Encounters at the End of the World – திருமலை ராஜன்


சென்ற முறை மைக்கேல் பாலினின் ஹிமாலயஸை பார்க்க வேண்டிய டாக்குமெண்டரியாக சிபாரிசு செய்திருந்தேன். நான் சொன்னதையும் பொருட்படுத்தி ஒரு சிலர் பார்த்து விட்டு நன்றாக இருந்ததாக சொன்னார்கள். ஆகவே அவர்கள் கொடுத்த துணிவில் எனது அடுத்த சிபாரிசு. வெர்னர் ஹெர்சாகின் என்கவுண்ட்டர்ஸ் அட் தி எண்ட் ஆஃப் த வோர்ல்ட். வெர்சாக் முக்கியமான ஜெர்மன் இயக்குனர். அவரது பிற படைப்புகளும் அற்புதமான படைப்புகளே. அவற்றில் சிலவற்றை அடுத்து சிபாரிசு செய்கிறேன் இப்போதைக்கு இந்த டாக்குமெண்டரி.

கட்டாயமாக நெட்ஃப்ளிக்ஸ் கலெக்‌ஷனில் பார்க்க வேண்டிய டாக்குமெண்டரிகளில் ஒன்று என்கவுண்டர்ஸ் அட் த எண்ட் ஆஃப் த வோர்ல்ட். இது அண்ட்டார்ட்டிகா பற்றிய நேஷனல் சயன்ஸ் ஃபவுண்டேஷனின் டாக்குமெண்டரி. ஆனால் வழக்கமான பெங்குவின்களைப் பற்றிய படம் அல்ல. அண்ட்டார்டிகாவில் அமைக்கப்பட்டிருக்கும் மக் மர்டோ பேஸ் கேம்ப்பில் வேலை பார்க்கும் மனிதர்கள், ஆராச்சி செய்யும் விஞ்ஞானிகள் அவர்களது வேலைகள், விருப்பங்கள் ஆகிய்வற்றை பதிவு செய்யும் ஆவணப் படமாக ஆரம்பிக்கும் இந்த டாக்குமெண்டரி மெதுவாக பெங்குவின்கள், சீல்கள் , நியூட்ரினோ, எரிமலை என்று அங்கு நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சிகள் பற்றிய காட்சிகளை ஆவணப்படுத்திக் கொண்டே செல்கிறது.

பெங்குவின்களில் ஓரின பெங்குவின்கள், கற்பிழக்கும் பெங்குவின்கள் உள்ளன. ஆனால் ஒரு சில பெங்குவின்கள் வாழ்க்கை வெறுத்து தனியே தன்னந்த் தனியே உலகின் தென் எல்லைக்கும் தெற்காக பயணிக்கின்றன. 70 மைல்களுக்கும் அப்பால் இருக்கும் உயர்ந்த பனிமலைச் சிகரங்களை நோக்கி தற்கொலைப் பயணங்களை மேற்கொள்கின்றன. அப்படிச் செல்லும் ஒரு பெங்குவினை காணும் பொழுது உலகத்திலேயே தனிமையான அமைதியான எல்லையையும் தாண்டி இன்னும் தனிமையைத் தேடிச் செல்லும் அந்தப் பெங்குவினின் சோகம் மனதை சங்கடப் படுத்துகிறது. எதனால் அது தன் கூட்டத்தை விட்டும் ஏன் உலகத்தின் எல்லையின் எல்லையை நோக்கிச் செல்கிறது என்பது புதிரானது. ஆம் விவரிக்க முடியாத சோகத்தை அளிக்கும் உக்கிரமான தனிமையைச் சொல்லும் காட்சி அது. ஒரு சிவாஜி கணேசனால் அளித்திருக்க முடியாத தனிமையின் சோகத்தை அந்த பெங்குவின் அளித்திருக்கும். அதற்கு துணை கிடைக்கவில்லையா அல்லது அதன் துணையை சீல் தின்று விட்டதா அல்லது அதன் குஞ்சுகளை சீல்களிடம் பறி கொடுத்து விட்டதா அதை பிற பெங்குவின்கள் வெறுத்து விட்டனவா? தென் துருவத்தை விடவும் தனிமையும், அமைதியும், ஆழ்ந்த சஞ்சலமற்ற பிரதேசமும் இருக்க முடியாது இந்த பெங்குவின் அதையும் தாண்டிச் செல்கிறது மரணத்தை நோக்கித் தீர்மானமாக மெதுவாக அடி எடுத்துச் செல்கிறது. வைராக்யமான தற்கொலை எண்ணத்துடன் முடிவு செய்து நகருகிறது.

இதைப் போலவே சீல்களும் பதிவு செய்யப் படுகின்றன. அவற்றின் குரல்களை அண்ட்டார்ட்டிக்காவின் பனிப் பாறைகளுக்கு அடியே இருக்கும் கடலில் இருந்து பதிவு செய்து படம் முழுவதும் பயன் படுத்தியுள்ளார்கள் மர்மமாகவும் திகிலாகவும் அவை உருவாக்கும் ஓசைகள் படம் முழுவதும் நிரப்புகின்றன. தென் துருவம் கடுமையான சவால்களை அளிக்கும் ஓசைகளற்ற் உலகத்தின் எல்லை. அங்கு வேலை பார்க்கத் துணிந்து வரும் ஆட்களும் தனித் துருவங்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் வினோதமான ஆளுமைகளாக தனிமையையும் கடுங்குளிரையும் சவாலாலையும் தேடி வரும் மனிதர்களாக இருக்கிறார்கள். பனிப்பாறைகளில் ஓட்டை போட்டு அதன் மீது கூடாரம் அமைத்து பாறையின் கீழே வாழும் விலங்குகளை ஆராய்ச்சி செய்கிறார்கள் செல் பயலாஜிஸ்டுகள். அவற்றின் டி என் ஏக்களைத் தொகுக்கிறார்கள். இது வரை உலகில் அறியப் படாத உயிரினங்கள் அவர்களுக்கு அங்கு அகப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. தொடர்ந்து அவற்றைத் தேடிப் பதிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கொடுமையான தனிமையில் துருவத்தின் எல்லையின் ஆழத்திற்குச் சென்று தேடுகிறார்கள். அந்தத் தேடல் அவர்களுக்கு இந்தப் பிரபஞ்சம் குறித்தும் பூமி குறித்தும் மேலும் மேலும் மர்மங்களையும் ஆச்சரியங்களையும் புதிர்களையுமே அளிக்கின்றன.

