வாலியோடு என் அனுபவம் – ஆனந்த் ராகவ்


1.வாக்குச் சாதுர்ய வாலி 

வாலியிடம் ஒரு சந்திப்பில் எழுத்தாளர் நா. பார்த்தசாரதி கேட்டார்.
நீங்க ஏன் வாலின்னு பேர் வச்சிகிட்டு இருக்கீங்க ?

வாலி சொன்னார் – ராமாயண வாலியை யாரும் வெல்ல முடியாததற்குக் காரணம் அவன் எதிரில் யார் வந்து நின்றாலும் எதிராளியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்துவிடும். அதுமாதிரி நான் யாரை சந்திச்சாலும் எதிராளியின் அறிவில் பாதி எனக்கு வந்துடும்.

நா. பா அவரை கிண்டலடித்தார் – உங்களைப் பார்த்தா அவ்வள ஒண்ணும் அறிவாளியா தெரியலையே..!

வாலி சொன்னார் : நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கலையோ என்னவோ !!

வாலி இந்தச் சம்பவத்தை பல வருடங்களுக்கு முன் எழுதிய தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 2011 இல் நடந்த இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் மறுபடியும் ஒரு தடவை சொன்னார்.

சொல்லும்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த திருப்பூர் கிருஷ்ணனைப் பார்த்து “ திருப்பூர் கிருஷ்ணன் நான் இதை இந்தக் கூட்டத்தில் குறிப்பிடுவது குறித்து தவறாய் நினைத்துக்கொள்ளக்கூடாது” என்ற பீடிகையுடனே துவங்கினார் ( நா. பா ஐயா, திருப்பூர் கிருஷ்ணனின் குரு என்பதால்)

2. வார்த்தை விளையாட்டு வாலி 

இங்கிலீஷ், இந்தி தமிழ் எல்லாம் கலந்து கட்டி அடிக்கும் கவிஞர் வாலியின் வார்த்தை விளையாட்டுக்கு ஒரு உதாரணம். வி எஸ் ராகவன் நடித்த டிவி படம் ஒன்றில் அவரின் ஒரு வசனம் — பப்ளிக் பிராசிக்யூட்டர் ( நீலு) குற்றம் சாட்டப்பட்டரை கேள்விகேட்டு வாதம் செய்கையில். குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவம் நடந்த அன்று நான் திருப்பதியில் இருந்தேன் யுவர் ஆனர் என்று சொல்லி திருப்பதியில் வாங்கிய லட்டு ஒன்றை சாட்சியாக நீதிபதியிடம் கொடுப்பார்..
நீலு லட்டை வாங்கி விண்டெடுத்து வாயில் போட்டு, நீதிபதியைப் பார்த்து

“மை லார்ட், திஸ் இஸ் பொய் லாட்”

3. இளமை வாலி –

ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் வீட்டில் நம் அம்மாக்கள் அவர்களைப் படுத்துகிற பாட்டை பாய்ஸ் பாட்டில் சொல்லுவார்.

மொட்டை மாடியில் நின்னா தப்பு
பதிலுக்கு பதிலு சொன்னா தப்பு
வாய்விட்டு சிரிச்சா தப்பு
சோம்பல்தான் முறிச்சா தப்பு

ஒரு பதினாறு வயதுப் பெண்ணின் மனநிலையை இதுக்குமேல் அழகாய் சொல்லமுடியாது.

4. கோப வாலி 

நான் பரிசு வாங்கின இலக்கியச் சிந்தனைக்கூட்டத்தில் பேசும்போது அவருக்கு 80 வயது இருக்கலாம். தளர்வாகத்தான் இருந்தார் ஆனால் பேச்சில் அந்தச் சுவடு துளி கூடத் தெரியவில்லை. ஒரு தேர்ந்த நாடக நடிகனுக்கு உண்டான குரல்வளம். அடிவயிற்றிலிருந்து எழும்பி முகத்திலடிக்கும் வார்த்தைகள், டைமிங் சென்ஸ். ஒவ்வொரு சம்பவத்தையும் நினைவுகூரும் ஞாபக சக்தி. இவருக்கா 80 என்று வியந்தேன்.

பேச்சில் தன்னை சுய விமர்சனம் செய்துகொண்டார். நான் ஒரு சினிமா லிரிசிஸ்ட் அவ்வளவுதான். ஒண்ணும் பெரிய கவிஞர் எல்லாம் இல்லை. என்றார்.

