9-Black Moon – ஹேமா ஸ்ரீதர்


இதன் முந்தைய பகுதி…

சுஜாதா பற்றி ஜெ…

சுஜாதாவின் எழுத்துக்களுக்கு ஓவியம் வரைவது ஒரு சுகமான அனுபவம். சில எழுத்தாளர்களின் கதைகளுக்கு ஓவியம் வரைய மிகச் சரியான சிச்சுவேஷனைத் தேட வேண்டி இருக்கும். ஆனால், சுஜாதாவின் சிறுகதை, நாவல் என அவரின் படைப்புகளின் ஒவ்வொரு பாராவிலும் அழகான சிச்சுவேஷன்கள் இருக்கும். சுஜாதாவும் என் ஓவியங்களுக்கு மிகச் சிறந்த ரசிகர். ஸ்கர்ட், டி-ஷர்ட், ஜீன்ஸில் இடம்பெறும் என் ஓவியப் பெண்கள் தத்ரூபமாக இருப்பதாகச் சொல்வார். ‘ஏன் ஜெ. இப்புடி வரையுங்களேன்…’ எனத் தன் நினைவில் உள்ள ஸ்ரீரங்கம் பெண்களின் ஆடை வடிவமைப்பு பற்றியும் அழகிய குறிப்புகள் கொடுப்பார்!

“Once in a blue moon மாதிரி black moonஆ?” என்று சில விநாடி குழம்பியவன் “ஏதாவது கவிதைக்காக முரண்தொடையா உபயோகிக்கலாம்! Black hole மாதிரி ஏதாவது விண்வெளி சமாச்சாரமா இருக்கலாம்.”

“ராஜி ரூம்னு போனோமே அங்க ஏதாவது கவனிச்சியா?”

“அங்க தான் எல்லாம் துடைச்சு வெச்சு இருந்துதே! ஓட்டல் ரூம் மாதிரி படுக்கை, டேபிள், காஃபி மேக்கர்.. எல்லாம் சுத்தமோ சுத்தம்!”

“அங்க ஒரு விக்டர் மாடல் ரெகார்ட் ப்ளேயர் அலங்காரத்துக்கு இருந்துது பாத்தியா? அதுக்கு அடில ஒரு சின்ன பேப்பர் துண்டு கோணல்மாணலா சிக்கி இருந்துது. அவசரத்துல பேப்பரை எடுக்க போக கிழிஞ்சு இருக்கு. அந்த துண்டுல தான் இது ப்ரிண்ட் ஆகியிருந்தது. இதுக்கும் ராஜி கொலைக்கும் ஏதாவ‌து ச‌ம்ப‌ந்த‌ம் இருக்க‌லாம்!”

“பாஸ் ஐ ஸ்வே! இந்த ஜென்மத்துல நான் அதை பாத்துருக்க மாட்டேன்!”

“attention to detail ரொம்ப முக்கியம் வசந்த்!”

“ஆனா அது என்னிக்கோ ஒரு நாள் சும்மாவேனும் வெச்சு எடுத்தப்போ கிழிஞ்சுருக்கலாமே? கொலைக்கு சம்பந்தம்னு எப்படி சொல்றீங்க?”

“இருக்கலாம்! அந்த‌ பேப்ப‌ர் ரொம்ப‌ ப‌ழைய‌து மாதிரி இல்ல‌, கொஞ்ச‌ம் புதுசு போல‌ தான் இருக்கு. ராஜியோ வந்து 7 மாசம் மேல‌ ஆகிருக்கு, துருவினா ஏதும் க்ளூ கிடைக்க‌லாம்!”

மறுநாள் வசந்தை எழுப்ப அவன் அறைக்கு சென்ற‌ க‌ணேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்த‌து. வ‌ச‌ந்த் ஏற்கனவே விழித்து தீவிர‌மாக‌ ப‌ஸ்கி தண்டால் எடுத்துக் கொண்டிருந்தான்.

“என்ன‌டா இது புதுசா?”

“எல்லாம் ந‌ம்ம‌ பாட்டி சொல்லி தான்!”

“ந‌ம்ம‌ பாட்டியா? ச‌ரியா போச்சு! அப்பாவி பொண்ணுடா அந்த‌ சௌம்யா, உன் கிட்ட‌ ஏமாற‌ நான் அனும‌திக்க‌வே மாட்டேன்!”

