2-ரா.கி. ரங்கராஜன் – சில நினைவுகள் – அரவிந்த் சுவாமிநாதன்


‘நான் ரா.கி.ரங்கராஜன் பேசறேன்.’ – என்று ஒலித்த அந்தக் குரலைக் கேட்டதும் முதலில் எனக்கு சற்று திகைப்பு. உடனே சுதாரித்துக் கொண்டு, ‘சார், நமஸ்காரம். எப்படி இருக்கீங்க.’ என்றேன்.

’ம். நல்லாயிருக்கேன். உங்க புஸ்தகம் கிடைச்சது. பார்த்தேன். என்னென்னமோ எழுதியிருக்கேளே’ என்றார்.

நான் சற்று அதிர்ந்து, ‘இல்லையே. உள்ளதைத் தானே எழுதியிருப்போம். ஏதாவது தப்பாயிருச்சா என்ன?” என்றேன்.

‘அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ரொம்ப மிகையாச் சொல்லியிருக்கேள். படிக்கறவா எல்லாம் ஏதாவது நினைச்சிக்கப் போறா..’

‘ஓ. அதுவா. சார் அது மிகையெல்லாம் இல்லை. உண்மை. எங்க அப்பா தலைமுறை, என் தலைமுறை போய் இப்ப உள்ள தலைமுறைக்கும் ஏத்த மாதிரி எழுதிக்கிட்டிருக்குற உங்களை பின்ன என்னன்னு சொல்றது. நீங்க எழுத்துலக பிதாமகர் தான். பத்திரிகையுலக பீஷ்மர் தான். இல்லைன்னு யாராலயும் சொல்ல முடியாது.

‘சரி. சரி. உங்க புக் இப்போதான் எனக்குக் கிடைச்சது. யார்ரா நமக்கு அனுப்பியிருப்பான்னு படிச்சுப் பார்த்தேன். அதான் உங்க அட்ரஸைப் பார்த்து போன் பண்ணினேன்.’

‘சார் என்ன சார். இப்பதான் கிடைச்சதா? நான் அனுப்பிச்சு இரண்டு, மூணு வாரம் இருக்குமே!’

’ஆமா. அது பழைய அட்ரஸ். அங்க வந்துட்டு திரும்பிப் போயிருக்கு. அப்புறம் யார் மூலமாவோ என் புது அட்ரஸ் கிடைச்சு கொரியரை இங்க அனுப்பியிருக்காங்க. சமயத்துல இது மாதிரி ஆகிறதுண்டுதான்’

”சார். நான் பிரபலமானவர்களின் விலாசங்கள்’ல உங்க அட்ரஸ் பார்த்துதான் சார் அனுப்பி வச்சேன்”

‘ஓ. அந்த அட்ரஸ் மாறி ரொம்ப நாள் ஆச்சு. அவாளுக்கும் தகவல் அனுப்பினேன். இன்னும் அப்டேட் ஆகலை போலிருக்கு. அட்ரஸ் சொல்றேன் நோட் பண்ணிக்குங்கோ. இதுதான் என் நம்பர். அதையும் குறிச்சுக்கங்கோ. நான் சாவகாசமா புக்கைப் படிச்சிட்டு உங்களைக் கூப்பிடறேன். ரொம்ப தாங்க்ஸ்” என்று சொல்லி முகவரி தந்தார்.

”ப்ரீயா இருக்கறச்சே வாங்கோ. நீங்க எங்க இருக்கேள்..”

”………….”

சொன்னேன்.

‘ஓ. அப்ப பக்கத்துலதான். வாங்கோ சாவகாசமா பேசலாம்’ என்றவாறு விடைபெற்றார்.

****

சில வாரங்கள் சென்றிருக்கும்.

மீண்டும் ஒரு மாலை வேளை

ரா.கியிடமிருந்து போன்.