ஒரு மணி நேரம் பேசினார். நின்றுகொண்டுதான் பேசினார். பேசி முடித்து வணக்கம் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தார். யாரையோ தேடினார். தேடின ஆள் கண்களில் படவில்லை. கொஞ்சம் தடுமாறி நடந்து வந்தார். யாரோ சட்டென்று குறிப்பறிந்து நாற்காலியை கொணர்ந்து போட்டார்கள். உட்கார்ந்தார். லேட்டாக அவர் தேடிய ஆள் ஓடி வந்தார்.

அவரைப் பார்த்தவுடன் கோபத்தில் முகம் சிவந்தார். ” எங்கடா போன நீ ? நான் உன்னை எதுக்கு கூட்டிண்டு வந்தேன். கைத்தாங்கலா கூட்டிண்டு வரத்தான வந்த? எங்க ஒழிஞ்சு போன? “

அவர் எவ்வளவு கோபக்காரர் என்று தெரிந்து கொண்டேன். அவருக்கு உடம்பு முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்தது.

5. ஹாஸ்ய வாலி–

நான் பேசும்போது நிறைய பேருக்கு நன்றி சொன்னேன். குறிப்பாக ‘ இங்கே வராவிட்டாலும் நான் எழுதுவதற்கு எல்லாவிதத்திலும் உதவிக்கொண்டிருக்கும் என் முதல் வாசகியான என் மனைவிக்கும் நன்றி” என்று சொல்லியிருந்தேன்.

பேசி முடித்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தவுடன் என்னிடம் நெருங்கி..

“ மறக்காம பொண்டாட்டியை எல்லார் முன்னயும் பாராட்டினீர் பாரும். அது போறுமய்யா.. நீர் பொழச்சிப்பீர்.” என்றார்

தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் தடம் பதித்திருக்கிறார் ஆனந்த் ராகவ். அறுபது சிறுகதைகள், எழு மேடை நாடகங்கள், சரித்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள் அவர் இயங்கும் தளம். இலக்கியச் சிந்தனை அமைப்பின் விருது பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாடகங்களை எழுதி இயக்குகிறார். இவரது நாடகங்கள் நாற்பது முறை மேடையேற்றப்பட்டுள்ளன.

சரளமான விறுவிறுப்பான நடை, இயல்பான நகைச்சுவை ததும்பும் மொழி, சட்டென்று திசை மாறும் முடிவு என்று தனக்கென்று ஒரு பிரத்யேக நடையழகை உருவாக்கிக்கொண்டவர். அவரது எழுத்தில் மிகை இல்லை. ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்துக்கொள்ளும் கோணங்களும் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை.
19/7/2013

Advertisements

14 thoughts on “வாலியோடு என் அனுபவம் – ஆனந்த் ராகவ்

 1. ranjani135 July 20, 2013 at 2:39 PM Reply

  வாலியின் பல பரிமாணங்களைத் தெரிந்து கொண்டேன்.
  அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

  • BaalHanuman July 20, 2013 at 2:50 PM Reply

   நன்றி. எல்லாப் புகழும் நண்பர் ஆனந்த் ராகவுக்கே 🙂

 2. ரசித்தேன் இருமுறை…

  நன்றி…

  • BaalHanuman July 20, 2013 at 2:46 PM Reply

   >>ரசித்தேன் இருமுறை…

   ரசித்தேன் உங்கள் சிலேடையை 🙂

 3. Chellappa Yagyaswamy July 20, 2013 at 3:09 PM Reply

  Like Bharathy, Bharathidasan and Kannadasan Vaali worked till he was hospitalised. His 6 epic works are immortal, not to say of thousands of his songs. May his soul rest in peace.

 4. Ramesh Kalyan July 20, 2013 at 6:25 PM Reply

  வாலி – சில துளிகள்

  எம்.ஜி.ஆர் கோபத்தில் வாலியிடம் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் டைட்டிலில் உன் பேர் கிடையாது என்றார். அப்போ ‘உலகம் சுற்றும் பன்’ என்று வைப்பீங்களா ? என்று கேட்டு நகைச்சுவையாக தன்னை விட்டுக்கொடுத்துப் போகாதவர்.

