5-சுஜாதாவின் நாடகங்கள் – அ.ராமசாமி


இதன் முந்தைய பகுதி…

Sujatha_15

சுஜாதாவின் முன்னுரை…

நாடகம் ஒரு தனிப்பட்ட கலைவடிவம். அதில் இரண்டு வகை உண்டு. படிக்கப்படும் நாடகம். நடிக்கப்படும் நாடகம். ஷேக்ஸ்பியரின் எல்லா நாடகங்களையும் நடிப்பதற்காகத்தான் எழுதினர். பிற்பாடுதான் அது படிக்கப்படும் நாடகங்களாக இலக்கிய வடிவு பெற்றன. எல்லா நாடகங்களும் நடிக்கப்பட வேண்டும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். அதன் வசனங்கள் பேசப்பட்டு, அதன் பாத்திரங்கள் காட்டப்படும்போதுதான் நாடகம் நிறைவு பெறுகிறது. அயாநெஸ்கோ மாதிரியோ, ப்ரெஹ்ட் மாதிரியோ எழுத எனக்கு வராது, முடியாது. அப்படி எழுதினால் பாசாங்காகி விடும் என்று முதலிலேயே தெளிவாக அறிந்து கொண்டேன். ஆனால், தமிழ் நாடகங்களில் கொடி கட்டிப் பறந்த ‘நகைச்சுவை மட்டும்‘ குறிக்கோளாகக் கொண்ட, அற்பமான சமூகச் செய்திகள் கொண்ட நாடகங்கள் எழுத எனக்கு மனம் வரவில்லை. ஜனங்களைச் சிரிக்க வைப்பது எளிது. அது ஒரு கொட்டாவி போல், யாராவது ஒருத்தர் சிரித்தால் போதும், பரவிக்கொள்ளும்.

ஓவர் டு அ.ராமசாமி… 

ஓரங்க நாடகங்கள்
சுஜாதாவின் 22 நாடகங்களையும் ஒரு சேர வாசித்த நிலையில் நாடகப் பிரதியில் இருக்க வேண்டிய இயந்திரவியல் கூறுகள் அனைத்தையும் அதன் இலக்கணத்தோடு அறிந்தவராக சுஜாதாவைச் சொல்ல முடிகிறது. அவர் எழுதியுள்ள எட்டு ஓரங்க நாடகங்களும் ‘வெளியில் மாற்றமின்மை’ என்னும் ஓரங்க நாடகத்தின் அடிப்படை இலக்கணத்தைப் பின்பற்றியனவாக உள்ளன. முதல் நாடகம் (ஒரு கொலை) , பிரயாணம்,வந்தவன்,மாறுதல்,கதை-கேளு-பெண்ணே,கதை-கேளு, சரளா, பெட்டி, மறுமணம் காட்டுகின்றன.
முதல் நாடகம் : நாடகங்கள்
சுஜாதாவின் நாடகங்கள் தமிழின் முக்கியமான இலக்கிய சாதனைகள் என்று நான் நினைக்கிறேன். நாடகம் என்ற கலைவடிவின் மூன்று முக்கியமான சாத்தியக்கூறுகளை மிகச்சிறப்பாக நிரப்பியவை அவை. ஒன்று, நாடகம் நம் கண்முன்னால் ஒரு வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டுகிறது. வேறு எந்த கலைவடிவத்திலும் நாம் வாழ்க்கையை அப்படியே ‘ரத்தமும் சதையுமாக’ கண்முன் காண்பதில்லை.இரண்டு, நாடகம் என்பது அடிப்படையில் நடிகனின் கலை. நம் முன் ஒரு மனிதன் நிற்கிறான், அவன் வழியாக ஒரு கதாபாத்திரம் நிகழ்கிறது. இதுவே நாடகத்தின் அடிப்படை அற்புதம். நவீன நாடகங்கள் தவறவிடும் அம்சம் இதுவே. மூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை. இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்கை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும், பாவனையும் இணையும்போது உருவாகும் உரையாடலின் நுண்ணிய அழகுகள் நாடகத்தில் வெளிப்படும் அளவு எந்தக்கலையிலும் வெளிப்பட முடியாது.இந்த மூன்று அம்சங்களிலும் சுஜாதாவின் நாடகங்கள் மிக வெற்றிகரமானவை.
-ஜெயமோகன்
ஓவர் டு அ.ராமசாமி… 
முதல் நாடகமான ஒரு கொலையில் காந்தாமணியின் வீட்டிற்குள் நுழைந்த அவரது அலுவலகத்தைச் சேர்ந்த சீதாராமின் அசடு வழிதலில் தொடங்கும் நாடக விறுவிறுப்பு அவளது அண்ணணின் கொலையில் உச்சத்தை அடைகிறது. அக்கொலையை விசாரிக்கும் விசாரணையின் வழியாக உச்சநிலையின் ரகசியம் மேலும் மேலும் உயர்ந்து கடைசியில் ‘நடந்தது கொலை அல்ல; நாடகம்’ என்பதாக விடுவிப்பு நடக்கும் போது மர்ம நாடகத்தின் காட்சியைப் பார்த்த உணர்வு தணிக்கப்பட்டு ஒரு பாத்திரத்தின் – எதற்கும் லாயக்கற்றவன் எனச் சபித்த தந்தையிடம் தனது புத்திசாலித்தனத்தைக் காட்டிய மகனின் (ஸ்ரீகாந்த்) -சாதுரியத்தைச் சொன்ன கதையாக மாறிப் போகிறது. ஓரங்க நாடகத்தின் தொடக்கத்தில் ஒரு ரகசிய முடிச்சைப் போட்டுவிட்டு, அம்முடிச்சைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திச் சென்று அதன் இறுதியில் அவிழ்த்துக் காட்டுவது சுவாரசியத்தைக் கூட்டும் எனச் சுஜாதா கருதியுள்ளார். இந்தக் கருத்தோட்டம் அவரது ஓரங்க நாடகங்கள் அனைத்திலும் வெளிப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தில் வரும் சக பயணிகளிடம் திருடித் தனது காதலியின் தகப்பனுக்குத் தர வேண்டிய பணத்தை ஏற்பாடு செய்து விடலாம் என ரயில் பெட்டியில் ஏறிய பாலா என்ற திருடன், அந்தப் பெட்டியில் ஏறிய அனைத்துப் பயணிகளும் பாராட்டுபவனாக இறங்கிச் செல்பவனாகப் பிரயாணம் நாடகம் கதை சொல்கிறது. உணவு கொடுத்து உபசரித்தவரிடமே திருடிச் செல்ல வந்தவனை வந்தவன் நாடகம் காட்டுகிறது.