“ஹலோ.. அரவிந்த். எப்டி இருக்கீங்க. இப்போ எதுக்குக் கூப்பிட்டேன்னா. புக்கை படிச்சேன். டிசைன் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. கண்டெண்டும் நல்லா இருக்கு. இது எங்கேர்ந்து வெளியாறது? பிரிண்டிங் எல்லாம் எங்கே”

“சார்.. எல்லாமே யூ.எஸ்ல தான். எடிட்டோரியல், டிசைனிங், ப்ரோக்ராமிங் மட்டும் இங்க”

“ஓ. நல்லா இருக்கு. அந்த “அரையா, முழுசா” ங்குற கதை இருக்கு பாருங்கோ. அது ரொம்பப் பிரமாதமான கதை. நிஜமா நடந்ததை நான் கொஞ்சம் கற்பனை சேர்த்து அப்போ எழுதினேன். அப்பயே அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். இப்பக் கூட சிலபேர் என்கிட்ட பேசறப்போ அந்தக் கதையப் பத்தி சொல்றதுண்டு. அப்புறம் ஒரு விஷயம். நான் பெரிய புராணத்தைப் பத்தி, அதாவது 63 நாயன்மாரைப் பத்தியும் எழுதலாம்னு இருக்கேன். அதுக்காக நோட்ஸ் எடுத்திண்டிருக்கேன். உங்களுக்குத் தெரிஞ்ச நல்லா டீப்பா, விஷயம் உள்ளவா எழுதின புக் ஏதாவது இருந்தா சொல்லுங்கோ.”

”ம்ம். சார் வர்த்தமானன்ல ஒரு புக் வந்திருந்ததே..”

“ம். விசாரிக்கச் சொன்னேன். அது ஸ்டாக் இல்லயாம். அதுவும் இல்லாம அது கொஞ்சம் விலை ஜாஸ்தியும் கூட. அவ்ளோ கொடுத்து வாங்க வேண்டாம்னு நினைக்கறேன். நீங்க பார்த்துட்டுச் சொல்லுங்கோ. நான் அப்புறமா பேசறேன்” என்றார்.

நானும் ”சரி சார்” என்றவாறு போனை வைத்தேன்.

பின்பு சில நாட்கள் கழித்து இணையத்தில் தேடியதில் ஒரு சில பதிப்பகங்கள் பெரியபுராணம் நூல் வெளியிட்டிருப்பது தெரிய வந்தது. அதில் பிரேமா பிரசுரம் வெளியிட்ட நூல்கள் அலுவலகம் மூலம் வாங்கி அனுப்பப்பட்டன. நூல் அனுப்பியது குறித்து அவரிடம் தொலைபேசி விவரம் தெரிவித்தேன்.

****

ஒரிரு வாரங்கள் சென்றிருக்கும். ஒரு காலை வேளையில் அவரிடமிருந்து மீண்டும் தொலைபேசி அழைப்பு.

“சார். நீங்க அனுப்பிச்ச புக் வந்தது படிச்சுப் பார்த்தேன். ஆனா. அதுல எல்லாம் வெறும் கதையாத் தான் இருக்கு. ரொம்ப சுருக்கமாத்தான் இருக்கு. எனக்கு கொஞ்சம் மூலமும் உரையுமா, அதாவது பாடலும் விளக்கமும் இருந்தா நல்லா இருக்கும்னு தோன்றது. நான் சில பேர்ட்ட சொல்லியிருக்கேன். அண்ணாநகர் டைம்ஸ்லயும் இதைப் பத்தி எழுதியிருக்கேன். நீங்களும் எங்கயாவது கிடைக்குமான்னு விசாரிச்சுப் பாருங்கோ” என்றார்.

“சரி சார். அவசியம் விசாரித்துச் சொல்கிறேன். இப்போ என்ன எழுதிக்கிட்டிருகீங்க சார்?” என்றேன்.

“இப்போ முன்ன மாதிரி அதிகம் எழுதறதில்லை. வயசாயிடுச்சி. துக்ளக்குல மட்டும் எழுதறேன். அண்ணாநகர் டைம்ஸ்ல எழுதறேன். அவ்ளோதான். ஆனா என்னோட சில புக்ஸையெல்லாம் பப்ளிஷ் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணிண்டிருக்கேன்”

“ஓ.. சரி. சார். நான் கிருஷ்ணதேவராயன் நல்ல கிளாஸிக் சார்”

“ஆமா. நான் கமலைப் பார்க்கப் போயிருந்தபோது ஒரு புக் கொடுத்தார். “Me, Claudius” அப்படிங்குற புக். அது King Claudiusங்குறவரோட autobiography Book. அதைப்படிச்சதும் தான் எனக்கும் இப்படி ஒரு முயற்சி பண்ணிப்பார்க்கலாம்னு தோணித்து. நிறைய ரிசர்ச் பண்ணி எழுதுன நாவல் அது.”