  4 முதலமைச்சர்களுக்கு பாட்டு எழுதியவர். நல்லவன் வாழ்வான் படத்தின் படப் பாடலில் அவருடைய பாடல் வரிகள் படித்துவிட்டு அறிஞர் அண்ணா பச்சை இங்கில் அடிக் கோடிட்டு இந்த வரிகளை எந்த காரணம் கொண்டும் நீக்கக் கூடாது என்று சொன்னாராம்.

  அவர் வெளிநாடு போனதில்லை. கேட்டபோது நான் foreign போகாட்டா என்ன எல்லா foreign ம் எனக்குள்ள போகுது என்று ‘கட்டைவிரலை உயர்த்திக்காட்டி’ சொன்னாராம்.

  ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் முத்துராமன் அவரிடம் குடிப்பதன் தீமை பற்றி சொல்லி அன்பாக கேட்டுக்கொண்ட போது இனி குடிப்பதில்லை என்று வாக்கு தந்து அதன்படியே கடைசிவரை நடந்து கொண்டாராம்.

  ஆங்கிலத்திலும் சாதுரியம் உடையவர். ஓவியனாக வேண்டும் என்று ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பிறகு கவிஞர் ஆனார். ஓவியத்தில் மாலி போல வர விரும்பி வாலி என்று பெயர் வைத்தாக சொல்கிறார்கள். ஆனால் திருச்சி பட்டிமண்டபத்தில் வாலி பற்றி பேசியதால் அந்த பெயர் என்று நினைவு(சுஜாதா சூட்டியதோ? not sure).

  எம்.ஜி.ஆரின் பிரச்சார பீரங்கி பாடல்களை தந்ததில் வாலிக்கு பெரும் பங்குண்டு.

  அவரிடம் கம்ப்யூட்டர் கிடையாது. தரையில் அமர்ந்து 2 தலையணை வைத்துக்கொண்டு எழுதுவதே வழக்கம் . வெற்றிலை நிச்சயம் வேண்டும்

  மனம் சோர்ந்து மும்பை சென்று வேலை தேட முயலுகையில் கண்ணதாசனின் ‘மயக்கமா கலக்கமா’ பாடல் வரிகள் (PBS குரல்) – உனக்கும் கீழே உள்ளவர் கோடி – நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு ”
  கேட்டு மனதை மாற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தவர் பிறகு அவரை அவராலேயே நிறுத்தவே முடியவில்லை.

  அவருக்கு விருது கொடுக்க முடிவு செய்து அவரிடம் பயோ டேட்டா கேட்டிருந்தார்கள். அவர் அனுப்பவில்லை விருது கிடைக்கவில்லை. கேட்டதற்கு பாட்டு நல்ல இருக்குன்னா யாருன்னு விவரம் தேடி அவர்களே தரணும். வாலின்னு தெரிஞ்சும் கேட்டா என்னை பத்தி தெரியாம எனக்கெதுக்கு விருது தரணும் என்றார் .

  வைணவராக இருந்தாலும் தீவிர முருக பக்தர். டி எம் சௌந்தரராஜன் இசை அமைத்து பாடிய கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடல் உருக வைக்கும்.

  பஞ்ச் ஆக பேசுவதில் கில்லாடி –
  “நான் foreign போக வேண்டும் வீசா. foreign எனக்குள்ள போக வேண்டும் சீசா ”
  “நான் இறாமீன் தின்னும் பிராமின்”
  “கவிதை எழுதும்போது நான் தமிழுக்கு தாலாட்டும் தாய். சினிமாவுக்கு பாட்டு எழுதும்போது நான் காசுக்கு வாலாட்டும் நாய் ”

  கண்ணதாசன் மறைந்த போது அவர் சொன்னது அவருக்கும் பொருந்துகிறது இன்று –

  மரணம்
  படிக்கத் தெரியாத
  பெரிய முட்டாள்
  அது
  ஒரு கவிதை புத்தகத்தை
  கிழித்து வீசி இருக்கிறது.

  அதேபோல் வாலியின் சமயோசிதம் மனதை குளிரவைக்கும் விதமும் இருக்கும். தளபதி படத்தில் வரும் பாடல் சின்னத்தாயவள் தந்த ராசாவே பல்லவி . சின்னதாய் என்பது இளையராஜாவின் தாயாரின் பெயர். சின்னத்தாயவள் தந்த ராசாவே – கணக்கு சரியாக வருகிறதா ! அதுதான் வாலி.

