4-அமெரிக்காவில் சில நாட்கள்! – சந்திரன்


இதன் முந்தைய பகுதி…

ந்தியாவைப் போல் அமெரிக்கச் சந்தையிலும் சீனப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இந்தியப் பொருட்களும் உள்ளன. டி ஷர்ட்கள், பேண்ட்கள் போன்றவை இந்தியா, தாய்லாந்து, மொரீஷியஸ், சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கின்றன. அந்நியப் பொருள் பகிஷ்கரிப்பு என்பதெல்லாம் அமெரிக்காவில் இல்லை.

வாஷிங்டன் நகரம் பெரியதுதான். இங்குள்ள Space and Aircraft மியூஸியத்தில், முதல் முதலாகச் சந்திரனில் இறங்கிய விண்கலத்தைப் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். நமது ஜனாதிபதி மாளிகையுடன் ஒப்பிடும்போது ஒபாமா வசிக்கும் வெள்ளை மாளிகை மிக மிகச் சிறியது. சென்னை பிராட்வேயில் சுற்றிலுமுள்ள உயரமான கட்டிடங்களுக்கு நடுவேயுள்ள லோன்ஸ்கொயர் பார்க் மாதிரி, வாஷிங்டன் டௌன் டவுனில் பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு நடுவே சிறு வீடாக அமெரிக்க ஜனாதிபதியின் வீடு உள்ளது. அமெரிக்காவில் ஓய்வு பெறும் வயது என்பது நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், 70 வயதானவர்கள் கூட வேலை செய்கிறார்கள். நியூயார்க் ஏர்போர்ட்டில் இமிகிரேஷன் பகுதிக்குள் நுழைந்ததுமே ஒரு குள்ளமான, வயதான பெண்தான் எங்கள் பாஸ்போர்ட்டைப் பார்த்து எந்தக் கியூவில் நிற்க வேண்டும் என்று கைட் செய்தார். அவருக்கு 68, 70 வயதாவது இருக்கும். கடைகளில் வயதான முதியவர்கள் வேலை செய்வதைச் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது.


ஜனாதிபதி மாளிகை
நம் ஊரில் மாவு அரைக்கிற மில்கள், தோசை மாவு அரைத்துத் தருகிற கடைகள் இருக்கிற மாதிரி, துணி துவைத்துத் தரும் வாஷிங் மிஷின்களைக் கொண்ட கடைகள் உள்ளன. வீட்டில் வாஷிங் மிஷின் இல்லாதவர்கள் பப்ளிக் வாஷிங்கில் வந்து துணிகளைச் சலவை செய்து எடுத்துச் செல்லலாம். ஒவ்வொரு கடையிலும் எட்டு, பத்து என்று பல வாஷிங் மிஷின்கள் இருக்கின்றன. இவற்றில் நம் துணிகளைப் போட்டு இயக்கி விட்டுக் காத்திருந்தால், துணி ரெடியாகி வருகிறது. இதற்குக் கட்டணம் வசூலித்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற கடைகளில் முதியவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது.

வீதிகளிலும் சாலைகளிலும் ஹார்ன் சத்தத்தைக் கேட்க முடியவில்லை. வாஷிங்டன், பால்டிமோர், ஃபிலடெல்பியா, ஜெர்ஸி எல்லாம் சென்று வந்து விட்டேன். மிகப் பிரம்மாண்டமான ஹைவேக்கள், கவுன்ட்டி சாலைகள், நகரச் சாலைகளில் எல்லாம் பயணம் செய்து விட்டேன். சாலைகளில் நூற்றுக்கணக்கில் கார்கள் செல்கின்றன. ஆனால், ஒரு ஹார்ன் சத்தத்தைக் கூட நான் கேட்கவில்லை. 65 மைல், 70 மைல் வேகத்தில் கூடச் செல்கிறார்கள். ஆனால், யாரும் ஹாரனைப் பயன்படுத்துவதில்லை. வேகம் இருக்கிறது. ஆனால் யாரிடமும் பதட்டமில்லை. அவசரமில்லை. சென்னையில் ஹார்ன் சத்தத்தைக் கேட்டுக் கேட்டு காதுகள் ஓட்டையாகி விட்டன.

