5-Black Moon – ஹேமா ஸ்ரீதர்


இதன் முந்தைய பகுதி…

சிறுபத்திரிகையிலிருந்து ஆரம்பித்த சுஜாதா அங்கேயே தேங்கிவிடாது தமிழ்கூறு நல்லுலகத்து பகாசுரப் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. நாளாவட்டத்தில் அந்த பெரும் பேனர் பத்திரிகைகளின் பசிக்கு பரிமாறுவதே அவர் வேலையாயிற்று. மனுஷன் மிஷின் அல்ல. எழுதிக்குவிக்க வேண்டியிருந்தது. அந்தக் குவித்தலே அவருக்காக எழுத முடியாமல் போய், பத்திரிகையின் விருப்பத்திற்கேற்ப அவர் எழுத வேண்டியதாயிற்று.
அப்போது அவர் கற்பனையில் ஆபத்பாந்தவர்களாக வந்தவர்கள் தாம்-கணேஷும், வசந்த்தும். தன் முன்னோர்களான எர்ள் ஸ்டான்லி கார்டனரின் பெரிமேசன்–டெல்லா ஸ்ட்ரீட், தமிழ்வாணனின் சங்கர்லால்-இந்திரா மாதிரி– அவர்கள் ஆணும், பெண்ணும் என்றால் இவர் ஆணும், ஆணுமாக அவர்களை உலவ விட்டார். அந்தக் கால இளசுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற மாதிரியானாலும்,கணேஷை-கொஞ்சம் மன முதிர்ச்சியுடைய லாயராகவும், அவனுக்குக் கிடைத்த விடலைத்தன உதவியாளனாக-வசந்தையும்-உருவாக்கியதில் சுஜாதாவின் பாதிப்பங்கு வேலை கச்சிதமாக முடிந்தது. மீதிப் பாதியைக் கவர்ச்சி வரிகளும், அவர் எழுத்து ஸ்டைலும் பங்குப் போட்டுக் கொண்டன.
அப்போ கதை?.. அதைப் பண்ணுவதற்குத் தான் நேரமில்லாமல் மட்டுமில்லை, மனமுமில்லாமல் போயிற்று. இப்படியாகப் பெரும் பத்திரிகையில் எழுதிப் பிரபலமாகும் எல்லா எழுத்தாளர்களுக்கும் நேர்வது அவருக்கும் நேர்ந்தது. அத்தனை அழுத்தங்களையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு சுஜாதா எழுந்து வந்தது தான் ஆச்சரியமான கதை. சொல்லப்போனால், அதுவே அவரின் கதையும் கூட.

நகுலன் புன்னகைத்தவாறே “வாங்க வாங்க.. உங்களுக்காக தான் வெயிட்டிங். ராஜி யாருங்கற புதிருக்கு விடை தெரிஞ்சுடுச்சு!” என்றார்.

“நிஜமாவா! யாராம்? எப்படி தெரிய வந்துது?”

“அதான் பேப்பர்ல குடுத்து இருந்தோமில்லையா.. அதை பாத்துட்டு அவங்க ஃபிரண்டு ஒருத்தங்க வந்துருக்காங்க. 304, அந்த பொண்ணை கூப்பிடுங்க!”

ராஜியின் வயதொத்த ஒரு பெண் வந்தாள். குர்தா, ஜீன்ஸ், கலரிங் செய்த‌ குட்டை தலைமுடி.. கொஞ்ச நேரமாக அழுது கொண்டிருந்திருக்கிறாள் என சிவந்த கண்கள் சாட்சி கூறின.

“இவங்க தான் சௌம்யா..”

“ஹலோ சௌம்யா! ராஜியை உங்களுக்கு எப்படி பழக்கம்? காலேஜா இல்ல கலீக்ஸா?”

கேட்ட வசந்தை கேள்விக்குறியோடு பார்த்தாள்.

“ஐ’ம் சாரி! நாங்க கணேஷ் – வசந்த். வக்கீல்கள். அப்பப்போ துப்பறியறது, அடி வாங்கறதுன்னு, அடி குடுக்கறதுனு சைட் பிசினசும் இருக்கு. ராஜி கடைசியா பேசினது எங்க கிட்ட தான். ஏதோ சொல்ல வந்தவங்க‌ளுக்கு எதிர்பாராத விதமா இப்படி ஆகிடுச்சு. யாரு என்னனு தெரியாம முழிச்சிட்டு இருக்கோம். இப்போ சொல்லுங்க!”

