தேடாதே – சுஜாதா


தேடாதே‘ பதற்றமூட்டும் குற்றக் கதை.

தேடாதே
தேடினால் காணாமற் போவாய்
வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன.
புவியரசு

சுஜாதாவின் இந்தக் குறுநாவலை அது பிரசுரமான காலத்தில் (1979) படித்த ஞாபகமில்லை.

மதுரையில் பிளாட்ஃபாரத்தில் வாங்கிய பௌண்ட் புத்தகங்கள் ஒன்றில் கிடைத்தது. ஒரு சிறுகதை அளவு விஷயத்தை இழுத்து நாவலாக்க முயன்றிருப்பது தெரிகிறது. கதையின் Anatomy யை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

1. சில பெரிய மனிதர்களுக்கு துணை நடிகைகளுடன் இருக்கும் தொடர்பு
2. ஆல்பம் தயாரித்து டைரக்டர்களுக்கு அனுப்பி வாய்ப்புத் தேடுவது (அப்போது இந்த செய்தி ரொம்பப் புதுசு)
3. இது போன்ற தங்கக் கூண்டிலிருந்து வெளியே போகும் வாய்ப்பு கிடைக்கும் போது அவர்கள் கொல்லப்படுவது

மேற்சொன்ன இன்புட்களை கோட்டார்ட் படிக்கும் அறிவுஜீவ புகைப்படக்காரன், எரிக்கா யாங் படிக்கும் ஆச்சரியமான துணை நடிகை, இமேஜ் பிராஸஸிங் போன்றவற்றோடு பிராஸஸ் செய்து கொஞ்சம் புகைப்படக் கலை கொஞ்சம் ஜென் என்று சப்ரொட்டீன்கள் சேர்த்தால் கிடைக்கும் அவுட்புட் 66 பக்க குறுநாவலாக இருக்கும்.

சின்ன கதையில் இவ்வளவு மசாலா சேர்த்ததால் வெறும் மசாலாவை ஒரு டம்ளரில் கரைத்துக் குடிப்பது போல் இருக்கிறது.

முதன் முதலில் ஒரு சுஜாதா கதை ‘ஐயெய்யே.. இவ்வளவுதானா?’ என்று நினைக்க வைத்தது.

தேடாதே

தேடாதே குறுநாவலில் இருந்து ஒரு பகுதி…..

“கொஞ்சம் அப்படியே சாஞ்சுக்குங்க!”
“இப்படியா ஸார்.”

“இல்லை.  கொஞ்சம் இடது பக்கமா. தட்ஸ் இட்.  அப்புறம் மார்ல அந்த ஸாரியை  லேசா…  ஓ எஸ். போதும் !  ப்யூட்டிஃபுல்.  கொஞ்சம் சிரிங்க!  என் இடது கையைப் பாருங்க!  ரிலாக்ஸ்!  தட்ஸ் இட்! “

அப்பெர்ச்சர் எஃப்  8 .

ஸ்பீட் 125 .

காமிராவின் கழுத்தைத் திருக அந்தப் பெண் என் வ்யூஃபைன்டரில்  தீட்டப்பட்டாள்.  அவளை நிறையவே பார்க்க முடிந்தது.

கிளிக்!

“தாங்க்ஸ்!  நீங்க ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிக்கிட்டு வாங்க.”

“நீச்சல் உடை இருக்குதுங்க.  நல்லா இருக்கும்னு பேபி சொல்லிச்சு.”

“போட்டுக்கிட்டு வாங்களேன்.”

உள்ளே சென்றாள்.

சென்றவளின் பெயர் தெரியாது எனக்கு.  வீட்டுக்குள் மாடி அறையில் நீச்சல் உடையில் பாய்ச்சல் காட்டுகிற மாதிரி  ஃபோட்டோ எடுத்துக் கொள்ள இவர்கள் எல்லோருக்கும் ஆசை.  நம் நாட்டுப் பெண்களுக்கு உடம்பு வாகு கிடையாது.  இடுப்பு பெரிசாக இருக்கும்.  கால்கள் குட்டையாகவும், தொடைகள் ஒன்று சேர்ந்தும் இருக்கும்.  நீச்சல் உடை எடுபடாது என்று சொன்னால் கோபம் வந்து விடும்.  எனக்கென்ன !  காசு கொடுக்கிறார்கள்.  எடுத்துடறேன்.

சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தேன்.  இல்லை அசங்கவில்லை.  உஷ்ண ராஜ்ஜியம்.  தென்னை மரத்தில் ஒரு காகம் வெயிலில் கரையக் கூட திராணியில்லாமல் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தது.  தூரத்தில் பள்ளிக்கூடத்தில் ஜன்னல் ஜன்னலாகப் பெண்கள்.  பெரும்பாலும் ஒழுங்காகக் கல்யாணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாகப் பிள்ளைகள் பெற்றுக் கொண்டு சரித்திரத்தில் இடமில்லாமல் சரியப் போகிறவர்கள்.  ஒரு சில பெண்கள் இடறிப் போய் உதறப்பட்டு… இவள் மாதிரி….

ஜோல்னாப் பைக்குள் கைவிட்டு கோடார்டின் திரைக் கதையைப் பிரித்தேன்;  என்றைக்காவது ஒரு நாள் பட்டாம்பூச்சியாகக் காத்திருக்கும் புழு நான்.  படித்து எம்.ஏ. ஆங்கில இலக்கியம்;  தொழில்… பார்த்தீர்களே,  இந்த மாதிரி கோடம்பாக்கம் கேஸ்களை எல்லாம் ‘உட்காரு,  படு’  என்று சொல்லி கிளிக். கிளிக்.  பிரசுரிக்கப் பத்திரிகைகள் இருக்கின்றன.  ஆல்பத்தில் விரலை ஓட்ட போதை நிறைந்த சினிமாச் சீமான்கள் இருக்கவே இருக்கிறார்கள்.  எடுத்துடறேன்.  அவ்வளவுதான்.  அதற்கப்புறம்  நடப்பது இருட்டு.  என் பேர் கணபதி சுப்ரமண்யம்.  இவ்வளவு நிறையப் பேரை வைத்துக் கொண்டு இந்த அவசர உலகத்தில் பிழைக்க முடியுமா ?  எனவே ஜி. யெஸ்.  பல பேருக்கு ஜி. யெஸ்.  என் முழுப் பெயர் அவர்களுக்குத் தெரியாது.

ஜியெஸ்-ஐ  நீங்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறீர்கள்.  ‘புகைப்படம் ஜியெஸ்’  என்று குமுதம்,  இதயம்,  கல்கி, குங்குமம், சாவி, விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறேன்.  இருக்கிற சினிமாப் பத்திரிகைகளுக்கெல்லாம் கவர்ச்சி படங்கள் சப்ளை அடியேன்தான்.  ஆனால் இந்தப் பெண்ணை இப்போது நான் எடுக்கும் ஃபோட்டோக்கள் எந்தப் பத்திரிகையில் வரும் என்று கியாரண்டியாகச் சொல்ல முடியாது.  தியாகராஜன் என்பவர் விலாசம் கொடுத்துவிட்டு அங்கே போய் ஃபோட்டோ எடுங்கள் என்றார்.  தியாகராஜன்  ஒரு மிடில் மேன்.  ஃபோட்டோ  பிடித்து ஏதாவது ஒரு சினிமாப் பத்திரிகையில் பிரசுரிக்க வைக்க வேண்டியது அவர் வேலை.  அதற்கு மொத்தம், சில்லறை என்று உண்டு.  எனக்கு,  காப்பிக்கு இவ்வளவு,  கலருக்கு இவ்வளவு,  என்லார்ஜ்மென்ட்டுக்கு இவ்வளவு என்று ரேட்டுகள். டெவலப்பிங் எல்லாம் நான்தான் செய்கிறேன்.  ஜி.என். செட்டி ரோடு சந்தில் ஸ்டுடியோ வைத்திருக்கிறேன்.
இந்தத் தொழிலில் நிறையப் பெண்களைப் பார்த்து விட்டேன்.  சினிமா ஒரு சாகசக் கன்னி. அவள் செய்கிற அட்டகாசம் பற்றி 250 பக்கத்துக்கு என்னால் புஸ்தகம் எழுத முடியும்.  இப்போது இந்தப் பெண் கூட சினிமாவில் அடி எடுத்து வைக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் இத்தனை டிரஸ் போட்டுக் கொண்டும் கொள்ளாமலும் இத்தனை காட்டுகிறாள்.  இப்போது நீச்சல் உடையில் வரப்போகிறாள்.  ‘அப்படியே மேல இருக்கிறதை கொஞ்சம் ரிமூவ் பண்ணி ஒரு ஷாட் எடுத்துரலாமே’  என்றால் ‘தாராளமா’  என்று ‘பத்தினி தெய்வம் கண்ணகி’  என்பதற்குள் கழற்றி விடுவாள்…. சினிமா!

