1-ரா.கி. ரங்கராஜன் – சில நினைவுகள் – அரவிந்த் சுவாமிநாதன்


அப்போது இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்த காலம். ஞாயிற்றுக்கிழமை லீவு விட்டால் போதும், நேரடியாக நீலி வீராச்சாமி தெருவில் இருக்கும் மாமா வீட்டிற்குச் சென்று விடுவேன். காரணம், ’குமுதம். சிறுவயதில் எனக்கு முதன்முதலில் அறிமுகமான இதழ் அம்புலிமாமாவோ, ரத்னபாலாவோ, பாலமித்ராவோ அல்ல. குமுதம் தான். மாமா, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் உயர்பதவியில் இருந்தார். அவர்கள் வீட்டில் தவறாமல் வாங்கும் இதழ் “குமுதம்.” விடுமுறை நாளில் காலை உணவு (10 மணிச் சாப்பாடு என்று சொல்வார்கள்) உண்டதும் அடுத்த வேலை ஓட்டமாக ஓடி அங்கே சென்று விடுவதுதான். அவர் வீட்டின் படுக்கையறையில் கட்டிலுக்குக் கீழே பழைய குமுதம் இதழ்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி வைத்திருப்பார்கள். அந்த வாரக் குமுதம் இதழைப் படித்து முடித்ததும் (படித்தேன் என்று சொல்ல முடியுமா? பொம்மை பார்த்தேன் என்றுதானே சொல்ல முடியும் அந்த வயதில்?  ) அந்தப் பழைய இதழ்க் கட்டுக்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்ப்பேன். ”டிராகுலா”, ”புரொபசர் மித்ரா” இந்தப் பெயர்களோடு நினைவில் தங்கிய ஒரு பெயர் ரா.கி.ரங்கராஜன். தொடர்ந்து ’மியாவ் மீனா’, ’டிராக் குள்ளன்’, ’ஆறு வித்தியாசங்கள்’ (கோயான் கோபுவோ அல்லது கோபனோ படம் வரைந்திருப்பார்) இவற்றோடு அந்தப் பெயரும் நினைவில் தங்கி விட்டது. பெரும்பாலும் மாலை வரை மாமா வீட்டில் இருந்து அந்தப் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பேன். எதையாவது வாசித்துக் கொண்டிருப்பேன். நடுவில் வரும் சினிமா படங்களும், அதை ஒட்டி கீழே வந்திருக்கும் துணுக்கும் படித்த ஞாபகம் இருக்கிறது. மற்றபடி அக்காலகட்டத்தில் மேற்கண்ட பெயர்களைத் தவிர வேறு எதுவும் என் நினைவில் இல்லை.

வளர வளர வாசிப்புத் தொடர்ந்தது. ஓரளவு நன்கு படிக்கத் தொடங்கியதும் குமுதத்தில் பரிச்சயமான பெயர்கள் ”கிருஷ்ணகுமார்” மற்றும் “லைட்ஸ் ஆன் வினோத்”. அதுவும் கிருஷ்ணகுமார் எழுதிய “கோஸ்ட்” என்ற கதை மறக்க முடியாத ஒன்று. இடப்பக்கத்தில் தெரிந்தும் தெரியாத மாதிரி ஒரு படம். (இப்போது புரிகிறது, அது அவுட் ஆஃப் ஃபோகஸில் எடுக்கப்பட்டிருக்கும் என்று) மறுபக்கத்தில் கதை. அதுவும் கதை, கதைக்குள் கதை, கதைக்குள் கதை என்று தொடர்ந்து கொண்டே இருக்கும் அந்தக் கதையில் ஒரு சில விஷயங்கள் காட்சிகளாக இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றன. ஒரு ஜமீந்தார். காதல். தீப விளக்குகளை வரிசை வரிசையாக நீரில் விடுவது; கறுப்பாக இருக்கும் ஒரு இளைஞனின் தலை திடீரென செம்பட்டையாக ஆகியிருப்பது; கையில் ரேகைகளே இல்லாத ஒரு பெண் ஒரு இளைஞனைச் சந்திப்பது; அப்புறம் காரைக்குடி, தேவக்கோட்டை பக்கத்தில் ஏதோ ஒரு ஊருக்குப் பயணமாவது (சனவேலி?); இறுதியில் மந்த்ராலயம் சென்ற பிறகு பிரச்சனைகள் விலகுவது என இவைதான் நினைவில் இருக்கின்றன. இவை முழுக்கச் சரியானவையா என்றும் தெரியவில்லை. நினைவில் இருந்தே எழுதுகிறேன்.