“என்னனு சொல்றது.. நினைச்சே பாக்கலை அவளை பத்தி இப்படி சொல்ல வேண்டி வரும்னு. நான் படிச்சது எல்லாம் திருநெல்வேலில. எஞ்ஜினியரிங் முடிச்சதும் பெங்களூர்ல வேலை கிடைச்சு போனேன். அங்க தான் முதல் நாள் ராஜி ட்ரெயினிங்ல எனக்கு பக்கத்து சீட்ல இருந்தா. புது ஊரு.. சூழ்நிலை.. காலேஜ் நாட்கள் போலவே உடனே ஒரு நட்பு உருவாகிடுச்சு ரெண்டு பேருக்கும். ரொம்ப சாஃப்ட் டைப் அவ. ரெண்டு பேருமா ஒரு வீடு வாடகைக்கு எடுத்து சேர்ந்து தங்கிருந்தோம் ஒரு 2 வருஷம். ஆட்டம் பாட்டம்னு அருமையான நாட்கள்..”

“ஹும்ம்..”

“அதுக்கப்புறம் அவளுக்கு ஆன்ஸைட் வாய்ப்பு வந்து அமெரிக்கா போயிட்டா. 4 மாசம்னு தான் போனா ஆனா அங்கயே வேற ஒரு நல்ல கம்பெனில ஆஃபர் வரவும் மாறிட்டான்னு கேள்விப்பட்டேன்.”

“எங்க போனாங்க?”

“தெரியாது!”

“என்னங்க இது.. க்ளோஸ் ஃபிரண்டுனா எப்படி சொல்லாம கொள்ளாம மாறுவாங்க?”

“என்ன பண்ண சொல்றீங்க, மிஸ்டர் கணேஷ்? எனக்கு அவளோட அஃபீஷியல் ஐடி மட்டும் தான் தெரியும், அவ கம்பெனி மாறின விஷயமே எனக்கு அவளோட ஈமெயில் இன்வாலிட் ஆனப்புறம் தான் தெரியும். கம்பெனி ஃபோன்ல தான் அப்பப்போ கால் பண்ணியிருக்கா எனக்கு. அப்புறம் நான் ஃபீல்டு மாறி ஊரு மாறி அப்படியே டச் விட்டு போயிடுச்சு. எத்தனையோ காணா போன நட்புல இதுவும் ஒண்ணு.”

“ஃபேஸ்புக் ஆர்குட்னு எவ்வளவோ இருக்கே இப்போ? எப்படியும் திருப்பி தொடர்பு கொள்ளவே இல்லியா?”

“எனக்கு இந்த‌ சோஷியல் நெட்வர்கிங்ல எல்லாம் நம்பிக்கை இல்லை. கம்ப்யூட்டரை கண்டாலே வெறுப்பா இருந்ததால தான் நான் ஃபீல்டே மாறினேன். இப்போ க்ரெஸண்ட் காலேஜ்ல லெக்சரரா இருக்கேன்.”

“இதை வெச்சு என்ன நகுலன் கண்டு பிடிச்சுட்டீங்க?”

“பத‌ட்டப் படாதீங்க வசந்த். ராஜி வீட்டு அட்ரஸ் இவங்க கிட்ட இருந்துருக்கு. கான்ஸ்டபிளை அனுப்பினேன், அவர் அந்த அட்ரஸில் ஒரு பெரியவர் இருக்காருன்னும், ராஜின்னு ஒரு பொண்ணு இருக்குன்னும் சொன்னார்.. கூட்டிட்டு வர சொல்லிருக்கேன்!”

“நீங்க ஏன் வேலை மாறிட்டீங்க சௌம்யா?”

“எனக்கு ப்ரொக்ராமிங் பிடிக்கும் ஆனா இந்த சாஃப்ட்வேர் கல்சர் சுத்தமா பிடிக்கல. இதே ஸ்பேஸ்ல நல்ல 9-5 ஜாப் வேணும்னு இருந்ததுக்கு லெக்சரர் வேலை கிடைச்சது.. ரொம்ப பிடிச்சுருந்துது மாறிட்டேன்.”

“ராஜி அமெரிக்கா போனப்புறம் எவ்ளோ நாள் அதே கம்பெனில இருந்தீங்க?”

“ஒரு 6 மாசம்..”

“எந்த கம்பெனி இது?”

“நானோசாஃப்ட்.. பெங்களூர் ஹெட் குவார்டர்ஸ்.”