“நீங்க ஒருத்தரே போதும் பாஸ் எனக்கு! சொல்றதை கேளுங்க, 1934ல வந்த ஒரு ஆங்கில‌ படம் அப்புறம் கேத்ரின் ஹாரிசன் நடிச்சு 1975ல வந்த‌ ஒரு படம்.. 90கள்ல ப்ரூக்ளின்ல இருந்த ஒரு ஹிப் ஹாப் இசைக்குழு.. 20 வருஷம் வெளிவ‌ந்த ஒரு ஃப்ரெஞ்ச் ஃபேண்டஸி கதைத் தொடர்.. எல்லாத்துக்கும் பொதுவா ஒண்ணு இருக்கு!”

“எனக்கு தெரியாதுன்னு வாயை திறந்து சொன்னா தான் உனக்கு திருப்தின்னா, எனக்கு தெரியாது!”

“Black moon! பெரும்பாலும் கதை கவிதை இசை சினிமான்னு தான் உபயோக பட்டுருக்கு. பூமிக்கு இன்னொரு நிலவு இருக்குன்னு சில ஆராய்ச்சியாளர்கள் நம்பறாங்க, கண்ணுக்கு தெரியாதனால இதுக்கு ஒரு செல்லப்பெயர் black moon. இது தவிர, சில அரிதான astronomical சந்தர்ப்பங்களையும் black moonன்னு சொல்றாங்க‌. இதுல எதுவுமே சீரியசான தாத்பர்யம் இல்லை! எப்படி ராஜியோட கனெக்ட் பண்றது?”

“முதலில் உன் நோட்டை எடுத்துக்கொண்டு வந்து இப்படி உட்கார்! நான் சொல்றதை எல்லாம் எழுது!”

“ராஜி. இளம் அழகி. பழைய ஸ்நேகிதம். 6 மணி. கார். ஓட்டுனர். பதட்டம். தரமணி. தண்ணீர். பாய்சனிங். மூளைத்திருட்டு. சௌம்யா. நானோசாஃப்ட். அமெரிக்கா. வனிலாபேஸ். தநன்ஜெயன். தனிக்கட்டை. மகள் உடல். அதே பாய்சனிங். வாச‌லருகே இருந்தார். HR Head. பொய். தி.ந‌க‌ரில் சொந்த‌ வீடு. அடையாரில் ஹாஸ்ட‌ல் வாச‌ம். 7 மாதம். நிதின். பொய். உண்மை. கஃபேடேரியா. ரூம்மேட். கம்பெனி லீஸ். Black Moon.”

“இருங்க பாஸ் மூச்சு வாங்குது! இதையெல்லாம் வெச்சு பாத்தா கம்பெனில தான் ஏதோ தில்லுமுல்லு, பேசாம நகுலனை ஒரு வாரண்ட் போட்டு அங்க போக சொன்னா என்ன?”

“அது ஒரு யூகம் தான். நம்மால் நிரூபிக்க முடியுமா? என்ன ஆதாரம் இருக்கு? அது தான் எனக்கு வேணும்! நான் வெளில‌ போய்ட்டு வ‌ர‌ 3‍-4 ம‌ணி நேர‌ம் ஆக‌லாம் நீ அதுக்குள்ள‌ அந்த ராமசாமி டிஸெபிளிடி காம்பன்சேஷன் கேசுக்கு ஏதாவது வாதம் ரெடி பண்ணு. நாளைக்கு ராகவாச்சாரி ஹியரிங் வேற அது!”

“சரி எங்க போறீங்கன்னு சொல்லிட்டு போங்க?”

“போகும் போதே கேட்டுட்டியா, காரியம் வெளங்கிடும்னு எல்லாம் நான் நம்பலைன்னாலும், இப்போதைக்கு எனக்குமே தெரியாது. ஏதும் வேணும்னா கூப்பிடறேன். செல்லை வெச்சுட்டு டாக்டர் வீட்டு மாமியோட‌ அரட்டை அடிக்க போயிடாதே!”

ஒன்றரை மணி நேரம் கடந்த நிலையில் கணேஷிடம் இருந்து வந்த ஃபோனின் முதல் ரிங்கிலேயே எடுத்தான் வசந்த்.

“கேக்கறீங்களா பாஸ்?”

“முதல்ல நீ நான் சொல்ற அட்ரசுக்கு கிளம்பி வா, வழியிலே பேசு!”