பின் உயர்கல்விக்காக நகரத்திலிருந்து கிராமத்துக்குச் சென்றேன். எந்தப் பொழுதுப் போக்குகளும் இல்லாத, ஓரிரு மணி நேரங்களுக்கு ஒருமுறை மட்டுமே டவுன் பஸ் வந்து செல்லும் அந்த ஊரில் எனக்குத் துணை இலங்கை வானொலியும், அப்பா சேகரித்து வைத்திருந்த புத்தகங்களும்தான். பள்ளிக்கு 2.கி.மீ. நடந்து சென்று படிப்பேன். அப்போதுதான் பள்ளிக்குப் பக்கத்திலேயே நூலகம் இருப்பது தெரிய வந்தது. பள்ளியில் சிப்ஃட் சிஸ்டம் தான் என்பதால் நிறையவே நேரம் கிடைத்தது. அப்போது மீண்டும் குமுதம் வாசிக்கக் கிடைத்தது.(வாஜ்பாயியா, வாஜ்பேயியா என்ற ஒருவரின் கேள்விக்கு பேயும் இல்லை, பிசாசும் இல்லை. வாஜ்பையி என்று அரசு பதில் அளித்திருந்தது இன்னமும் ஞாபகத்தில் உள்ளது) இப்போது மீண்டும் ரங்கராஜன், லைட்ஸ் ஆன் வினோத், கிருஷ்ணகுமார் இவற்றோடு புதிதாக ஒரு பெயரும் எனக்குப் பரிச்சயமானது. அது பாக்கியம் ராமசாமி. அப்போது அப்புசாமி-சீதாப்பாட்டி கதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. (முன்னமேயே அதுபோன்ற கதைகள் வெளியாகத் துவங்கியிருந்தாலும் என் நினைவில் தங்கியது அப்போது முதல் தான்). அப்புசாமி படம் எடுக்கிறார் என்ற கதை அது. கூடவே ஒரு ஜனவரியின் ஞாயிற்றுக்கிழமை (ராஜேஷ்குமார்), ஒரு நிமிடம் தா ஒரு கொலை செய்கிறேன் (இந்துமதி) போன்றவையும் படித்திருக்கிறேன். (பானர்ஜியை மறக்க முடியுமா?)

அப்பாவிடம் நச்சரித்ததில் அவர் வாரா வாரம் பள்ளி விட்டு வரும் போது (அவர் தொலைவில் உள்ள வேறு ஒரு மாவட்டத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவார்) குமுதம் வாங்கி வர ஆரம்பித்தார். கோகுலம், பி.கே. மூர்த்தி, வாண்டுமாமாவின் மர்ம, மாயாஜாலக் கதைகள், இரும்புக்கை மாயாவி, தலைவாங்கிக் குரங்கு, லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், விஜய் காமிக்ஸ் என வாசிப்புத் தொடர்ந்தது.

