2-அமெரிக்காவில் சில நாட்கள்! – சந்திரன்


இதன் முந்தைய பகுதி…

ன் நண்பரும், எழுத்தாளருமான எஸ்.ராமகிருஷ்ணன், இயற்கையின் மீது அபிமானம் கொண்டுள்ள அமெரிக்கர்களைப் பற்றிச் சொல்லும்போது, ‘காடுகளின் நடுவே அமெரிக்கர்கள் வாழ்கிறார்கள்’ என்று கூறுகிறார். அரிஸோனா பாலைவனம் போன்ற ஒரு சில இடங்களைத் தவிர அங்கு எங்கு பார்த்தாலும் பசுமை பரந்து கிடக்கிறது. இவ்வளவு மரங்கள், காடுகள், புல்வெளிகளுக்கு நடுவே வீடுகள் இருந்தாலும் வீடுகளிலோ, வெளியிலோ ஒரு கொசுவையோ, ஈயையோ நான் பார்க்கவில்லை. தவளைகள், வண்டுகள், வெட்டுக்கிளிகள், வீட்டு லான்களில் துள்ளித் திரியும் முயல்கள், சாலையைக் கடந்து செல்லும் மான்களைத்தான் பார்க்க முடிந்தது.

நம் நாட்டில் தெருக்களில் கண்டபடி சுற்றும் மாடுகளையும், நாய்களையும் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களைத் தவிர தெருக்களில் நாய்களையோ, மாடுகளையோ இங்கே காண முடியவில்லை. மாடுகளெல்லாம் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. பால் பாக்கெட்டுகளில் விற்கப்படுவதில்லை. பல்வேறு சைஸ்களில் உள்ள கேன்களில்தான் பால் கிடைக்கிறது. இந்தப் பால் கேன்களை வாங்கி ப்ரிட்ஜ்ஜில் வைத்துக் கொள்கிறார்கள்.

சமையல் கேஸ், பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. தண்ணீர், மின்சார இணைப்பு எல்லாமே பூமிக்கடியிலுள்ள குழாய்களின் மூலம்தான் வீடுகளுக்கும், கடைகளுக்கும் வழங்கப்படுகின்றன. கேஸ், தண்ணீர், மின்சார வினியோகம் எல்லாமே பெரும்பாலும் தனியார் கையில்தான் உள்ளது. சில ஊர்களில் மின்சாரத்தையும் சமையல் கேஸையும் ஒரே கம்பெனியே வினியோகிக்கிறது. பற்றாக்குறை என்பதே இல்லை. தங்கு தடையற்று மின்சாரம், கேஸ், தண்ணீர் எல்லாம் கிடைக்கின்றன.

இந்தக் கம்யூனிட்டியைச் சுற்றி தினசரி காலையிலோ அல்லது மாலையிலோ வாக்கிங் சென்று வந்தேன். இந்த 400 வீடுகளில் ஆறேழு வீடுகளில் தினப் பத்திரிகைகள் வாங்கினாலே ஆச்சரியம். பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட பத்திரிகையை, நடைபாதையில் போட்டு விட்டுச் செல்கிறார்கள். போட்ட பொருள் போட்டபடியே கிடக்கிறது. என் மகன் என் மனைவிக்காக ஒரு செல்ஃபோனுக்கு ஆர்டர் செய்தான். நாங்கள் வாஷிங்டன் சென்றிருந்த அன்று அந்த ஃபோன் பாக்கெட் வந்தது. வாசலிலேயே அந்தப் பார்ஸல் அப்படியே இருந்தது. குழந்தைகள் ஞாபகமறதியாக சைக்கிள்கள், செருப்புகளைப் புல்வெளியில் விட்டுச் சென்றால், நாள் கணக்கில் கூட அவை அந்த இடத்திலேயே கிடக்கின்றன. நியூயார்க் போன்ற பெருநகரங்களில் சிறு சிறு திருட்டுக்கள் நடைபெறலாம் என்கிறார்கள். ஆனால், செயின் பறிப்பு, தங்க நகைக் கடைகளையும், வீடுகளையும் கொள்ளையடிப்பது போன்றவை இல்லை.