  மூவேந்தர் நாயகி என்ற படம். சரஸ்வதி தேவி ஒரு புலவரை திண்டாடும்படியாக ஒரு கேள்வி கேட்கவேண்டும். பிறகு அதற்கு பதிலும் தரவேண்டும். இந்த காட்சிக்கு கேள்வி பதில் இரண்டுமே எழுதவேண்டிய பொறுப்பு வாலிக்கு. அவர் எழுதுகிறார். “எறும்பின் வாயைவிட சின்னது. அது என்னது? பதில் – “எறும்பின் வாயை விட சின்னது. அது தின்னது” – இதுதான் வாலி (ஜெயந்தன் பேட்டியில்)

 5. Jayaraman Raghunathan July 20, 2013 at 6:34 PM Reply


  எம்ஜிஆருக்கு உள்ளூர கோபம், வாலி சிவாஜியின் அன்புக்கரங்களுக்கு பாடல் எழுத ஒப்புக்கொண்டுவிட்டார் என்று. ஒரு நாள் காரில் வரும்போது அவர் கொஞ்சம் நக்கலாக வாலியிடம், “என்ன வாலி! உங்களுடைய அன்புக்கரங்கள் எப்ப ரிலீஸ்”?

  வாலி உடனே அவர் கைகளைப்பற்றிக்கொண்டு ” உங்க அன்புக்கரங்களிலிருந்து எனக்கு எப்பவுமே ரிலீஸ் கிடையாது”.

  Presence of Mind thy name is Vaalee!!

  கவிதைகள் பாட்டுக்கள் எப்படியோ, “நானும் இந்த நூற்றாண்டும்” என்னும் வாலியின் சுயசரிதை மிக நல்ல புத்தகங்களில் ஒன்று என்பது என் அபி.

  சினிமா உலகில் முன்னுக்கு வருவது என்பது எத்தனை எத்தனை அவமானங்கள்! சகித்துக்கொண்டு பழகி பழகி வாலி வரவேண்டியிருந்தது என்று பார்த்தால் corporate உலகம் எவ்வளவோ நாகரீகமானது என்பது புரியும். Of course படித்தவர்கள் நிறைந்த உலகத்துக்கும் படிக்காதவர்கள் உள்ள உலகத்துக்குமான வேறுபாடாகக்கூட இருக்கலாம்.

  கவனிக்க, :இருக்கிறது: அல்ல “இருக்கலாம்: என்றுதான் சொல்கிறேன்.

 6. Crazy mohan July 20, 2013 at 6:50 PM Reply


  Memories. RIP Vaali Sir. You are a true legend.

 7. வாலியின் பாடல்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அவரது நடிப்பும் அபாரமானது. முதல் படம் பொய்க்கால் குதிரை(??). நகைச்சுவை நடிப்பு அவருக்கு இயல்பாக வருகின்றது. அனைவரும் சொல்வதைப் பார்த்தால் அது அவரது நிஜமான குணாதியம் போல. ஹேராமில் பெண் பார்க்கும் காட்சியில் அவர் அடிக்கும் கிண்டல்கள்…..

  • BaalHanuman July 22, 2013 at 5:20 AM Reply

   நீங்கள் குறிப்பிட்டுள்ள பொய்க்கால் குதிரையில் இருந்து ஒரு ஸ்டில் – Courtesy – The Hindu

 8. வாலி பாட்டெழுத வந்த காலத்தில் கண்ணதாசன் உச்சத்தில் இருந்தார். ‘மதுரை வீரன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மகாதேவி’, ‘ராஜா தேசிங்கு’ போன்ற எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் புகழை நோக்கி வந்துகொண்டிருக்கிற பாடலாசிரியராகவும் கண்ணதாசன் திகழ்ந்தார். வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த வாலி, கண்ணதாசனை முதன்முதலில் சந்தித்தார்.

  ‘காட்டுக்குள் தேனீக்கள்
  கூட்டுக்குள் வைத்ததனைப்
  பாட்டுக்குள் வைத்திருக்கும்
  பாவலனே என் வணக்கம்’ – என்று முதல் சந்திப்பிலேயே கவிதையில் வணக்கம் சொல்லி கண்ணதாசனை அசத்தினார். பின்னாளில் ‘என் பாட்டு எது, வாலி பாட்டு எதுன்னு எனக்கே சில நேரங்களில் தெரியலப்பா’ என்று கண்ணதாசன் வியக்கும் அளவுக்கு வாலி வளர்ந்தார்.

