3-அமெரிக்காவில் சில நாட்கள்! – சந்திரன்


இதன் முந்தைய பகுதி…

america-states

தெருக்களில் பொதுக் கழிப்பிடங்களே கிடையாது. எங்காவது சென்று கொண்டிருக்கும்போது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமானால் பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது, எங்காவது ஷாப்பிங் மால் அல்லது அவுட்லெட் இருக்கிறதா என்று தேட வேண்டியதிருக்கிறது. சிறிய பார்பர் ஷாப்பில் கூட ரெஸ்ட் ரூம்கள் இருக்கின்றன. (இங்கு டாய்லெட்டை ரெஸ்ட் ரூம் என்கிறார்கள்.) எல்லா பெட்ரோல் பங்க்களிலும் காபி, பிரட், கேக், செய்தித்தாள் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் சிறு கடைகள் இருக்கின்றன. இந்தக் கடைகளில் ரெஸ்ட் ரூம்கள் இருக்கின்றன. இங்கே உடல் உபாதையைப் போக்கிக் கொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது.


பிலடெல்பியாவில் ஸிட்டி பஸ்…
ஹைவேக்களில் செல்லும் போது நம் நாட்டில், எங்காவது பஸ்ஸை நிறுத்தி பயணிகள் சாலையின் ஓரத்தில் நின்று சிறுநீர் கழிப்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். இங்கு அதெல்லாம் முடியாது. ஏதாவது பெட்ரோல் பங்க் வரும்வரை காத்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய, வளர்ந்த நாட்டில் தெருக்களில் ஏன் பொதுக்கழிப்பிடம் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. நம் நாட்டில் நாற்றம் குடலைப் பிடுங்கும் பொதுக்கழிப்பிடங்களில், கட்டணங்களை வேறு வசூலித்துக் கொண்டு அனுமதிக்கிறார்கள்.

எந்த ஊரிலும் பிச்சைக்காரர்களைப் பார்ப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. வாஷிங்டன் டி.சி.யில் காலை பதினோரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை சுற்றினேன். இரண்டே இரண்டு பிச்சைக்காரர்கள்தான் தென்பட்டனர். அதேபோல் பிலடெல்பியாவின் டௌன்டவுனில் ஒரே ஒரு பிச்சைக்காரரைப் பார்த்தேன்.

தமிழ்நாட்டில் பெரிய நகரங்களில் சட்டென்று ஒரு டாக்டரை அணுகி விட முடியும். சிறு நகரங்களில் கூட பிரைமரி ஹெல்த் சென்டர்கள் இருக்கின்றன. அவை எப்படிச் செயல்படுகின்றன என்பது வேறு விஷயம். ஆனால், அமெரிக்காவில் சட்டென்று ஒரு டாக்டரைப் போய் பார்த்து விட முடியாது. இன்ஷூரன்ஸ் கார்டு இல்லாமல் டாக்டரைச் சந்தித்தால், கன்ஸல்டேஷன் பீஸே இருநூறு டாலர் முந்நூறு டாலர் என்று தீட்டி விடுவார்கள்.

எந்த டாக்டரிடம் சென்றாலும் ‘இன்ஷூரன்ஸ் இருக்கிறதா, இல்லையா’ என்று கேட்டுக் கொண்டுதான் கையையே தொடுவார்கள். அரசு மருத்துவமனைகளும் உள்ளன. ஆனால், இவற்றின் எண்ணிக்கை குறைவு. நம் நாட்டைப் போல் தெருவுக்கு இரண்டு டாக்டரை இங்கே பார்க்க முடியாது. மருத்துவம் என்பது அமெரிக்காவில் அதிகம் செலவு பிடிப்பது. அதனால், எல்லோருமே ஏதாவது ஒரு மருத்துவ இன்ஷூரன்ஸ் ஸ்கீமில்தான் இருப்பார்கள். நாற்பது, ஐம்பது ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கிற ஜெனரல் பிஸிஷியன் கூட தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இங்கே அதே நாற்பது, ஐம்பது டாலருக்கு எந்த டாக்டரும் கையைப் பிடிக்க மாட்டார். ரொம்ப ரொம்பக் காஸ்ட்லி மருத்துவம் அமெரிக்க மருத்துவம்.

