1-அமெரிக்காவில் சில நாட்கள்! – சந்திரன்


நான் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தேன். முதல் முறையாக அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தேன். இந்தியாவைப் போல் நிலப்பரப்பில் மூன்று மடங்கு பெரிய தேசம் என்கிறார்கள். அமெரிக்கத் திரைப்படங்களிலும், நமது இந்திய பத்திரிகைகளில் சித்திரிக்கப்பட்ட அமெரிக்காவுக்கும், நேரில் பார்க்கிற அமெரிக்காவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

காலம்காலமாக ஆங்கிலேயரின் கலாசாரம், குறிப்பாக ‘அமெரிக்க கலாசாரம்’ மோசமானது என்றுதான் இந்தியர்களுக்குக் கூறப்பட்டு வந்துள்ளது.

பெண்கள், உள்ளாடையை விடச் சிறிது பெரிதான, குட்டையான ஷார்ட்ஸ்களைத்தான் அணிந்து செல்கிறார்கள். ஆனால், அது அநாகரிகமாகவோ, அசிங்கமாகவோ இல்லை. இந்தியாவில் பெண்கள் கால்களை வெளியே காட்டுவது ஆபாசம் என்று கருதப்படுகிற மாதிரி, அமெரிக்காவில் பெண்கள் இடுப்பை வெளியே காட்டுவது ஆபாசமாகக் கருதப்படுகிறது. கைகளும் கால்களும் வெளியே தெரியும்படியாகத்தான் இங்குள்ள பெண்கள் உடையணிகிறார்கள். ஆனால் பார்ப்பதற்கு ஆபாசமாகவோ, விகல்பமாகவோ படவில்லை.

நம் நாட்டில் கிராமங்களில் அபூர்வமாக யாராவது உடம்பில் பச்சை குத்திக் கொண்டிருப்பார்கள். எம்.ஜி.ஆர். தன் கட்சியினர் கட்சிக் கொடியைப் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்ன போது, தமிழ்நாட்டில் பச்சை குத்துகிறவர்களுக்கு பெரிய டிமாண்டே ஏற்பட்டது. இங்கே ஆண்களும் பெண்களும் கால், கைகளில் பச்சை குத்திக் கொள்வது சர்வ சாதாரணமாக உள்ளது. கருப்பினத்தவரும் பச்சை குத்திக் கொண்டு செல்வதைப் பார்க்க முடிந்தது.

நாம் தெருவில் செல்லும்போது எதிரே அவர்கள் வந்தால் சிரித்து, ‘குட்மார்னிங்’ என்றோ, ‘குட் ஈவினிங்’ என்றோ சொல்லத் தவறுவதில்லை. முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து அவர்கள் கனிவுடன் கூறும் இந்த வணக்கம், நான் தமிழ்நாட்டில் காணாதது. ஏன், இந்தியர்களுக்கே இந்தப் பழக்கம் கிடையாது.

என் மகன் பென்ஸில்வேனியா மாநிலத்தில் வசிக்கிறான். நம் ஊரில் காலனிகள், நகர்கள் இருக்கிற மாதிரி இங்கு குடியிருப்பு பகுதிகளை ‘கம்யூனிட்டி’ என்று அழைக்கிறார்கள். இந்த செஸ்டர் ஸ்பிரிங்ஸில் பல கம்யூனிட்டிகள் உள்ளன. ஒரு கம்யூனிட்டிக்கும் அடுத்த கம்யூனிட்டிக்கும் இடையே பரந்த, காடுகள் அடர்ந்த பகுதி உள்ளது. எங்கு பார்த்தாலும் புல்வெளி, சிறுசிறு தோப்புகளுடன் கூடிய மரங்களடர்ந்த பகுதி இருக்கிறது.

