1-சுஜாதாவின் நாடகங்கள் – அ.ராமசாமி


முன்னுரை
Sujatha_32
எழுத்தாளர் சுஜாதாவை அதற்கு முன்பும் சந்தித்திருக்கிறேன் என்றாலும் அன்றைய சந்திப்பு நாடகம் சார்ந்த சந்திப்பு. அத்துடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த சந்திப்பும் கூட.இந்திய அரங்க வரலாற்றில் குறிப்பிடத் தக்க ஒரு நாள் என்று சொன்னால் மிகை அல்ல. உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு அரங்கவியலாளர் பீட்டர் புருக் தனது வாழ்நாள் சாதனைப் படைப்பான மகாபாரதத்தின் காட்சிகளை இந்தியாவில் நடத்திக்காட்ட அவரது நாடகக்குழுவினருடன் இந்தியா வந்திருந்தார். புரூக்கின் மகா பாரதத்தில் பங்கேற்ற கலைஞர்களை நேரடியாகப் பார்த்ததோடு, அவர்களின் மேடைக்காட்சிகளின் துணுக்குகள் சிலவற்றையும் பார்த்தோம். மேடை நிகழ்வாகவும், தனித்தனியாகவும் பேசிக் கொண்டிருந்தோம். பத்து மணி நேரம் மகாபாரத்தின் 200 நிமிடப் படக்காட்சி வடிவமும் அவரோடு கொண்டு வரப் பட்டிருந்தது. அதையும் பார்த்து அசந்துபோன நாடகக்காரர்களின் ஒருவனாக நான் இருந்தேன்.
1991-ல், இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான பெங்களூரின் ஒதுக்கப்புறம் ஒன்றில் நடந்த அந்தப் பங்கேற்புப் பட்டறைக்குப் பெங்களூரில் வசித்து வந்த சுஜாதாவும் வந்திருந்தார். இந்திரா பார்த்தசாரதியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியின் மாணாக்கர்களோடு அதன் ஆசிரியராகிய நானும் சென்றிருந்தேன். அந்நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான தமிழர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைப் பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.அதன் இயக்குநரான எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியோடு சேர்ந்து நான் தயாரித்த பட்டியலில் சுந்தர ராமசாமியும் சுஜாதாவும் இருந்தார்கள்.
எனக்கு இவ்விருவரையும் நாடகாசிரியர்களாக அல்லாமல், புனைகதை எழுத்தாளர்களாக நல்ல அறிமுகம் இருந்ததால் அதிக நேரம் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிட்டியது. சுஜாதாவின் சலவைக் குறிப்புகளையும் வெளியிடத் தயாராக இருந்தன அப்போதைய அச்சு ஊடகங்கள் என்பதை எழுபதுகளில் மாணவனாகவும் வாசகனாகவும் இருந்த போது நான் அறிவேன். வெகுமக்கள் ரசனையை நாடி பிடித்துப் பார்த்து, அவர்களுக்குத் தர வேண்டியதைத் தரும் எழுத்தாளர் என்று பத்திரிகைகள் பட்டியல் இட்டுக் கொண்ட வரிசையில் சுஜாதாவின் பெயர் எழுபதுகளில் தொடங்கி அவரது மரணம் நிகழ்ந்த பிப்ரவரி, 2008 வரை ஏறுமுகத்தில் தான் இருந்தது. அவரது பெயரோடு சேர்த்து எதையாவது அச்சிட்டுக் கொண்டு தான் இருந்தன அச்சு ஊடகங்கள். அவரது மரணத்திற்குப் பின்னும் வெளியிடும் பத்திரிகைகள் இருக்கின்றன என்பதும் கூட சுஜாதாவின் எழுத்துக் கவர்ச்சியின் அடையாளங்கள் தான். உரைநடையின் சாத்தியப்பாடுகளை-அதிலும் குறிப்பாகப் புனைகதையின் பரிமாணங்களைத் தமிழுக்குப் பல நிலைகளில் அறிமுகம் செய்தவர் அவர். இதை அவரது தீவிரமான வாசகர்கள் மட்டுமல்ல; விமரிசகர்களும் ஒத்துக் கொள்வார்கள். இந்தக் கட்டுரை சுஜாதாவின் நாடகப்பிரதிகளின் வழியாக அவரது அரங்கியல் பார்வையை மதிப்பிட்டுக் கூற முயல்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s