8-சுஜாதாவின் நாடகங்கள் – அ.ராமசாமி


இதன் முந்தைய பகுதி…

சுஜாதாவின் முன்னுரை…

சினிமா வராத காலத்தில் நாடகங்கள்தான் நூற்றாண்டுக்கணக்காக மக்களை மகிழ வைக்கவும், புத்தி சொல்லவும் முயற்சித்தன.  நாடகப் பாரம்பரியத்தை வெள்ளைக்காரர்கள், மராட்டியர்கள் போன்ற மற்ற மொழிக்காரர்கள் வந்ததாலும், பாடல்கள் ஆக்கிரமிப்பினாலும் பழந்தமிழ் நாடகத்தை இழந்து விட்டோம். இன்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட நாடக வாரத்தைகளை மிகுந்த ஆராய்ச்சி செய்தாலும் அதேபோல் நடித்துக் காட்ட முடியாது. நாடகம் சினிமா அல்ல. க்ளோஸ்அப் போன்ற வசதிகள் இல்லாத காரணத்தால் அரங்கத்தின் கட்டுப்பாடுகளாலும், பேசும் வார்த்தையாலும், நடிப்பாலும்தான் கவனத்தை ஈர்க்க முடியும். வார்த்தைகளின் வசீகரத்துடன் இயல்பான நடிப்பும், உடல்மொழியும் சேரும்போது நாடகம் வெற்றியடைகிறது.

ஓவர் டு அ.ராமசாமி… 
எடுத்துரைப்பு நாடகங்கள்
சுஜாதா எழுதியுள்ள 15 குறுநாடகங்களில் எட்டுக் குறுநாடகங்கள் ஓரங்க நாடகங்களாக அமைந்திருக்க, கிருஷ்ணா! கிருஷ்ணா!, இடையன் மகள் ஆகிய இரண்டும் எடுத்துரைப்புக் கதை சொல்லல் வடிவத்தை நாடகத்தின் உத்தியாகக் கொண்டுள்ளன.இந்தியச் செவ்வியல் வடிவிலும், நாட்டுப்புற அரங்கியல் தொடர்ச்சியிலும் நிகழ்வுகளை எடுத்துரைத்து நிகழ்த்து வதற்குக் விதூஷகன் அல்லது கட்டியக்காரன் என்றொரு பாத்திரத்தை உருவாக்கியிருந்தனர் என்பதை நாம் அறிவோம். கதா காலட்சேபத்தில் பகவான் கிருஷ்ணனின் கதையைச் சொல்லும் பாகவதரும், சிஷ்யனும் ஒரு மாறுதலுக்காக கிருஷ்ணாராவ் என்னும் கிருஷ்ணர் பொம்மை செய்யும் கைவினைக் கலைஞனின் கதையை எடுத்துச் சொல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது கிருஷ்ணா! கிருஷ்ணா!, நாடகம். காலட்சேப மேடை, கிருஷ்ணாராவ் வேலை செய்யும் இடம், மேடை,அவரது வீடு, யூனியன் அலுவலகம்,மேடை என மாறி மாறிச் செல்லும் காட்சிகளைக் கொண்ட அந்நாடகம் நான்கு பகுதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் கல்வி கற்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தும் விதமாக அறிவொளிக் குழுக்கள் முச்சந்திகளிலும் தெருமுனைகளிலும் நடத்துவதற்கேற்ற வகையில் எழுதப்பட்ட இடையன் மகள் நாடகம், அரண்மனை, இடையன் மகளின் வீடு, திருடர்கள் அரசகுமாரனைப் பிடித்து வைத்திருக்கும் இடம் ஆகியனவற்றை எடுத்துரைப்பின் வழியாகவே சொல்வதாக எழுதப்பட்டுள்ளது. எடுத்துரைப்பு வடிவம் என்பது காலம், இடம், பாத்திர நுழைவு ஆகியனவற்றைக் கதை கூற்றுப் பாத்திரத்தின் வழி நிகழ்த்திக் கொள்ளும் எளிய வடிவம். இந்த எளிய வடிவம் நாடகக் காட்சிகளை நேர்கோட்டில் நகர்த்திச் சென்று பார்வையாளனுக்கு நாடகக் காட்சிகள் மூலம் சொல்ல விரும்பிய செய்தியைச் சுருக்கமாகச் சொல்லி நிறைவு செய்யும்.
கிருஷ்ணாராவ் என்னும் கலை நுட்பம் சார்ந்த மனிதன், இயந்திரமயத்தின் வரவால் இயந்திரத்தின் பகுதியாக மாறிப் போனான் என்பதையும், இடையன் மகள் போட்ட நிபந்தனை காரணமாகவே ராஜகுமாரன் பாய் பின்னக் கற்றுக் கொண்டான், அந்த ஞானமே அவனைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றியது என்பதால், ஒவ்வொருவரும் எதாவது ஒரு தொழிலையும் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வார்த்தையாகவே சொல்லி முடிக்கின்றன அவ்விரு நாடகங்களும்.

