4-சுஜாதாவின் நாடகங்கள் – அ.ராமசாமி


இதன் முந்தைய பகுதி…

Sujatha_8

சுஜாதாவின் முன்னுரை…

எழுத்தாளன் ஆன பின் முதலில் எழுதிய நாடகத்தின் பெயரே ‘முதல் நாடகம்.’ பெங்களூர் பி.இ.எல்.நிறுவனத்தில் பணி புரிந்தபோது அதன் வருடாந்திர பலமொழி நாடக விழாவுக்கு தமிழ்ச் சங்கத்திற்காக எழுதிக் கொடுத்த நாடகம். அதன் பின் ‘பிரயாணம்‘ எழுதினேன். இரண்டும் ஓரங்க நாடகங்கள். அப்போது சென்னையில் பூர்ணம் விசுவநாதன் அவர்களின் ஊர்வம்பு, கால்கட்டு போன்ற மெரினாவின் நாடகங்கள் சிறப்பாக மேடையேற்றப்பட்டு ஒவ்வொரு காட்சியும் அரங்கம் நிறைந்த, மேடை நாடகத்தின் பொற்காலம் அது. தொலைக் காட்சி வளரவில்லை. சினிமா அதன் இடத்தில் மட்டுமே இருந்தது. ஒருமுறை பூர்ணம் நாடகத்தின் முடிவில் அவரைப் பின்மேடையில் சந்தித்து “நான் இரண்டு ஓரங்க நாடகங்கள் எழுதியுள்ளேன். படித்துப் பார்க்கிறீர்களா” என்று கேட்டேன். அவர் என் கதைகளை ‘குமுதம்’, ‘விகடன்’ இதழ்களில் படித்திருக்கிறார். “படித்து என்ன, நடித்தே காட்டுகிறேன்” என்றார். நான் அனுப்பி வைத்த மூன்று நாடகங்களில் இரண்டைத் தேர்ந்தெடுத்து ‘ஒரு கொலை, ஒரு பிரயாணம்’ என்று தலைப்பிட்டு சிறப்பாக அரங்கேற்றினார். அப்போது துவங்கியது என் நாடக தீரச்செயல்கள்.