“சார், கூட்டிட்டு வந்துட்டேன். உள்ளே அழைச்சுட்டு வரட்டுமா?” என்று கான்ஸ்டபிள் கதவை பாதி திறந்த படி கேட்டார்.

“கூப்பிடுங்க..”

“ஏதோ அவசரம்னு அழைச்சுட்டு வர சொன்னீங்கன்னு கான்ஸ்டபிள் சொன்னார். என்ன விஷயம் சார்?” என்றார் அந்த பெரியவர்.

“இப்படி உக்காருங்கய்யா. உங்களுக்கு ராஜின்னு ஒரு பொண்ணு இருக்காங்க‌ இல்லியா?”

“ஆமா. என்னாச்சு? எதுக்கு கேக்கறீங்க?”

“இப்போ அவங்க உங்க கூட தான் இருக்காங்களா?”

“இல்ல அவ அமெரிக்காவுலன்னா வேலை பாக்கறா! வருஷ கடைசி தான் வர முடியும்னு சொல்லிண்டு இருந்தா.”

“ஃபோட்டோ எதுவும் வெச்சுருக்கீங்களா?”

“ஃபோட்டோவா? என்ன சார் எனக்கு பதட்டமா இருக்கு! என்னனு தெளிவா சொல்லுங்களேன்!”

“ஏன்யா இவ்ளோ வருஷமா கான்ஸ்டபிளா இருக்கீங்க‌.. அடையாளத்துக்கு ஒரு ஃபோட்டோ எடுத்துட்டு வர சொல்ல தெரியாது உங்களுக்கு? ஃபைலை எடுத்துட்டு வாய்யா!”

“சாரி சார்.. இதோ வர்றேன்.”

“இந்த‌ ஃபோட்டோல‌ இருக்க‌ற‌து தானே உங்க‌ பொண்ணு? பாத்து சொல்லுங்க‌!”

ஃபோட்டோவை வாங்கிய‌வ‌ர் உற்று பார்த்த‌வாறே “சாய‌ல் கொஞ்ச‌ம் ராஜி போல‌ தான் இருக்கு.. ஆனா இது என் பொண்ணு இல்லியே சார்? ஒரு நிமிஷ‌ம் இப்ப‌டி ப‌ய‌முறுத்திட்டீங்க‌ளே?”

“என்ன‌து?”

“ஆமாம் சார், இது எங்க ராஜி இல்ல!”

“என்ன சார், உங்க பேரு தநன்ஜெயன் தானே? உங்களுக்கு ராஜேஸ்வரின்னு ஒரு பொண்ணு இருக்கில்லையா?”

“ஆமாம்!”

“பெங்களூர்ல நானோசாஃப்ட்ல வேலை பாத்தாங்களா அமெரிக்கா போற‌துக்கு முன்னாடி?”

“ஆமாம்! உங்களுக்கு எப்படி சார் தெரியும்?”

“இவ‌ங்க‌ளை ப‌த்தி சொல்லிருக்காங்க‌ளா? சௌம்யான்னு பேரு!”

“ம்ம்ம்.. இல்லையே..”

“ந‌குல‌ன், இவரை ஜி.எச் கூட்டிட்டு போய் ஒரு த‌ட‌வை பாத்துட‌ சொல்ல‌லாமே.. ஃபோட்டோ ப‌ழ‌சோ என்ன‌வோ?”

“அதான். யோவ் ஏட்டு இங்க‌ வாய்யா! இவ‌ங்க‌ளை ஜி.எச் கூட்டிட்டு போய் அந்த‌ ராஜேஸ்வ‌ரி கேஸை அடையாள‌ம் காட்ட‌ காண்பி!”

அவர்கள் வெளியே செல்லவும், கணேஷ் வசந்தை பார்த்து கண்ணசைத்து விட்டு, “அப்போ நானும் கிளம்பறேன், எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு இன்ஸ்பெக்டர்!” என்றான்.

“ஹாஹா! உங்களை சந்திச்சு 2 நாள் தான் ஆகிருக்கலாம், அதுக்காக இப்படிலாம் பொய் சொன்னா நம்புவேனா? ஜி.எச் தானே போறீங்க, தாராளமா போயிட்டு வாங்க!”

க‌ணேஷ் செல்ல‌வும், வ‌ச‌ந்தும் விடைபெற்றான். “என்ன‌ சௌம்யா, ஒரு காஃபி சாப்பிட‌ வ‌ர்றீங்க‌ளா?”

“..”