  நல்லி குப்புசாமி வாலிக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்துஇருந்தார்; அன்றுதான் கவியரசி சௌந்தரா கைலாசத்துக்கு இரங்கல் கூட்டம். அங்கே இரங்கல் உரை ஆற்றிவிட்டு வாலி விழாவுக்குச் செல்வதாகத் திட்டம் வைத்திருந்தேன். இரங்கல் கூட்டமேடை யில் என்னருகே அமர்ந்திருந்த ரஜினிகாந்த், ‘கூட்டம் முடிந்து உங்களுக்கு என்ன புரொகிராம்?’ என்று கேட்டார். ‘வாலி விழாவுக்குச் செல்கிறேன்; நீங்களும் வாருங்களேன்’ என்றேன். ‘நிகழ்ச்சியில் என் பெயர் இல்லையே’ என்றார். ‘என் பெயரும்தான் இல்லை. மூத்தவர்; முன்னோடி. மரியாதை செய்ய வாருங்கள்’ என்றேன். ‘ஒரு பொன்னாடைகூட இல்லை’ என்றார். ‘என் காரில் இருக்கிறது’ என்றேன். ஒரு குழந்தைபோல் என்னோடு குதூகலமாகப் புறப்பட்டுவிட்டார்.

  ரஜினியும் நானும் சபைக்குள் நுழைந்ததும் ரசிகர்களுக்கும், மேடையில் இருந்த கமல், வாலி, உட்பட அத்தனை பேருக்கும் ஆனந்த அதிர்ச்சி. அந்த மேடையில் வாலிக்கு நான் ஒரு தங்க மோதிரம் அணிவித்தேன். அதை வைத்து வாலி ஆடிய சொல் விளையாட்டுத்தான் அந்த விழாவின் உச்சம்.

  ‘எல்லாரும் பாருங்கய்யா… என்னமோ வைரமுத்துவும் நானும் மோதுறோம்… மோது றோம்கிறாங்களே!

  ‘அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே’னுதான் வைரமுத்து மோதிரமே போட்டுட்டாருய்யா!’

  – கலகலப்புக்கு மறு பெயர் வாலி!


 9. ஏற்கெனவே ஒரு துறையில் ஒரு ஜாம்பவான் கோலோச்சிக் கொண்டிருக்கும்போது, அதே இடத்தில் புதிதாக நுழைந்து, தன் வெற்றிக்கொடியை நாட்டுவது என்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. ஆனால், அதைச் சாதித்துக் காட்டியவர் காவியக் கவிஞர் வாலி. அவர் எழுதிய ‘மாதவிப் பொன் மயிலாள்…’ பாடலைக் கேட்டுக் கண்ணதாசனே வியந்து, அவரது வீடு தேடிப்போய் பாராட்டியுள்ளார்.

  வைணவரான வாலி தீவிர முருக பக்தர். அதற்கு அவரே சொன்ன காரணம் இது…

  ஒருமுறை, வாலியின் சகோதரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பலப்பல மருத்துவர்களும் கையை விரித்துவிட்ட நிலையில், ஒரு மருத்துவர் தானே முன்வந்து சிகிச்சை அளித்தார். என்ன மாயம் செய்தாரோ… வாலியின் சகோதரி பிழைத்தெழுந்தார். அது ஒரு மெடிக்கிள் மிராக்கிள்! அந்த மருத்துவரின் பெயர்… டாக்டர் சுப்ரமணியம்.

  ‘ஆஹா! அந்த முருகப்பெருமானே வந்து என் சகோதரியை பிழைக்க வைத்திருக்கிறான்’ என்று மெய்ம்மறந்தார் வாலி. அது முதல் அவர் தீவிர முருக பக்தராக ஆனார். அவர் எழுதிய முதல் பாடல் கந்தனைப் பற்றியதுதான்! ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனை உனை மறவேன்…’

  டி.எம்.எஸ்ஸின் வளமான குரலில், இசைத் தட்டில் வெளிவந்த அந்தப் பாடலின் பின்பக்கத்தில் ‘ஓராறு முகமும் ஈராறு கரமும்…’ என்று துவங்கும் பாடல் இடம்பெற்றது. வாலி எழுதிய இந்த இரண்டாவது பாடலும் கந்தவேளைப் போற்றும் பாடல்தான்!