“தந்தை பெரியார் நகர். பாஸ் கட்சி கூட்டம்லாம் ஒண்ணுமில்லையே? அந்த மாதிரி ஏதாவதுன்னா நான் அம்பேல்!” க‌ணேஷ் சொன்ன‌ முக‌வ‌ரிக்கு அருகில் ஒரு அம்ம‌ன் கோவில் இருந்த‌து. நிறைய‌ குடியிருப்புக‌ள் தீப்பெட்டி க‌ட்டிட‌ங்க‌ளாக‌ காட்சி அளித்த‌ன‌. இங்க‌-எதுக்கு-வ‌ர‌-சொன்னீங்க‌ என்று பார்வையாலே கேட்ட‌வ‌னை க‌ணேஷ் கையை காட்டி ஒரு திக்கில் பார்க்க‌ சொன்னான். அங்கு ஏரியாவுக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் ஒரு வெள்ளை போர்ட். தொட்டால் உதிர்ந்து விடும் போல் இருந்த ஒரு அரதப்பழைய ஷட்டரில் தேவைக்கு அதிகமாக ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

“KeKe Weldings”

“எங்கயோ கேள்விப் பட்ட மாதிரி இருக்கில்லே பாஸ்?”

“கரெக்ட். எங்கன்னு யோசி பார்ப்போம்!”

“ஹா! நேத்து அரவிந்த் தியேட்டருக்கு பக்கத்துல இருந்தப்போ இதே பேருல ஒரு ஃபார்மஸி பாத்தோம்! இதே ஸ்பெல்லிங்!!”

“க்ரேட்! நீ கவனிச்சுருக்க மாட்டேன்னு நினைச்சேன்!”

“இப்போ நாம தேடற விஷயத்துக்கும் இந்த கடைக்கும் என்ன பாஸ் சம்பந்தம்? ஒரே ஆள் வெச்சுருக்கற கடைகளா இருக்கலாமே!”

“சொல்றேன் ஒரே ஆளா இருக்கும்னு தான் நானும் நம்பறேன்! முதல்ல நான் போனது ராஜியின் வீட்டுக்கு. அன்னிக்கு அவசரத்தில் சரியா சுத்தலைங்கறது என் அபிப்பிராயம். நாம் கவனிக்க தவறிய ஒரு விஷயம், அங்கே ஒரு ப்ரிண்டர் இருக்கிறது. ஆனா கம்ப்யூட்டர் எங்கே? கொலை செய்தவன் திருடியிருக்கலாம். அடுத்து போனது ஜி.எச். அவங்க எங்கே surgical equipment வாங்கறாங்கன்னு விசாரிச்சு அந்த இடத்துக்கு போய் கொஞ்சம் ஆராய்ஞ்சேன். தலையை திறக்க stryker’s sawன்னு ஒரு ஸ்பெஷல் உபகரணம் இருக்கு. எல்லாருக்கும் செஞ்சு குடுக்கறது இல்ல! முக்கால்வாசி பெரிய ஹாஸ்பிடல்ஸ் தான் கஸ்டமர். ஆனா ஒரு பெயர் மட்டும் இடிச்சது, அதான் keke hospitals. ஃபோன் நம்பர் தப்பு, அட்ரஸ் இல்லை! அந்த மேனஜரை போட்டு மிரட்டியதில் கடையில் இருக்கும் நம்பிக்கையான‌ பையன் ஒருவன் சிபாரிசில் செய்து கொடுத்ததாக தெரிந்தது. அந்த பையன் கூட்டி வந்து விட்ட அட்ரஸ் தான் இது! வெல்டிங்கில் ஏதோ புதுமை செய்ய தேவைன்னு அவனை ஏமாத்தியிருக்காங்க. இந்த ஏரியா வேளச்சேரின்னாலும் 6 மாசம் முன்னாடி தான் தரமணியிலே இருந்து மாத்திருக்காங்க. இன்னும் எல்லாருக்கும் இது தரமணி தான். இந்த அளவு சந்தேகத்துக்கு வந்த கடை பேர்லயே இன்னொரு கடை வனிலாவுக்கு எதிர்க்க இருக்கு. போதுமா?”

“காலைக் காட்டுங்க பாஸ்! சாஷ்டாங்கமா விழணும் போல இருக்கு!”

“சரி வா பூட்டை உடைக்கலாம்!”

“சுத்தம், இதுக்கு நான் பூட்டு திருடனாவே ஆகிருக்கலாம்! யாராவது பாத்துட்டாங்கன்னா ரசாபாசம் ஆகிட போவுது பாஸ்! கல்யாணம் ஆக வேண்டிய பையன் மறந்துராதீங்க!”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, ஒரு வாரமா கடை திறக்கலை, யாரும் வரவும் இல்லையாம், விசாரிச்சுட்டேன். ராஜேந்திரனுக்கும் ஃபோன் போட்டு சொல்லியிருக்கேன். வந்துருவார் கொஞ்ச நேரத்தில்!”