“சும்மா வாங்க‌! அழுது என்னாக‌ போவுது?” மௌன‌மாக‌ அவ‌னை பின் தொட‌ர்ந்தாள். வண்டியில் ஏறி சற்று நேரம் கழித்து சௌம்யா “ராஜி எதுக்கு உங்களை தேடி வந்தா?” என்றாள்.

“தெரியலங்க. ஏதோ என் ஸ்கூல் ஃபிரண்டுன்னாங்க. ஒண்ணும் சொல்ல ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு.”

“ஓ!”

“எங்க போலாம்? பாரிஸ்டா?”

“இல்ல.. இங்கயே பஸ் ஸ்டாப்ல இற‌க்கி விட்டுருங்களேன்? எனக்கு மூட் சரியில்ல.”

“என்ன‌ அதுக்குள்ள‌ க‌ட்சி மாறிட்டீங்க‌?”

“இல்ல‌ ப்ளீஸ்!”

“ச‌ரி, இற‌ங்கிக்குங்க‌!”

முருகன் இட்லி கடையில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று சோர்வு தீர‌ குளித்து முடிக்க‌வும் க‌ணேஷ் வ‌ர‌வும் ச‌ரியாக‌ இருந்த‌து. “என்ன‌ பாஸ், என்ன‌ சொன்னார் பெரியவர்?”

“ப்ச்.. எதிர்பாத்தா மாதிரியே அது ராஜி இல்லைன்னுட்டாரு! நீ சௌம்யா கிட்ட‌ ஏதும் பேச்சு குடுத்தியா?”

“காஃபி சாப்பிட‌லாம்னு கார்ல‌ ஏத்தினா ரெண்டு வார்த்தை பேசிட்டு ப‌ஸ் ஸ்டாப்ல‌யே இற‌ங்கிட்டாங்க‌!”

“அது ராஜி இல்லைன்னு ஏன் அவ‌ அப்பா பொய் சொல்லணும்?!”

“இல்லை அது ராஜின்னு சௌம்யா ஏன் பொய் சொல்றா?”

“கிண‌று வெட்ட‌ பூத‌ம் கிள‌ம்புன‌து என்ன‌னு இப்போ புரியுது பாஸ்!”

“ம்ம்ம்.. என்ன க்ளூ கிடைச்சாலும் திருப்பி முதல் புள்ளிக்கே வந்துடறோமில்ல?” என்று கூறிக்கொண்டே தொப்பென்று சோஃபாவில் விழுந்தான் க‌ணேஷ். வ‌ழ‌க்கம் போல‌ ஃபோன் அடித்த‌து. “இது ஒண்ணு க‌ரெக்டா நிம்ம‌தியா டீ குடிக்க‌லாம் இல்ல‌னா ஒரு குட்டி தூக்க‌ம் போட‌லாம்னு நினைச்சா போதும்.. அடிக்க‌ ஆர‌ம்பிச்சுரும்!”

“ஹ‌லோ! க‌ணேஷ் ஹிய‌ர்!”

“க‌ணேஷ்! ந‌குல‌ன் பேச‌றேன்! திருப்பி ஒரு கொலை!”

தொடரும்…

 வஸந்த் வஸந்த்

சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் தொடர்களில் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த நாவல்வஸந்த்! வஸந்த்! ஒரு பழங்காலக் கிணறு குறித்த ஆராய்ச்சிக் குறிப்பும் அதன் பின்னணியில் நிகழும் குற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்படும்இந்நாவல் வாசகர்களின் யூகங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு திசைக்குத் திருப்பிவிட்டு எதிர்பாராத திருப்பங்களை உருவாக்குகிறது. சுஜாதாவின் அங்கதம் அதன் உச்சத்தைத் தொட்ட படைப்புகளில் இதுவும் ஒன்று.

கல்கி‘யில் வெளிவந்த இந்தக் கதையில் (வஸந்த்! வஸந்த்!) போல் சரித்திர ஆராய்ச்சி கூடச் செய்கிறார்கள். வஸந்த்  முதலில் தோன்றி முப்பது ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் இளமை மாறாமல் இருக்கிறான். பெயர் மட்டும் இப்போது ‘வசந்த்‘ என்று எழுதுகிறேன். இருவருக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அதே தம்புசெட்டி தெரு ஆஃபீசில்தான் இருக்கிறார்கள். கார்தான் மாறியிருக்கிறது. குற்றங்கள் ஓயவில்லை.
–சுஜாதா
அக்டோபர், 2005
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s