  தமிழகத்தில் தெய்வ மறுப்புக் கொள்கை கரைபுரண்டு ஓடிய காலத்தில், அதைத் தடுத்து நிறுத்தி, எல்லா இடங்களிலும் ஆன்மிகப் பேரலையை எழுப்பிய பாடல்கள் இவை.

  கந்தனைக் கணநேரம்கூட மறக்காத காவியக் கவிஞர் வாலி, ‘தமிழ்க் கடவுள்’ என்ற பெயரில் கந்தபுராணத்தை புதுக் கவிதையில் வடித்து முடித்தார். ஒரு கவிஞனின் கையெழுத்திலேயே அச்சாகி வெளிவந்த முதல் தமிழ்க் காவிய நூல் இதுதான்.

  அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம் எனப் பல ஆன்மிக நூல்களை எழுதிய வாலி பேசும்போதுகூட ஆன்மிகத் துளிகள் தெறிக்கும்.

  ஒருமுறை வாலியும் நானும் அல்லயன்ஸ் சீனிவாசன் காரில் போய்க்கொண்டிருந்தோம். அந்தக் காரின் டேஷ் போர்டு முழுவதும் புசுபுசுவென கரடித் தோலால் அலங்கரிக்கப் பட்டு இருந்தது. அதைப் பார்த்த நான் வாலியிடம், ‘அண்ணா… இங்கே பார்த்தீங்களா? கரடியைத் தூக்கி இப்படி வெச்சிருக்காங்க!’ என்றேன்.

  நான் முடிப்பதற்குள்ளாகவே வாலி குறுக்கிட்டு, ‘என்ன ஓய்… வாலி இருக்கிற இடத்துல கரடி இருக்காதா, என்ன?’ என்றார்.

  நாங்கள் குபுக்கென்று சிரித்துவிட்டோம். ராமாயணத்தில், கரடியான ஜாம்பவான் வாலியுடன்தானே இருந்தார்?!

  சொல் நயமும் பொருள் நயமும் மிக்க காவியக் கவிஞரான வாலி, இன்று நம்முடன் இல்லை. கடவுள் திருவடிகளில் காவியம் படைக்க இணைந்துவிட்டார். அவர் இல்லையென்றாலும், அவர் இயற்றிய நூல்கள் மூலம் காவியக் கவிஞராக என்றென்றும் அவர் நம்மிடையே வாழ்ந்துகொண்டே இருப்பார்.

 10. மௌலி July 26, 2013 at 5:59 PM Reply


  அண்மையில் மறைந்த கவிஞர் வாலி பற்றி நினைவு கூர்கிறார் மூத்த இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்.

  ஏவி.எம். நிறுவனம் ‘அன்பே வா’ படத்தை எடுத்த போது, நான் உதவி இயக்குனர். ஒரு நாள் ஸ்டூடியோவில் செட்டியார், ரவுண்டு வந்த போது, யதேச்சையாக ஓர் அறைக்குள் எட்டிப் பார்த்தார். உள்ளே ‘அன்பே வா’ படத்துக்காகப் பாட்டு எழுதிக் கொண்டிருந்தார் வாலி. பாடல் வரிகளை வாங்கிப் பார்த்த செட்டியார்,

  ‘உதயசூரியனின் பார்வையிலே… என்று எழுதி இருக்கிறீர்களே! சென்சாரில் ஆட்சேபிப்பார்கள்,’ என்று சொன்னார். வாலி, ‘அது எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட வரி! சென்சாரில் ஆட்சேபிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்’ என்று பதில் சொன்னார். செட்டியார் ஒன்றும் பேசவில்லை. படம் முடிந்து சென்சாருக்குப் போனபோது, செட்டியார் சொன்ன மாதிரியே ஆயிற்று. உதயசூரியனை, புதிய சூரியன் என்று மாற்றும்படி ஆனது. ஆகவே, ‘அன்பே வா’ பட ரெக்கார்டுகளில் உதயசூரியன் என்றும், படத்தில் ‘புதிய சூரியன்’ என்றும் இடம் பெற்றிருக்கும். இப்படி எம்.ஜி.ஆரை மனத்தில் வைத்துக் கொண்டு அவரது இமேஜை உயர்த்தும் நோக்கத்தோடு பல பாடல்களை எழுதி இருக்கிறார் வாலி. அவரின், ‘நான் ஆணையிட்டால்…’ பாட்டு ஒரு நல்ல உதாரணம்.