“ஓ. கமல் நடிச்ச மகாநதில கூட நீங்க வொர்க் பண்ணியிரூக்கீங்க இல்ல”

“ஸ்டோரி டிஸ்கஷன்ல கலந்துண்டேன். ஒரு ஆறேழு மாசத்துக்கு முன்னாடி கூட கிரேஸி மோகன், இரா.முருகன் எல்லாம் எங்க வீட்டுக்கு வந்து வீடியோ எடுத்துண்டு போனாங்க. அந்த சின்ன வீட்ல காமிராவை அங்க வச்சு, இங்க வச்சுன்னு ரொம்பப் படுத்தலாயிருச்சி. அது கமலோடஇண்டர்நெட் மேகஸின்ல வரும்னு சொன்னாங்க. எப்போ வரும்னு தெரியலை.”

“சரி சார். அது மாதிரி ”கோஸ்ட்”ங்குறது நான் சின்னப் பையனா இருக்கும் போது படிச்சது சார். இப்போ மறுபடி படிக்கலாம்னு தேடினா எங்கேயும் கிடைக்கலை. அல்லயன்ஸ்ல திக் திக் கதைகள், கன்னா பின்னா கதைகள், காதல் கதைகள், மர்மக் கதைகள் அப்படின்னு உங்களது நிறைய வந்திருக்கு. அந்த விளம்பரத்துல ’கோஸ்ட்’டும் விரைவில் வரும்னு போட்டிருந்தது. ஆனா வரலை. போன வருஷம் புக் பேர்ல அவங்க கிட்ட கேட்டேன். இன்னும் ரெண்டு, மூணு மாசம் ஆகும்னாங்க. இந்த வருஷம் புக் ஃபேர்ல கேட்டேன். கடைசி டைம் நெருக்கடில கொண்டு வர முடியலைன்னாங்க. இப்போ கொஞ்ச நாள் முன்னாடி கேட்டதுக்கு சார் கிட்ட ஃப்ரூப் போயிருக்குது. வந்ததும் கொண்டு வந்திருவோம்னு சொன்னாங்க. அது ஃப்ரூப் பார்த்து அனுப்பிச்சிட்டீங்களா சார்?”

“சரியாப் போச்சு. உங்கள்ட்ட அப்படிச் சொன்னாங்களா? என் கிட்ட ஆஃபிஸ் ரினெவெட் பண்றோம். கொஞ்சம் பில்டிங் வொர்க் எல்லாம் இருக்கு. அதை முடிச்சிட்டுக் கொண்டு வந்திடலாம்னு சொன்னாங்க. நான் அதை ஃப்ரூப் பார்த்து அனுப்பிச்சு எத்தனையோ மாசக்கணக்கு ஆறது. அது மட்டுமில்லாம ஜராசு கிட்ட வேற அதுக்கு ஒரு முன்னுரை கேட்டு வாங்கி அனுப்பிச்சிருக்கேன். இது வரைக்கும் புக் வரலை. ஜராசு வேற ’என்னடா இவன் முன்னுரை கேட்டான்னு கொடுத்தோம். ஒண்ணும் வரக்காணுமே’ன்னு என்னைத் தப்பா நினைக்காம இருக்கணும். நீங்க மறுபடியும் அவங்க கிட்டக் கொஞ்சம் விசாரிச்சுப் பாருங்கோளேன்”

“கண்டிப்பா சார். நன் அதையும் விசாரிக்கறேன். பெரிய புராணம் மூலமும் உரையும் நல்ல எளிமையான விளக்கத்தோட எங்க கிடைக்கும்னும் விசாரிக்கறேன்” என்றேன்.

“சரி” என்று கூறி போனை வைத்தார்.