இங்கு போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது அபூர்வமாக உள்ளது. சில தினங்களுக்கு முன் நியூயார்க்கில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒருவனைப் போலீஸார் துப்பாக்கியால் சுட்டார்கள் என்ற செய்தி வந்தது. போலீஸ் அல்லாத யாராவது தனி மனிதர்கள்தான் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபடுகிற செய்திகள் வெளியாகின்றன. நம் நாட்டில் சரமாரியாக தினசரி நடைபெறும் படுகொலைகள், கொள்ளைகள், சாலை விபத்துக்கள் போன்றவை இங்கு மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

வாஷிங்டனில் என் மனைவி தன் கையில் வைத்திருந்த மூக்குக் கண்ணாடியை எங்கோ கீழே நழுவ விட்டு விட்டாள். நாங்கள் தெருவில் குனிந்து அதைத் தேடிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் ஒரு போலீஸ்காரர் வந்து any help” என்று கனிவுடன் கேட்டார். கண்ணாடி கிடைக்கவில்லை என்றாலும், போலீஸாரின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. நம் தமிழ்நாட்டில் பொதுமக்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளும் போலீஸாருக்குத் தங்கமெடல்தான் வழங்க வேண்டும். பொதுமக்களிடம் கண்டிப்பாக விதிகளை அமல்படுத்தினாலும் பரிவுடனும், கனிவுடனும் போலீஸார் நடந்து கொள்கிறார்கள்.


வீடுகளில் டி.வி., ஐ.பேட் வைத்திருப்பது சகஜமாக உள்ளது. எல்லா வீடுகளிலும் நெட் கனெக்ஷன் இருக்கிறது. நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. உணவுக்கு என்றே தனி சேனல்கள் இருக்கின்றன. நாள் முழுவதும் உணவு வகைகளைத் தயாரித்துக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதேபோல் கார்களைப் பற்றியும், ரெஸ்டாரண்ட்களைப் பற்றியும் கூட தனித் தனிச் சேனல்கள் இருக்கின்றன. செய்திகளையும், தகவல்களையும் தொலைக்காட்சி அல்லது ஐ-பேடின் மூலம்தான் பெரும்பாலும் தெரிந்து கொள்கிறார்கள். தங்கள் ஊரில் மழை பெய்யுமா, வெயிலடிக்குமா என்பதைக் கூட டி.வி. மூலம்தான் தெரிந்து கொள்கிறார்கள். அந்தளவுக்கு விரல் நுனியில் தகவல்கள் இருக்கின்றன.

நான் சென்றிருந்தபோது பி.பி.சி., ஃபாக்ஸ், சி.என்.என். போன்ற செய்திச் சேனல்களில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலைப் பற்றிய செய்திகள், விவாதங்கள், பிரசாரங்கள் அடிக்கடி இடம்பெற்றன. தமிழ்நாட்டு சன் டி.வி.யை லைவ் ஆகவே இங்கே பார்க்க முடிகிறது. ஜெயா, ராஜ், விஜய், மக்கள் டி.வி.க்களும் தெரிகின்றன. டி.வி. வேண்டாமென்றால், ஐ-பேடிலேயே டி.வி. சேனல்களைப் பார்த்துக் கொள்ள முடிகிறது. நான் நம் நாட்டுச் செய்திகளை ஐ-பேடின் மூலம் ஹிந்து, தினமலர், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களின் மூலமாகவும், தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் மூலமாகவும் தெரிந்து கொண்டேன்.

நம் ஊரில் விவேக் அன்கோ, வசந்த் அன்கோ, ரிலையன்ஸ் ப்ரஷ், மோர், ஸ்பென்ஸர், பிக்பஜார்… என்று எல்லாப் பொருட்களும் விற்பனை செய்யப்படும் பெருங்கடைகள் இருப்பது போல், மிகப் பிரம்மாண்டமான, நடந்தால் கால் வலிக்கிற அளவுக்கு உள்ள டார்கெட் (Target), ஜெயன்ட், ஐக்யா (IKEA), வால்மார்ட் (Walmart), ஹோம் டிப்போ (Home Depot) போன்ற மிகமிகப் பெரிய பெருங்கடைகள் நாடெங்கும் உள்ளன. ஐக்யாவும், ஹோம் டிப்போவும் எவ்வளவு பிரம்மாண்டம் என்பதை நேரில் பார்த்தால் தான் தெரியும். இங்கே கிடைக்காத பொருட்களே இல்லை. பல ஏக்கரா பரப்பில் இப்பெருங்கடைகள் அமைந்துள்ளன. இவை மூன்று நான்கு மாடிகளைக் கொண்டுள்ளன. ஒரு தளத்தை மட்டுமே பார்வையிட பல மணி நேரங்கள் பிடிக்கிறது. வீட்டுக்குத் தேவையான சகல பொருட்களும் இங்கே விற்கப்படுகின்றன. வீடு கட்டுவதற்கு வேண்டிய வாசல்கள், கதவுகள், ஜன்னல்கள் முதல் சகலமும் ஐக்யா, ஹோம் டிப்போவில் நூற்றுக் கணக்கில் முப்பது, நாற்பது அடி உயரமான ரேக்குகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. வாஷிங் மெஷின்கள், டி.வி.க்கள், பிரம்மாண்டமான அவன்கள் என்று ஐக்யாவிலும், வால்மார்ட், டார்கெட், ஜெயன்டிலும் குவிந்து கிடக்கின்றன.