பெரும்பாலும் ஒவ்வொரு நடுத்தர வர்க்கக் கணவனும் மனைவியும் தனித் தனியே இரண்டு கார்களை வைத்திருக்கிறார்கள். சில வீடுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட கார்கள் இருப்பது சகஜமாக உள்ளது. நான் தங்கியிருந்த கம்யூனிட்டியில் 400 வீடுகள் உள்ளன. குறுக்கு நெடுக்காகத் தாறுமாறாக இல்லாமல், எல்லாம் நூல் பிடித்தது போல் ஒரு அசாதாரணமான ஒழுங்கில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டின் எண்ணும், தெருவிலேயே தபால் பெட்டிக்குக் கீழே பெரிய எழுத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. கூண்டு போட்ட, மினியேச்சர் மாட்டு வண்டியைப் போன்ற வடிவிலுள்ள தபால் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டின் முன்பும் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் துளிக் கூட வித்தியாசமில்லாத ஒரே உயரம், நீள, அகலத்தைக் கொண்ட இந்தத் தபால் பெட்டிகள் பார்ப்பதற்கே அழகாக உள்ளன.

தினசரி பதினோரு மணி சுமாருக்கு நான்கு சக்கரங்களைக் கொண்ட சதுரமான கூண்டு வடிவில் இருக்கும் தபால் வண்டியை (வெள்ளை வண்ண வண்டி) ஒருவர் ஓட்டி வருகிறார். அவர் தனது டிரைவர் இருக்கையில் இருந்தவாறே நம் வீட்டுத் தபால் பெட்டியருகே அதை ஒட்டி வந்து, பெட்டியைத் திறந்து தபால்களைப் போட்டு விட்டுச் செல்கிறார். விளம்பர நோட்டீஸ்களைக் கூட, அஞ்சல் அலுவலகங்கள் டெலிவரி செய்கின்றன. லாபத்தில் நடத்த முடியவில்லை என்பதால் அரசு அஞ்சல் சேவையை நிறுத்தி விடலாமா என்று யோசிப்பதாகக் கூறுகிறார்கள்.

பெரும்பாலான வீடுகள் மரத்தால் கட்டப்பட்டவைதான். பார்ப்பதற்கு மர வீடு மாதிரியே தெரியாது. சொன்னால்தான் தெரியும். ஒவ்வொரு வீட்டிலும் மூன்று தளங்கள் உள்ளன. பூமிக்குக் கீழே பேஸ்மண்ட், அதன் மீது சமையல் கூடம், ஹால், முன்பகுதி அறைகள், பின்தளம், இவை அமைந்த நடுப்பகுதி, மாடியில் பெரிய பெரிய படுக்கை அறைகள். நான் விவரிப்பது நம் தமிழ்நாட்டில் இரண்டு அல்லது மூன்று பெட்ரூம் வசதியுள்ள நடுத்தர வர்க்கத்தின் வீட்டைப் போன்றது. வீடுகளிலுள்ள ஸ்விட்ச்கள் இங்கு தலைகீழாக உள்ளன. ஸ்விட்சை மேலே தள்ளினால் விளக்கு எரிகிறது. கீழே தள்ளினால் அணைகிறது.


மரத்தாலான வீடு…
எல்லா வீடுகளிலும் குளிர் சாதன வசதி மற்றும் ஹீட்டிங் வசதி இருக்கின்றன. விண்டோ ஏ.சி., ஸ்பிளிட் ஏ.சி. என்ற சமாச்சாரமெல்லாம் இங்கு அபூர்வமாக உள்ளன. வீடாக இருந்தாலும் சரி, அலுவலகங்கள், அல்லது பிரம்மாண்டமான மால்களாக இருந்தாலும் சரி, எல்லாமே சென்ட்ரலைஸ்டு ஏ.சி. சிஸ்டம்தான். இதே இயந்திரங்கள் குளிர் காலத்தில் வெப்பக் காற்றையும் அனுப்பி, இருப்பிடத்தை வெது வெதுப்பாக்குகின்றன. நியூயார்க் போன்ற பெரிய நகரங்களில் செங்கற்களால் கட்டப்பட்ட அபார்ட்மெண்ட் வீடுகள் உள்ளன. ஆனால், இந்த வீடுகளின் விலையைக் கேட்டால் தலை கிறுகிறுக்கும். ஒரு பெட்ரூம் உள்ள அபார்ட்மெண்ட் வீடே மில்லியன் கணக்கில் இருக்கும் என்கிறார்கள்.