நான் யாரிடம் இதுபற்றி விசாரிப்பது என யோசனையில் ஆழ்ந்தேன். “ரா.கி.ரங்கராஜன் கதைகள் முழுவதும் எனக்கு மனப்பாடம். அப்படியே வரி மாறாமால் ஒப்பிப்பேன்” என்று  நேர்காணலின் போது என்னிடம் தெரிவித்த பேராசிரியர், டாக்டர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்தான் நினைவுக்கு வந்தார். அது காலை வேளை என்பதால் மாலை பேசிக் கொள்ளலாம் என நினைத்து வேலைகளில் மூழ்கினேன்.

ஆச்சரியப்படும் விதத்தில் அன்று மாலையே பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். அவரது புத்தக வெளியிட்டு விழா கமல் தலைமையில் சென்னையில் நடக்க இருப்பதாகவும், அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். ’சரி’ என்று சொல்லி விட்டு ரா.கி. ரங்கராஜன் அவர்கள் பெரியபுராணம் மூலமும் உரையும் நூல் தேடிக் கொண்டிருப்பதைப் பற்றித் தெரிவித்தேன்.

“ஆமாம். என்கிட்டயும் பேசினாரு. அது சரியா வராதுன்னு அவரு கிட்ட சொல்லியிருக்கேன். பாட்டும் உரையுமா இருந்தா பாடம் நடத்துறவங்களுக்கே சில விஷயம் விளங்காது. இவர் அதைப் படிச்சிட்டு எழுதறதுன்னா ரொம்ப கஷ்டம். அப்புறம் அகராதி, நிகண்டு எல்லாம் பக்கத்துல வச்சிக்கணும். அது சரியா வராது. அதான், ‘வேண்டாம். வேற ஏதாவது ஏற்பாடு பண்றேன்’னு சொல்லியிருக்கேன். நண்பர்கள் கிட்ட விசாரிக்கச் சொல்லியிருக்கேன். பார்ப்போம்” என்றார்.

சில வாரங்கள் கழித்து ரா.கி. ரங்கராஜன் அவர்களோடு பேசினேன்.

’பெரியபுராணத்துக்கு, கு.ஞானசம்பந்தன் நல்ல புத்தகம் ஒண்ணை அனுப்பி வைக்கறேன்னு சொல்லிருக்கார்’ என்றார்.

நானும் ’தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் பெரியபுராணம், மூலம், உரை எல்லாமே கிடைக்கிறது. ஆனால் அதை இண்டர்நெட்டில் உங்களால் படிப்பது கஷ்டம். பிரிண்ட் எடுத்து வைத்துப் படிக்கலாம் என்றால் 600, 700 பக்கங்கள் வருகிறது’ என்றேன்.

”சரி பார்ப்போம். நான் அண்ணா நகர் டைம்ஸில் அதுபத்தி எழுதியிருக்கேன். ஏதாவது தகவல் நிச்சயம் வரும். பாக்கலாம்” என்றார். அதற்குள் அவரது இல்லத்தில் அழைப்பு மணி ஒலிக்கவே, ”நான் அப்புறமா பேசறேன்” என்றார்.

அதன் பிறகு அவரும் பேசவில்லை. ஏனோ நானும் தொடர்பு கொள்ளவில்லை.

சமீபத்தில் அவர் மறைந்த செய்தி பற்றி அறிந்ததும் மனச் சோர்வு ஏற்பட்டது; நேரில் அவரைச் சென்று பார்த்துப் பேசாதது குறித்து ஒரு குற்ற உணர்வும் கூடவே.

இன்று ரா.கி.ரங்கராஜன் என்ற உடல் மறைந்து விட்டது. ஆனால் அவரது ஆன்மா பிரசவித்த எழுத்துக்கள் என்றும் உயிர்ப்போடு விளங்கிக் கொண்டிருக்கும். ஒரு உண்மையான படைப்பாளி அவனது எழுத்துக்களால் என்றும் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பான். அந்த வகையில் ரா.கி.ரங்கராஜன் இன்றும் நம்மோடுதான் இருக்கிறார்.

******

இந்தக் கட்டுரையாளர் அரவிந்த் சுவாமிநாதன்  பற்றி ஓர் சிறிய அறிமுகம்…

அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தென்றல் மாத இதழின் Associate Editor திரு. அரவிந்த் சுவாமிநாதன் (ரமணர் ஆயிரம் மூலம் நமது வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான் இவர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s