையில் வீடு. ஒரு தெரு தள்ளி கணையாழி கி கஸ்தூரிரங்கனின் இல்லம், மற்றும் கணையாழியின் ஆபீஸ். கிட்டத்தட்ட கௌரவ ஆசிரியர் போல கணையாழி இதழை சுஜாதா மேற்பார்வையிட்டார். அவ்வப்போது இபாவும் வருவார். இந்த மூன்று ஜாம்பவான்களும் பொடியனான என்னையும் சில சமயம் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதுண்டு- ஒப்புக்குச் சப்பாணியாகத்தான். எனக்கு பாதி நேரம் “ஆ”வென்று வாயைத் திறந்து கொண்டு இவர்களின் பேச்சைக் கேட்பதிலேயே நேரம் போய்விடும்.

ஒருமுறை என் மேல் பரிதாபப்பட்டு கி க ஒரு புஸ்தகத்தைக்கொடுத்து, “இத வேணா ரெவ்யு பண்ணுங்களேன்” என்றபோது, சென்னை மாநகரமே துல்லியமாக அலம்பிவிட்டார்போல இருந்தது. அடுத்த இதழ் கணையாழியில் அது வெளிவந்ததும், சுஜாதா என்னிடம், “ரெவ்யூக்குப் போய்ட்டியா” என்று கிண்டலடித்து, “நன்னா இருந்தது’ என்று சொன்னதை இன்னும் காட்சியும் வசனமும் மாறாமல் freeze செய்து வைத்திருக்கிறேன்.

கட்டையோடுதான் வேகும்.

”அவனிடம் கொடுத்து ஒரு ரிவ்யூ எழுதச்சொல்லுங்கள்” என்று வாத்யார் ரெகமெண்டேஷன் – எனக்கு பின்னால்தான் தெரியும்!

அப்போது மாதமொருமுறை கிக வீட்டில் கணையாழி கவிதைக்கூட்டம் நடைபெறும். அது ஒரு அபார தினம். மாடியில் அசௌகரியமாக சுருங்கி சுருங்கி பின் பாகத்தை அறுத்து எடுக்கும் ஜமக்காளத்தில் பாட்டரி மைக்குடன் சுஜாதா, கிக மற்றும் கணையாழியில் வெளிவந்த கவிதைகளின் கலைஞர்கள் கூடுவார்கள். ஓரிரு முறை ஞானக்கூத்தனும் கலந்து கொண்டிருக்கிறார். அழகியசிங்கர், லக்ஷ்மிகுமாரன் ஞானதிரவியம், சி. ஸ்ரீதரன், சுஜாதா விஜயராகவன் போன்ற கணையாழிக்கவிஞர்கள் கலந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

சுஜாதா எடுக்கும் பாடம் அட்சர லட்சம் பெறும்.

Humor at his best!

“நீங்க ரொம்ப constipation ல எழுதினா மாறி இருக்கே“

“இந்த மலர், இயற்கை, மங்கை இதெல்லாம் சங்க காலத்தோட ஓவர். இனிமே try பண்ணாதீங்க”

“இந்த முப்பத்தாறு வரி கவிதையில் முப்பத்தைந்து வார்த்தை விரயம்”

செமத்தியா கோட்டா பண்ணுவார். கூட்டம் முடிந்த பின்பு, அந்தக்கவிஞருடன் அன்னியோன்னியமாக வாத்சல்யத்துடன் பேசுவார். புரிய வைப்பார்.

ஒரு கூட்டத்தில் அத்தை கவிதை படிக்கப்பட்டது. அது சென்ற இதழ் கணையாழியில் பிரசுரமாகி இருந்தது. (இதே கணையாழி இதழில் முருகன் ஜியின் புத்தக விமரிசனமும் கடைசி பக்கத்தில் நம் நண்பர் Chandramowli பற்றி சுஜாதா எழுதியிருந்ததும் ஒரு ஆச்சரிய coincidence!)