ஒவ்வொரு வீட்டையும் சுற்றி புல்வெளி உள்ளது. இந்தப் புல்வெளியை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும். பராமரிப்பு சரியில்லை என்றால் கம்யூனிட்டி அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பி விடுகிறார்கள். வீட்டைச் சுற்றி பூஞ்செடிகளை வைத்துக் கொள்ளலாம். எல்லா வீடுகளும் தெருவிலிருந்து உள்ளே தள்ளி பத்தடி உயரத்துக்கு மேல்தான் கட்டப்பட்டுள்ளன. வாஷிங்டன், பிலடெல்பியா, பால்டிமோர் போன்ற பழமையான நகரங்களில்தான் செங்கற்களாலும், கற்களாலும் கட்டப்பட்ட உயரமான கட்டிடங்களைப் பார்க்க முடிகிறது. செங்கல்லால் கட்டுவதை விட மரத்தினால் கட்டுவது பொருளாதார ரீதியாக மலிவானது என்கிறார்கள்.

எனக்குத் தெரிந்தவரை சாலைகளில் குண்டு, குழி என்பதெல்லாம் தேடினாலும் அகப்படவில்லை. ஹைவேக்கள் முதல் கம்யூனிட்டி சாலைகள், தெருக்கள் வரை, மளமளவென்று இழைப்புளி போட்டு இழைக்கப்பட்டதுபோல் அவ்வளவு அருமையாக உள்ளன. கார்களில் செல்லும்போது ஒரு சிறு குலுக்கல், உலுக்கல் கூட இல்லை. தெருவில் இலை போடாமலே சாப்பிடலாம்.

சிறு காகிதத்தையோ, துரும்பையோ கூடப் பார்க்க முடியவில்லை. சிற்றூர்கள் என்றில்லை, பெரிய நகரங்களிலும் வீதிகள் இப்படித்தான் உள்ளன. தெருவில் சிறு துண்டுக் காகிதத்தைக் கூட யாரும் எறிவதில்லை. இந்தியாவில் எந்தக் கிராமத்துக்கு, நகரத்துக்குச் சென்றாலும் குப்பைத் தொட்டிகளைச் சுற்றியே குப்பைகள் குவிந்து கிடப்பதையும், மாதக் கணக்காக வாரப்படாத குப்பை மேடுகளையும்தான் காண முடியும். அப்படியானால், அமெரிக்காவில் குப்பைகளை என்ன செய்கிறார்கள்?

எல்லா வீடுகளிலும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இரண்டு பெரிய குப்பைத் தொட்டிகள் உள்ளன. காய்கறி, உணவுக் கழிவுகள் போன்ற மக்கும் குப்பைகள் போட ஒரு தொட்டியையும், மக்காத குப்பைகளைப் போட ஒரு தொட்டியையும் பயன்படுத்துகிறார்கள். ஒரு வாரக் குப்பைகளைத் தாங்கும் அளவுக்குப் பெரியது இவை. இவற்றுக்கு ஒழுங்கான மூடியும் உண்டு. வாரத்துக்கு ஒருநாள் குறிப்பிட்ட தினத்தில் இந்தக் குப்பைத் தொட்டிகளைத் தங்கள் வீடுகளின் முன்னே வைத்து விடுகிறார்கள். முனிஸிபல் லாரிகள் வந்து அவற்றைத் தெருவில் ஒரு துளிக்கூடச் சிந்தாமல் அள்ளிச் சென்று விடுகின்றன. ஆனால் நான் பார்த்த நகரங்களில் வாஷிங்டனிலும், ஜெர்ஸியிலும் தெருக்களில் காகிதங்கள், சிகரெட் துண்டுகள் கிடப்பதைப் பார்க்க முடிந்தது.