என்னைப் பொறுத்த வரையிலும் எல்லாப் பெண்களும் எனக்கு ஒன்றே.  எல்லோரும் என் நிக்கானின் வியூஃபைன்டரில் தெரியும் எஸ்.எல். ஆர். பிம்பங்கள். அவ்வளவுதான்.. ஒருத்தியைத் தொட்டதில்லை. ஒருத்தி மேலே பட்டதில்லை.  ஒருத்தியிடம் அசிங்கமாகப் பேசியதில்லை.  காதல் திட்டுக்கள் கிடையாது.  நான் எடுக்கும் ஃபோட்டோக்களில்  அசிங்கம், Porno இருக்காது.  ஆனால் பெண் உடம்பு ஒரு கலைப்பொருள்.  கலைக்கண்களோடு தான் நான் பார்க்கிறேன் என்பதெல்லாம் ஜல்லி, ரீல், உடான்ஸ், ஜபேட்டு!

நான் ஏறக்குறைய என் காமிராவில் பிற்சேர்க்கை ஆகிவிட்டேன்.  அவ்வளவுதான்.

இவள்கூட எல்லோரையும் போலத்தான் என்று நினைத்தேன்.  தவறு.

நீச்சல் உடையில் அவள் வரக் காத்திருந்தேன்.  சிகரெட்டுப் பிடித்து முடித்தாகிவிட்டது.  மறுபடி அந்த அறைக்குள் வந்தேன்.  சற்று வசதியாகவே இருந்தது.  மீன் முகத்தில் சுவரில் ஒரு வாஸ் போல இருக்க அதில் பிளாஸ்டிக் மலர்கள் சொருகியிருந்தன.  மேஜை மேல் ஒரு ‘டூ இன் ஒன்’  இருந்தது.  காசெட்டுக்களுக்கு என்று ஒரு சின்ன சுற்றுப் பெட்டி இருந்தது.  அலமாரியில் நிறையக் கோப்பைகளும் மெடல்களும் இருந்தன.  ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு உயர்நிலைப்பள்ளியில் குரூப் ஃபோட்டோவில் அத்தனைப் பெண்களும் பாவாடை தாவணி அணிந்திருக்க நட்ட நடுவே ஒரே ஒரு நன்.  கீழ் தட்டில் வரிசை வரிசையாக ஆங்கிலப் புத்தகங்களைப் பார்த்து திடுக்கிட்டேன்.  ஒரு புத்தகத்தின் முதுகில் பெயரைப் பார்த்தேன்.

Zen and the art of Motor cycle Maintenance.

“ரெடி ஸார் !”

திரும்பினேன்.  நீச்சல் உடை பொருந்தியே இருந்தது.  கால்கள் நீளமாகவும், தொடை அரை படாமலும்,  சற்று வித்தியாசமானவள்.

“இது யார் ரூம்”  என்றேன்.

“என் ரூம்தான்.”

“அப்ப இந்த புஸ்தகமெல்லாம் யார் படிக்கறாங்க ?”

“நான் தான் ஏன் ?”

ஏன் என்று எப்படிச் சொல்வேன் ?  பெண்களில் உன் போன்றவர்கள் எல்லாம் ‘ராணி‘யில் படக்கதைக்கு மேல் படிக்க மாட்டார்கள்.  நீ எப்படி Zen படிக்கிறாய் என்று கேட்பது அநாகரீகம்.  பேச்சைத் தவிர்.  காமிரா மூலம் பேசு.