வந்தவன் (நாடகம், 1983)

இளைஞன் : வாட்ச்சு ?

மணி : இந்தாங்கோ ! (கழட்டிக் கொடுக்கிறார்)

இளைஞன் : (அவற்றைப் பாக்கெட்டில் திணித்துக்கொண்டு) நான் போறப்போ சத்தம் போடுவியா ? (கத்தியைக் காற்றில் கீறுகிறான். அவன் கை நடுங்குகிறது)

மணி : போடலை ! போடலை !

இளைஞன் : கம்முனு இருக்கியா !

மணி : இருக்கேன்…(வாயைப் பயத்துடன் பொத்திக் கொள்கிறார். அநேகமாக அழுகை)

இளைஞன் : போறதுக்கு முன்னாலே ஒண்ணே ஒண்ணு சொல்றேன். என்னை
கிராதகப் பயல்னு நெனைச்சுப்பே !  உள்ள வந்தவனை விசாரிச்சு திங்கக்கொடுத்தவன் கிட்ட திருடிட்டுப் போறேன்னு நினைச்சுப்பே. பரவாயில்லை, அய்யரே ! உனக்கு ஒரு நிழல் இருக்கு. அடுத்த வேளை சோத்துக்கு ஒரு உத்தரவாதம் இருக்கு. ஒரு
சம்பாத்தியம் இருக்கு. எனக்கு அது ஒண்ணும் படிச்சேன். என்ன பிரயோஜனம் ? இப்ப நான் தின்னது மூணு நாளைக்கு அப்புறம் திங்கற முதல் ஆகாரம். ஏமாத்தி சம்பாதிக்கத்
திறமை இல்லை. எங்க பார்த்தாலும் போட்டி…. நாய்ப்பிழைப்பு….நம்பினா நம்பு….
நம்பாட்டாப் போ…நான் செய்யற முதல் திருட்டு இது….உன்னை மாதிரி அப்பாவி
கிட்டத்தான் என்னால திருட முடியும். நாணயமா சம்பாதிக்க முயற்சி பண்ணி எனக்கு அலுத்துப் போச்சு ! உன் கதையைச் சொன்னே ! என் கதையில ஏழ்மையையும்
பசியையும் தவிர வேறு ஒண்ணும் கிடையாது. ஸாரி !

(இளைஞன் விருட்டென்று கிளம்பிச் செல்ல, அவன் சென்ற திசையைப் பார்த்துக்
கொண்டிருக்கிறார் மணிஅய்யர் திடீர் என்று ஞாபகம் வந்தவராக வெளியே செல்கிறார்…)

மணி அய்யரின் குரல் : சொல்ல மறந்துட்டேன்.. அந்த வாட்சைக் கொஞ்சம் அப்பப்ப…
ஆட்டிக்குங்க…அப்பத்தான் ஓடும் ! (சொல்லி விட்டு வந்து கல்லாவில் உட்காருகிறார்)

லட்சுமி : (ஒரு தம்ளரைக் கலக்கிக் கொண்டே நுழைந்து) போயிட்டாரா ? அடடா !
பயத்தங் கஞ்சி கொஞ்சம் இருந்தது. சுடப் பண்ணி கொண்டு வந்தேன்.

மாறுதலை ஏற்க மறுக்கும் பெரியவர் சுந்தரமூர்த்தியையே மாறுதலுக்குத் தகவமைக்கும் நாடகத்தின் பாத்திரமாக மாற்றிய விசுவநாதனை மாறுதல் நாடகத்தில் பார்க்கிறோம். நடிகையிடம் கதை சொல்ல வந்து கோபித்துக் கொண்டு செல்லும் கதாசிரியன் இளமாறனின் கோபத்துக்காக அவனைக் கதாசிரியனாக ஏற்றுக் கொண்டதாகக் கதை கேளு பெண்ணே கதை கேளு நாடகம் சொல்கிறது. தன் கணவனின் சந்தேகப் புத்தியைத் தனது அக்கா சாவித்திரியிடம் சொல்லி ஆறுதல் தேட வந்த சரளா, சாவித்திரியின் கணவன் தன் மீது கொண்ட காம இச்சையைச் சொல்லி விட்டுச் சென்றதாக முடிகிறது சரளா நாடகம்.

தொடரும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s