அப்போதுதான் சுஜாதாசொன்னார்

“இந்த அத்தை கவிதையில் இருப்பது உண்மை போன்ற கற்பனை. முதலில் என்னை அவ்வளவாகக்கவரவில்லை. ஆனால் அத்தையே இல்லாமல் அத்தை பற்றி வாழ்க்கைக்கு வெகு அருகில் உள்ள சம்பவங்களை கவிதையாக்குகிறது என்று நினைக்கிறேன்”.

கூட்டம் முடிந்த பிறகு கவிஞருடன் பேசினபோது நான் இருந்தேன்.

“நல்ல கற்பனை. ரொம்ப ரியலிஸ்டிக்கா இருந்தது. ஆனால் வார்த்தைகள் போறவே போறாது. கிட்டத்தட்ட ரெண்டு பக்கம் முழுக்க வந்திருந்த இந்தக்கவிதையை அரைப்பக்கத்தில் எழுதியிருக்க வேண்டும். நீயே மறுபடி படிச்சுப்பார், ஒனக்கே புரியும்.”

கவிஞர் மெளனமாக தலை ஆட்டிகொண்டு இருந்தார்.

“இன்னொரு விஷயம் என்று தொடர்ந்தார் சுஜாதா.

“அடுத்த மூணு மாசத்துக்கு இன்னொரு கவிதை எழுதாதே”!!

“சரி சார்”

மூணு மாசம் இல்லை, இந்த 23 வருஷங்களில் நான் வேறு கவிதை எழுதவே இல்லை!!

https://www.nhm.in/img/978-81-8493-520-2_b.jpg

கணையாழி ஆஃபீசின் மாடியில் வெள்ளை வேட்டி வெள்ளை கதர் சட்டையோடு கி க உட்கார்ந்திருப்பார். பல முறை போய் பேசி இருக்கிறேன். அதிகம் சுஜாதா பற்றித்தான். அவன் என்றுதான் விளிப்பார். ஆனால் சுஜாதாவின் மேல் மிகுந்த ப்ரேமை உடையவர். 6 9 61 போல் ஒரு கதை இதுவரை படித்ததே இல்லை என்பார். கணையாழி சரித்திரத்திலேயே மிக அதிகம் கடிதங்கள் வந்த கதை அது என்றார்.

”கஸ்தூரிரங்கன் போல ஒரு ஆசிரியர் கிடைத்ததற்க்கு நான் போன ஜென்மத்தில் யாரோ ஒரு அந்தணருக்கு ஆட்டுக்குட்டி தானம் செய்திருக்க வேண்டும்” என்று ஒரு முறை சுஜாதா எழுதியிருந்தது நினைவில் இருக்கலாம்.

கணையாழிக்காக இத்தனை செய்திருக்கிறாரே, ஆனால் அவர் அது பற்றி பேசுவதைக்கேட்டால் ஒரு பற்றற்ற தன்மைதான் தெரியும். இமோஷனல் சைடே இல்லாமல் ஒரு வித மூன்றாம் மனிதத்தன்மையோடுதான் கணையாழி பற்றி பேசுவார்.

ஒரு சமயம் பெண் எழுத்தாளர் பற்றின சர்ச்சை ஒன்றைப்பற்றி நான் ஏதோ சொல்லப்போக, “ அலையாதே வம்புக்கு” என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, “ எல்லா இஷ்யூவுக்கும் இன்னொரு பக்கம் உண்டு. அது தெரியாமல் ஜட்ஜ்மெண்டலாக ஏதும் பேசக்கூடாது” என்று சொன்னதை நான் இன்று வரை என் ஆஃபீசில் கடைபிடிக்கிறேன்.