“உக்காருங்க.”

உட்கார்ந்தாள்.  சின்ன மார்பும்,  இலை போன்ற வயிறும்,  நீண்ட கால்களும்…  நிதானமாக ஃபோகஸ் செய்தேன்.

“முழங்காலை, முதல்ல கட்டிக்குங்க!”

ஃபிளாஷ் கைடு நம்பர் 80 :  100 ஏ.எஸ்.ஏ.  பத்தடி தூரத்தில் எடுக்கிறோம் என்றால் அபெர்ச்சர்  எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று மனக்கணக்குகளில் எண்ணங்களைக் கட்டாயப் படுத்தினேன். அவள் கலைத்தாள்.

“சிரிக்க வேண்டாம்.”

“ஏன் நல்லா இல்லையா ?”

“இந்த போஸுக்கு சிரிச்சா நல்லால்லே.”

“சிரிக்க வேண்டாம்னு சொன்னா சிரிப்பு வருது”  என்றாள்.

“சிரியுங்க.  சிரிச்சு முடிச்சுட்டு வாங்க.  அப்புறம் எடுக்கலாம்.”

“கோவிச்சுக்கரீங்களா?”

“என் தொழில்லே கோபமே கூடாதுங்க!”

“என் தொழில்லயும்!”

“சிரிச்சாச்சா ?”

“ஆச்சு”

கொஞ்சம் நேச்சுரலா இருங்க.  பட்!  மறுபடி சிரிக்கறீங்களே ?”

“ஸார்,  என்னால சிரிக்காம இருக்க முடியல இப்போதைக்கு””சரி  கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாம்.  ஏதாவது பேசுங்க.””நீங்கதானே ஜி. யெஸ்.””ஆமாம்.””உங்க ஃபோட்டோக்களில்  ‘டெப்த்‘  நிறைய இருக்குது.”டெப்த்!  ஒரு புத்திசாலி வார்த்தை.  அவளை நேராகப் பார்த்தேன்.”படிச்சிருக்கீங்க!”  என்றேன்.“பி.ஏ. லிட்!  எலிசபெதன் டிராமா!”“”பின்ன ஏன்…..” என்று ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டேன்.“பின்ன ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தீங்க — கேள்வி அதானே ?”“ஹாலிவுட்ல  பிரசித்தமா ஒரு லைன் உண்டு. “

What’s a girl like you doing in a Place like this ?

“தெரியுமா?  வெரி குட்.  உங்க பேர் கேட்டே ஆகணும்.”

“அருணா”.

“ஏதாவது ஃபில்ம்ல சிவாஜிக்கு தங்கையா வந்திருப்பீங்களே?”

“இல்லை!  இன்னும் இல்லை.  அது இரண்டாம் படி.  நான் இப்ப முதல் படியே தாண்டலை.  ‘சட்டம் என் கையில்‘  பார்த்தீங்களா ?”

“வெயிட் எ மினிட்!   கமல் குடிச்சிட்டு டான்ஸ் ஆடறப்ப …..?”

“பின்னால நடனம் ஆடற பெண்களில் ஒருத்தி!”

“பி.ஏ. லிட்ரேச்சர் எலிஸபெதன் டிராமா!”

“நீங்க?”

“எம்.ஏ. லிட்ரேச்சர்!”

வசீகரமாகச் சிரித்தாள். கிளிக் !

“பின்ன ஏன்?”  — என்னை, என்னைப் போலவே கேட்டாள்.

நான் சற்று சிரித்தேன்.  “இப்ப என்ன ?”

“ஐ. வி.. சசி மாதிரி ஒரு ஆள்.  என்னைப் பார்த்து பிடிச்சுப் போய் திடீர்னு என்னை ‘பகல் நேரப் படுக்கைகள்’ னு ஏதாவது ஒரு படத்தில் கதாநாயகியாக்கி ஸ்விட்சர்லாந்து கூட்டிட்டுப் போவாங்களான்னு ஒரு சின்ன சிண்ட்ரெல்லா ஆசை.  அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும் ?”

“மறுபடி ஆரம்பிக்கலாமா ?  சிரிப்பு வராதே?”

