நவராத்திரி ஜோடி – ஆனந்த் ராகவ்


நவராத்திரி என்றாலே கொலுவின் போது செய்கிற சின்ன வயசு குறும்பு ஞாபகம் வரும்.

இரண்டு ஜோடி பொம்மைகள் வீட்டில் உண்டு. பஞ்சகச்சமும் பூணூலுமாய் வெட வெட ன்னு ஒரு பிராமணர், மடிசார் கட்டி அவர் மனைவி என்று ஒரு ஜோடி. பிரம்மாண்ட தலைப்பா கட்டி ஒரு வாட்ட சாட்ட பஞ்சாபி சர்தார், அவரின் சால்வார் கம்மீஸ் மனைவி என்று இன்னொரு ஜோடி. தன்னை விட பெரிதாய் இருக்கிற காய்கறிகள் விற்கிற செட்டியாருக்கு இரண்டு பக்கமும் இந்த ஜோடியை நிறுத்தி வைப்பாள் அம்மா.

ரெண்டு நாட்கள் போனபிறகு அம்மாவுக்கு தெரியாமல் நைசாக பஞ்சாபி சர்தாரை மடிசார் மாமியுடனும், பஞ்சகச்ச ஐயரை வாட்டசாட்ட சர்தாரிணியுடனும் ஜோடி மாற்றி வைத்துவிட்டேன்.

அம்மா கவனிக்கவில்லை. ஒரு நாள் கொலுவுக்கு வந்த எந்த மாமியோ இதை கவனித்து அம்மாவிடம் கேட்டு அவளுக்கு முகம் சிவந்து விட்டது. எல்லோரும் சிரித்தார்கள். அம்மா தவிர. அவர்கள் போன பிறகு எனக்கு செம்ம திட்டு. “ சனியம் பிடிச்சவனே… புத்தி போறது பார். வக்கிரம் வக்கிரம்” என்று கன்னாபின்னான்னு திட்டுவாள், அம்மா டென்ஷனாவதைப் பார்த்து நான் சிரிப்பேன். என் மனோநிலை மேல் சந்தேகப்பட்டு கவலையோடு அப்பாவிடம் புகார் செய்தாள். அப்பா எனக்கு மேல “ நாலு நாளா அந்த பொம்மனாட்டியோட இருந்த சலிச்சி போயிருக்கும் அந்த பிராமணனுக்கு. மிச்ச நாளெல்லாம் சர்தாரிணியோட ஜாலியா இருக்கட்டுமே. எங்களுக்குதான் கொடுப்பனை இல்லை” என்று அவர் பங்குக்கு ஏதாவது சொல்வார்.

சீரியசாக ஒவ்வொரு கொலுவுக்கும் இதையும் இது போன்ற வேறு சில கொணஷ்டை வேலைகளையும் செய்து திட்டு வாங்குவேன். இரண்டு ஜோடிகளை வைத்து ஒவ்வொரு நாளும் ஒரு கதை உருவாக்குவேன். ஒரு நாள் ஐயர் மாமாவுக்கும் சர்தாரிணிக்கும் இடையில் சர்தார் கீழே விழுந்து கிடப்பார். (ஐயர் அடித்துப் போட்டு விட்டு கடத்தி வந்திருக்கிறாராம்) இன்னொரு நாள் ஐயர் நடுவில் இருக்க ஒரு பக்கம் சர்தாரிணி, இன்னொரு பக்கம் மாமி என்று ஜயர் இரண்டு பேரையும் சமாளிப்பார். அடுத்த நாள் ஐயரை அடித்துப் போட்டுவிட்டு சர்தார் இரண்டு பேருடனும் நிற்பார். அம்மா பூஜை செய்து முடித்து எனக்கு அர்ச்சனை செய்வாள். ( நாசமாப் போறவனே.. மொம்மை மேல கையை வக்காதடா)

ஐயரும் சர்தாரும் ஒரு பக்கமாகவும், சர்தாரிணியும் மாமியும் இன்னொரு பக்கமாகவும் போகிற மாதிரி இந்த காலத்துக்கு ஏற்ப ஜோடி மாற்றம் செய்யும் அளவு என் கற்பனை அந்த காலத்தில் வளர்ந்திருக்கவில்லை. மேல் படியிலிருந்து மாமியோ சர்தாரிணியோ தற்கொலை செய்ய முயல்வதாய், டாக்டரிடம் கன்ஸல்ட் செய்வதாய் நிறைய சூழல்கள் உருவாக்கலாம்.

என் வக்கிரத்தோடு மன்றாட முடியாமல், ஜோடிகள் இடம் மாறுவதைப் பார்க்கப் பொறாமல் சம்மந்தப்பட்ட பொம்மைகளை கொலுவிலிருந்தே எடுத்துவிட்டாள் அம்மா. பிற்காலத்தில் நான் ஒரு எழுத்தாளனாய், இலக்கியவாதியாய் உருமாற இந்த வக்கிரபுத்தி பெரிய காரணமாய் இருக்கும் என்று புரிந்துகொண்டு என்னை பாராட்ட அவளுக்குத் தோன்றியதே இல்லை. மக்கு அம்மா.

Advertisements

One thought on “நவராத்திரி ஜோடி – ஆனந்த் ராகவ்

  1. Arvind Swaminathan October 11, 2013 at 4:09 AM Reply

    நல்ல கட்டுரை ஆனந்த் ராகவ் சார் …

    //அம்மாவுக்கு தெரியாமல் நைசாக பஞ்சாபி சர்தாரை மடிசார் மாமியுடனும், பஞ்சகச்ச ஐயரை வாட்டசாட்ட சர்தாரிணியுடனும் ஜோடி மாற்றி வைத்துவிட்டேன்.//

    இதே மாதிரி வேலையை தினமும் என் பெண் செய்து கொண்டிருக்கிறாள். ஜோடி மாற்றுவது, கல்யாண ஜோடியை மாற்றி பெண் கழுத்தில் பெண் மாலை போட வருவதைப் போல் வைப்பது, தசாவதாரத்தை வரிசை மாற்றி வைப்பது, சீதையும் ராமரையும் பிரித்து வைப்பது, புலிக்குப் பக்கத்தில் பூனை என்று எது எதுவோ சத்தம் போடாமல் செய்து வைத்து விடுகிறாள். யாராவது பார்த்து, நாம் ஏதோ தவறாக வைத்து விட்டதாகச் சொலும்போதுதான் தெரிகிறது. ஐந்து வயதுக் குழந்தை என்பதால் அதிகம் கண்டிக்க முடியவில்லை. கொஞ்சம் சத்தம் போட்டு விட்டுப் பேசாமல் இருந்து விடுகிறேன். அவளும் வருங்காலத்தில் ’எழுத்தாளர்’ ஆவாளோ? 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s