ஒருமுறை ”இதெல்லாம் நீ படிக்கக் கூடாது. படிச்சாலும் உனக்குப் புரியாது” என்று சொல்லி அத்தை கொண்டு வந்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அலமாரிக்குள் வைத்தாள் அம்மா. சிறுவனுக்கே உள்ள ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தை அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்துப் பார்த்தேன். அது ”ஒரு தற்கொலை நடக்கப் போகிறது” எழுதியது ரா.கி.ரங்கராஜன். மாலைமதி இதழ் என்று ஞாபகம். அப்புறம் அம்மாவுக்குத் தெரிந்தே அந்தக் கதையைப் படித்தேன். (இப்போது முழுமையாக நினைவில்லை. கதை, ஈ.எஸ்.பி பற்றியதா அல்லது ஒரு கொலையை தற்கொலையாக மாற்றும் ஒரு இளைஞனைப் பற்றியதா என்பது நினைவிலில்லை)

அப்புறம் வளர வளர எனது வாசிப்பார்வங்கள் மாறிப் போயின. 2 ரூபாய் மலிவு விலையில் பாக்கெட் நாவல் வந்தது. முதல் இதழ் ”ஒரு தேவி என்னைத் தேடுகிறாள்’ ராஜேந்திரகுமார் எழுதியது. தலைப்புச் சூட்டியது ராஜேஷ்குமார். இறப்பதற்கு நேரமில்லை, நந்தினி 440 வோல்ட்ஸ் (ராஜேஷ் குமார்) போன்ற க்ரைம் நாவல்களையும், தேவை ஒரு பாவை, ஒரு பெண்ணின் அனாடமி, ஒரு கார், ஒரு ஸ்ட்ரா, ஒரு ப்ரா (எல்லாமே புஷ்பா தங்கதுரை) போன்ற நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். (அப்போது எனக்கு பதின்ம வயது) அதே சமயம் எனது அப்பா, தாத்தாவின் சேகரிப்பில் இருந்த புத்தகங்களையும் – குறிஞ்சி மலர், பொன் விலங்கு, பாவம் அவள் ஒரு பாப்பாத்தி, பாரிசுக்குப் போ, விசிறி வாழை, கிளிஞ்சல் கோபுரம், வீரபாண்டியன் மனைவி, ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம், ஜய ஜய சங்கர, வருணகுலாதித்தன் மடல், கனகாங்கி, நுழையக் கூடாத அறை, மதன மோகினி, உன் கண்ணில் நீர் வழிந்தால், இதய வீணை, ரங்கராட்டினம், பெற்றமனம், கரித்துண்டு, டாக்டர் அல்லி என பல எழுத்தாளர்களது நூல்களை ஒவ்வொன்றாகத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். பின் கல்லூரி, வேலை, தொழில் என வாழ்க்கைப் பக்கங்கள் புரட்டப்படுகையில் புத்தகங்கள் வாசிப்பது குறைந்தது. ஆனாலும் குமுதம், விகடன் என வாசிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. வேலை நிமித்தமாக மீண்டும் சென்னைக்கு வந்ததும், அலைந்து திரியும் வேலையில் பயணத் துணைவனாக ஆயின புத்தகங்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து ஹிக்கின்பாதம்ஸ் போன்ற புத்தகக் கடைகளுக்குச் செல்வதும், சுஜாதாவின் புத்தகங்களை வாங்கிக் குவிப்பதும் (குமரி பதிப்பகத்தின் சுஜாதா நூல்கள் பல அப்படி வாங்கியதுதான்) வழக்கமானது.

ஒரு முறை பக்கத்து வீட்டு மாமாவுடன் யதேச்சையாகப் பேசிக் கொண்டிருக்கையில் பேச்சு பத்திரிகைகள், எழுத்தாளர்கள் பற்றித் திரும்பியது. அவர் எதேச்சையாக ”ராகி.ரங்கராஜனைத் தெரியுமா?” என்றார்.

”நன்றாகத் தெரியும். நான் நேரில் பார்த்ததில்லையே தவிர அவரது எழுத்துக்களை படித்திருக்கிறேன். அவருடைய எ.க.எ (எப்படிக் கதை எழுதுவது) என்ற தொடரைப் பார்த்து அதில் வருவது மாதிரி சில விஷயங்களை எல்லாம் நான் செய்து பார்த்திருக்கிறேன். அவர் அதற்கு பயிற்சி வகுப்பெல்லாம் நடத்தியிருக்கிறார். பத்மா ரவிசங்கர், சந்திரஜெயன் என சிலர் அதில் சேர்ந்து படித்திருக்கிறார்கள். அவர்களுடைய கதைகள் எல்லாம் கூட மாலைமதியில் வெளியானது. வாசித்திருக்கிறேன். இப்போது அவர் குமுதத்தில் இருந்து ரிடயர் ஆகி விட்டார்” என்றேன்.