இப்படியே…கீழே கார்ப்பெட்..  நல்ல கான்ட்ராஸ்ட் இருக்குது…  மல்லாந்துக்குங்க பார்க்கலாம்.  நீங்க பாட்டுக்கு இங்கே அங்கே புரண்டு பேசிக்கிட்டு போங்க — க்ளிக் — உங்க பேர் அருணாங்கறது  — க்ளிக் –  எனக்குப் பிடிச்சுருக்கு — உங்க பேர் ஜி.யெஸ் ங்கறது எனக்குப் புரியலே — க்ளிக் — இப்ப சிரிச்சா நல்லா இருக்கும் — சிரிப்பு வரலியா ?  ஒரு ஜோக் சொல்லட்டுமா ?  அவள் மேல் படாமல் அவளுக்குக் குறுக்கே மண்டி போட்டுக் கொண்டு காமிராவை மாற்றி சில .. ஒரு ஜோக் சொல்லட்டுமா … ஒருத்திக்கு ரெட்டைக் குழந்தைகள்.  மூணு வயசிலே பொண்ணும் பிள்ளையும்.  இரண்டையும் சேர்த்து வெச்சு குளிப்பாட்டிக்கிட்டு இருந்தாளாம்.  அப்ப பொண்ணு கேட்டுச்சாம்….

“ரேஷநெலி ஆஃப்  தி டர்ட்டி ஜோக்”  என்றாள்.

“படிச்சிருக்கியா ?”

க்ளிக் — க்ளிக் !

ரோல் தீர எடுத்தேன்.  கொஞ்சம் இருங்க.  ரோல் மாத்திக்கிடறேன்.  நீங்க அதுக்குள்ள சட்டை கிட்டை ஏதாவது….”

“நீங்க போட்டுட்டு இருக்கிற சட்டை நல்லாருக்கு!”

“நான் ஒன்றும் பேகன் இல்லை.  மேலும் உங்களுக்குப் பெரிசா இருக்கும்.”

“இந்த ‘உங்களுக்கு’  பிசினஸ் எல்லாம் வேண்டாம்!  அப்புறம்,  இந்த தங்கச்சி, அக்கா, அது இது எல்லாம் ஆரம்பிக்கும்!  வேண்டாம்  ‘உனக்கு’  சொல்லுங்க !” — உள்ளே சென்றாள்.  வசீகரமான பெண்.

ஜீன்ஸ் போட்டுக்கலாமா என்றது கதவு.

“போட்டுக்கலாம்!”

“நீங்க சட்டையைக் கேட்டப்புறம் எனக்கு நினைவு வரது!  ஒரு ஆள் ஃபோட்டோ  பிடிச்சுக்க என்கிட்டே வந்தார்.  சரியான சட்டைகூட இல்லை. பாவம்.  என் சட்டையை அவிழ்த்துக் கொடுத்துப் போட்டுக்கச் சொல்லி படம் எடுத்தேன் !  இப்ப அந்த ஆள் பெரிய ஆளு!”

“யாரு பாரதிராஜாவா ?”

“சேச்சே !  இன்னொருத்தர்!”

“யாரு ?”

“சொல்ல மாட்டேன்.  கிசு கிசு பாணியில் சொல்லப் போனா இரண்டெழுத்துள்ள  இளம்பிறை நடிகர்!”

வெளியே வந்தாள்.

“வாவ்!”  என்றேன்.

“நான் எத்தனையோ பெண்களைப் ஃபோட்டோ  எடுத்திருக்கேன்.  இது வரைக்கும் வாவ் சொன்னதில்லை.

“இது ஒண்ணும் நல்லதுக்கு இல்லை!  கொஞ்சம் பழகின பாதையில் போய்க்கிட்டு இருக்கு உரையாடல்!”

நான் புதிய ரோலைப் போட முற்பட…..புதிய ரோல் கொண்டு வர மறந்து விட்டேன்!

“ஸாரி  ஃபிலிம் இல்லை !  வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வரணும்!”

“பின்ன இதுவரைக்கும் எடுத்தது எல்லாம் ?”

“அதெல்லாம் ஃபிலிம்  இருந்துதான் எடுத்தேன்!”