பூட்டு பார்க்க தான் பிரமாண்டமே ஒழிய சட்டென திறந்து கொண்டது. எல்லா வெல்டிங் கடைகளுக்கும் உரிய லட்சணங்களுடன் தான் இதுவும் இருந்தது. சற்று பெரிதாகவே இருந்த கடையில் பீரோக்களில் தொங்கும் ஆளுயர கண்ணாடி ஒரு சுவற்றில் தொங்க அதன் மேல் வெய்யில் பட்டு தெறித்துக் கொண்டிருந்தது. கண்ணாடிக்கு பின் ஏதேனும் இருக்கும் என ஆர்வமாக பார்த்த வசந்துக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. ஒன்றுமில்லை.

“என்ன பாஸ் இப்படி சப்புனு ஆகிடுச்சு?”

வெளியே வந்து வண்டியில் ஏறப் போனவர்கள், “வசந்த் இரு! இந்த பில்டிங்கிலே 2 போர்ஷன் இருக்கே. வா மேலயும் போய் பாக்கலாம்!” மேலேயும் ஏதோ கடை போல ஷட்டர் போட்டிருந்தது. ஆனால் செக்யூரிட்டி லாக் இருந்தது. “இங்க இன்னொரு கடை இருக்கறதா யாரும் சொல்லலை, அதுக்கு ஒரு ப்ரொக்ராம் லாக் வேறே!”

“பேசாம ராஜேந்திரனுக்கு வெயிட் பண்ண வேண்டியது தான்!”

“ஹும்ம்.. சரி பாஸ் என் கறுப்பு நிலா ஆரா..” என ஆரம்பித்த வசந்தை மேலும் பேச விடாமல் “codekey accepted!” என ப்ரொக்ராம் லாக் தானாக திறந்து கொண்டு விட்டது! “பாஸ் யாரோ வந்துட்டாங்க போலிருக்கே!” என்று வசந்த் சுற்றும் முற்றும் பயத்தில் பார்க்க, கணேஷ் ஆச்சரியத்தில் “வசந்த் உன்னை அறியாமே நீ சொன்ன வார்த்தை தான் கோட் வர்ட்! நாம காலைல பேசினது!! this is unbelievable!” கடைக்குள்ளே நுழைந்தவுடன் அசாதாரணமாக இன்னொரு சுவர் இருக்க, கீழே ட்ராக்கும் மேலே ரயிலிங்கும் இருந்தது. “ஸ்லைடிங் வால்! சரி தான், ரொம்ப ஹைடெக்கான கடையா இருக்கே இது!” என்று இருவருமாக தள்ளினர்.

சரியாக அந்த நேரம் பார்த்து வசந்தின் ஃபோன் அடிக்க, “சீக்கிரம் எடுறா! யாருக்கும் கேட்டுட போவுது!” என்று கணேஷ் அவசரமாக உள்ளே நுழைந்தான்.

“ஹலோ வசந்த், நான் சௌம்யா!”

“சொல்லுங்க என்ன விஷயம்? அவசரமா, ஒரு அரை மணி கழிச்சு கூப்பிடவா?”

“இல்லை வசந்த் ரொம்ப அவசரம்! நீங்க கூட்டிட்டு வந்த ஆண்டாள் நேத்து நீங்க போனதுக்கு அப்புறம் ஒண்ணும் சாப்பிடலே குடிக்கலே! தூங்க கூட இல்லைன்னா பாருங்க! நானும் எவ்வளவோ பேசி பாத்துட்டேன், எதுவும் செய்ய மாட்டேன் பிடிச்சு வெச்ச பிள்ளையாரா உக்கந்துருக்காங்க! என்ன செய்றது?”

“அப்படியே பாத்துக்குங்க, நான் ஒரு ஒரு மணி நேரத்துல வந்துர்றேன்!”

“சீக்கிரம் வந்துருங்க, பாட்டி பயங்கர கோவத்துல இருக்காங்க!” என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் போதே, உள்ளேயிருந்து கணேஷ் வழக்கமில்லாத டெசிபெல்லில் கூச்சலிட்டான்.

“வசந்த்! வசந்த்!!!”

இதன் இறுதிப் பகுதி விரைவில்…

காயத்ரி

தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர்-கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச்சலான கதைதான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதையாசிரியரும் இதிலொரு பாத்திரமாக இயங்குவது இந்தக் கதையின் சிறப்பம்சம்.

One thought on “9-Black Moon – ஹேமா ஸ்ரீதர்

  1. RANGAN December 31, 2013 at 11:54 AM Reply

    Today only I saw this post (not story). No the Ganesh/Vasanth Characters also died in a road accident on 27/2/2008. So don’t bring them back. எங்க வாத்யார் சுஜாதாதான் அவரை போல் எழுதுகிறேன் என சொல்பவர்களே கொஞ்சம் தள்ளி நில்லுங்கள். அதுதான் அவருக்கு நீங்கள் செய்யும் உண்மையான அஞ்சலி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s