காரில் குழந்தைகளைச் சாதாரணமாக ஸீட்டில் உட்கார வைத்து அழைத்துச் சென்று விட முடியாது. பென்ஸில்வேனியா மாநிலத்தில் முன் ஸீட்களில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக ஸீட் பெல்ட்களைப் போட்டுக் கொள்ள வேண்டும். நியூயார்க் மாநிலத்தில் பின் ஸீட்டில் இருப்பவர்களும் பெல்ட் போட்டுக் கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளை பக்கெட் ஸீட் என்கிற சிறு ஸீட்டைப் பொருத்தி பெல்ட் போட்டுத்தான் அழைத்துச் செல்ல முடியும். வெறுமனே ஸீட்டில் உட்கார வைத்து அழைத்துச் சென்றால் போலீஸார் சார்ஜ் செய்து விடுவார்கள்.

கார்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. தொலை தூரத்துக்குச் சென்று வர வேண்டுமானால் டாக்ஸிக்குக் கொடுத்துக் கட்டுப்படியாகாது. அதனால் கார்களை நாள் வாடகைக்கு அமர்த்தி அவர்களே ஓட்டிச் செல்கிறார்கள். வாடகைக்கு நம் நாட்டில் சைக்கிள்கள் கிடைக்கிற மாதிரி, வாடகைக்கு நாமே ஓட்டிச் செல்லும் கார்கள் கிடைக்கின்றன.


இந்தியாவில் கூரை இல்லாத மேல் பகுதி திறந்த லாரிகள்தான் அதிகம். ஆனால், அமெரிக்காவில் லாரிகள் எல்லாம் நாலாபுறமும் மூடப்பட்ட பாடிகளைக் கொண்டுள்ளன. வீடு மாற்றும்போது வீட்டுச் சாமான்களை எடுத்துச் செல்ல வேண்டும், அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு வீட்டுச் சாமான்களை எடுத்துச் செல்ல வேண்டுமென்றால் வாடகைக்கு சிறு சிறு லாரிகள் கிடைக்கின்றன. யூ ஹால் என்கிற இந்தச் சிறு டிரக்குகளை நாமேதான் ஓட்டிச் செல்ல வேண்டும். சாமான்களை ஏற்றி இறக்கக் கூலியாட்களுக்கு ஏராளமாகக் கூலி கொடுக்க வேண்டும். அதனால் உதவிக்கு நண்பர்களையோ, உறவினர்களையோ அழைத்துச் செல்கிறார்கள்.


யூ ஹால் டிரக்
அமெரிக்காவுக்கு வந்த இந்தியர்களில் பெரும்பாலோர் இங்கே தங்கி செட்டிலாகி விடவே விரும்புகின்றனர். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் என்பது குறைவு. வேலைகளும் எளிதாக, விரைவாக நடைபெறுகின்றன. ஆன்லைனிலேயே நமக்குத் தேவையான அரசுச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். எடுத்ததற்கெல்லாம் கவர்மென்ட் ஆஃபீஸுக்குச் சென்று காத்துக் கிடக்கிற அவலமெல்லாம் இங்கே இல்லை. சீரான போக்குவரத்து, ஜன நெருக்கடியில்லாத ஊர்கள், 90 சதவிகிதம் பிக்கல் பிடுங்களில்லாத நிம்மதியான வாழ்வு. எடுத்ததற்கெல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டியதிருக்கிற இந்திய வாழ்க்கையை யார்தான் விரும்புவார்கள்?

அமெரிக்காவில் உள்ள இத்தனை ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டுக்கும் காரணம் அங்கு சட்டம், விதிகள் அமல்படுத்தப்படும் விதம்தான். சட்ட விதிமுறைகளும் கடுமையானவை, அவற்றின் அமலாக்கமும் கடுமையானது. ஒரு குற்றவாளி எப்பேர்ப்பட்டவராக, எவ்வளவு செல்வாக்குமிக்கவராக இருந்தாலும் போலீஸார் விலங்கிட்டு தான் அழைத்துச் செல்கிறார்கள். போலீஸாரின் நடவடிக்கைகளில் வெளியார் யாரும் குறுக்கிட முடியாது. அங்கு சட்டத்தின் ஆட்சி மட்டுமே நடக்கிறது. அதுதான் அமெரிக்காவை உலகின் முதல் தரமான நாடாக உயர்த்தியிருக்கிறது.

நிறைவடைந்தது.

– சந்திரன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s