“அதானே பார்த்தேன் .  சும்மா வெறும் டப்பாவைத் தட்டிக்கிட்டு இருந்தீங்களோன்னு…  சரி அப்ப பாண்ட்டு மாட்டிக்கிட்டது வேஸ்ட்டா?”

“நான் ஸ்டுடியோவுக்குப்  போய் எடுத்துட்டு வந்துடறேன்!”

“கார்ல வந்திருக்கீங்களா ?”

“இல்லை,  ஜாவா!”

“அப்ப ஒண்ணு செய்யுங்க!  என்னை மவுண்ட் ரோடில் விட்டுடுங்க.  ஒரு ஆளைப் பார்க்கணும் எனக்கு….”

“பாக்கி ஃபோட்டோ  ?  தியாகராஜன் மூணு ரோல் எடுக்கச் சொல்லியிருக்காரு!”

“சாயங்காலம் வர முடியுமா ?”

“எத்தனை மணிக்கு ?”

“ஏழு ஏழரைக்கு மேல …?”

“சரி,  வரேன்.”

அவள் தன் வீட்டின் கதவைப் பூட்டினாள்.

“தனியாவா இருக்கீங்க ?”

“கூட ஒரு உறவுக்காரப் பொம்பள இருக்குது.  ‘கல்யாணராமன் ‘  போயிருக்குது.  நாலாந்த்தரம்!”

வீடே ஒதுக்குப்புறமாக இருந்தது.  கட்டாத மனைகள் நிறைய இருக்கும் புதிய காலனி.  அண்ணாமலைபுரத்தைத்  தாண்டி….

“ஊருக்குள்ளே வீடு அகப்படலையா உங்களுக்கு ?”

“ஊருக்கு வெளியே இருந்தா சில சௌகரியங்கள் இருக்குது !”

“என்ன சௌகரியங்கள் ?”

“ஜியெஸ்  நீங்க ஜாஸ்தி கேள்வி கேட்கறீங்க!”

“சாரி, நன் ஆஃப்  மை பிசினஸ்!”  என்று மோட்டார் சைக்கிளை உதைத்தேன்.  காமிரா சாதனங்களை தோளில் ஜாக்கிரதையாகப் பெட்ரோல் டாங்கில் வைத்துக்கொண்டேன்.  லென்ஸ் பெட்டிகளை பக்கவாட்டுப் பெட்டியில் திணித்து அவளுக்கு இடம் பண்ணிக் கொடுத்தேன்….

“யோசிச்சுப் பார்த்தா என் மோட்டார் சைக்கிள்ள ஏர்ற முதல் பெண்மணி நீங்க!”

“கை தட்டுங்க!  கற்பு ஜாஸ்தின்னு தெரியுது உங்களுக்கு!’

புறப்பட்டோம்.

என் மேல் இயல்பாகப் பட்டுக்கொண்டே வந்தாள்.

“அடிக்கடி ப்ரேக் போடறீங்க!”  என்றாள்.

“உலகத்தின் ஆச்சரியங்களைக் காலி பண்ணவே முடியாது!”  என்றேன்.

“ஏன்?”

“நீங்க Zen படிக்கிறீங்களா ?

“ஒரு கதை சொல்லட்டுமா ?”

“சொல்லுங்க!”

“நான்-இன் — ஒரு குருவுடைய பேரு.  1912 வரை இருந்தவர்.  அவரைப் பார்க்க ஒரு ப்ரொஃபசர் வந்தாராம்.  ‘ஜென்’ ன்னா என்னன்னு கேட்டாராம்.

நான்-இன்,  அவருக்கு முதல்ல ஒரு கோப்பையில் டீ ஊத்திக் கொடுத்தாராம்.  கோப்பை நிரம்பிப் போச்சு.  இவர் ஊத்திக்கிட்டே இருக்காரு.  ப்ரொஃபசர் பார்த்துக்கிட்டே இருக்கார்.  “கோப்பை நிரம்பிப் போச்சு!  வழியுது.  மேலே மேலே ஊத்தறீங்களே ?”