ஷாப்பிங் மால்…
வால்மார்ட் கடைகளில் மற்றக் கடைகளை விட எல்லாப் பொருட்களுமே விலை குறைவாக உள்ளன. பொருட்களைத் தயாரிப்பவர்கள் விலையை நிர்ணயம் செய்வது என்பது வால்மார்ட்டைப் பொறுத்து தலைகீழாக உள்ளது. தயாரிப்பாளர்களிடம், வால்மார்ட்தான் இந்தப் பொருளை இன்ன விலைக்குக் கொடு என்று கேட்டு விலையை நிர்ணயிக்கிறது.

ஜெர்ஸிக்குச் சென்றிருந்தபோது அங்கே இருக்கிற சரவணபவனில் மதிய உணவு சாப்பிட்டோம். ஸ்பெஷல் மீல்ஸ் 13.50 டாலர்; மினி மீல்ஸ் 11.90 டாலர்; காபி 3 டாலர்; இரண்டு இட்லி 5 டாலர்; ஊத்தப்பம் 7 டாலர்.

ஒரு லிட்டர் அரிசி 1.44 டாலர்; ஒரு முருங்கைக் காய் 6.30 டாலர். அதைக் கேட்டு தலை சுற்றிக் கீழே விழாமலிருந்தது ஆச்சரியம்தான். ஒரு கட்டுக் கொத்தமல்லி 2.50 டாலர். இன்றைய ரூபாய் மதிப்பில் 1 டாலர் 61.50 ரூபாய். கணக்கிட்டுக் கொள்ளுங்கள். நாம் இந்தியாவில், எல்லாம் விலை ஏறிவிட்டது என்கிறோம். ஆனால், இந்தியாவை விட இங்கு விலைவாசி அதிகம்தான்.

ஜெர்ஸியில் இந்தியா ஸ்கொயர் என்ற பகுதியில் உள்ள கடைகள் இந்தியாவில் உள்ளதைப் போன்றே உள்ளன. இந்தியர்கள் இங்கு அதிகம் வாழ்வதாலோ என்னவோ தெருக்களில் குப்பையும் அதிகம் உள்ளது.

நம் ஊரில் தெருவுக்கு இரண்டு டீக்கடைகள், பலசரக்குக் கடை, காய்கறிக் கடை என்று எல்லாமே பக்கத்தில் இருக்கும். ஆனால், இங்கு அவுட்லெட்கள் என்ற பகுதியில்தான் கடைகள் இருக்கின்றன. சில மைல் பிரயாணம் செய்தால்தான் இந்த அவுட்லெட்களைப் பார்க்க முடியும். பெரு நகரங்களில் டௌன் டவுன் என்ற பகுதிக்குச் சென்றால்தான் கடைகளையே பார்க்க முடியும். ஆத்திர அவசரத்துக்கு காபித் தூளோ, சர்க்கரையோ வாங்க முடியாது. வெகு தூரம் காரை ஓட்டி வந்துதான் வாங்க வேண்டும். அதனால் எல்லாச் சாமான்களையுமே பத்து நாள், இருபது நாட்களுக்கு என்று வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துக் கொள்வது இங்கு சர்வசாதாரணம். வேறு வழியில்லை. வீடுகளிலுள்ள ப்ரிட்ஜ்கள் எல்லாமே ஜெயன்ட் ஸைஸில் இருக்கின்றன.

– சந்திரன்
(தொடரும்)

–நன்றி துக்ளக்

 
Advertisements

3 thoughts on “2-அமெரிக்காவில் சில நாட்கள்! – சந்திரன்

 1. cnsone December 5, 2013 at 12:59 AM Reply

  Talking of Water Supply None of the Houses have a Well – not even an overhead tank. Treated water comes with sufficient pressure to reach the bath rooms in all the floors! The same water is used for the lawns, washing clothes, bathing & drinking – No Aqua Quards!

  Chandran has failed to mention the responsibility of the dog owners when they take the pet for a stroll. The carry with them a plastic bag to collect the excrete when the dog dirties the pavement! That is the level of civic responsibility we see!

 2. D. Chandramouli December 5, 2013 at 4:47 AM Reply

  I visit the U.S. for short stays almost every year. On my trips from NY to places of interest, I too observed what all Mr Chandran has described. Amazing to see the amount of greenery along the bus routes on either side! Even while sitting in the last row of seats in a bus, we don’t feel any jerk, thanks to smoothness of the highways. Also, the service facility for electricity, LPG, parking, etc. are all wonderful.

  However, we, Indians, believe in interacting with neighbors or even strangers on the road – this is terribly something missing in the U.S. We get quickly bored to stay beyond a few days and we are back to killing time, browing on internet. Too much of orderliness creates a feeling of ‘plasticity’ – the same feeling that I get in Singapore too!

 3. rathnavelnatarajan December 5, 2013 at 10:14 AM Reply

  அருமை. நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s