”ம்ம்ம்ம். அவர் எங்கழுக்கு உழவுதான்” என்றார் அந்த மாமா, வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே.

“என்ன..”

“ஆமாம். என்னோட பெண்ணை அவரோட பெரியப்பா உறவு வகையிலதான் கொடுத்திருக்கோம். அவர் அப்பா, பெரியப்பா எல்லாம் பெரிய சமஸ்கிருத பண்டிதர்கள். கிருஷ்ணமாச்சாரின்னா அந்தப்பக்கத்துல எல்லோருக்கும் தெரியும். என்னை அவருக்கு நன்னாத் தெரியும். இங்க தான் அண்ணாநகர்ல இருக்கார்”

“அவரை நான் பார்க்க வேண்டும். மிகவும் ஆவலாக இருக்கிறது. கூட்டிச் செல்வீர்களா?” என்றேன்.

”கண்டிப்பாப் பார்க்கலாம். அது சரி அவர் நிறைய பேர்ல எழுதியிருக்கிறது தெரியுமா?”

”இல்லையே. ரா.கி.ரங்கராஜன் என்ற பேர்ல எழுதினது தான் படித்திருக்கிறேன். வேற பேர்லயும் எழுதிருக்கிறாரா என்ன?”

“10, 15 பேர்ல எழுதியிருக்கிறார். சூர்யா, மாலதி, துரைசாமி எல்லாம் அவரோட பேர் தான். ’வினோத்’துன்ற பேர்ல சினிமா நியூஸ் எழுதினதும் அவர் தான்.” என்றார்.

எனக்கு ஒரே ஆச்சரியம். அதே சமயம் ஒரு ஆவல். ஒருவேளை ’கிருஷ்ணகுமார்’ என்ற பேர்ல எழுதினதும் அவரா இருக்கலாமோ! நினைத்தை அவரிடம் கேட்டேன்.

”ஆமாம், கிருஷ்ணமாச்சாரியோட குமாரன்கறதைத் தான் கிருஷ்ணகுமார்னு புனைபெயரா வச்சுண்டார். அவர் சொந்த ஊரு ராயம்பேட்டை, கும்பகோணம் பக்கம்“

”அப்போ, ஜூனியர் போஸ்ட்ல ’ராயம்பேட்டை’ங்குற பேர்ல எழுதறதும்…”

“அவரே தான்”

எனக்கு மிகவும் பிடித்த ”கிருஷ்ணகுமார்” அவர் தான் எனும்போது அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதுவும் வித வித விதமாக எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்? எப்படியாவது அவரைச் சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். சில மாதங்கள் வேலை விஷயமாக நான் பாண்டிச்சேரியில் இருக்க நேர்ந்தது. வந்த பார்த்தபோது பக்கத்துவீடு பூட்டிக் கிடந்தது. அவர்கள் வீட்டைக் காலி செய்து விட்டு கும்பகோணத்துக்கே போய் விட்டனர் என்ற செய்தி கிடைத்தது. அதன்பிறகு ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்திக்க இயலவில்லை. வாழ்க்கைச் சூழல்களால் அந்த ஆர்வமும் திசைமாறிப் போனது என்றாலும் விகடனின் “நான் கிருஷ்ணதேவராயன்” மூலம் அவர் மீண்டும் மனதுக்குள் வியாபித்தார். தமிழில் அந்த மாதிரி தன வரலாறாக ஒரு வரலாற்றுக் கதையை நான் அதுவரை படித்ததில்லை. அந்த பிரமிப்பு பின்னரும் விலகவில்லை. துக்ளக்கின் டெலி விஷயமாக வந்து அவர் தனது இருப்பை நினைவூட்டினார். நக்கீரனிலும் கூட செவ்வாய், வெள்ளி என்று ஏதோ ஒரு தொடரை எழுதினார். நான் தொடர்ந்து அதை வாசிக்கவில்லை.