ஓவர் டு அ.ராமசாமி… 

நாடகப் பிரதியின் படைப்பாக்கக் கூறுகளான கதைப்பின்னல், பாத்திரங்கள், சிந்தனை, மொழிநடை, இசைக் கூறு, காட்சி ரூபம் ஆகியனவற்றைப் பற்றிப் பேசும் போதே அவற்றோடு தொடர்புடைய படைப்பு நுட்பம் சார்ந்த பிரதியின் கட்டமைப்பு வடிவத்தை உருவாக்கும் கலைச்சொற்களையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது நாடகவியலின் அரிச்சுவடிதான். ஆரம்பம்(Introduction),முரண்(Contradiction), சிக்கல்கள் (Crisis), உச்சம் (Climax), தொடர்நிலை அல்லது வீழ்ச்சி (denouement), முடிவு (End ) என்பதான வடிவம் ஒரு நாடகப் பிரதிக்குள் இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு இருக்கும் நாடகமே நல்திறக் கட்டமைப்பு நாடகம் (Well made Play) என அழைக்கப்படுகிறது எனவும் நாடக இலக்கணத்தை வரையறை செய்யும் நாடகவியலாளர்களின் கருத்து.
நாடகவியல் நூலான அரிஸ்டாடிலின் கவிதையியல் கூறும் இந்தச் சொற்களின் பொருளில் பரதரின் நாட்டிய சாஸ்திரமும் நாடக வடிவத்தைக் கூறுகிறது. ஒரு விதி மண்ணில் விழுந்து கருவாகி, வளர்ந்து கிளை களாகப் பிரிந்து காய்த்துக் கனியாகப் பலன் தருவது போல ஒரு செய்தி அல்லது பொருள் பாத்திரங்கள் சார்ந்து முரண் தோன்ற சிக்கல்களால் வளர்ச்சி பெற்று உச்சநிலையை அடைந்து, கிளைக்கதைகளாகவும் நிகழ்வுகளாகவும் விரிந்து முடிவை நோக்கி நகரும் தன்மையே நாடக வடிவம் என்பதில் பரதரும் அரிஸ்டாடிலும் ஒன்று பட்டே உள்ளனர். அர்த்தப்ரக்ரிதீஸ், (ஆரம்பம்,) பிஜம், (விதை அல்லது கரு) பிந்து,(உந்துசக்தியின் சிந்தனை அல்லது வளர்நிலை) பாடகம், (கிளை அல்லது கதை) ப்ரகரி, (நிகழ்வுகள் விரிப்பு) கார்யம் ( கனி அல்லது முடிவு) என்பன பரதர் தரும் கலைச்சொற்கள்.
உரையாடலின் தொகுதி காட்சியாக மாறுவதும், காட்சிகளின் தொகுதி அங்கமாக மாறுவதும், அங்கங்களின் தொகுதி நாடக வடிவமாக உருக்கொள்வதும் தான் பரத முனியும் அரிஸ்டாடிலும் சொல்லும் நாடக வடிவம். நாடகப்பொருள் அறிமுகமாகி முரண் தோன்றுவதோடு முதல் அங்கம் நிறைவு பெற, இரண்டாவது அங்கத்தில் அம்முரண், சிக்கல்கள் சிலவற்றைச் சந்தித்து உச்சநிலையை அடைவது நிகழும். இம்முரணுக்கான முடிவு மூன்றாவது அங்கத்தின் முடிவில் கிடைக்கும் வகையில் எழுதப்பட்ட நாடகங்கள் நல்திறக் கட்டமைப்பு நாடகங்களாக அறியப்படுகின்றன. நல்திறக் கட்டமைப்புக்கு மூன்றங்க நாடக வடிவம் சிறந்தன என்றாலும் அவற்றினும் சிறந்தன ஐந்தங்க நாடகங்கள் என்பது பலரது கருத்து.
நாடக முரண் முதல் அங்க முடிவில் வெளிப்பட அதனைத் தொடரும் சிக்கலின் பயணம் கிளைபிரியும் நிகழ்வுகளாக இரண்டாவது அங்கத்தில் நீளும் போதும், அதன் பயணம் மூன்றாவது அங்கத்தில் உச்சநிலையை அடையும் போதும் பார்வையாளர்களின் ஆர்வம் முனைப்புடையதாக ஆக்கப்படும். அதனைத் தொடர்ந்து விரியும் நிகழ்வுகளை நான்காவது அங்கமாக விரித்து, நாடகத்தின் முடிவை ஐந்தாவது அங்கத்தில் விடுவிக்கும் போது ஆர்வநிலையின் முனைப்பு முடிவை நோக்கி நகர்த்தப்படும் வாய்ப்பு கூடுதலாக ஆகிறது என்பது ஐந்தங்க நாடகங்களை ஆதரிப்போரின் கருத்து.
உலக அளவிலும் இந்திய அளவிலும் தேர்ந்த நாடகாசிரியர்களாக அறியப்பட்டுள்ள பலரும் -ஷேக்ஸ்பியர் தொடங்கி இப்சன், செகாவ் வரை, காளிதாசன் தொடங்கி கர்னாடு வரை மூவங்க, ஐந்தங்க நாடகங்களை எழுதிப் புகழ் பெற்றவர்கள். நாடகப்பிரதி குறித்த இவ்வகையான புரிதல் தமிழில் நாடகம் எழுதியுள்ள பலருக்கும் உள்ளதா என்று கேள்வியைக் கேட்டு ஆய்வு செய்தால்,தமிழில் நாடகாசிரியராக அறியப்பட்டுள்ள பலர் காணாமல் போய்விடுவர் என்பதையும் கூறி அதனை விரிக்காமல் சுஜாதாவின் பிரதிகளுக்குள் நுழையலாம்.

தொடரும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s