தொடரும்…

https://www.nhm.in/img/978-81-8493-520-2_b.jpg

கணையாழியில் தொடராக வந்த கதை. பொருத்தமில்லாதவருடன் மணவாழ்க்கையில் இணையும் ஒரு பெண், பின்னர் தனக்கு உகந்தவனைக் கண்டுபிடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில், அவர்கள் நட்பு மனம் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. ஆனாலும், அவர்கள் வாழ்வில் இதனால் ஏற்படும் விளைவுகளால் பரபரப்புக்கும் விறுவிறுப்பும் குறைவில்லை.

சுஜாதாவின் முன்னுரை

https://i2.wp.com/www.maheshwaran.com/images/stories/2010/may10/sujatha.jpg

’6961 ‘ கணையாழியில் வெளி வந்தது.  ’6961 ‘ என்கிற தலைப்பைத் திருப்பிப் போட்டால் 1969 .  இந்தக் கதையை நான் எழுதிய வருஷம் அது.  கணையாழி 1965 -ல் தொடங்கியதிலிருந்து அதில் தொடர்ந்து,  ‘நீர்க்குமிழிகள்‘ ,  ‘கடைசிப்பக்கம்‘  என்று ஒரு பக்கம் எழுதி வந்தேன்.  ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் ஒரு தொடர்கதை எழுதச் சொன்னார்.  அதை பரபரப்பாக முன் இதழில் அறிவித்தார்.  சுஜாதா கதை வரப் போகிறது என்றால் கணையாழியின் சர்க்குலேஷன் பன்மடங்காக உயரும் என்று அவர் எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றம்தான்.  கணையாழி போன்ற சிறு பத்திரிகைகளுக்கு என்று ஒரு ஆதரவாளர் குழாம் இருந்தது.  அதில் கடிதம் எழுதுபவர்கள்,  கதை, கவிதை எழுதுபவர்கள், இவர்களைப் படிக்க மிஞ்சிப் போனால் 2,000 பேர் இருந்தார்கள்.  இது 20,000 ஆகவோ 2 லட்சமாகவோ சாத்தியமில்லை என்பதைத் தான்  6961 நிரூபித்தது.  நான் கணையாழியில் எழுத்தும் கதை என்பதற்காக உபரியாக நெற்றியைச் சுருக்கிக் கொண்டு இன்டலெக்சுவலாக யோசித்து பிரயத்தனம் எதுவும் செய்யவில்லை.  மற்ற பத்திரிகைகளில் எழுதுவது போல்தான் எழுதினேன்.

கணையாழிக்கு ஒரு பேனா, குமுதத்துக்கு ஒரு பேனா என்பது என் வழக்கமில்லை.  கணையாழியில் நான் அதிகம் கதைகள் எழுதவில்லை என்பது உண்மை.  இதுவே நான் அதன் இலக்கிய அந்தஸ்துக்குத் தந்த மரியாதையாக இருந்திருக்கலாம்.

6961
 -ன் மறுபதிப்பை நான் நண்பர் திரு. கஸ்தூரி ரங்கன் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு அர்ப்பணிக்கிறேன்.

–சுஜாதா

 

Advertisements

3 thoughts on “7-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்

  1. Sridharan Srinivasan February 1, 2014 at 6:54 PM Reply

    இப்படியும் ஒரு மனிதர் இருந்திருக்கிறார் ! you were really blessed to have touched his hand (and his life)

  2. ஆர்வக் கோளாறா இடையில் என் எண்ணங்கள் நுழைவதை நிறுத்துவது உசிதமானது .விட்டேன்.
    உங்க எக்ஸ்ப்ரஸ் வேகம் அதிகரிக்கிறது…..23 வருஷமா கவிதை எழுதலை ..கட்டுரைக்குள் கதை ….சூப்பர் சுற்றிப்போட்டுக் கொள்ளவும் .

  3. Revathy Venkat February 1, 2014 at 6:56 PM Reply

    படிக்கும்போது சுஜாதா இப்போது இருந்து நமக்கெல்லாம் fb நண்பரா இருந்தா எவ்வளவு நல்லாருக்கும் என்ற ஏக்கம் கிளம்பி விட்டது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s