நம் நாட்டில் குப்பை லாரிகள் தூரத்தில் வந்தாலே மூக்கை மூடிக் கொள்ள வேண்டியதிருக்கும். அவை நாற்றமும், அழுக்கும் படிந்த லாரிகள். ஆனால், நான் மிகையாகச் சொல்லவில்லை – அமெரிக்காவில் இந்த லாரிகள் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு பளபளவென்று இருக்கின்றன. லாரியினருகே நின்றால் கூட எந்த துர்நாற்றமும் வீசுவதில்லை. சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இந்தியாவில் எந்த ஊரிலும் குறிப்பாகச் சென்னை போன்ற பெருநகரங்களில் சாலையைக் கடப்பதென்றால், நடந்து செல்கிறவர்கள் சகல தெய்வங்களையும் வேண்டிக் கொள்ள வேண்டும். போலீஸ்காரர் கையைக் காட்டி நிறுத்தினால் கூட வாகனங்களை நிறுத்த மாட்டார்கள். இங்கே நேர்மாறாக இருக்கிறது.

பெடஸ்டிரியன் கிராஸிங் இல்லாத இடத்தில், நாம் சாலையைக் கடப்பதற்காகச் சாலையின் ஓரத்துக்கு வந்து நின்றாலே, வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். ஒரே ஒரு ஆள் சாலையைக் கடந்து சென்றாலும் அவருக்காக, அவர் பிளாட்பாரத்தில் ஏறும் வரை வாகனங்கள் காத்து நிற்கிற ஆச்சரியத்தை இங்கேதான் பார்த்தேன்.

ஒரு விதத்தில் பார்த்தால், அமெரிக்கர்கள் பழமைவாதிகள். நம் நாட்டில் மெட்ரிக் அளவு முறை எப்போதோ வந்து விட்டது. ஆனால், அமெரிக்காவில் பழைய பிரிட்டிஷ் முறைதான் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. மைல்களில்தான் தூரத்தைக் கணக்கிடுகிறார்கள். தண்ணீர், எண்ணெய், பெட்ரோல் இவை கேலன்களில் குறிப்பிடப்படுகின்றன. நிறுவை அளவு பவுண்டு, அவுன்ஸ்களில் உள்ளது.

வாகனங்கள் இந்தியாவைப் போலில்லாமல் சாலையில் வலது ஓரத்தில் செல்கின்றன. அதேபோல் வாகனத்தின் இடது புறம்தான் டிரைவர்களின் இருக்கைகள் இருக்கின்றன. சாலைகள், சிறு தெருக்களில் கூட ஸ்பீட் லிமிட், எழுதப்பட்ட போர்டுகள் இருக்கின்றன. 15 மைல் ஸ்பீட் லிமிட், 25 மைல், 55 மைல், 65 மைல் என்று ஸ்பீட் லிமிட்கள் உள்ளன. வேக அளவு குறிக்கப்பட்ட உயரமான போர்டுகள் சாலைகளில் உள்ளன. ஆங்காங்கே கேமராக்கள் வாகனங்களைச் சதா கண்காணிக்கின்றன.

டிராஃபிக் போலீஸார் தங்களுடைய கார்களில் இருந்தவாறே போக்குவரத்தைக் கண்காணிக்கிறார்கள். மோட்டார் சைக்கிள்களைப் பார்ப்பது அபூர்வமாக உள்ளது. எங்கும் கார்கள், கார்கள்தான். ஹைவேக்களில் வழியிலுள்ள ஊர்களுக்குப் பிரியும் புறவழிச் சாலைகளை, ஒரு மைல், அரை மைலுக்கு முன்பே குறிப்பிடும் போர்டுகளை எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது. இதனால் அரை மைலுக்கு முன்பே வேகத்தைக் குறைத்துக் கொண்டு, லேனை மாற்றிக் கொள்ள வசதியாக உள்ளது.

– சந்திரன்
(தொடரும்)

–நன்றி துக்ளக்

Advertisements

9 thoughts on “1-அமெரிக்காவில் சில நாட்கள்! – சந்திரன்

 1. cnsone December 4, 2013 at 3:08 AM Reply

  There are few States where Basements are not allowed because they are Earth Quake Prone. Those Small Vans used by the Mailmen look similar to the Jeeps and are driven on Right Side like the cars in India – this helps them to work with out getting down! Another interesting thing about the US postal service is – you do not have to go in search of a Drop Box to Post your letters! The same person who delivers picks up your outgoing mail from your Door. USA simply can’t afford to STOP postal service. And it is not the profit that is an issue! There should not be any loss. To raise the Tariff people will have to give their consent! There are serious considerations to reduce the service to 5 days a week from present 6.