இன்ஷூரன்ஸ் மாதிரி சோஷியல் செக்யூரிட்டி நம்பரும் (எஸ்.எஸ்.என். கார்டு) அமெரிக்காவில் மிக முக்கியமானது. இது ஒரு விதமான பிராவிடெண்ட் பண்ட், இன்ஷூரன்ஸ் போன்றதுதான். வேலை பார்ப்பவர்களிடமிருந்து சோஷியல் செக்யூரிட்டி வரியை வாங்கி அவர்கள் ஓய்வு பெறும் போதோ, அல்லது உடல் ஊனமுற்றபோதோ திருப்பித் தருகிறார்கள். வேலையற்றவர்களுக்கு ஸ்டைபண்ட் போன்றவை இதிலிருந்து தான் வழங்கப்படுகின்றன. பிறந்த குழந்தைக்குக் கூட இந்த சோஷியல் செக்யூரிட்டி நம்பர் வாங்க வேண்டும் என்கிறது சட்டம். முன்பு அரசியல்வாதிகளுக்கு இந்தத் திட்டம் கிடையாது. ஆனால், இப்போது ஜனாதிபதி முதல் செனட்டர்கள், நீதிபதிகள் வரை எல்லோருக்கும் சோஷியல் செக்யூரிட்டி நம்பர் அப்ளையாகிறது. இந்த எஸ்.எஸ்.என். பற்றி அமெரிக்காவில் விமர்சனமும் உண்டு. சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களிடம் எஸ்.எஸ்.என். கார்டு இருக்காது.

அமெரிக்காவில் வருமான வரி அதிகம். வாங்கும் சம்பளத்தில் 40 சதவிகிதம் ஃபெடரல் வருமான வரியாகச் செலுத்த வேண்டும். இதுதவிர, மாநில அரசு, முனிஸிபாலிட்டி, கவுன்ட்டிகளுக்கும் வருமான வரி செலுத்த வேண்டும்.

அமெரிக்க அரசு, வருமான வரியைப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொள்கிறது. அதற்காக அமெரிக்கர்கள் அதிக அளவு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

நம் நாட்டில் இப்போது ஏ.டி.எம். மையங்கள் பெருகி விட்டன. தெருவுக்குத் தெரு பல்வேறுவங்கிகள் தங்களது ஏ.டி.எம். மையங்களை நிறுவியிருக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் ஏ.டி.எம். மையத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது. ஏனென்றால், 99 சதவிகித வியாபாரம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் மூலமும், ஆன்லைனிலும்தான் நடைபெறுகின்றன. இதனால் கரன்ஸியின் பயன்பாடு மிக மிகக் குறைவு. யாரும் நம் ஊர் மாதிரி சட்டைப் பையில் பணத்தைச் சுமந்து செல்வதில்லை.

ஏ.டி.எம். மிஷின், வங்கிகளின் உள்ளே அதன் சுவரோடு சுவராக, அதன் பணப் பரிவர்த்தனை செய்யும் பகுதி மட்டும் வெளியே தெரியும்படியாக உள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பவர்களைப் பார்ப்பது அபூர்வமாக உள்ளது. ஏதோ பேருக்கு அவசரத்துக்கு இருக்கட்டுமே என்றுதான் இங்கு கரன்ஸியை எல்லோரும் வைத்திருக்கிறார்கள். மற்றபடி எல்லாம் பிளாஸ்டிக் மனி (கிரெடிட் கார்டு)தான்.

கல்வியைப் பொறுத்தவரை இங்குள்ள குழந்தைகள் பெரும்பாலும் அரசாங்கப் பள்ளிகளில்தான் படிக்கின்றன. 10-ஆவது வரை இலவசக் கல்வி இருக்கிறது. தனியார் பள்ளிகள் குறைவாகவே உள்ளன. இவற்றில் மிகப் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள்தான் படிக்க முடியும் என்கிறார்கள். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு கல்லூரிக்குச் செல்ல வேண்டுமானால் கட்டணம் கொடுத்துத்தான் படிக்க வேண்டும். கல்லூரிக் கட்டணம் மிக மிக அதிகம். பெரும்பாலான கல்லூரி மாணவர்கள், ஏதாவது வேலை செய்து கொண்டேதான் படிக்கிறார்கள். பெற்றோரால் கல்விக் கட்டணத்தைச் செலுத்திக் கட்டுபடியாகாது.