  ‘கடவுள் அமைத்த மேடை’, ‘ஒரு கொடியில் இரு மலர்கள்’, ‘பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை…’ ஆகிய எனது மூன்று படங்களுக்குக் கதை வசனம் எழுதி இருக்கிறார் வாலி. அவரது பாடல் வரிகளைப் போலவே, படத்தின் வசனங்களும் வெகு சிறப்பு. உதாரணம்: ‘கடல் தண்ணியில இருந்து எடுத்த மீனைக் குழம்பு வெச்சாலும், அந்தக் குழம்புலயும் உப்புப் போட்டுத்தான் ஆகணும்.’ பிற்காலத்தில் வாலி, ‘இளையராஜாவின் மோதிரம்’ என்று ஒரு கதை எழுதி, அதைப் படமாக்க வசனமும் எழுதினார். வடிவேலு நடிக்க அதைப் படமாக்கவும் முடிவானது. ஆனால், அந்தப் படம் ஆரம்பிக்கப்படாமல் போகவே, வேறு சிலர் அந்தப் படத்தை இயக்க முன்வந்தார்கள். அவர்களிடம் வாலி, ‘எஸ்.பி.முத்துராமன் இயக்கினால் மட்டுமே அந்தக் கதையைக் கொடுப்பேன்’ என்று சொல்லிவிட்டார். ஆனால், அந்தப் படத்தை இயக்க முடியாது போனது என் துரதிருஷ் டம்.

  ஒருமுறை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ஷூட்டிங்குக்காகப் போயிருந்தபோது, வாலியும் வந்திருந்தார். இரவு நேரமானால், அவர் நிறைய மது அருந்துவார் என்று அவர் மீது ஒரு விமர்சனம் இருந்த காலகட்டம் அது. ஒரு நாள் இரவு, வாலியை தனிமையில் நான் சந்தித்தேன். அவர் எழுதிய பாடல்களிலிருந்தே சமூகத்துக்கு நல்ல மெசேஜ் சொல்லும் வரிகளை அவருக்கே எடுத்துச் சொல்லி, ‘மக்களுக்குத் தேவையான இதுபோன்ற பல நல்ல விஷயங்களை பாடல்கள் மூலமாகச் சொல்லும் நீங்களே, உங்கள் உடம்புக்குக் கேடு விளைவிக்கும் மதுவை அருந்துவது சரியா? நாம் இருவரும் எத்தனை வருட கால நண்பர்கள். அந்த உரிமையில் உங்களை அன்போடு கேட்கிறேன். இனி நீங்கள் குடிப்பதை நிறுத்தி விட வேண்டும்’ என்றேன். மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர், சில வினாடிகள் கழித்து, என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, ‘இனி நான் மது அருந்தமாட்டேன். இது என் வாக்குறுதி’ என்றார்.

  இந்த விஷயத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., வாலியிடம், ‘எப்படியா விட்டே?’ என்று கேட்டபோது, ‘ஒருநாள் முத்துராமன் சொன்னார். அதோட விட்டுட்டேன்’ என்று சொன்னதும், எம்.ஜி.ஆர்., வாலிக்கு சாக்லெட் கொடுத்துவிட்டு, ‘முத்துராமனுக்கு என் நன்றியைச் சொல்லயா!’ என்றாராம்.

  இன்றைக்கு நாடு இருக்கும் சூழ்நிலையில், வாலியைப் போலவே, அசாத்தியமான வைராக்கியத்தோடு, மதுப் பழக்கத்தைக் கைவிட ‘குடிமக்கள்’ எல்லோரும் முன்வர வேண்டும்.

 11. D. Chandramouli July 27, 2013 at 4:22 AM Reply

  It was unfortunate that many inspirational songs that were penned by Vaali were thought to have been written by Kannadasan. Only after Vaali’s demise, I come to know of the truth. By the way, I think it should be made incumbent on TV channels which relay cine songs to state the names of the music director, the singer and the lyricist. In addition, sadly, the immense contribution of music director K.V. Mahadevan is somehow under-rated in the media, in my opinion.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s