  All the discipline we see here are because of the rigid law-enforcement policy. If you hit a pedestrian, you will have your life time to regret. Where there is construction work on road sides the Penalty Doubles!

  The signs in the roads are all in miles and there are so many of them. The cars have there speedometers in miles. The Gas filling machines work on Gallons. Why go Metric and go Bankrupt? Yes, it will cost the country in Billions – not rupees but dollars.

  Did you notice that No One here uses the horn? Some Cities are exceptions. In Chennai even a cyclist will have horns!

 2. Xavier Raja December 4, 2013 at 5:11 AM Reply

  Really Amazing to hear… its an everyone dream to visit USA atleast once… (for many people its a dream only..)

 3. RAVIKUMAR VARADARAJAN December 4, 2013 at 5:13 AM Reply

  படிக்கவே சந்தோஷமாக இருக்கிறது. நன்றி.

  *Ravikumar Varadarajan*
  *Chennai.*

 4. rathnavelnatarajan December 4, 2013 at 4:01 PM Reply

  1-அமெரிக்காவில் சில நாட்கள்! – சந்திரன் = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Balhanuman’s Blog

 5. கிரி December 5, 2013 at 4:54 AM Reply

  அமெரிக்கா ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது என்னோட ஆசை ஆனால் இது இப்போதைக்கு நிறைவேறுகிற மாதிரி தெரியலை 🙂

  கனவு தேசம் செல்வது உண்மையிலேயே கனவாகி விடும் போல உள்ளது. கட்டுரை படிக்க நன்றாக உள்ளது.

  இதில் உள்ள ஒரு விஷயத்தை கூறியே ஆக வேண்டும். பயணக்கட்டுரைகள் எழுதுபவர்கள் சென்ற நாட்டின் பெருமைகளை / சிறப்புகளை விட இந்தியாவை குறை கூறுவதிலேயே சந்தோசம் அடைகிறார்கள். இது ஏன்?

  அமெரிக்கா வளர்ச்சி அடைந்த நாடு அதனுடன் இந்திய தெருக்களை ஒப்பிடுவது மலைக்கு மடுவிற்கும் உள்ள ஒப்பீடல். இதை ஏன் அனைவரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

  ஒரு நாட்டை புகழும் போது மற்ற நாட்டை கேவலப்படுத்த வேண்டும் என்பது எதுவும் கட்டாயமா! ஒரு நாட்டை பற்றி கூற நிறை குறைகள் இருக்கும் போது அதோடு இன்னொரு நாட்டை குற்றம் கூறிக் கொண்டே வர வேண்டுமா! இரண்டாவது பகுதியையும் படித்தே பிறகே இதை கூறுகிறேன்.

  என்னமோ போங்க!

  இது ஒரு பக்கம் இருந்தாலும் கட்டுரை படிக்க சுவாரசியமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

  • BaalHanuman December 6, 2013 at 12:05 AM Reply

   வாங்க கிரி…

   அமெரிக்காவுக்கு நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம்… வரவேற்க காத்திருக்கிறேன்…

   வரும்போது மறக்காமல் உங்கள் இரண்டு சிங்கக் குட்டிகளையும் அழைத்து வாருங்கள் 🙂

   • கிரி December 19, 2013 at 4:59 AM

    தங்கள் அழைப்பிற்கு நன்றி ஸ்ரீநிவாசன் 🙂

 6. cnsone December 5, 2013 at 3:08 PM Reply

  It is very difficult to disagree with Mr. Giri’s Views. America has been Independent from 1776. Democracy in India is very young compared to them. We have religion getting mixed with our Politics and in USA that is never done – a Constitutional protection to its Citizens!

  Look at the enormous strides we have made in the past 20+ years, since the Economic Liberalization. We have been a Socialist Economy after Independence. Government was having Bread Making Company [Modern Bread] Now of course we are selling a percentage of our Public Sector firms to raise funds for balancing budgets.

  Many of the so called well to do in India have not seen half of the beautiful places within India in other states. Yet they have a craving to go to Singapore.

  • BaalHanuman December 6, 2013 at 12:06 AM Reply

   உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s