தொடரும்…

சுஜாதாவின்  ‘கிருஷ்ணா கிருஷ்ணா‘ நாடகத்திலிருந்து என்னைக் கவர்ந்த ஒரு சிறு பகுதி….

பாகவதர் : 
கிருஷ்ணா ராவ்னு ஒருத்தர். வயசு ஐம்பது இருக்கும்.  அம்பத்தூர்ல பிரகாஷ் டாய்ஸ்னு ஒரு தொழிற்சாலைல முப்பது வருஷமா சர்வீஸ்.  அவருக்குத் தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணு தான்….

சிஷ்யன்: குழந்தை பெத்துக்கறதா ?….  சுவாமி   ஃபாமிலி பிளானிங் ஸ்டோரின்னா,  இப்பவே ஜால்ராவை  வெச்சுர்றேன்.

பாகவதர் : இல்லைடாப்பா.  குறுக்கே பேசாமல் கொஞ்சம் பொறுமையாக் கேளு.  கிருஷ்ணா ராவுக்குத் தெரிஞ்சது,  அழகா கிருஷ்ணர் பொம்மை பண்றது.

சிஷ்யன்: கிருஷ்ணரை விட மாட்டேள்.

பாகவதர் : மரத்தில பொம்மை செய்வார்.  ஒரே ஒரு சின்னப் பேனாக் கத்தியை வெச்சிண்டு கிருஷ்ணனுக்கு விரல், நகம், தலை மயிர் , புன்சிரிப்பு எல்லாத்தையும் உண்டாக்குவார்.  இதுக்குன்னு ஸ்பெஷலா மரம் கொண்டு வந்து அதில் தேச்சுத் தேச்சு மெல்ல மெல்ல ஒரு கிருஷ்ணரை உண்டு பண்ணுவார்.

ஃபோர்மன்  முத்து வருகிறார்….

முத்து: என்ன தாத்தா,  ஆயிருச்சா ?

கிருஷ்ணா ராவ் (வேலையில் கவனமாக) : இல்லை முத்து.  இன்னும் ரெண்டு நாட்கள் ஆகும்.

முத்து: சரியாப் போச்சு!  ஹாண்டிஃகிராப்ட்ல  வண்டி அனுப்பிச்சிட்டாங்க.  இந்த ரேட்டில போனா,  நிஜ கிருஷ்ணரையே கூட்டியாந்துரலாம் போல இருக்கே.  (சற்றுத் தள்ளி பின்னாலிருந்து பார்த்து)  சும்மா சொல்லக் கூடாது.  சோக்காத்தான் செய்யறே தாத்தா.  ஒரு நாளைக்குச் சிரிக்குது.  ஒரு நாளைக்குப் பொம்மை கன்னத்தை உப்புன்னு வெச்சிக்கிட்டு இருக்கு.  கொஞ்சம், கொஞ்சம் வித்தியாசம் இருக்கு.  இது வரைக்கும் எத்தனை பொம்மை செஞ்சுருப்பே ?

கிருஷ்ணா ராவ் : எண்ணிக்கை இல்லை முத்து.  ஆனா ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதம்.

முத்து: சரி சரி,  சீக்கிரம் முடி.

பாகவதர் : அவர் தம் இஷ்டத்துக்கு, தம் ஸ்பீடுக்குத்தான் பண்ணுவார். ஆனா கிளி கொஞ்சும்.  விக்கிரஹத்தை எடுத்து அதனோட அழகில அவரே மோகிச்சுப் பாடவும் பாடுவார்.  (பாடுகிறார்.)

கிருஷ்ணா முகுந்தா முராரே — ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பரதாரி — கோபால
கனகாம்பரதாரி.

(பாகவதர் பாடிக் கொண்டிருக்கும் போது  கிருஷ்ணா ராவ் முன்னணியில் பொம்மையை வைத்துக் கொண்டு ஆடிப் பாடிக் கொஞ்சுகிறார்.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s