இங்கு கூடைப் பந்து ரொம்பப் பிரபலம். பல வீட்டுத் தோட்டப் பகுதிகளில் பேஸ்கட்பால் போஸ்ட்கள் நிற்பதைப் பார்த்தேன். சிறு வயது முதலே அதில் பந்தைப் போட்டுப் போட்டுப் பயிற்சி பெறுகிறார்கள். எதற்கு பேஸ்கட்பாலில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று பார்த்தால், கல்லூரிகளில் உள்ள பேஸ்கட்பால் டீமில் இடம் பிடித்து விட்டால், கல்விக் கட்டணத்தில் சலுகை உண்டாம். அதற்குத்தான் இந்த ஏற்பாடு என்றார்கள்.

சென்னையிலிருந்து விழுப்புரம் வரை சென்றாலே தேசிய நெடுஞ்சாலையில் எதிரும் புதிருமாகச் செல்லும் நூற்றுக்கணக்கான பஸ்களைப் பார்க்கலாம். ஆனால், அமெரிக்க நகரங்களில் எப்போதாவது அத்தி பூத்தது போல் ஒரு ஸிட்டி பஸ் நம்மைக் கடந்து செல்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளிலும் பஸ்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது. வெளியூர் பஸ்களையே காண முடியாது. மாறாக, தேசிய நெடுஞ்சாலைகளில் தேனீக்களைப் போல சாரி சாரியாகக் கார்கள்தான் செல்கின்றன.

நயாகராவுக்கும் நான் இருந்த ஊருக்கும் எட்டு மணி நேரப் பயணத் தொலைவு. நாங்கள் காரில் தான் நயாகரா சென்றோம். ரயிலிலோ, பஸ்ஸிலோ செல்வதை விடக் காரில் செல்வதுதான் சீப்பானது. அதனால்தான் இங்கு எல்லோரும் கார்களைப் பயன்படுத்துகிறார்கள். அனேகமாக ஏழைகளைத் தவிர, எல்லோரும் சொந்தமாகக் கார்கள் வைத்திருக்கிறார்கள். மாதம் 150 டாலர் தவணை செலுத்தினாலே ஒரு கார் கிடைக்கிறது. ஸிட்டி பஸ்களில் கூட கருப்பின மக்கள்தான் செல்கிறார்கள். பல சமயங்களில் ஆட்களில்லாத பஸ்ஸை டிரைவர் ஓட்டிச் செல்வதைப் பார்த்தேன். ஆனால், எல்லா பஸ்களுமே ஏர் கண்டிஷன் செய்யப்பட்டவைதான்.

இங்கு டீஸல் விலைதான் அதிகம். பெட்ரோல் கேலனுக்கு 3.79 டாலர். டீஸல் 4.15 டாலர். பெட்ரோல் விலை மலிவு. இதனாலும் கார்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

அமெரிக்க அரசு, குறைந்தபட்சக் கூலியாக 1 மணி நேரத்துக்கு 9 டாலர் வழங்க வேண்டும் என்று சட்டமியற்றியிருக்கிறது. இங்கே கொத்தனார், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், கார்பெண்டர் போன்ற தொழிலாளர்களை யாரும் எளிதில் வேலை செய்யக் கூப்பிட மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்குச் சம்பளம் கொடுத்துக் கட்டுபடியாகாது.

என் மகனுடைய நண்பரின் கார் டேஷ்போர்டில் ஒரு சிறு வேலை. ஒரு ஸ்குருவைப் பொருத்த வேண்டும். ஸ்குருவின் விலை 6 டாலர். அதைப் பொருத்திய லேபரர் 50 டாலர் கூலி வாங்கினார். வீட்டைச் சுற்றியுள்ள புல்வெளியை, அரை நாள் செதுக்கிச் சீர் செய்ய 500 டாலர் வாங்கியதை நேரிலேயே பார்த்தேன். தொழிலாளிகளுக்குச் சம்பளம் கொடுத்துக் கட்டுபடியாகாமல்தான், பல கம்பெனிகள் சைனாவுக்குச் சென்று விட்டன என்கிறார்கள்.

– சந்திரன்
(அடுத்த பதிவு இதன் நிறைவுப் பகுதி…)

 

–நன்றி துக்ளக்

Advertisements

2 thoughts on “3-அமெரிக்காவில் சில நாட்கள்! – சந்திரன்

  1. Xavier Raja December 6, 2013 at 5:29 AM Reply

    Very neat & simple explanation about the state and its quiet intresting to read the article.. Thanks for the info..

    • BaalHanuman December 6, 2013 at 11:14 AM Reply

      நன்றி Xavier. தொடர்ந்து வருகை தாருங்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s