வாழ்க்கைப் புயலில் சிக்கிச் சிதறுண்டு அங்கும் இங்கும் மோதி அலைபாய்ந்து இறுதியில் பத்திரிகைத் துறைக்கு வந்து தென்றலில் ஐக்கியமானேன்.

ஒருமுறை வீயெஸ்வி எழுதிய விகடன் பிரசுரத்தின் இசைவாணர்கள் பற்றிய வரலாற்று நூல்களை நல்லி குப்புசாமி வெளியிட்டு பாராட்டு விழா நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் ஒரு பார்வையாளனாகக் கலந்து கொண்டேன். அதற்கு பரணீதரன் (மெரீனா), ஜராசு (பாக்கியம் ராமசாமி) ரா.கி.ரங்கராஜன் என மூவரும் வந்திருந்தனர். ஒரு வாசகனாக அவர்களிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். குறிப்பாக ரா.கி.ரங்கராஜனிடம். ”ரொம்ப சந்தோஷம்” என்றார் அவர். வேறு எதுவும் சொல்லவில்லை. அந்தக் கூட்டத்தில் வேறு எதுவும் விரிவாகப் பேச இயலவில்லை. அதுதான் அவருடனான முதல் சந்திப்பு.

தென்றலின் ’எழுத்தாளர்’ பகுதியில் அவரால் ஊக்குவிக்கப்பட்ட சாண்டில்யன், ஜெயந்தன், ஸ்டெல்லாபுரூஸ், ராஜேஷ்குமார் என பலரைப் பற்றியும் எழுதிய பிறகு 25வது கட்டுரையாக ஜூலை இதழில் அவரைப் பற்றி எழுத முடிந்தது. இதழ் வெளிவந்த பிறகு ”பிரபலமானவர்களின் விலாசங்கள்” நூல் மூலம் அவரது முகவரியைக் கண்டறிந்து அவருக்கு அனுப்பி வைத்தேன். அதற்கு முன்னால் அவருடன் பேசுவதற்காக அந்த முகவரியில் உள்ள எண்ணைத் தொடர்பு கொண்டேன். ஆனால் அது உபயோகத்தில் இல்லை என்று தகவல் சொன்னது.

இரண்டு, மூன்று வாரங்கள் சென்றிருக்கும். நான் திருச்சியில் உறவினர் வீட்டில் இருந்தேன். உறங்கிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளை. அலைபேசி ஒலித்தது. சற்றே சலிப்புடன் எடுத்து ’ஹலோ’ என்றேன்.

மறுமுனையில் மென்மையாக அதே சமயம் கம்பீரத்துடன் ஒலித்தது ‘நான் ரா.கி.ரங்கராஜன் பேசறேன்.’

(தொடர்வேன்..)

இந்தக் கட்டுரையாளர் அரவிந்த் சுவாமிநாதன்  பற்றி ஓர் சிறிய அறிமுகம்…

அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தென்றல் மாத இதழின் Associate Editor திரு. அரவிந்த் சுவாமிநாதன் (ரமணர் ஆயிரம் மூலம் நமது வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் தான் இவர்.

One thought on “1-ரா.கி. ரங்கராஜன் – சில நினைவுகள் – அரவிந்த் சுவாமிநாதன்

  1. bala1940 August 1, 2013 at 2:05 AM Reply

    (எனக்கு )வார இதழ்களில் தொடர் கதைகளை படிக்கும் இன்பம் அதையே புத்தகமாக படிக்கையில் கிடைப்பதில்லை.புத்தகங்களை படிக்கும் இன்பம் அதையே வலைபதிவில் படிக்கையில் கிடைப்பதில்லை. ஆனால் இம்மாதிரி கட்டுரைகளை படிக்க ஆர்வம் குறையவில்லை .இது ஒருவித கோளாறோ …….ஆவலை தூண்டும் வகையில் உள்ளது …மகிழ்ச்சி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s