ஒரு கூடாரத்தின் உள்ளே தரையில் ஐஸ் பாறைகளைக் குடைந்த ஒரு ஓட்டை இருக்கிறது. அதற்குள் சகல பாதுகாப்பு உடைகளுடனும் அந்த பயாலஜிஸ்ட் இறங்குகிறார். அது பல மடங்கு தடிமனான பனிப்பாறைகளுக்குக் கீழே அவரைக் கொண்டு செல்கிறது. தலைக்கு மேலே பல அடி தடிமனான பனிப்பாறைகள் ஒரு பெரும் பிரம்மாண்டமான கூரையாக பல நூறு மைல்களுக்கு விரிந்திருக்க அதன் அடியில் இருக்கும் துருவக் கடலின் உள்ளே அதன் ஆழத்துக்குப் பயணிக்கிறார். இந்தக் காட்சியே இந்த படத்தின் ஒட்டு மொத்த பிரமிப்பும் ஆகும். இந்தப் பூமியின் கீழே சென்று அதன் அடியில் இருக்கும் பாதாள உலகில் அவர் பயணிக்கிறார். அந்தத் தருணம் தரும் தனிமையும், அந்த பாதாள சமுத்திரம் தரும் காட்சிகளும் அச்சத்தையும், பிரமிப்பையும், நடுக்கத்தையும் உருவாக்குகின்றன. அந்தத் தருணத்திற்கு இணையான ஒரு கோரல் இசையை அங்கு பயன் படுத்தியிருக்கிறார்கள். அந்த இசையும் குரல்களும் தரும் நடுக்கமும் பிரமிப்பும் அந்தக் காட்சிக்கு வார்த்தைகளினால் விவரிக்க முடியாத தருணத்தை அளிக்கின்றன. அந்த இசையும் தனித்துவமான அந்த பகுதியும் நம்மை வேறு ஒரு உலகத்துக்கு எடுத்துச் செல்கின்றன. ஒரு டாக்குமெண்டரிக்கு இவ்வளவு மெனக்கெட்டு பிரம்மாண்டமான சேர்ந்திசையை இசைத்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த டாக்குமெண்டரியுமே அருமையான இசையினூடே வழிகிறது. டாக்குமெண்டரி பார்க்கப் பிடிக்காதவர்கள் கூட இந்தப் படத்தில் வெர்சாகின் வர்ணணைகளுக்காகவும் அற்புதமான கொயர் இசைகளுக்காகவும் அவசியம் காணலாம்.

தென் துருவத்தில் பனி மலைகள் உள்ளன. அவற்றில் சில எரிமலைகளும் உள்ளன. அந்த எரிமலைகளின் உள்ளே இறங்கி பூமிப்பந்தின் தென் முனைக்குள் உள்ள ஒரு பெருங்குழிக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் மாக்மாவை அருகே சென்று காட்டுகிறார்கள். அந்த எரிமலையின் சரிவுகளில் ஏராளமான புகைப் போக்கி சிம்னி போன்ற இயற்கையான கூடுகள் அமைந்துள்ளன. அவற்றுக்குள்ளே இறங்கி அதன் கீழே பல மைல்கள் பயணிக்கிறார்கள். அந்த நீண்ட பனிக் குகை வழியே பயணிக்கும் காட்சிகளும் அதற்கான இசைகளும் நம்மை வேறு உலகத்திற்கு எடுத்துச் செல்கின்றன.

தென் துருவம் ஒரு மாபெரும் பனிப் பாறை என்றால் அதில் ஒரே ஒரு சிறு துளியை மட்டுமே இந்த படம் தொட்டிருக்கிறது. இவை போன்ற பிரமிப்பான படங்களைக் காணும் பொழுது நாம் மேலும் மேலும் சிறுத்து இப்பிரபஞ்சத்தின் ஒரு நியூட்ரினோ போலக் கரைந்து போகிறோம்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா? இறைவா என்று இறைஞ்சுவதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை. மீண்டும் இந்தப் படத்தை அகலத் திரையில் மட்டுமே காணவும்.

One thought on “Encounters at the End of the World – திருமலை ராஜன்

  1. சிவா கிருஷ்ணமூர்த்தி September 12, 2013 at 4:14 PM Reply

    பிரமாதமான டாக்குமெண்டரி ராஜன். நான் தென் துருவ பயணங்களைப் பற்றிய சில புத்தகங்களை – பயணங்கள், சாதனைகளை (Captain Scott, Worst journey in the world) படித்திருக்கிறேன். டேவிட் அட்டன்பரோவின் அண்டார்டிக்கா பயண டாகுமெண்டரிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த டாக்குமெண்டரி அருமையாக இருக்கிறது. அறிமுகத்திற்கு உங்களுக்கு நன்றி. தனது தளத்தில் வெளியிட்ட நம்ம பாலஹனுமான் ஸாருக்கு இன்னொரு நன்றி!

    சிவா கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s