“இந்தக் கோப்பையைப் போல நீ, உன்னுடைய சொந்த அபிப்ராயங்கள், கவலைகள்,  சந்தேகங்களாலேயே நீ ரொம்பிக் கிடக்கிறே!  உனக்கு நான் எப்படி ‘ஜென்’னுனா  என்னன்னு  சொல்ல முடியும் ? முதல்லே உன் கோப்பையைக் காலி பண்ணிக்கிட்டு வா!”

“படிச்சிருக்கீங்களா ?”

“படிச்சிருக்கேன்.  ஆனா நீ சொல்லி ஒரு தடவை கேட்கலாம்னுட்டுத்தான் சும்மா இருந்தேன் !  அருணா  ஐ லைக் யு !”

“எதிர்த்தாப்பல பஸ்ஸு!”

அவளை மவுண்ட் ரோடில் உம்மிடியார் சென்டருக்குள் இறக்கி விட்டேன்.  அந்தக் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு யாரையோ பார்த்து “ஹாய்’  என்று சொல்லி அவள் சிரித்த போது என் வயிற்றில் பொறாமை மூண்டது.  நான் பார்த்தது அவளின் ஒரு சிறு பகுதியைத்தான்.  இன்னும் நிறைய ‘அவள்‘ இருக்கிறாள்!   தேட வேண்டும் !

Advertisements

4 thoughts on “தேடாதே – சுஜாதா

 1. Kannan Venkataraman December 26, 2013 at 3:27 PM Reply


  இப்போது பார்க்கும் போது வேண்டுமானால் அப்படித் தோன்றலாம். அது வந்த போதே நான் படித்து இருக்கிறேன். “தேடாதே. தொலைந்து போவாய். பாதைகள் மாற்றப்பட்டு இருக்கின்றன..” என்ற புவியரசின் கவிதையுடன் தொடங்கும் என்ற நினைவு. எரிக்கா யங், கோடார்ட் என்பவை எல்லாமே அப்போது புதிது. சுஜாதாவின் மூலமாகத்தான் எரிக்கா யங்கின் “Fear of Flying“படிக்கத் தூண்டுதல் கிடைத்தது. (அதன் பின் தெரியாமல் “Fanny“என்ற புத்தகத்தை தெரியாமல் படிக்க ஆரம்பித்து பாதியில் விட்டேன்). Anatomy இப்போது புரிகிறது. முதல் முறையாக அந்தக் கால கட்டத்தில் படித்த போது பிரமிப்பாகத்தான் இருந்தது. மணியன் மாத இதழில்தான் “சிவந்த கரங்கள்” மற்றும் “கலைந்த பொய்கள்” வந்தன – சில மாதங்கள் இடைவெளிக்குப் பின்.

 2. Tiruchendurai Ramamurthy Sankar December 26, 2013 at 3:31 PM Reply

  சுஜாதாவின் பெரிய பலமும், பலவீனமும் ஒன்றுதான் ” தான் படித்த விஷயங்களை தன் கதைகள் மூலமாக வாசகனுடன் பகிர்தல்”. …அதை எளிமையாக்கியது அவர் செய்த சாதனை. அந்த வேலையில் சில பல குறைகள் தலை தூக்கும்.

  நான் எனது சுவற்றில் முன்பு எழுதியது.

  ” சுஜாதா வாசகனை இலக்கியத்துக்குள் புக வைக்கும் கோனார் நோட்ஸ்” . எரிக்கா தொடங்கி அஸிமாவ் வரை அறிமுகப்படுத்தியது அவரே. நடுவே ஆழ்வாரையும், கம்பரையும் விடவில்லை.

  தேடாதே சுமார்தான்…அதுபோன்று குறைந்தபட்சம் 1000 நாவல்களை பாக்கெட் நாவல் தந்துள்ளது….12-15 வருடங்களுக்குப் பின்னால்!

 3. raju December 26, 2013 at 3:35 PM Reply

  Thank you for reminding me about this story. It was published as a book by Savi group-if my memory serves me right. Was it earlier published as a “thodar Kadhai“. This story had disturbed me a lot when i read it first. You have rekindled all those thoughts now.

  raju-dubai

 4. Raju BG Bangalore December 27, 2013 at 12:58 PM Reply

  Sujatha… ippo padthithalum pudusa iruku.. Really we are missing him a lot…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s